ஜெயபாலன் த

Friday, September 17, 2021

ஜெயபாலன் த

பிரான்ஸில் பொலிஸ் அதிகாரி படுகொலை! ஆறு தமிழர்கள் கைது!!! : த ஜெயபாலன்

French_Policeபெப்ரவரி 21ல் பரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்குறுனவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சென்சன்ரனிஸ் பகுதி பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டு உள்ளார். அயூலின் டான்லேம் (33) என்ற பொலிஸ் அதிகாரியே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஆறு தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வெளியான மரண விசாரணைகளின்படி துப்பாக்கியில் இருந்து 14 தோட்டாக்கள் சுடப்பட்டு இருந்ததாகவும் படுகொலை செய்யப்பட்ட அதிகாரியின் தலைப் பகுதியில் இரு குண்டுகள் பாய்ந்து உள்ளதாகவும் அவற்றில் ஒன்றே உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் மரண விசாரணையில் தெரியவந்து உள்ளது.

லூ பரிசியன் உட்பட பிரானிஸின் தேசியப் பத்திரிகைகளிலும் இச்செய்தி வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்குறுன பாரிஸின் லா சப்பலுக்கு ஒப்பானது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதி. அங்குள்ள கத்ருட் பகுதிக்கு அருகாமையில் மயூரிஸ் பிரோ வீதியில் சிவில் உடையில் தனது துப்பாக்கியுடன் பொலிஸ் அதகாரி அயூலீன் டான்லேம் வந்தள்ளார். அப்போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாகியது என்றும் முடிவில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்தே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பொலிஸார் மறுநாள் காலையே ஒரு பெண் உட்பட ஆறு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் கைது செய்யப்பட்டவர் ஒருவரின் தாயார் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ள பிபிசி சந்தேசயா (பிபிசி சிங்கள மொழிச் சேவை) இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றது. சில புலி எதிர்ப்பு இணையங்களும் இச்சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி உள்ளன.

தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகளின்படி இச்சம்பவம் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிக்கும் அப்பகுதியில் இருக்கும் சில தமிழர்களுக்கும் இடையேயான விவகாரம் எனத் தெரியவருகிறது. இச்சம்பவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டது அல்ல என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட விரோதமாக விசா பெறமுயற்சித்து இருந்ததாகவும் அவர்களுக்கு அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஊடாக அயூலின் டான்லேம் இன் தொடர்பு கிட்டியதாகவும் லக்குறுனவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றுமொரு செய்தி இவர்களுக்கிடையே பணம் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. இச்செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே சென்சென்ரனிஸ் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மோசடிக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்று இவ்வாரம் விடுதலையாகி உள்ளதாக அப்பகுதி உள்ளுர்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட அயூலின் டான்லேம் மீதும் அவ்வாறான ஒரு சம்பவம் தொடர்பான பதிவு உள்ளது. ஆயினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்ட்டிருக்கவில்லை. தொடர்ந்தும் பொலிஸ் அதிகாரியாகவே பணியாற்றி வந்தார்.

சம்பவத்தின் போது விடுப்பில் இருந்த அயூலின் டான்லேம் சிவில் உடையில் தனது துப்பாக்கியுடன் சென்றிருந்தமை விசாரணைகளின் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிந்திய செய்திகளின்படி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் அயூலின் டான்லேம் இன் துப்பாக்கியைப் பறித்து வானத்தை நோக்கியும் தரையை நோக்கியும் வேட்டுக்களைத் தீர்த்ததாகத் தெரிவித்து உள்ளார். அயூலின் டான்லேம் மீது பாய்ந்த இரு குண்டுகளையும் யார் சுட்டது என்பது இன்னும் அறியப்படவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கிறது.

மேற்கு நாடொன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலை தொடர்பில் தமிழர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது இதுவே முதற் தடவையாகும்.

._._._._._.

பொலிஸ் அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக லு பரிசியன் பத்திரிகையில் வெளியான செய்தியின் தமிழ் வடிவம் கீழே பிரசுரிக்கப்பட்டு உள்ளது. – தமிழில் சபா நாவலன் (நன்றி : இனியொரு)

பிரான்சில் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை : இலங்கையர்கள் கைது

25 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட வயதை உடைய ஒரு பெண் உள்பட 5 பிரஞ்சு இலங்கையர்கள் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரிலியன் டான்செல்ம் என்ற பரிஸ் 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிஸ் புற நகர்ப் பகுதியான லா குருனேவ் என்ற இடத்தில் கொலை செய்யப்படது தொடர்பான இந்த இலங்கையர்கள் மீதான வழக்கு இன்று காலை விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு சந்தேக நபர்களை நாளைகாலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்தப் பொலீஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியானது கொலைசெய்யப்பட்ட அதே கட்டிடத் தொடரிலுள்ள குப்பைதொட்டியொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையிலேயே இவர் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் சம்பவம் நடைபெற்ற நேரம் கடைமையில் ஈடுபட்டிருக்கவில்லை. தேசிய போலிஸ் இணையம் என்ற பொலிஸ் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த Fபாபியன் மொடிகொம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்ட ஒரிலியன் டான்செல்ம் சண்டையொன்றில் சிக்குண்டிருக்கலாம் எனவும் ஆனால் அதற்கான காரணங்கள் தெளிவற்றதாக உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் முன்னதாக ஊழல் குற்றச்சாட்டொன்றின் சாட்சியாக பொலிஸ் சேவைப்பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போதும், பின்னர் சந்தேகம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். இதே இடத்தில் கடமையாற்றும் பிறிதொரு பொலீஸ் உத்தியோகத்தரும் ஊழல் குற்றச்சாட்டொன்றின் பெயரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட போதும், இன்றைய விசாரணைகளின் படி, இவ்விரு சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவரவில்லை எனப் பொலீசார் தெரிவிக்கின்றனர்.

பொபினி பொலீஸ் பிரிவின் பிந்திய தகவலின் அடிப்படையில், பழிவாங்கல், குடிபோதையிலான மோதல், பணத்தகராறு போன்ற எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று : என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம், Through the Window குறும்படக் காட்சிகள்

Puthiyavan_Rபுலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சியொன்று பெப்ரவரி 21, இன்று சறெயில் இடம்பெறவுள்ளது. கடந்த ஆண்டு முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 3வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. காட்சி விபரங்கள் கீழே.

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு வகைப்பட்ட திரைப் படங்களை அறிமுகப்படுத்தி  அவற்றில் அவர்களை ஈடுபட வைப்பதே இக்காட்சிப் படுத்தல்களின் நோக்கமாக உள்ளது. மேலும் இவ்வகையான காட்சிப் படுத்தல்களின் போது திரைப்படங்களை இயக்கியவர்கள் அவற்றில் ஈடுபடுபவர்களும் கலந்துகொள்ளும் போது ஆரோக்கியமான கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இக்காட்சியின் போது ஆர் புதியவனின் ‘Through the Window’, ஆர் பிரதீபனின் ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ ஆகிய குறம்திரைப்படங்கள் காண்பிக்கப்பட இருக்கிறது. ஆர் பிரதீபனுடைய குறும்திரைப்படம் பேர்ளின் படவிழாவில் திரையடப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆர் புதியவனின் ‘Through the Window’ ஒரு பரிசோதனைச் சினிமா. சமூகம் எதிர் கொள்கின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை 12 நிமிடங்களுக்குள் சொல்லிச் சென்றுள்ளார். ஒவ்வொருவரும் தமது வீட்டு யன்னலினூடாகப் பார்க்கின்ற போது மற்றுமொருவரது பிரச்சினையைக் காண்கின்றனர். வழமையான கதைசொல்லும் போர்க்கில் இருந்து விடுபட்டு ஒரு பரிசோதைனையை முயற்சித்து இருக்கிறார்.

Piradeepan_Rஇலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெறும் யுத்தத்தின் வடுக்களை குறியீடுகளுடாகக் கொண்டு ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ தயாரிக்கப்பட்டு உள்ளது. 12 நிமிடக் குறும்படம் பெரும்பாலும் சினிமா மொழியைக் கொண்டு இயக்கப்பட்டு உள்ளது. எக்ஸில் வெளியீடாக வந்துள்ள இக்குறும்படம் தமிழ் குறும்பட சூழலுக்கு ஒரு நேர்த்தாக்கத்தை கொடுக்கும் எனலாம்.

தொடர்ச்சியாக இந்நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் மண்டபம் மற்றும் உணவு போன்ற செலவுகளுக்கு இரு பவுண்கள் கட்டணமாக அறவிடப்படுகிறது. பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். திரைப்படக் காட்சிகளின் முடிவில் இராப்போசனமும் பரிமாறப்படுகிறது.

 காட்சி விபரங்கள்:

6.30 pm on 21st February 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton
Surrey
KT6 7SB

Related Articles:

மரணித்த இரண்டு முற்றத்து மாமரங்கள் : யமுனா ராஜேந்திரன்

பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் புலம்பெயர்ந்தவரின் குறும்படம் : த ஜெயபாலன்

புலம்பெயர் தமிழ் மக்களின் துருவ அரசியல் ஏற்படுத்தும் பதட்டமும் மிரட்டல்களும் : த ஜெயபாலன்

Stop Voilenceபிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்ணணி அறிவிப்பாளரும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு பாரிஸில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று (பெப்ரவரி 18) மாலை பிரான்சின் புறநகர் பகுதியான டிரான்சி என்னுமிடத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மூன்று இனந்தெரியாத உறுப்பினர்கள் வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் ‘அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தச் சொல்லவும் இல்லையேல் பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ என்று கணவரிடம் கூறும்படி எச்சரித்து உள்ளனர். ‘ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வோம். ஆனால் உங்கள் கணவர் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று திருமதி உதயகுமாரிடம் வந்த நபர்கள் எச்சரித்து உள்ளனர்.

இப்பயமுறுத்தல் தொடர்பாக டிரான்சி பொலிசில் முறையிட்டு உள்ளதாக உதயகுமார் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். ஏற்கனவே ரிஆர்ரி தமிழ்அலைக்கு பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உதயகுமார் நேற்றைய பயமுறுத்தல் எல்ரிரிஈ தரப்பிலிருந்தே வந்துள்ளதாக தான் நம்புவதாகவும் பொலிஸில் அவ்வாறே முறையிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இச்சம்பவத்தினால் அரசியல் அரங்கத்தில் மாற்றங்கள் ஏற்படுமா எனக் கேட்ட போது இதுவரை அவ்வாறான முடிவுகள் எதனையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும் வழமைபோல் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

சம்பவதினம் மாலை 5 மணியளவில் உதயகுமார் வசிக்கும் அப்பாற்மன்ட் இன்ரகொம்மில் உதயகுமாரை அழைத்து உள்ளனர். அப்போது உதயகுமார் வீட்டில் இருக்கவில்லை. இன்ரகொம்மில் திருமதி உதயகுமார் உதயகுமார் வெளியே சென்றத்தைத் தெரிவிக்கவும் வந்தவர்கள் ‘நாங்கள் உங்களோடு கொஞ்சம் கதைக்க வேண்டும்’ என்று சொல்லி உள்ளனர். அவர்களது குரலில் சந்தேகம்கொண்ட திருமதி உதயகுமார் தானே கீழே வருவதாகக் கூறிவிட்டு பிள்ளைகளை அப்பாட்மன்டில் பூட்டிவிட்டு கீழே சென்றுள்ளார். அங்கிருந்த மூவரில் ஒருவர் வாயிலுக்கு வந்து ” உதயகுமாருக்கு அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள் இல்லாட்டி பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ என்று எச்சரிக்க பின்னாலிருந்து மற்றுமொரு குரல் ”ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வோம். ஆனால் உதயகுமார் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று ஓங்கி ஒலித்தது. ‘அதனை அவரிடமே சொல்லுங்கள்’ என்று திருமதி உதயகுமார் கேட்கவும் ‘சொல்ற விதத்தில் சொல்லுவோம்’ என்ற வகையில் பதில் அளித்துவிட்டுச் சென்று உள்ளனர். ‘வந்தவர்கள் தங்களை அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று அறமுகப்படுத்தி உள்ளனர்.

ரிஆர்ரி வானொலியில் இடம்பெற்றுவரும் அரசியல் நிகழ்ச்சிகளான உறவுப்பாலம், அரசியல்அரங்கம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் உதயகுமார் அவர்களே தொகுத்து வழங்கிவருகின்றார். அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. உறவுப்பாலம் நிகழ்சி வாராவாரம் ஒரு அரசியல் பிரமுகரை நேயர்கள் நேரடியாக கேள்வி கேட்கும் வகையில் அமைந்தது. கடந்த வாரம் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததுடன், உதயகுமாருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.

ஞாயிறுதோறும் இடம்பெறும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியும் மிகவும் பிரபல்யமானது. அதேவேளை, எல்ரிரிஈ ஆதரவாளர்களும் இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைப்பதும் உண்டு. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த நிகழச்சியில் கலந்துகொள்ளும் எல்ரிரிஈ ஆதரவாளர்கள் அந்த நிகழ்ச்சியையும் வானொலியின் இயக்குநர் குகநாதனையும் தனிப்பட்டவகையில் தாக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அளித்த பதில்கள் குறித்த மிகவும் காட்டசாட்டமான விமர்சனம் ஒன்றை மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்-டக்ளசின் கலந்துரையாடல் என்ற தலைப்பில் “இனியொரு” இணையத்தளத்தில் சபா நாவலன் எழுதி இருந்தார். அதில் ‘இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. “தோழர்” டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா படித்திருக்காமல் இருக்க முடியாது. இந்த கீழ்த்தரமான சிந்தனையால் விதைக்கப்பட்ட இனவாதம், பிரிந்து வாழ்வதற்கான உணர்வை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இன்னுமின்னும் ஆழ விதைக்கும் என்பதை அமைச்சர் தோழர் “டக்ளஸ்” சிந்திக்காமல் “மாண்புமிகு” அமைச்சராகியிருக்க முடியாது. இந்த மகிந்த சிந்தனையை மாவோ சிந்தனைக்குப் பதிலாக ஏற்றுக்கொண்டு அதற்காகப் பிரச்சாரம் வேறு மேற்கொள்ளும் மாண்புமிகு, “முன்நாள் இடதுசாரி” அமைச்சர் தேவானந்தா, இந்தச் சிந்தனையில் மக்கள் மயங்கி, அரச குடியேற்றத்திட்டத்திற்கு மகிந்த புரம் என்று திரு நாமம் சூட்ட “தோழரை” கேட்டுக் கொண்டார்களாம்.??!! இப்படித்தான் 14.02.09 அன்று டான் வானொலியில் உறவுப்பாலம் நிகழ்ச்சியூடாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த “தோழரின்” பதில்கள் மகிந்த பாசிசத்தின் இன அழிப்பின் நியாயப்படுத்தலாக நகர்ந்து சென்றது.” என்று நாவலன் காட்டமான ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். இறுதியில் ”மகிந்த, பிரபாகரன், தேவானந்தா போன்ற எல்லோருமே அப்பாவிகளைக் கொன்று குவித்து அவர்கள் சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டாலும், எஞ்சியிருக்கும் சொற்ப மக்களுக்கு மத்தியில் இவர்கள் யுத்தக் குற்றவாளிகளே! சொந்த மக்களையே கொன்று குவித்த சமூக விரோதிகளே!!” என்றும் சபா நாவலன் குறிப்பிட்டு இருந்தார்.

சபா நாவலனின் இவ்விமர்சனத்திற்காக அவருக்கு இன்று தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மிரட்டல் உதயகுமாருக்கு மிரட்டல் வந்த பக்கத்தில் இருந்து வரவில்லை. சபா நாவலனுக்கு வந்த மிரட்டல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது வைத்த விமர்சனத்திற்காக வந்த மிரட்டல் என்கிறார் சபா நாவலன்.

ஈழத் தமிழர்களின் அரசியல் உணர்வுகள் தற்போது மிகவும் உணர்ச்சியூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இன்றைய இந்த அவலத்திற்கு முழு முதற் காரணமாயுள்ள இலங்கை அரசு மீதும் அதன் ஆதரவு சக்திகள் மீதும் அதேசமயம் போராட்டம் என்ற பெயரில் மக்களைப் பணயம் வைத்துள்ள எல்ரிரிஈ மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இவை ஒரு பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவற்றின் ஒரு வெளிப்பாடாகவே கிங்ஸ்பரி விகாரைக்கு ஜனவரி முற்பகுதியில் சில விசமிகள் தீ வைத்துள்ளனர். அதிஸ்டவசமாக தீ கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

மேலும் லண்டனில் நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் கொலைப் பயமுறுத்தல்களுக்கு உள்ளாகி பொலிஸில் முறையிடப்படும் வரை சென்றதுடன் சில நாட்கள் வீட்டில் தங்கி இருக்க வேண்டாம் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டு இன்னுமொரு பாதுகாப்பான வீட்டில் தங்கவேண்டி ஏற்பட்டுள்ளது. தொழிற்கட்சி கவுன்சிலராக உள்ள போல் சத்தியநேசன் அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன்ரிம்ஸ் ஊடாக ஈழத் தமிழ் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியே இப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் எப்போதும் ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்பதும் எப்போதும் மக்கள் அணுகக் கூடிய வகையில் செயற்படும் கவுன்சிலர் என்பதும் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சில இளைஞர்கள் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் சிலரால் தூண்டப்பட்ட ஒரு அடையாளத்தை தேடும் நோக்கில் இவ்வாறு செயற்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

அதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக ஜனவரி 26 அன்று முன்னாள் ஈபிஆர்எல்எப் உறுப்பினரும் வெளிப்படையாக தனது அரசியல் கருத்தக்களை வெளியிடுபவருமான லாபீர் என்றழைக்கப்படும் எஸ் பரமநாதன் ஈஸ்ற்ஹாமில் வைத்து மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டதுடன் மேலும் தாக்கப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் மக்களிடையே இருந்து வந்த துருவ அரசியல் இந்த அவலமான சூழலிலும் மக்கள் சார்ந்ததாக இல்லாமல் தாங்கள் சார்ந்த அமைப்பை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. அவற்றின் வெளிப்பாடாகவே இந்த மிரட்டல் சம்பவங்கள் அமைகிறது. மேலும் சில வன்முறைக் குழுக்களும் தங்களை இன்னார் என்று அடையாளப்படுத்தி ஒரு அடையாளத்தை தங்களுக்குப் பெற்றுக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான மிரட்டல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முற்று முழுதாக நிறுத்தப்பட்டு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம். தமிழ் மக்கள் கடந்து வந்த அரசியல் பாதை இனித் தெரிவு செய்ய வேண்டிய அரசியல் பாதை தொடர்பான விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள், மதிப்பீடுகள் அவசியம். வன்முறை மிரட்டல்கள் மூலம் இவற்றை நிறுத்தலாம் என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்க முற்படுவதற்கு ஒப்பானது.

மாத்தையா மகிந்தவும் தம்பி பிரபாவும் ஆடும் சிங்கம் புலி ஆட்டத்தின் மரணப் பொறியில் வன்னி மக்கள் !!! : த ஜெயபாலன்

Pranab_MukherjeeJohn_Holmes_UNYogaradnam_Yogiவன்னியில் சிக்குண்ட மக்களை வெளியேற்றத் தாங்கள் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத்தறைச் செயலாளர் பிரணர்ப் முகர்ஜி இந்தியப் பாராளுமன்றத்தில் நேற்று (பெப் 18ல்) தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது இந்த அவல நிலைக்கு புலிகளே காரணம் என்று வேறு குற்றமும் சாட்டி உள்ளார். இலங்கை அரசுக்கு பின்னால் இந்த யுத்தத்தை இந்தியா நடாத்துகிறது என்பதை உறுதிப்படுத்துவது போல் பிரணர்ப் முகர்ஜியின் பாராளுமன்ற உரை அமைந்திருந்தது. யுத்த நிறுத்தத்தை இந்தியா கோராது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்தியத் து}தரகங்களுக்கு முன்னால் ‘இலங்கை அரசுக்கு இந்தியா உதவுவதைக் கண்டித்து’ ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் கொந்தளித்து உள்ளது. தமிழ் நாட்டில் மூன்றாம் நபரொருவரும் தீக்குழிப்பு முயற்சியில் ஈடுபட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டு உள்ளார். பிரணர்ப் முகர்ஜியின் உரை மக்களது போராட்டங்களை முற்று முழுவதுமாகப் புறக்கணித்து இலங்கை அரசுக்கு தனது முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வல இந்திய வெளியுறவுத்துறைச் செயலரின் உதவியை வரவேற்று இருப்பதாக பிபிசி செய்தி வெளியட்டு உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்குள் அவ்வுதவியை வரவேற்பதாக கெகலிய ரம்புக்வல தெரிவித்து உள்ளார்.

பிரணர்ப் முகர்ஜியின் கருத்துப்படவே யுஎன் செயலாளர் நாயகமும் கருத்து வெளியிட்டு உள்ளார். யுத்தத்திற்குள் சிக்குண்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே முக்கிய  அம்சம் என அவர் தெரிவித்து உள்ளார். யுஎன் உள்ளுர் பணியாளர்களை புலிகள் தடுத்து வைத்திருப்பதாகவும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை விட்டு வெளியேறுபவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கிறார்கள் என்றும் யுஎன் பெப் 16ல் குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே யுஎன் பிதிரிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் இன்று (பெப் 19) இலங்கை செல்கிறார். பெப் 21 வரை இலங்கையில் தங்கவுள்ள யுஎன் மனிதாபிமான செயற்பிரிவின் அவசர உதவி இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை அரச பிரிதிநிதிகளையும் ஏனைய கட்சி பிரதிநிதிகளையும் இலங்கையில் உள்ள யுஎன் ஐசிஆர்சி பிரிதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். மேலும் வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களையும் சந்திகக உள்ளார்.

இந்தியா மற்றும் யுஎன் பிரிதிநிதிகள் இலங்கை அரசாங்கம் வன்னி மக்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல்கள் பற்றி கண்டுகொள்ளாத போக்கையே கொண்டுள்ளனர். இலங்கை அரசு மீதான கண்டனங்கள் மேம்போக்கானதாகவே உள்ளது. இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற வகையிலேயே செயற்படுகின்றன. இதில் இந்தியா காட்டும் அக்கறை என்பதும் அவர்களுடைய நலன் சார்ந்ததாகவே அமையும்.

புலிகளால் அண்மைக்காலமாக வெளியிடப்படும் அறிக்கைகள் உலகமே தங்களைத் தீர்த்துக்கட்ட கங்கணம் கட்டி நிற்பதாகக் குறிப்பிடுகின்றன. ”இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன் குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன.” என்று புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ செ யோகி பெப்ரவரி 18ல் குறிப்பிட்டு உள்ளார். அவர் மேலும் குறிப்பிடகையில் ”நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம். ” என்றும் தெரிவித்து இருந்தார். யோ செ யோகியின் கூற்று ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல் உள்ளது. ‘ஆயுதத்தை மட்டும் நம்பாதீர்கள்’ என்று பலரும் சொன்ன போது அவர்களையெல்லாம் தீர்த்துக் கட்டிவிட்டு இப்போது ‘பாசக் கயிறு’ தெரிந்தவுடன் மக்களுடன் பேசுவோம் என்று கதையளக்கிறார் யோகி.

தமிழர்களில் மிகப் பெரும்பான்மையினர் இலங்கை அரசின் மீது என்றுமே நம்பிக்கை வைத்தது கிடையாது. இலங்கை அரசு ஒரு பேரினவாத அரசு என்று அவர்கள் சரியாகவே அதனை அடையாளம் கண்டிருந்தனர். அந்த அரசு தமிழ் மக்களைக் கொல்லும் படுகொலை செய்யும் என்பதுவும் அவர்களுக்குப் புதிதல்ல. அதனால் தான் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தங்கள் பங்களிப்பைத் தொடர்ச்சியாக வழங்கினர்.

ஆனால் இன்றைய வன்னிக் கொடுமையில் இனவாத அரசு புரிகின்ற கொடுமைகளுக்கு புலிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக உள்ளனர் என்பது மிகவும் கசப்பான உண்மையாகி உள்ளது. எந்த மக்களை வைத்து தங்களை வளர்த்து வளம்படுத்திக் கொண்டார்களோ அநத மக்களை அந்த மக்களின் பொது எதிரியின் முன் பணயம் வைத்து ஒரு யுத்தம் நடைபெறுகிறது. ஒரு கை விரலுக்குள் எண்ணக் கூடிய கிராமங்களைத் தவிர அனைத்து பகுதியையும் இழந்துவிட்டு 250000 மககளுள்ள பகுதிக்குள் யுத்தம் புரிந்து இழந்தவற்றை மீட்க முடியும் என்று கூறுவது பகற் கனவு.

தங்கள் ஆயுதங்களினால் சாதிக்க முடியாது போனதை 250 000 மக்களை வைத்து  அவர்களில் சில ஆயிரம் பேரைப் பலி கொடுத்து சாதிக்கலாம் என்று புலிகள் போடும் கணக்கு இலங்கை அரச படைகளின் இன அழிப்புக்கு உதவுவதைத் தவிர வேறு எதனையும் சாதிக்கப் போவதில்லை. ஏற்கனவே பேரினவாத அரசின் அடக்குமுறைகளாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை கொடுத்த புலிகளினதும் ஏனைய அமைப்புகளினதும் அரசியலின் பயனாகவும் தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களைவிட்டு பெரும்தொகையில் வெளியேறி உள்ளனர். இன்று இடம்பெறும் இந்த அவலங்கள் எஞ்சியுள்ளவர்களையும் பலியாக்குவதற்கே வழிகோலப் போகின்றது.

வார்த்தைகளுள் அடக்க முடியாத அவலம் வன்னியில். கையறு நிலையில் இரத்த உறவுகள் துடிக்கின்றன. யார் உயிரிழந்தார்கள் யார் உயிருடன் உள்ளனர் என்று அறியாத ஓலங்கள். நிமிடத்திற்கு நிமிடம் உயிர்ப் போராட்டத்தில் வன்னி மக்கள் தவிக்கின்றனர். ‘எமராஜன்’ நடத்தும் வதைகூடத்திலும் இவ்வளவு கொடுமை கற்பனை செய்யப்பட்டு இருக்குமா என்பது சந்தேகமே. கைக்குழந்தைகள் மழலைகள் பெண்கள் வயோதிபர் என்ற எவ்வித வேறுபாடும் இன்றி வகைதொகையின்றி மக்கள் கொல்லப்படுகின்றனர். தினமும் நாற்பது பேர் வரை கொல்லப்படுவதாக யுஎன் மதிப்பிட்டு உள்ளது. இழப்புகள் இதனிலும் அதிகம் என்று அஞ்சப்படுகிறது.

யுத்தத்தால் ஏற்படும் நேரடிப் பாதிப்புகளுடன் இடம்பெயர்வினால் ஏற்படும் அதற்கே உரிய பிரச்சினைகளும் சேர்ந்து உள்ளது. மேலும் மருந்து உதவிகள் இன்மை நீர் உணவுத் தட்டுப்பாடு என்பன நிலைமையை மிகவும்  மோசமாக்கி உள்ளது. இரத்தப் போக்கை நிறுத்தவதற்கு அப்பால் எவ்வித சிக்ச்சையை மேற்கொள்வதற்கும் அங்கு மருந்தப் பொருட்களோ வசதிகளோ கிடையாது என அங்கு தமது உயிரையும் உத்தியோகத்தையும் பணயம் வைத்து 24 மணி நேரமும் பணியாற்றும் விரல் விட்டு எண்ணக் கூடிய மருத்துவ பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெப் 18 அன்று அரச படைகளின் செல் வீச்சில் 38 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய சுகாதார அலுவலர் டொக்டர் துரைராஜா வரதராஜா அசோசியேடட் பிரஸ்ற்குத் தெரிவித்து உள்ளார். விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் வெவ்வேறு சம்பவங்களில் இன்று கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 150 ற்கு மேல் என மதிப்பிடுகின்றன. ஒவ்வொரு நாள் ஆட்டத்திலும் கிறிக்கட் ஸ்கோர் போன்று மரணங்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படுகிறது.

இரண்டு மூன்று கிராமங்களுக்குள் 250000 வரையான மக்கள் பல வாரங்களாக சிக்குண்டு உள்ளனர். கடைசியாக எப்போது அந்த மக்கள் நல்லுறக்கம் கொண்டார்கள் என்பது அவர்களுக்கு நினைவில் இருக்காது. இருக்க இடமில்லை மாற்றி உடுக்க  உடையில்லை உண்ண உணவில்லை குடிக்க நீரும் இல்லை. இவ்வளவு நெருக்கத்தில் வாழும் போதும் மழைகாலம் வேறு. நோய் பரவுவதற்கு மட்டும் குறைவு இல்லை. இந்த நோய்களினால் காயப்பட்ட பலர் அவயவங்களை இழக்கின்ற ஆபத்தும் உயிரிழக்கும் ஆபத்தும் அதிகரித்து உள்ளது.

சுனாமியால் ஏற்பட்ட இயற்கை அழிவில் இழந்ததில் இருந்து மீளு முன் இந்த மனிதர்களால் மகிந்த – பிரபாகரன் என்ற யுத்தப் பிரியர்களால் உருவாக்கப்பட்ட மரணப் பொறிக்குள் வன்னி மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இன்றைய இந்தக் கொடிய அவலம் வன்னி மக்களின் எதிர்காலத்தையும் இருள வைக்கப் போகின்றது. அன்புக்குரியவர்கள் கொல்லப்படுகின்றனர். குழந்தைகள் பெற்றோரை இழக்கின்றனர். பெற்றோர் குழந்தைகளை இழக்கின்றனர். உறவுகளை முற்றும் இழந்த அனாதைகளான சமூகம் ஒன்று எம்முன் உருவாகிக் கொண்டு இருக்கிறது. அந்த சமூகத்தில் பல நூற்றுக்கணக்கில் அவயவங்களை இழந்து ஊனமுற்றவர்களாக்கப்பட்டுக் கொண்டுள்ளனர். மழலைகள் முதல் மூத்தொர் வரை வயது பால் வேறுபாடின்றி உளவியல் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்கள் மீள முடியாத அவல வாழ்வுக்குள் தள்ளப்படுக் கொண்டுள்ளனர். அதுவும் அவர்களின் பெயரிலேயே.

இந்த அவலத்தின் பிரதான குற்றவாளி யார்? துணைக் குற்றவாளி யார்? என்று நீதி விசாரணை மேற்கொள்ளவும் பட்டிமன்றம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. ஏனெனில் இந்த மக்களின் அவலம் பற்றி அந்த அரசியல் தலைமைகளுக்கு கிஞ்சித்தும் கரிசனை கிடையாது. சிங்கள மக்களின் அதிகாரத்தை தனது கைகளில் தக்க வைத்துக் கொள்ள மகிந்த மாத்தையா இந்த யுத்தத்தை நடாத்துகிறார். தமிழ் மக்களின் அதிகாரத்தை தான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தம்பி பிரபா இந்தப் போராட்டத்தை தொடர்கிறார். இன்றைய சூழலில் ஒருவருடைய இருப்புக்கு மற்றையவரின் இருத்தல் இன்றியமையாதது. மகிந்தா பாதி பிரபா பாதி சேர்ந்து செய்த கலவை தான் இந்த வன்னி அவலம்.

இலங்கை அரசாங்கம் ஒரு பெளத்த பேரினவாத அரசாங்கம். அதன் இருத்தலுக்கு இனவாதம் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது. அதனை கடந்த அறுபது ஆண்டுகளாகப் பார்க்கலாம். பெளத்த பேரினவாதத்தின் ஒரு பக்க விளைவு தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதனைத் தொடர்ந்து புலியும். இலங்கை உட்பட சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்க இன்று இலங்கை இனவாதத்தின் உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறது. இலங்கை மக்களின் நாளாந்த வாழ்நிலைப் பிரச்சினைகள் இனவாதத்திற்குள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது. அதற்குள் மகிந்த மாத்தையாவும் தம்பி பிரபாவும் மட்டும் மூழ்கி அதிகார முத்தெடுக்க முயற்சிக்கிறார்கள்.

ஆகவே இலங்கையின் பேரினவாத அரசுக்கு எதிரான போரட்டத்தை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைமைத்துவத்தினால் இயலாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதன் அர்த்தம் ரிஎன்ஏ, ரியுஎல்எப், ஈபிடிபி ,ரிஎம்விபி என்பவற்றால் முடியும் என்பதல்ல. இவையெல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

ஒரு சிறிய தேக்கம் ஏற்பட்டாலும் காலப் போக்கில் மக்கள் புதிய சக்திகளை இனம்கண்டு அவர்களின் தலைமையில் அணி திரள வாய்ப்பு ஏற்படும். அது ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டமாகவும் அமையலாம். ஆகவே இன்று மிக அவசியமானது இந்த யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் அவலத்திற்குள் இருந்து மீள வேண்டும்.

‘இலங்கையில் தினமும் 40 பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு.’ ஐநா : த ஜெயபாலன்

வெளியேறா விட்டால் இலங்கை அரச படைகள் தாக்குகின்றனர். வெளியேற முற்பட்டால் புலிகள் தாக்குகின்றனர்.

UN_Logoபுலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும் இதனால் சிலர் கொல்லப்பட்டு உள்ளதாகவும் நேற்று (பெப் 16) ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. புலிகள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச அமைப்பொன்று குற்றம்சாட்டியது இதுவே முதற் தடவையாகும். ஏற்கனவே புலிகள் மக்களைத் தடுத்த வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளியேறுபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகி உள்ள உத்தியோகபூர்வமான அறிவிப்பாக இது அமைந்து உள்ளது.

ஐநா வின் இக்குற்றச்சாட்டு புலிகளுக்கு மீகுந்த அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதுடன் புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் அரசியல் முன்னெடுப்புகளுக்கும் இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெப் 16 ஐநா வின் நாளாந்த செய்திக் குறிப்பில் இலங்கையில் தினமும் 40 பேர் கொல்லப்படுவதாகவும் இவ்விடயம் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகம் பாதுகாப்பு கவுன்சிலிடம் தனது அவதானத்தை வெளியிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் ஆசிய பயணத்தை மேற்கொண்டிருந்த ஐநா செயலாளர் நாயகம் இலங்கை ஜனாதிபதியுடனும் உரையாடி இருந்தார். பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு இவ்வுரையாடல் பற்றியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஐநா உள்ளுர் பணியாளர்கள் 15 பேர் மற்றும் அவர்களில் தங்கியிருப்போர் 75 பேர் யுத்தப் பகுதிகளை விட்டு வெளியேறாமல் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் ஐநா குற்றம்சாட்டி உள்ளது. ஐநா பணியாளர்களில் ஒருவரையும் புலிகள் பலாத்காரமாக தங்கள் படையணியில் சேர்த்து உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஐநா அவ்விளைஞரை உடனடியாக விடுவிக்கும் படி கோரியுள்ளதுடன் பொது மக்களை பலாத்காரமாக தங்கள் படைகளில் சேர்பதை நிறுத்துமாறும் கோரியுள்ளது.

குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்கும் படியும் ஐநா புலிகளைக் கேட்டுக் கொண்டு உள்ளது. இலங்கை அரசும் புலிகளும் மனிதாபிமானமான தீர்வுக்கு வர வேண்டும் என்றும் அதன் மூலமே பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களது உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என ஐநா கேட்டுக் கொண்டு உள்ளது.

வன்னியில் புலிகள் பொதுமக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அதனை மீறி வெளியேறுபவர்களை சுட்டுக் கொல்வதாகவும் குற்றம்சாட்டி உள்ள ஐநா தினமும் 40 பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக உள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வித அழுத்தத்தையும் வழங்கத் தவறி உள்ளது. புலிகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியல்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் இலங்கை அரசு சட்டரீதியானது. அப்படி இருந்தும் பாதுகாப்பு வலயங்கள் மீதே இலங்கை அரசு தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனால் பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனை ஐநாவின் நேற்றைய அறிக்கை கண்டிக்கத் தவறியுள்ளது.

மேலும் பாதுகாப்பு வலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்ககும் வரை அந்த வலயங்களுக்குள் மக்கள் செல்வதற்கு அச்சம் இருக்கும் என்பதையும் ஐநா கண்டுகொள்ளவில்லை. பாதுகாப்பு வலயங்கள் ஐநா வினதோ அல்லது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளினதொ பொறுப்பில் வரும்பொது தான் மக்கள் நம்பிக்கையுடன் அப்பகுதிகளுக்குச் செல்லத் தயாராவார்கள்.

மேலும் வன்னியில் உள்ள பெரும்பாலான மக்கள் புலிகளுடன் ஏதோவிதத்தில் தொடர்புடையவர்களாகவும் இருந்திருப்பர். அதனால் அவர்களுடைய பாதுகாப்புக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் பொறுப்பெற்க வேண்டும். மேலும் சரணடைபவர்கள் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் மாவீரர் குடும்பங்கள் ஆகியோரின் பாதுகாப்புத் தொடர்பாக சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். இல்லையேல் பயங்கரவாதத்தை களையெடுக்கிறோம் புலிகளைக் களையெடுக்கிறோம் என்ற பெயரில் பல நூற்றுக் கணக்காணவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாவார்கள் கொல்லப்படுவார்கள் என்பது உறுதி.

தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை கொலை செய்யவும் துணிந்துள்ளமை மிகவும் ஆபத்தான சூழலை ஏற்படுத்தி உள்ளது. வெளியேறா விட்டால் இலங்கை அரச படைகள் தாக்குகின்றனர். வெளியேற முற்பட்டால் புலிகள் தாக்குகின்றனர். வன்னி மக்களின் வாழ்வு இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே ஊசலாடுகிறது.

புலம்பெயர் நாடுகளில் வன்னி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயங்களிலும் பார்க்க புலிகளுக்கு ஒக்சிஜன் கொடுக்கும் நடவடிக்கைகளே தீவிரமாக உள்ளது. ‘போராட்டம் என்றால் மக்கள் அழியத்தான் செய்வார்கள். இழப்புகள் இல்லாமல் போராட்டம் இல்லை’ என்றெல்லாம் விளக்கமளிக்கும் புலம்பெயர் உறவுகள் உயிருக்கு ஊசலாடும் அந்த மக்களின் காதிலும் பூ வைக்க முயற்சிக்கிறார்கள்.

‘கொப்பிக்கற்’ (copycat) தீக்குளிப்புகள் இன்றைய பிரச்சினைக்குத் தீர்வாகாது! : த ஜெயபாலன்

Stop_Suicideபெப்ரவரி 14 உலகம் முழுவதும் காதலர் தினத்தைக் கொண்டாட லண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தனது தலையில் பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்து உள்ளார். பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் இச்சம்பவம் பெப் 14 பிற்பகல் இடம்பெற்று உள்ளது. பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்க முன்னால் இலங்கை அரசுக்கு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்திற்கு அருகேயே தனது நண்பர்களுடன் வந்த இளைஞர் தன்மீது பெற்றோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். ஆனால் அவ்விளைஞர் தன்னைப் பற்ற வைக்க முன்னதாகவே பொலிசார் உடனடியாக செயற்பட்டு இன்னுமொரு மனிதத் தீப்பந்து கொழுந்தவிட்டு எரிவதைத் தடுத்து உள்ளனர்.

மற்றுமொரு லண்டன் தமிழ் இளைஞர் முருகதாஸ் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் தீக்குளித்து தன்னை மாய்த்துள்ளார். அவரை கௌரவப்படுத்தும் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் லண்டன் முழுவதும் ஒட்டப்பட மகனைப் பறிகொடுத்த தந்தை சுவிஸ்லாந்தக்குப் பயணமாகிறார். முத்துக்குமாரனுடன் ஆரம்பமான தீக்குளிப்பு இன்று மேற்குலகு நோக்கியும் நகர்ந்துள்ளது. வட இலங்கையின் வன்னிப் பிரதேசத்து மக்களின் அவலங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய உணர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த உணர்வலையை குறுகிய அரசியல் நோக்கங்களுடன் இன உணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரப்படுத்தி அரசியல் லாபம் பெறும் போக்கு ஒன்று இன்று ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு வாரங்களில் தீக்குளித்தவர்கள்:
முருகதாசன் (26), சுவிஸ்லாந் – 13 பெப்ரவரி 2009
ராஜா (27), மலேசியா – 08 பெப்ரவரி 2009
ரவிச்சந்திரன் (47), இந்தியா – 07 பெப்ரவரி 2009
முத்துக்குமார் (27), இந்தியா – 29 ஜனவரி 2009

அறியப்பட்ட தீக்குளிப்பு முயற்சிகள்:
பெயர் தெரியவில்லை, தீக்குளிப்புத் தடுக்கப்பட்டது, பிரித்தானியா – 14 பெப்ரவரி 2009
கோசல்ராம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்தியா – 10 பெப்ரவரி 2009
ராஜசேகரன், பொலிசாரால் கைது செய்யப்பட்டார், இந்தியா – 01 பெப்ரவரி 2009
தீனதயாளன், இந்தியா – 01 பெப்ரவரி 2009

வன்னி மக்கள் எதிர்நோக்குகின்ற அவலத்தை நிறுத்துவதற்கு எந்த வகையிலும் பயனளிக்காத வெறும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு செயலாகவே இந்த தீக்குளிப்புகள் அமைந்து உள்ளது. தீக்குளித்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் வன்னி மக்கள் மீதான தங்கள் உணர்வுகளை எழுதி வைத்து அம்மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் தங்களை அழித்து உள்ளனர். அவர்களுடைய ஆழமான சமூகப்பற்று மதிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு ஆழ்ந்த சமூகப்பற்று உடையவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதன் மூலம் அவர்களால் எதனையும் சாதித்து விடமுடிவதில்லை என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. அவர்களது அழிவில் குறுகிய அரசியல் லாபம் தேடுபவர்களும் அந்த உண்மையைச் சொல்ல முன்வருவதில்லை.

வன்னி மக்களின் படுகொலையைக் கண்டித்து தங்களது இன்னுயிரைக் கருக்கியவர்களின் தன்னலமற்ற பிறர் நலன் சிந்திக்கும் எண்ணம் மகத்தானது.  அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க  வார்த்தைகள் இல்லை.

ஆனால் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. இவ்வாறான உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் தீக்குளிப்புச் செய்ல்கள் தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் மகத்தானது. இவ்வாறான அநியாய இழப்புகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும். அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்படவும் வேண்டும். ஆனால் அதற்காக தங்களைத் தாங்களே அழிப்பது இப்பிரச்சினைக்கு தீர்வாகாது.

இந்த நல்ல உள்ளங்கள் நீண்டகாலம் உயிர்வாழ்ந்திருந்தால் தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கு நல்ல பல காரியங்களைச் செய்திருக்கலாம். அவர்கள் இவ்வாறு தங்களை அழித்துக் கொள்வதை எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்க முடியாது.

1983க்களில் இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு கொந்தளித்து இவ்வாறான பல தீக்குளிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றது. அதனால் தமிழ் சமூகம் எவ்வித நன்மையும் அடையவில்லை. இறுதியில் தமிழர்களை இந்திய அரசு தனது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டது.  நல்லுள்ளங்களின் இந்த செயல்கள்  குறுகிய அரசியல் நோக்கங்களுக்கே பயன்படும்.

இன்று ஈழத்தமிழர்கள் அவலத்திற்கு உள்ளாகின்றனர் என்பதன் அடிப்படையில் வெறும் இனவாதம் கக்கப்படுகிறது. இதனால்  இந்த இளைஞர்கள் அப்பாவி உணர்வாளர்கள் தூண்டப்பட்டு குற்ற உணர்வுக்கு உள்ளாகி தீக்குளிப்பு என்ற விபரீத முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். குறுகிய நோக்கங்களுடன் இவ்வாறான தீக்குளிப்புச் சம்பவங்களை ஊக்கப்படுத்துவதும் அதனை போற்றுவதும் மிகப்பெரும் தவறு. ஒரு மனித அவலத்தை கண்டிக்க இன்னொரு மனித அவலத்தை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

மாறி மாறிப் பதவிக்கு வந்த பேரினவாத அரசியல் தலைமைகள் தங்கள் வாக்கு வங்கிகளை மட்டுமே கருத்திற் கொண்டு இனவாதத்தை ஊட்டி வளர்த்தனர். சிறுபான்மையினங்களை எதிரிகளாக்கி அந்த இனவாதத் தீயில் தங்கள் அரசியலை செயற்படுத்தினர். இதற்கு பதிலாக எழுந்த தமிழ் அரசியல் தலைமைகளும் தங்களது வாக்கு வங்கியை நிரப்புவதற்காக தாங்களும் இனவாதத்தைக் கக்கினர். ஆயினும் காலத்திற்குக் காலம் சிங்கள இனவாதத் தலைமைகளுடன் – சிங்கள அதிகார வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டு தங்களது சந்தர்ப்பவாத அரசியலை நடாத்தினர். ஆயினும் இரு பக்கத்து மக்களும் இனவாதத்தினால் தூண்டப்பட்டு பரம எதிரிகளாகி உள்ளனர்.

இரு பங்கங்களிலுமுள்ள குறும் தேசிய இனவாதத் தலைமைகளின் செயற்பாடுகளுக்கு இலங்கையின் ஒட்டு மொத்த மக்களும் இன்று மிகுந்த விலையைச் செலுத்துகின்றனர். விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றியானது தமிழினத்தின் மீதான வெற்றியாக மகிந்த ராஜபக்ச குடும்ப அரசியலால் கற்பிதப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ் மகனுக்கும் சிங்கள மகனுக்கும் முஸ்லிம் மகனுக்கும் மலையக மகனுக்கும் உள்ள பொதுப் பிரச்சினைகளை எல்லாம் புறம்தள்ளி இனவாதத்தினால் அவர்களைக் கூறுபோட்டு சகல இன மக்களையும் ஆளும் அதிகார வர்க்கங்கள் பலவீனப்படுத்தி உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டவர்களும் தங்களது சுயநல அரசியலுக்கு அப்பால் அதிகார வேட்கையுடன் செயற்பட்டனரே அல்லாமல் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இயலவில்லை. அன்றைய தமிழ் மிதவாதிகளை சந்தர்ப்ப வாதிகள் என்று கூறி ஒதுக்கி அவர்களது உண்ணாவிரதப் போராட்டங்களில் உணவூட்டி குழப்பம் விளைவித்ததும் பின்னர் எண்பதுக்களில் இத்தலைமைகள் கொன்றொழிக்கப்பட்டதும் வரலாறு.

போராட்டத்தை தமது கைகளில் எடுத்த இளைஞர்களிடமும் வேகம் இருந்த அளவுக்கு விவேகம் இருக்கவில்லை. அதிகாரத்துக்கான வேட்கையில் தங்களுக்கு உள்ளேயே மோதி அழிந்து கொண்டனர். எஞ்சிய ஏனைய இயக்கங்களையும் உறுப்பினர்களையும் அழித்து விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அதிகாரத்தலைமை ஆயினர். தமிழர் விடுதலைக் கூட்டணி துப்பாக்கி ஏந்தாத புலிகள் என்றால் புலிகள் துப்பாக்கி ஏந்திய கூட்டணியினர். இவ்விரு அமைப்புகளினதும் அரசியலில் எவ்வித மாற்றமும் இல்லை. மூன்று தசாப்தங்களுக்கு முன்பாக அன்று கூட்டணித் தலைமைகள் மேடை போட்டு இனவாதத்தை முழங்கினர். இன்று புலத்தில் உள்ள பெருமக்கள் ஐபிசி போன்ற வானொலிகளிலும் இணையங்களிலும் இனவாதத்தை கக்குகின்றனர்.

அன்று உணர்வலைகளால் தூண்டப்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்கள் கைகளை பிளேட்டினால் கீறி அந்தத் தலைவர்களுக்கு இரத்தத் திலகம் இட்டனர். இன்று இளைஞர்கள் பல படிகள் தாண்டிச் சென்று தங்களையே தீப்பந்தங்களாக்கி உள்ளனர்.

போராட்டம் மனித வாழ்வை மேம்படுத்துவதற்காகவே அமைய வேண்டும். தமிழ் மக்களின் போராட்டத் தலைமைகளின் குறுகிய அரசியல் நோக்கங்களால் தமிழ் மக்களின் வாழ்க்கையே போராட்டமாகி தமிழ் மக்களின் வாழ்நிலை மிக மோசமாகி உள்ளது. இன்று உணர்ச்சி வசப்பட்டு தங்களைத் தீப்பந்தங்களாக்கியவர்கள் மீண்டும் உயிருடன் வந்து கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் மக்கள் நிதானமாக சிந்திக்கும் போது கேள்விகள் எழும். அப்போது குறும்தேசிய கூட்டணித் தலைமைகளை மக்கள் எவ்வாறு ஓரம்கட்டினரோ அவ்வாறே இன்றைய தலைமைகளும் ஓரம்கட்டப்படுவது தவிர்க்க முடியாது.

தமிழ் சமூகத்தின் மத்தியில் தற்கொலைக் கலாச்சாரம் பற்றிய ஆய்வுகள் மிகவும் அவசியமாகி உள்ளது. பொதுவாகவே கல்வி, காதல், மணவாழ்வு நெருக்கடிகள் ஏற்படும் போது தற்கொலை செய்து கொள்கின்ற நிகழ்வுகள் விடுதலைப் போராட்டத்திற்கு முன்னரேயே இருந்துள்ளது. அதன் பின்னரும் தங்களது நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்கான ஒரு வழிகோலாகவும் இந்தத் தற்கொலைகள் அமைந்து இருந்தது. 2004 சுனாமி நிகழ்வின் பின்னர் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியதும் அவர்கள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவங்களும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் பெருமளவில் இடம்பெற்றது.

இவற்றுக்கு அப்பால் விடுதலைப் புலிகள் தற்கொலைக் கலாச்சாரம் ஒன்றைக் கட்டமைத்து உள்ளனர். இவற்றின் சரி பிழைகளை விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் விடுதலைப் புலிகளின் இந்தத் தற்கொலைக் கலாச்சாரம் சமூகத்தில் ஏற்படுத்தகின்ற தாக்கம் பற்றிய ஆய்வுகள் கல்வியியலாளர்களால் மேற்கொள்ளப்படுவது மிகவும் அவசியம்.

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளிலும் தற்கொலைகள் பொதுவான விடயமாகவே உள்ளது. குறிப்பாக நடுத்தர வயது இளைஞர்களே கூடுதலாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கான காரணங்கள் பல்வகைப்பட்டாலும் தனிமை, அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு கேள்விக்குறியான எதிர்காலம், குடும்பப் பிணக்குகள் என்பன முக்கிய காரணமாகின்றது. இப்பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவதற்கு தற்கொலையை ஒரு வழியாகக் கொள்கின்றனர்.

தற்போதைய ஆய்வாளர்கள் தற்கொலையைத் தூண்டுகின்ற பரம்பரையியல் கூறுகள் சிலரில் சில சமூகத்தவரில் செயலூக்கம் பெற்றிருப்பதான முடிவுகளுக்கும் வந்துள்ளனர்.

குறிப்பாக இலங்கையும் தற்கொலை வீதம் அதிகமுள்ள ஒரு நாடக உள்ளது. தமிழ் சமூகத்தில் தற்கொலை வீதம் பற்றிய சரியான ஆய்வுகள் பதிவுள் இல்லை. இவை பற்றிய ஆய்வுகள் மிகவும் அவசியமானது.

தற்போதைய தீக்குளிப்புகள் ஒரு அரசியல் நோக்கமுடையவை. ஆயினும் இவை ஒரு கொப்பிகற் முறையில் பிரதி செய்யப்பட்டு அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. இந்த தீக்குளிப்புகளை பெருமிதப்படுத்துவதும் கௌரவிப்பதும் இவ்வகையான செயற்பாடுகளைத் தூண்டுவதாகவே அமைகின்றது. அதனாலேயே இந்த கொப்பிக்கற் தீக்குளிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. மறத் தமிழன், வீரத்தமிழன் போன்ற பதங்களைச் சூட்டி மாயையான ஒரு கௌரவத்தை ஏற்படுத்துவதன் மூலம் இலகுவான மனநிலையுடையவர்களை ஆபத்திற்குள் தள்ளுகின்றது. ஏற்கனவே மனஅழுத்தங்களுக்கு உள்ளான ஒருவர் இவ்வாறான இன உணர்வுத் தூண்டுதல்களாலும் தற்கொலை என்பது கௌரவமான விடயமாகப் பார்க்கப்படுவதாலும் அந்த வழியை நோக்கித் தூண்டப்படுகிறார். ஒரு தெளிவான மனநிலையில் உள்ள ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக எந்த மருத்துவ ஆய்வும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறான தீக்குளிப்பு போன்ற தற்கொலைகள் தமிழ் மக்களது அரசியல் போக்கில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது. இவ்வாறான உயிரிழப்புகள் அர்த்தமற்றவை. பயனற்றவை. வீணாணது. இது தமிழ் சமூகம் எதிர்கொள்ள வேண்டிய சமூகநோய். தமிழ் சமூகத்தின் ஆழ்மனதில் உள்ள ஆரவாரமற்ற அழுகை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Sivajilingam M K”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தையை நடத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். இணைத்தலைமை நாடுகள் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளைவிடுத்த 24 மணி நேரத்தினுள் பெப்ரவரி 3ல் தேசம்நெற்றுக்கு பேட்டியளித்த பா உ சிவாஜிலிங்கம் விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சில தவறுகளை விட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக பலவீனமானதாக இருந்தது என்ற வகையில் கருத்து வெளியிட்ட அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று ஒரு தீர்வுத் திட்டதை முன்வைக்காமல் போனது மிகப்பெரிய தவறு என்று தான் கருதுவதாகவும் கூறினார். தமிழ் மக்கள் இன்றொரு நெருக்கடி மிக்க சூழலில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களுக்கான கௌரவமான ஒரு அரசியல் தீர்வை பெறுவது மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டார்.

லண்டன் மிச்சம் பகுதியில் அவர் தங்கியிருந்த இல்லத்தில் அவரைச் சந்தித்து இரண்டரை மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தேசம்நெற் ஆசிரியர்கள் ரி சோதிலிங்கமும் த ஜெயபாலனும் பா உ எம் கே சிவாஜிலிங்கத்தை நேர்கண்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உணர்ச்சிகரமாகப் பதிலளித்த பா உ சிவாஜிலிங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை இலங்கை அரசால் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்று தெரிவித்தார். அது விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய பலம் என்றும் கூறினார்.

தேசம்நெற் வாசகர்களுக்காக பா உ எம் கே சிவாஜிலிங்கத்துடனான பேட்டி:

Sivajilingam M K & Jeyabalan Tதேசம்நெற்: இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தத்தில் சிக்கியுள்ள 250 000 தமழ் மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டைக்கொண்டு உள்ளது?

சிவாஜிலிங்கம்: முதலில் 250 000 என்பது தவறு. 400 000 இருந்து 500 000 வரை இருக்கிறார்கள். சர்வதேச சமூகமே 300 000 டின்று மதிப்பிட்டு இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் 150 000 என்றும் சிலசமயம் 100 000 கூறிக்கொண்டு உள்ளது.

வன்னியுத்தம் இன்று நேற்று ஆரம்பிக்கப்படவில்லை. மாவிலாற்றிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 2008ல் இலங்கை அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை மீறி பிரகடனப்படுத்திய ஒரு யுத்தத்தை நடத்துகிறது. இதனை தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போராகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

தேசம்நெற்: மாவிலாறு அணைக்கட்டை மறித்து நீர் விநியோகத்தை தடுத்தது புலிகள். 2007 மாவீரர் உரையில் யுத்தப் பிரகடனம் செய்து தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்ததும் புலிகள். அதனைத் தொடர்தே அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த யுத்தத்தை ஆரம்பித்ததில் புலிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அல்லவா?

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததில் இருந்து ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெலஉறுமய போன்றவற்றின் ஆலோசனையுடயேனே செயற்படுகின்றார். அந்த நிகழ்ச்சி நிரலிலேயே செல்கிறார். தமிழ் தேசிய உணர்வாளர்களை யாழ்ப்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் வேட்டையாடியதைத் தொடர்ந்தே இந்த யுத்தம் ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் மாவிலாறு அமைந்தது. 2007ல் பெரிய குண்டுவெடிப்பு என்று எதுவும் இடம்பெறவில்லை.

யுத்த நிறுத்த மீறல்கள் என்று சொன்னால் 3000 – 5000 என்று புலிகள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் ஒருவரை இயக்கத்தில் சேர்திருந்தால் அதுவும் மீறல்தான். மற்றும்படி பெரிய மீறல்கள் என்று குறிப்பிட எதுவும் இல்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச ஒரு இராணுவத் தீர்வை நோக்கித் தான் செல்ல எண்ணியிருந்தார். அது தான் நடைபெறுகிறது.

தேசம்நெற்: மகிந்த ராஜபக்ச இராணுத் தீர்வுக்கு செல்லக் கூடியவர் என்பதனாலேயே புலிகள் அவரை வெற்றியடைச் செய்வதற்காக அதற்கு ஏற்ற வகையில் தமிழ் மக்களை வாக்களிப்பில் ஈடுபடவிடாமல் தடுத்தனர். அந்த அடிப்படையிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரனது அப்போதைய மாவீரர் தின உரையும் அமைந்தது.

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்சவை விடுதலைப் புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது தவறானது. சிங்களவர்கள் தங்களுடைய தலைவரை தாங்களே தெரிவு செய்ய வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஆனால் தமிழர் தரப்பில் சிலருக்கு ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்திருந்தால் அவர் கொஞ்சம் மென்மையான போக்கை கொண்டிருப்பார் என்ற நம்பி;க்கை இருந்தது. இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்க இந்த இராணுவத் தீர்வை ஆதரித்து நிற்பதில் இருந்து எந்த சிங்களத் தலைவருமே ஒரு தீர்வுக்கு தயாரில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே நாங்கள் இதில் பிரேத பரிசோதணை செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எவர் அந்த ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி நிரலிலேயே நடந்திருக்கும் ஆனால் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.

தேசம்நெற்: இந்த யுத்தத்தை வலிய ஆரம்பித்ததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் நிறைந்த பங்கு உள்ளது. பொங்கு தமிழ் போன்ற நிகழ்ச்சிகளில் இன உணர்வுகளை உசுப்பி போருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களும் அழைப்பு விட்டிருந்தனர். தெற்கிற்கு சவப்பெட்டிகள் வரும் என்ற பேச்சுக்கள் பாராளுமன்றத்திலும் ஒலித்தது. அந்த தவறுகளை நீங்கள் இப்போது உணர்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இல்லை. இல்லை. அடக்குமுறையை நீங்கள் திணித்தால் அந்த அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுவோம். அந்த நேரத்திலே 40 000 சவப்பெட்டிகள் தெற்குக்கு வரும் என்று ரிஎன்ஏ பா உ கூறியிருந்தது யுத்த நிலமையல்ல. அதன் பிறகு பல தடவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த முன்வந்திருந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களை படுகொலை செய்தது அரசாங்கம். தமிழ் மக்களின் அரசியல் சக்திகள் எல்லாவற்றையும் அழித்தது அரசாங்கம். தமிழ் மக்களுக்காக யார் போராடுவார்களோ போராட முற்படுவார்களோ அவர்களை எல்லாம் வேட்டையாடப்படுவார்ட்கள் என்பது தான் சிங்களத்தினுடைய தெளிவான செய்தி.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாக செயற்பட முடியாமல் விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தலின் படியே செயற்பட வேண்டிய ஒரு நிலை இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

சிவாஜிலிங்கம்: 2004 தேர்தலின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளோடு நேரடியாகக் கலந்துபேசி தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க வேண்டிய நிலை இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகள். பேச்சுவார்த்தைகள் புலிகளுடன் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றது 2003ல் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை செயற்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கோரி இருந்தோம். அதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்துடன் இணைந்து செயற்படுவது அவர்களுடைய பினாமி என்பதல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாகவே செயற்பட்டு வருகிறது.

தேசம்நெற்: விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி உரையாட முன்வரவேண்டும் அதுவே மக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் என இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் 2002 பேச்சுவார்த்தையின் போது மத்தியஸ்தம் வகித்த இணைத் தலைமை நாடுகளும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: மக்களை வெளியே கொண்டுவருவது என்பது இரண்டு தரப்பும் தீர்மானிக்க வேண்டிய விடயம். இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக எல்லோரையும் ஒழிக்க வேண்டும் என்ற நினைக்கின்ற வகையிலே மக்கள் வெளியேற விரும்பவில்லை. வேண்டுமென்றால் சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் மிசன் அங்கு செல்லட்டும். அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் அங்கு சென்று பார்வையிடட்டும்.

இன்றைக்கு புலிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏனைய இயக்கங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது ஒடுக்குமுறையின் அடக்குமுறையின் வெளிப்பாடு. சிங்களப் பெரினவாதம் எங்களை அழிப்பதைத் தடுப்பதற்கே ஆயும் ஏந்தப்பட்டது. அதனைக் கீழே வைப்பதை மக்கள் விரும்பவில்லை. இந்த இடத்திலே சர்வதேசம் தன்னுடைய நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையினுடைய தலையீட்டின் ஊடாக அரசியல் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

அதைவிடுத்து இன்னொருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்வதற்குத்தான் சர்வதேச சமூகம் வருகின்றது என்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் போராடி அழிவதற்கு ஆய்த்தமாக இருக்கின்றோம். அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் யாரும் தயாராக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இல்லை.

தேசம்நெற்: சர்வதேச சமூகத்தினுடைய தலையீடு என்று எதனைக் கேட்கறீர்கள். சமாதானப் படை ஒன்று வரவேண்டும் என்று கேட்கறீர்களா? அல்லது பாதுகாப்பு வலயத்தை சர்வதேசத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்று கேட்கிறீர்களா? அவ்வாறு சர்வதேசத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயம் ஒப்படைக்கப்பட்டால் மக்களை பாதுகாப்பு வலயத்திற்கு அனுமதிக்கும்படி நீங்கள் கோருவீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்த நிலைமைகளை நேரில் வந்து பார்க்குமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விட்டு இருக்கிறார்கள் அதனை ஏன் இன்னமும் செய்யவில்லை. அதனைச் செய்து விட்டு விடுதலைப் புலிகளோடு சர்வதேச சமூகம் பேசலாமே. இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது. அங்கிருக்கின்ற மக்களும் புலிகளும் தான் தீர்மானிக்க வேண்டும்.

அங்கு ஆபத்தில் இருக்கின்ற மக்களுக்கு பாதுகாப்பைச் செய்யாமல் இலங்கை அரசாங்கத்தை நம்பி போகச் சொல்ல முடியாது.

தேசம்நெற்: இன்றைக்கு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்ல முடியாது. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் கொல்லபடுவது பற்றிய கரிசனை இல்லாமல் இருக்கலாம்.

சிவாஜிலிங்கம்: இல்லாமல் இருக்கலாம் இல்லை துப்பரவாக இல்லை. இன்றைக்கு இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் தான் செய்து கொண்டிருக்கிறது.

தேசம்நெற்: அதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் முக்கிய பங்கிருக்கிறது ஏனென்றால் அவர்கள்தான் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படி இருந்தும் வடக்கு கிழக்கின் எல்லாம் பகுதிகளில் இருந்தும் பின்வாங்கிய புலிகள் மக்கள் செறிவாக உள்ள பகுதியில் பின்வாங்காமல் நின்று சண்டையிடுவதன் நோக்கம் என்ன? இப்பகுதியில் சண்டையிட்டால் பெரும் மனித அவலம் நிகழும். இந்த அழிவை எப்படி நிறுத்துவது?

சிவாஜிலிங்கம்: சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு துணைபோவதை முதலில் நிறுத்தட்டும். பின்னர் வன்னி சென்று மக்களுடன் பேசட்டும். புலிகளுடன் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். இதற்கு மேல் சிறிலங்கா அரசாங்கத்தினது கொடுமைகள் தொடருமாக இருந்தால் போராடுகிற சக்தியைக் கொண்டிருக்கின்ற நாங்கள். தாங்கும் சக்தியையும் கொண்டிருக்கிறோம். ஒரு படைபலமோ படைபத்தினுடைய எண்ணிக்கையோ ஆயுதங்களோ வெற்றியைத் தீர்மானிக்காது. தாங்குகிற சக்தி தான் தீர்மானிக்கும். இறுதி வெற்றி எங்களுக்கெ என்றதிலை நாங்கள் உறுதியாக இருக்கிறம்.

இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள் 25 000 போராளிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதன் முடிவென்ன? இதுக்கு விலையென்ன? வெறும் 13வது திருத்தம் அந்தத் திருத்தம் இந்தத் திருத்தம் என்று சொல்லி எங்களை ஏமாற்ற முற்படுவதற்கு சர்வதேச சமூகம் துணைபோகுமாக இருந்தால் நாங்கள் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடி பணிய மாட்டோம். ஒட்டுமொத்த இனமும் அழிய வேண்டி ஏற்பட்டாலும் அதைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் இது தான் எங்களுடைய நிலைப்பாடு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனமும் அழிவதற்கு தயாராக இருக்கிறம் என்று ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?

சிவாஜிலிங்கம்: மக்களுக்கு எங்களுக்கு சுயமரியாதை என்ற அடிப்படையில் தான் நாங்கள் போராட ஆரம்பித்த நாங்கள். சுயமரியாதையை இழந்து நாங்கள் சரணாகதியடைந்து மீண்டும் இரண்டாம் தரப் மூன்றாம் தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. மக்கள் எங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள் தங்களுக்கு நீதியான கௌரவமான வாழ்வை ஏற்படத்தித் தருவதற்கு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனத்தையும் அழிப்பதற்கு அல்லவே. வெளிநாடுகளுக்கு வந்துள்ள மூன்றிலொரு பகுதி தமிழர்களதும் சுயமரியாதை என்ன?

சிவாஜிலிங்கம்: அதை எங்களால் செய்ய முடியவில்லை என்றால் அடிமையாக செல்லுங்கள் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. இதற்கு மேல் நீங்கள் வேறு விடயத்திற்கு செல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

வெறுமனே புலிகள் தான் விடுவிக்க வேண்டும் என்றால் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது. யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. ஆறு லட்சம் மக்கள் இருக்கிறார்கள். வேட்டையாடப்படுகிறார்கள். அதே போல் வவுனியா நகரம் மன்னார் நகரத்தில் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கிழக்கு மாகாணம் கொழும்பு நகரம் எங்கும் தமிழ் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சரி வன்னி நிலப்பரப்பில் தான் அவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சரி வேறு எங்கும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறவில்லையா? இந்த அவலங்களுக்கு முடிவில்லாத நிலையில் வன்னியைவிட மோசமான அவலத்திற்குள் அந்த மக்களைத் தள்ளுவதற்கு நாங்கள் தயாரில்லை. அதற்கு துணை போக முடியாது.

Sivajilingam M K & Sothilingam Tதேசம்நெற்: அண்மையில் இந்தியா சென்று திரும்பிய நீங்கள் பல இந்தியத் தலைவர்களையும் சந்தித்து இருந்தீர்கள். இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

சிவாஜிலிங்கம்: நான் அறிந்தவரை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடு தவறானது என்பது தான் என்னுடைய கருத்து. பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையின் புலிகளை அழிக்கும் யுத்தத்திற்கு முழுமையாக உதவி வருகிறார்கள். இராணுவ ரிதியாக புலிகள் பலமிழந்து போயுள்ளனர். இலங்கை பெரும்பாலும் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட நிலையே காணப்படுகிறது. ஈரான் நிதியுதவியை அள்ளிக் கொடுக்கிறது. இந்தியாவிற்கு எதிரானவர்கள் இலங்கையில் ஆளுகை செலுத்துகையில் குறைந்தது மூன்றில் ஒரு நிலப்பரப்பாவது தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் பழிவாங்கத் துடிப்பது சீனா, பாகிஸ்தான் நாடுகளின் கையை அங்கு ஓங்கச் செய்யும். இதனை இந்தியா விரைவில் உணரும்.

ஆனால் எமது தொப்புள்கொடி உறவுகளான தாய்த் தமிழக மக்கள் உணர்வாகவும் விழிப்பாகவும் இருக்கிறார்கள். 

தேசம்நெற்: இந்தியக் காங்கிரஸ் கட்சி தான் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி அமைந்தால் அது விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமையும் என்று நினைக்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்தியாவின் தேர்தலில் யார் வெற்றி பெறவேண்டும் என்பது பற்றி இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் மாற்றங்கள் ஏற்பட்டால் வாய்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் அவ்வளவுதான்.

பிஜேபி ஆட்சியின் போது அன்ரன் பாலசிங்கம் பயணம் செய்த கப்பல் இந்திய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அப்போது தங்கள் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு தொடர்பு கொண்டு தாங்கள் என்ன செய்வது என்று கப்பலில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர். அவர்களை சற்றுப் பொறுக்கும்படி சொல்லிவிட்டு விடுதலைப் புலிகள் நெடுமாறன் ஐயாவுடன் தொடர்புகொண்டனர். நெடுமாறன் ஐயா அப்போது பாதுகாப்புச் சௌலாளராக இருந்த ஜோர்ச் பேர்னான்டஸ் உடன் தொடர்பு கொண்டு பின்னர் மனிதாபிமான அடிப்படையில் பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

தேசம்நெற்: தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை படிமுறையாக வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்பு ஒன்று இருந்தள்ளது. குறிப்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் சந்திரிகாவின் காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். இதில் தமிழ் அரசியல் தலைமைகள் தவறுவிட்டுள்ளனவா?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: தமிழ் தரப்பில் எவ்விதமான தவறும் இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட தலைமை தாங்கிய வரதராஜப்பெருமாள் என்ன சொல்லிச் சென்றார். அதை நடைமறைப்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் அப்படிச் செய்திருந்தால் அடுத்த பக்கம் கொண்டு சென்றிருக்கலாம். 2002 பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட தீ;ர்மானங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஐஎஸ்ஜிஏ க்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையே. பி ரொம்ஸ்க்கு என்ன நடந்தது.

தமிழ் தேசியத்தின் போராட்டம் ஓயாது. வேணும் என்றால் அது மிகவும் நசுக்கப்படலாம். அழிக்கப்படலாம் ஆனால் சாம்பல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவை எழும்புவது போன்று இந்தப் போராட்டம் திருப்பி வெடிக்கும். எல்ரிரிஈ தவறுக்ள் விட்டுருக்கிறது. நாங்கள் தவறுகள் விட்டிருக்கிறம். ஆனால் அடுத்த தலைமுறை அந்தத் தவறை விடாது என்றதை நான் டெல்லியில் ஒரு திங் ராங்க் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். புலிகள் அழிக்கப்பட்டாலும் ஒரு எதிர்ப்பு இயக்கம் ஒன்று எஸ் ஓ வை ஓ என்ற பெயரில் இருக்கட்டும் லோங்ரேமில் ஒரு வரலாறு படைக்கட்டும்.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

சிவாஜிலிங்கம்: கட்சிகள் கூட்டமைப்புகள் அனைத்தையும் பிளவுபடுத்திய மகிந்த ராஜபக்சவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பா உ க்களில் ஒருவரையும் விலைக்கு வாங்க முடியாமல் போனது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று நான் கருதுகிறேன். 

தேசம்நெற்: இன்று இந்த ஆபத்தான சூழலில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டதற்கு பல்வேறு தவறான முடிவுகள் காரணமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய பொறுப்பை சரிவரச் செய்யவில்லை என்று நீங்கள் கருதவில்லையா?

சிவாஜிலிங்கம்: விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்.

தேசம்நெற்: மீண்டும் பழைய விடயத்திற்கே வருகிறேன். இந்த யுத்த்தில் சிக்குண்ட மக்கள் லட்சக்கணக்கான மக்களை எப்படி இந்த அவலத்தில் இருந்து மீட்க முடியும்?

சிவாஜிலிங்கம்: சர்வதேச கண்காணிப்பில் ஆயுதங்களை வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்குப் பொவது தான் மக்களுக்கும் நல்லது எல்லவற்றுக்கும் நல்லது. அப்படி பேச்சுவார்த்தையை நடாத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் புலிகள் சரணடைவதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

புதுக்குடியிருப்பில் இருந்து இன்னும் ஆழமான யுத்த பகுதிக்குள் மக்கள் நகர்வு – ‘புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு மன்னிப்பு இல்லை’ கோதபாய : த ஜெயபாலன்

Makeshift Hospitalபுலிகளுடன் சரணடைவது பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை அவர்கள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சரணடைய வேண்டும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்ச தெரிவித்து உள்ளார். புலிகளின் கீழ் நிலை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பிரதான சமூகத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள கோதபாய ராஜபக்ச புலிகளின் தலைமை உறுப்பினர்களுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். பிபிசி உலகசேவைக்கு இணைத் தலைமைநாடுகளின் வேண்டுகோள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலர் இதனைத் தெரிவித்து உள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான இவரை குறிவைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் தோல்வியடைந்தது தெரிந்ததே. மேலும் தற்போதைய இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலும் தோல்வியடைந்தது. அடிபட்ட பாம்புகளின் சீற்றத்தில் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் தற்போது முடக்கி விடப்பட்டு உள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவருடைய சகோதரர் கோதபாய ராஜபக்சவே முக்கிய முடிவுகளில் ஆளுமை செலுத்துகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.

இலங்கை அரசினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக கடந்த சில தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு இயங்கி வந்த ஒரே மருத்துவ நிலையமும் செயலிழந்து போய் உள்ளது. அங்கு கடமையாற்றிய 15 யுஎன் பணியாளர்களும் அவர்களது 81 குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையை விட்டு வெளியேற் உள்ளதாக கொழும்பில் உள்ள யுஎன் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்து உள்ளார்.

சர்வதேச அழுத்தங்கள் பலமுனைகளில் இருந்து வந்த போதும் புதுக்குடியிருப்பில் உள்ள 250000 மக்களது உயிர்களைப் பணயம் வைத்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தங்கள் இராணுவ நடவடிக்கையைத் தொடர்கின்றனர். உலகின் முக்கிய தலை நகரங்களில் எல்லாம் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பிய போதும் அவை கவனத்திற்கொள்ளபடுவதாக இல்லை.

கடந்த நான்கு நாட்களாக பெப்ப்ரவரியில் மட்டும் 85க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் ஐசிஆர்சி மருத்துவப் பணியாளர்.
01 பெப் 13 பேர் கொல்லப்பட்டனர்
02 பெப் 9 பேர் கொல்லப்பட்டனர்
03 பெப் 52 பேர் கொல்லப்பட்டனர்
04 பெப் 12 பேர் கொல்லப்பட்டனர்
05 பெப் 7 பேர் கொல்லப்பட்டனர்

மருத்துவமனை மீதான தொடர்ச்சியான தாக்குதலை அடுத்து காயப்பட்டவர்கள் நோயாளர்கள் இன்னும் ஆழமான யுத்த பகுதிகள்  நோக்கி நகர நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதாக அல்ஜசீரா செய்தி தெரிவிக்கின்றது. கரையோரப் பிரதேசமான அங்கு குடிநிர் வசதிகளே இல்லையென ஐசிஆர்சி பெச்சாளர் சரசி விஜயரட்னே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காயப்பட்டவர்களும் நோயாளிகயளும் மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு அல்லது யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்தமாறு அரச படைகளையும் புலிகளையும் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றும் உடையார்கட்டு மருத்துவமனை மீது பாரதுரமான தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) உலக உணவுத் திட்டம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் போச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கிறது. நாளை உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்து உள்ளது.

இணைத் தலைமை நாடுகளின் சரணடைவது பற்றிய வேண்டுகோள் தொடர்பாக புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் குறிப்பிவில்லை. குறிப்பாக நோர்வேயும் அந்த வேண்டுகோளில் தன்னையும் இணைத்துக் கொண்டது புலிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவே உள்ளது. பேச்சு வாரத்தைகளின் போது நோர்வே விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகச் செயற்பட்டது என்று குற்றச்சாட்டப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் முற்றிலும் இந்தியாவின் அணுசரணையுடன் மேற்கொள்ளப்படுகிறது என்பது இந்தியாவின் நீண்ட மெளனத்தில் இருந்து தெரியவருகிறது. தமிழ்நாட்டை உசுப்பி இந்தாயவைப் பணிய வைக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அமெரிக்காவில் பதவியேற்றுள்ள புதிய ஆட்சியாளர்களும் வழமையான கோரிக்கைகள் கண்டனங்களுடன் நிறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுடன் பிரித்தானியாவும் இணைந்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட புலிகள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒதுக்கப்பட்டு உள்ளனர்.

எவ்வித அரசியல் செயற்பாடுகளையும் கொண்டிராத முற்றிலும் இராணுவ அமைப்பான புலிகள் சக இன மக்களுடன் நல்லுநவைக் கொண்டிராத சக தேசிய சர்வதேசிய விடுதலை அமைப்புகளுடன் உறவுகளைக் கொண்டிராத மக்களை நம்பாது ஆயுதங்களை மட்டுமே நம்பிய புலிகளை அந்த ஆயுதங்கள் இன்று காப்பாற்றவில்லை. 250 000 மக்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்று தங்களைப் பணயம் வைத்து புலிகளைக் காக்கின்றனர்.

தற்போதைய யுத்தத்தில் சிக்குண்டுள்ள 250 000 மக்களில் கணிசமானவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்கள் அவர்களது அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இராணுவப் பயிற்சிக்கு உட்பட்டவர்கள். கடந்த இரு தசாப்தங்களாக தங்களது பூரண கட்டுப்பாட்டில் இருந்த மக்களை புலிகள் தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதும் அதனை அந்த மக்களால் மறுப்பதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்பதும் யதார்த்தம்.

அந்த வகையில் இலங்கை அரசு அந்த மக்களின் நம்பிக்கையைப் பெறாத வரையில் அவர்கள் ஒரு போதும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையமாட்டார்கள் என்பது உறுதி. இதற்கிடையே யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த சிலர் கைது செய்யப்பட்டு காணாமல் போகிறார்கள் என்ற செய்திகள் வெளியெ கசிகின்றன. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களதும் நிலை மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்களை ஒப்படைக்க வேண்டும். சரணடைய விரும்புபவர்கள் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளிடம் சரணடைவதற்கான வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இராணுவத்தை எந்தவொரு வன்னிக் குடிமகனும் குடிமகளும் நம்புவார்கள் என்று அரசோ சர்வதேச சமூகமோ எதிர்பார்க்க முடியாது.

மாற்றுக் கருத்து தளத்தில் செயற்பட்டவர்கள் மாற்றுக் கருத்து என்பது  புலியெதிர்ப்பு என்றளவில் செயற்படாமல் இலங்கை அரசு மீதான தங்களுடைய அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியம். இந்த வன்னி மக்கள் சந்திக்க உள்ள அவலத்தை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பெயருக்கு அறிக்கைவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்றளவில் இல்லாமல் தொடர்ச்சியான அழுத்தங்களை நேரடியாகவும் சர்வதேச சமூகத்திற்கு ஊடாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புலி எப்ப காலியாகும் நாங்கள் எப்ப போய் குந்தலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டால் அது அவர்கள் வன்னி மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகச் செயலாக அமையும்.

இன்றைக்கு தமிழ் மக்களுடைய போராட்டங்கள் யுத்தத்தை நிறுத்துவதையும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்படுவதையும் அரசியல் தீர்வு முன் வைக்கப்படுவதையும் மையமாக வைத்து நடத்தப்பட வேண்டும். மாறாக புலிகளின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் எவ்வித போராட்டமும் பயனற்றதாகவே அமையும். எங்கள் தலைவர் பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் எங்களுக்கு தமிழீழம் வேண்டும் என்ற கோசங்கள் வன்னி மக்களுக்கு எவ்வகையிலும் உதவாது. யதார்தத்தைப் புரிந்து கொண்டு ஏற்படப் போகும் மனித அவலத்தை தடுத்து நிறுத்த போராடுவதே இன்றுள்ள முக்கிய கடமை.

பெயர் குறிப்பிட விரும்பாத ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார் ”நாங்கள் எங்களுடைய வரலாற்றுத் தவறுகளை எழுதப் போனால் புத்தகம் புத்தகமாக எழுதலாம். பாவம் மக்கள். ரொம்பவும் கஸ்டப்படுத்திவிட்டோம்” என்று. அவர் மேலும் கூறுகையில் ”இன்றைக்கு பணயம் வைக்கப்பட்டுள்ள 250 000 மக்களில் 5000 – 10 000 மக்களைப் பலிகொடுத்துத் தான் அரசியல் பேரம் பேச வேண்டி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

சாத்தான்களின் செவிகளில் மனித உரிமை வேதம் – தங்கள் வேள்விக்கு மக்களை பலியிட சிங்கமும் புலியும் தயார் : த ஜெயபாலன்

War in Wanni - Photo_Puthinamமகாபாரதக் கதையில் அனைத்தையும் வைத்து சீட்டாடி நிர்க்கதியான தருமன் இறுதியில் தனது மனைவியைப் பணயம் வைத்து சீட்டாடித் தோற்றது என்பது புராணக் கதை. இப்போது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறுகின்ற இந்த யுத்தத்தில் ஒட்டுமொத்த வன்னி மக்களும் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு எனப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்த போதும் அவற்றை முற்று முழுதாக உதாசீனப்படுத்திவிட்டு தங்கள் பாட்டுக்கு தங்கள் நோக்கங்களுக்காக இரு தரப்பும் யுத்தத்தைத் தொடர்கிறது. நிர்க்கதியான மக்கள் என்பதற்கு உண்மையான உதாரணம் வன்னி மக்கள் என்பதற்கு அப்பால் அதற்கொரு விளக்கம் வேண்டியதில்லை.

சார்ள்ஸ் டார்வினின் 200வது பிறந்த தினம் பெப் 12ல் நினைவுகூரப்படும் காலத்தில் யுத்தப் பிரியர்களான சிங்கமும் புலியும் ‘தக்கன பிழைக்கும்’ விதியை வன்னி மக்களின் மத்தியில் வைத்து பரீட்சித்துப் பார்க்கத் முனைந்துள்ளன. அனைத்து யுத்த விதிகளையும் மீறி கடந்த பல மாதங்களாக நடைபெறும் இந்த யுத்தம் தற்போது இந்த அத்தியாயத்தின் க்ளைமக்ஸிற்கு வந்துள்ளது. துரதிஸ்ட வசமாக இங்கு கதாநாயகர்கள் யாரும் இல்லை. ஆபத்தில் கைகொடுக்க கிருஸ்ணபரமாத்மாவும் இல்லை. இரு பக்கத்திலும் நிற்பது சாத்தான்கள் மட்டுமே. இவர்களுக்கு மத்தியில் அப்பாவி வன்னி மக்கள் ஒன்றல்ல இரண்டல்ல 250 000 பேர் வரை மாட்டிக் கொண்டு உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் வயோதிபர்கள் எவ்வித வேறுபாடும் இன்றி தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களுக்குள் வெட்டைவெளியில் விடப்பட்டு உள்ளனர். இந்த ஆபத்தான சூழலில் குழந்தைகள் பிரசவிக்கின்றன. மழலைகள் தங்கள் உயிரைக் காக்க அழுதழுது ஓடுகின்றன. மரணங்கள் தொடர்கிறது. அன்புக்குரியவர்களை இழந்த உறவுகள் துடிக்கின்றன.

செப்ரம்பர் 11 அன்று தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க இரட்டைக் கோபுரங்களில் ஒன்று உலகமே பார்த்து நிற்க யாருமே எதுவும் செய்ய வியலாத கையறு நிலையில் நிற்க சில மணி நேரங்களில் சரிந்து வீழ்ந்தது. இறுதிநேரத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மக்கள் தவித்த தவிப்பு கையறு நிலையில் உலகமே அதனைப் பார்த்து நின்றது. அந்த மனித அவலம் அதனிலும் பல மடங்காக புதுக்குடியிருப்பில் நிகழ்ந்துவிடும் என்ற அபாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அவலத்தை ஏற்படாமல் தடுக்க சகல சந்தர்ப்பங்களும் உண்டு. அப்படி இருந்தும் ஒரு மனித அவலம் ஏற்படுத்தப்படுமானால் அதனை தமிழ் மக்கள் என்றைக்கும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள்.

சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டும். அதற்கான நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். இன்றுள்ள நிலையில் வெறும் அழுத்தங்கள் மட்டும் போதாது. செயற்பாடுகள் மிக அவசியம்.

வன்னி மக்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் அந்த மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவதைக் கோருவதை விட்டுவிட்டு புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஜனவரி 31ல் பிரித்தானிய தமிழர் பேரவையும் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் 50 000 – 100 000 பேர் வரை கலந்தகொண்டனர். சகல அரசியல் முரண்பாடுகளையும் மறந்து வன்னி மக்களைக் காக்க அவர்கள் திரண்டனர். அங்கு ஒரு சில புலி ஆதரவுக் குரல்களும் வே பிரபாகரனின் படங்களும் கொண்டு வரப்பட்டாலும் அவற்றை அப்புறப்படுத்தும் படி நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது.  யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அவ்வூர்வலத்தில் கலந்த கொண்டவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. ஆனால் ஏற்பாட்டாளர்களான பிரித்தானிய தமிழர் பேரவையினது செய்திக் குறிப்பு முற்றிலும் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலையை எடுத்து உள்ளது. சர்வதேச அமைப்புகள் அனைத்துமே வன்னி மக்களை புலிகள் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி உள்ள நிலையில் தங்கள் புலியாதரவு நிலைப்பாட்டினால் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை ஒரு வகையில் பாதிக்கச் செய்துள்ளனர்.

இங்கு பிரித்தானிய தமிழர் போறம் புலிகளுக்கு வக்காலத்து வாங்க அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி புலிகளுக்கு எதிராக ஊர்வலம் நடாத்தி உள்ளது. புலிகள் பணயக் கைதிகளாக உள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த ஊர்வலத்தில் கோரப்பட்டு உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டு இருப்பது வன்னி மக்கள். அவர்கள் ஒரு மனித அவலத்தை ஒவ்வொரு விநாடியும் எதிர்நோக்கி உள்ளனர். அவர்களுக்காக யாழிலும் புலத்திலும் உள்ள மக்களின் மனங்கள் துடிக்கின்றது. ஆனால் அதனை பிரித்தானிய தமிழர் பேரவை, ஈபிடிபி என்பன தங்கள் குறுகிய அரசியல் நலன்களின் அடிப்படையில் பயன்படுத்த முற்பட்டு உள்ளன. பிரித்தானிய  தமிழர் பேரவைக்கு புலிகளின் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. ஈபிடிபிக்கு தனதும் தனது அரசினதும் மனித உரிமை மீறல்கள் தெரியவில்லை. இந்த ‘செலக்டிவ் அம்னீசியா’ காரர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டதே தமிழ் மக்களின் இந்த அவலத்திற்கு காரணம்.

அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் தலைவர் சிறீதரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையான் பா உ முரளீதரன் இவர்கள் ஏன் இந்த வன்னி மக்களின் பாதுகாப்புப் பற்றி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. புலிகள் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டும் இந்தத் தலைவர்கள் புதுக்குடியிருப்பில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கருத்தில் எடுக்காமல் தங்களுடைய அரசாங்கம் நடத்தும் இந்த யுத்தம் பற்றி மௌனமாக இருக்கிறார்கள். அங்கு மக்கள் உயிரிழக்கும் போதெல்லாம் அதனைப் புலிகளின் தலையில் கட்டி தப்பித்துக் கொள்வதைத் தவிர இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த வன்னி மக்களுக்கு ஏற்படப் போகும் அவலத்தை தடுத்து நிறுத்துவதற்காகவேனும் இவர்கள் குரல் கொடுக்காவிட்டால் இவர்கள் செய்வது அரசியல் விபச்சாரம் என்று குறிப்பிடுவது மிகையல்ல. இது இவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் உள்ள இவர்கள் ஏஜென்டுகளுக்கும் பொருந்தும்.

ஏற்படப் போகும் இந்த அவலத்திற்கு புலிகளும் சம பொறுப்புடையவர்கள். அவர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்பது அரசாங்கத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டும் சர்வதேச அமைப்புகள் அனைத்தினதும் அறிக்கைகளிலும் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதைப் பற்றி மூச்சும் விடுவதில்லை. பிரபாகரன் மாவீரர் தின உரையில் உறுமினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் ‘வடக்கில் இருந்து தெற்குக்கு சவப்பெட்டிகள் அனுப்புவோம்’ என்று டபிள் உறுமல் விடுவதைத் தவிர உருப்படியாக எந்த அரசியலும் செய்யவில்லை.

தங்களுக்கு வாக்களித்த மக்களை விட்டுவிட்டு தமிழ் மக்களை நாங்கள் தான் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு புலிக்கும் சிங்கத்துக்கும் பின்னால் நிற்கும் தமிழ் தலைமைகளும் அவர்களின் புலம்பெயர் முகவர்களும் இந்த வன்னி மக்கள் சிந்தும் குருதியில் தங்களைக் கறைபடுத்திக் கொண்டுள்ளனர்.

இப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.
போன்ற ஜனவரி 29 அன்று ‘இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன்‘என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அல்லது அதற்கு ஒத்த விடயங்களை உடனடியாக செயற்படுத்த சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவலங்கள் ஏற்பட்ட பின் அதனைக் கண்டிப்பதிலும் அந்த அவலத்தை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களும் சர்வதேச மக்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

உலகின் தலைநகரில் தாயக உறவுகளுக்காக தமிழ் மக்களின் எழுச்சி : த ஜெயபாலன்

Protest_UK_Jan31தங்கள் தாயக உறவுகளுக்காக புலம்பெயர்ந்த லண்டன் தமிழர்கள் உலகின் தலைநகரில் ஓங்கிக் குரல் எழுப்பினர். ஜனவரி 31 பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட யுத்தத்தை நிறுத்தக் கோரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் தங்கள் உறவுகள் மீதான அன்பையும் வேதனையையும் சர்வதேசத்திற்கு எடுத்தக் காட்டியது. பெரும்தொகையான இளவயதினர் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த வேண்டும் வன்னி மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்ற கோசங்கள் உரத்து ஒலித்தன. மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 50000 வரையானோர் கலந்து கொண்டதாக ஸ்கொட்லன்யாட் தெரிவித்து உள்ளது. கலந்த கொண்டவர்களின் தொகை இதனிலும் இரட்டிப்பானது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் நடவடிக்கைகளில் எவ்வித ஆர்வத்தையும் கொண்டிராதவர்கள் விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தைக் கொண்டிருந்தவர்கள் இடதுசாரிகள் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என பல்வேறு அரசியல் முரண்பாடுடையவர்களும் யுத்தத்தின் அவலத்திற்கு முடிவுகட்டப்பட வேண்டும் வன்னியில் யுத்தத்திற்குள் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஏற்படப் போகும் மனித அவலம் நிறுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

லண்டனில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சி இதுவென முன்னாள் மாற்று இயக்க உறுப்பினர் கா பாலமுருகன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தனக்கு புலிகளுடன் எவ்வித உடன்பாடும் இல்லை. அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை எப்போதும் தீர்க்கக் கூடியவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட அவர் ஆனால் இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை எதேச்சையாக செயற்படவும் தமிழ் மக்களை அழிக்கவும் அனுமதிக்க முடியாது என்றார்.

இந்த ஊர்வலத்திற்கு வந்த பெரும்தொகையான மக்களால் லண்டன் நிலக்கீழ் புகையிரதம் ஊர்வலம் நடந்த பகுதிகளில் இருந்த புகையிரத நிலையங்களில் நிறுத்தாமல் செல்ல வேண்டி இருந்தது. வீதிகள் சில பொலிசாரால் மூடப்பட்ட போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிறிய சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது. மற்றும்படி ஊர்வலம் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

கோசங்களை எழுப்பி பலருக்கும் நாவறண்டு தொண்டைகட்டியதாக முதற்தடவையா ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட செல்வலக்ஸ்மி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தனக்கு இந்த ஊர்வலத்தை யார் நடத்தினார்கள் என்பது தெரியாது ஆனால் நான் கேட்கின்ற செய்திகள் தன்னை குடைவதாகத் தெரிவித்தார்.

இந்த ஊர்வலம் தொடர்பாக ஸ்கை நியூஸிற்கு கருத்து தெரிவித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதே செய்திச் சேவையில் கருத்துத் தெரிவித்த லிபிரல் டெமொகிரட் பா உ சைமன் ஹியூச் இலங்கை அரசாங்கம் சர்வதேச ஊடகங்களை மனிதாபிமான ஸ்தாபனங்களை யுத்த பகுதிக்குள் அனுமதிக்காததைக் கண்டித்தார். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சைம்ன் ஹியூச்சின் அதே கருத்தை அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் வெளியிட்ட நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் தனது நாட்டு மக்களைக் காக்க வேண்டிய கடமை அந்த நாட்டு அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். யுத்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதனைச் சுட்டிக்காட்டிய அவர் தங்களுடைய தாயக உறவுகளுக்காக ஆயிரக்கணக்கில் மக்கள்  லண்டன் நகரில் கூடி குரல் கொடுப்பதாகத் தெரிவித்தார்.

இந்த ஊர்வலத்தில் ஏனைய நாடுகளில் இடம்பெற்றது போன்று விடுதலைப் புலிகளின் கொடியோ அல்லது அதன் தலைவர் வே பிரபாகரனது உருவப்படமோ ஊர்வலத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. ஏற்கனவே இது தொடர்பாக பொலிகார் அறிவுறுத்தி இருந்ததாகவும் தெரிய வருகிறது. ஆனால் ஆங்காங்கே எங்களது தலைவர் வே பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் போன்ற கொசங்களும் இடம்பெற்றது என்று தெரிவித்த புலிகளின் தீவிர ஆதரவாளரான ஆர் நந்தகுமார் ஆனால் வன்னி மக்கள் மீது இன அழிப்பை நிறுத்து என்பதே பிரதான கோசமாக அமைந்ததாக தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இந்த மக்கள் எழுச்சி தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகளுடனேயே தாங்கள் வீடு திரும்பியதாகக் குறிப்பிட்ட முன்னாள் புலிகளின் உறுப்பினர் எஸ் ரவிக்குமார் புலம்பெயர்ந்த நாங்கள் எங்களால் முடிந்ததை எமது உறவுகளுக்குச் செய்ய வேண்டும் என்றும் அவர்களை நாங்கள் கைவிட்டுவிடவில்லை என்பதையும் இங்கு வந்து உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்றார்.

ஊர்வலத்தின் முடிவில் ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி ஆகியோரும் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் ஆகியொரும் உரையாற்றினர். இவர்களின் உரையில் இந்த யுத்தத்தை நிறுத்த இந்தியாவின் தலையீட்டின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.