Dialogue with the Sri Lankan Diaspora – 27th to 29th of March 2009 – Mount Lavania Hotel Colombo.
ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியை பதிவு செய்து அதன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமுகமாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இம்மாநாடு சம்பந்தமான பேச்சுக்கள் கடந்த கார்த்திகை மாதம் பரவலாக அடிபடத் தொடங்கியது. இதற்கான முனைப்புகள் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் டாக்டர் நடேசன் (உதயன் பத்திரிகை) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இம்மாநாடு டில்லியில் கூடவிருப்பதாக பேசப்பட்டது. பின்னர் காலப் போக்கில் இந்திய இடைத் தேர்தலை காரணம் காட்டி சிங்கப்பூருக்கு மாற்றியமைக்கப்பட்டு அதற்கான முழு நிகழ்ச்சி நிரல்களும் அழைப்பிதழ்களும் அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சி இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இந்நிகழ்ச்சி கொழும்பிற்கு மாற்றப்பட்டது. இந்நிகழ்ச்சி சிங்கப்பூரில் இடம்பெறுவதற்கு சில பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்ததாக பின்னர் தனிப்பட்ட முறையில் அமைச்சு ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இடம்பெற இருந்த இந்த மாநாடு தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்கள், நிகழ்ச்சி நிரல் அனைத்தும் tamilnet உட்பட பல இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து கொழும்பிற்கு மாநாடு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பலர் தங்களது பங்களிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர். கொழும்பிற்கான மாற்றத்தில் தமது அதிருப்தியை தெரிவித்த சிலர் சிங்கப்பூரில் இடம்பெற இருந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் குறித்து அதிருப்தியை குறிப்பிட்டு இருந்தனர்.
இந்நிகழ்ச்சி நிரல் ஆகமொத்தமாக அமைச்சர்களும் அரசின் ஆலோசகர்களும் பேசுவதை இருந்து கேட்டுவிட்டு வரும் நிகழ்ச்சியாகவே இருந்தது. இம்மாநாட்டில் புலம் பெயர்ந்த தமிழர்களின் கருத்துக்களை பரிமாற அதிக நேரம் ஒதுக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை பலரால் குறிப்பிடப்பட்டு இருந்தது. மற்றும் அரசு இந்த மாநாட்டை ஓர் அரச பிரச்சார அரங்காக மாற்றக் கூடாது என்ற கோரிக்கை விடப்பட்டது. பங்காளர்களின் இந்த கோரிக்கையை செவிமடுத்த அதிகாரிகள் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைத்து இந்த அமர்வு அரசினால் பிரச்சாரத்திற்கு பாவிக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தையும் கொடுத்தனர். அரச உத்தரவாதம் ஒருபுறம் இருக்க இம்மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் ஆலாய்ப் பறந்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த சம்பவங்கள் கவலைக்குரியது. அதிலும் குறிப்பாக இம்மாநாட்டை மகிந்த ராஜபக்ச அரசை ஆதரிக்கும் அரசியல் கூட்டமாகவும், மற்றும் புலிகளை எதிர்க்கும் கூட்டமாகவும் சிலர் மாற்ற எத்தனித்தது கவலைக்குரிய விடயம். எது எப்படி இருப்பினும் ஆகமொத்தமாக சகல உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தும், ஒற்றுமையும், ஒருவரை ஒருவர் மதித்து அனுசரித்து போகும் தன்மையும் பரவலாக இருந்தது குறிப்பிடத்தக்க விடயம்.
இம்மாநாட்டில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்லாந்து, நோர்வே, சவுதிஅரேபியா, டென்மார்க், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய 9 நாடுகளில் இருந்து 21 பேர் கலந்து கொண்டனர். அரச சார்பில் இருந்து குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்டர் பலித கோகன்ன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க, ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் டியு குணசேகர மத்திய வங்கி தலைவர் அஜித் ஹவாட் கப்ரல் உட்பட பல உயர்மட்ட அரச ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
28.03.09 (சனிக்கிழமை)
‘புத்த சமயத்தை பின்பற்றுவோரை பெரும்பான்மையினராக கொண்ட இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் இடம் இருக்கக் கூடாது.’ – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்டர் பலித கோகன்ன:
முதல் நாள் அமர்வு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்டர் பலித கோகன்ன அவர்களின் உரையுடன் ஆரம்பமாகியது. 30 வருட யுத்தத்தின் பின் நாடு தற்போது புதிய அத்தியாயம் ஒன்றை எழுத ஆரம்பித்திருப்பதாக குறிப்பிட்ட டாக்டர் பலித கோகன்ன தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதிநிதிகள் மற்றும் விடுதலைப் போராளிகள் என்ற பதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார். புத்த சமயத்தை பின்பற்றுவோரை பெரும்பான்மையினராக கொண்ட இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் இடம் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட டாக்டர் கோகன்ன சகல இன மக்களும் பகையை மறந்து ஒன்றுபட அழைப்பு விடுத்தார். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு கிழக்கில் வாழும் சிறுவர்களின் கல்விக்கும் எதிர்கால சுபீட்சத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 30 ஆண்டு கால போரினால் நாடு பல பெறுமதி மிக்க உயிர்களை இழந்துவிட்டதுடன் பல ஆயிரக்கணக்கான அறிவாளிகளையும் உழைப்பாளிகளையும் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். தற்போதைய நிலமையில் போர் நிறுத்தம் ஒன்றை அரசு கடைசிவரை அமுல் படுத்தாது என்று சூழுரைத்த டாக்டர் கோகன்ன சகல போர் நிறுத்தங்களும் விடுதலைப் புலிகளினால் தவறான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
13வது திருத்தச் சட்டமூலத்தை புலிகள் ஏற்காதது ஒரு வரலாற்று தவறு – வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம:
அவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம ‘ஸ்ரீலங்காவின் எதிர்காலம் போரின் பின்’ என்ற தலைப்பில் பேசினார். அரசு சகல ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து செயற்பட ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் தற்போதைய காலகட்டத்தில் TNA அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதது ஒரு மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான காலம் சென்ற அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வனை சந்தித்த சம்பவங்களை நினைவு கூர்ந்த அமைச்சர், 13வது திருத்தச் சட்டமூலத்தை புலிகள் ஏற்காதது ஒரு வரலாற்று தவறு எனக் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள அகதிகளின் நிலவரம் பெரும் சிக்கலானது என்பதை ஒத்துக் கொண்ட அமைச்சர் தனது அரசு இம்மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மிகவும் பிராயச்சித்தம் எடுப்பதாக குறிப்பிட்டார். ஸ்ரீலங்காவின் ஒருமைப்பாட்டு கோட்பாட்டுக்கு அமைய அரசியல் யாப்பில் தேவையான மாற்றங்களை கொண்டுவர தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
‘கிழக்கில் அனுபவம் வாய்ந்த கல்வித் தகமைகளைக் கொண்ட அரசியல்வாதிகள் எவரும் இல்லை’ அமைச்சு ஆலோசகர்:
அமைச்சர் ரோகித போகொல்லகம அவரின் செயலாளர் டாக்டர் பலித கோகன்ன இருவரினது பேச்சும் ஆழமற்றதும் நுனிப்புல் மேய்ந்த ஒரு sentimental பேச்சாகவே இருந்தது. கிழக்கு மாகாணத்தின் மாற்றத்தை ஒரு பெரிய ஜனநாயக மாற்றமாக வர்ணித்த பேச்சாளர்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் நடைமுறைச் சிக்கல்களையும் ஜனநாயகத்தை அமுல்படுத்த முடியாத நிலைமைக்கான இடர்ப்பாடுகளை குறிப்பிடத் தவறி இருந்தனர். தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ள அரசியல் புள்ளிகளிடம் இருந்து வெளிப்படையான நடைமுறை அரசியலை கலந்தாலோசிப்பது என்பது நடக்காத விடயம் தான்.
எது எப்படியிருப்பினும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும் அவர்களுடைய அதிகாரிகளுடனும் தனிப்பட்ட முறையில் பேசிய போது பல நடைமுறைப் பிரச்சனைகள் மிகவும் வெளிப்படையாக சம்பாசிக்கப்பட்டது. கிழக்கு மாகாண அரசியல் பரவலாக்கல் பற்றி தனிப்பட்ட முறையில் பேசிய ஒரு உயர் அமைச்சரவை ஆலோசகர் ஒருவர் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அளவுக்கு சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் அறிவையும் கொண்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் தாம் சகல நடவடிக்கைகளையும் மத்தியில் இருந்து (கொழும்பில்) நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார். எனவே நிர்வாக அமைப்பையும் அதற்கான ஆளுமை கொண்ட அதிகாரிகளையும் இரவோடு இரவாக ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். இன்னுமொரு ஆலோசகர் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும் போது, கிழக்கில் அனுபவம் வாய்ந்த கல்வித் தகமைகளைக் கொண்ட அரசியல் வாதிகள் எவரும் இல்லை என்பதால், வரும் காலங்களில் மத்தியில் தலையீடு தவிர்க்க முடியாதது என்றும், இது அரசின் திட்டமிட்ட செயல் இல்லை, இது ஒரு நடைமுறைப் பிரச்சனை என்றும் தெரிவித்தனர்.
கிழக்கின் ஜனநாயகத்தை தான் அரசு வடக்கிற்கும் கொடுக்க இருந்தால் அது முன்னேற்றத்தின் அறிகுறியில்லை என தமிழர்களின் பிரதிநிதி ஒருவரால் மிகவும் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்காத டாக்கடர் நடேசனின் பேச்சு:
அமைச்சரின் பேச்சைத் தொடர்ந்து தமிழ் பிரதிநிதிகளின் சார்பில் டாக்டர் நடேசன் (அவுஸ்திரேலியா) உரையாற்றினார். இன்று தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு உறுதியான அரசியல் தலைமை இல்லை என்றும், தம்மை தலைவர்களாக வர்ணித்துக் கொள்பவர்கள் யதார்த்தத்தை முகம் கொடுக்க தயாராக இல்லை என்றும் தெரிவித்தார். டாக்டர் நடேசன் அவர்களின் பேச்சு அரசு கேட்க வேண்டிய விடயத்தை கூறியதை தவிர தமிழர்களின் நிலமையையும் அரசியல் அபிலாசைகளையும் பிரதிபலிக்கவில்லையென்றே கூற வேண்டும். அவரின் பேச்சில் அரசின் பொறுப்பு வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அரசியல் யாப்பை திருத்தியமைக்கும் வேலைப்பாடுகள் ஏன் வருடக்கணக்காக இழுபடுகிறது என்ற ஆதாரம் தெரிவித்திருக்கப்படல் வேண்டும். இம்மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பிரதிநிதிகளிடமும் இந்த அங்கலாய்ப்பு இருந்த போதிலும் டாக்டர் நடேசனின் பேச்சில் அக்கருத்து குறியிடப்படவுமில்லை, வலியுறுத்தப்படவுமில்லை. நீங்கள் செய்யிறதை செய்யுங்கள், நாங்கள் ஆதரவு தருவோம் என்பது போன்ற தொனி இருந்தது மனவருத்தத்திற்குரியது.
APRC – சர்வகட்சிப் பிரிதிநிதிகள் குழு:
டாக்டர் நடேசனின் பேச்சைத் தொடர்ந்து அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அரசியல் பரவலாக்கல் தொடர்பாக உரையாற்றினார். அவர் தனது ஆரம்பத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தொடர்பான வரலாற்றைக் கூறி அதில் தற்போது முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அங்கம் வகிக்கவில்லை எனவும் அவர்கள் வரும் காலத்தில் ஒன்று சேருவதாக நம்பிக்கை தெரிவித்தார். ஆகமொத்தமாக APRC ஐ பார்க்கும் போது அது பல்லில்லாத பாம்பாக பல ஆண்டு காலமாக முடிவில்லாமல் இழுபடும், ஒரு நல்ல நோக்கம் கொண்ட ஆனால் நடைமுறைச் சாத்தியம் அற்ற அமைப்பாகவே புலப்பட்டது.
இன்று வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 53 வீதமான மக்கள் வெளி மாவட்டங்களில் வாழ்வதாகவும் devolution தவிர்ந்த ஏனைய அரசியல் கோரிக்கைகள் மிகவும் சாத்தியமற்றது என்று பேராசிரியர் விதாரண குறிப்பிட்டார். அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணயின் நீண்ட பேச்சு அரசியல் சூச்சுமங்களைத் தவிர்த்து உண்மை நிலமையை விளக்கினாலும் APRC யின் பலமற்ற தன்மை மிகவும் வெளிப்படையாக தெரிகின்றது.
Devolution உடன் கூடிய Westminister பாராளுமன்ற அமைப்பைத் தான் APRC பரிந்துரைக்கும் என்று கூறிய திஸ்ஸ விதாரண அதற்குரிய காலத் தவணையைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் திஸ்ஸ விதாரண ஒரு நல்ல நோக்கம் கொண்ட ஆனால் அரசியல் பலமற்ற ஒருவராகவே புலப்பட்டார்.
சிங்களம் மட்டும் சட்ட மூலம் 96 கறைபடிந்த அத்தியாயம் – ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க:
அடுத்த கட்டமாக சிவில் நிர்வாகம் தொடர்பாகவும், அதன் நடைமுறைப் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்கள் உரையாற்றினார். இன்று சிவில் நிர்வாகத்தில் தமிழர்கள் இணைவது மிக மிக குறைவு எனவும் உயர் மட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்களே உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார். காலம் காலமாக தமிழர்கள் பட்ட துயரத்தை இந்த அரசாங்கம் முழுமையாக உணர்வதாகவும் அதை நிவர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தில் தனது அரசு இறங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு 5 நிமிடமும் மகிந்த சிந்தனையை ஆதாரம் காட்டிய வீரதுங்க ஸ்ரீலங்காவின் வரலாற்றில் தற்போதைய ஜனாதிபதி ஒருவரே தனது கொள்கைகளை எழுத்தில் பதித்தவர் எனவும், மகிந்த சிந்தனையில் தான் விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக் காட்டினார். ஸ்ரீலங்காவின் வரலாற்றில் சிங்களம் மட்டும் சட்ட மூலம் 96 கறைபடிந்த அத்தியாயம் என வீரதுங்க வர்ணித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் பேச்சைத் தொடர்ந்து ஒரு மணி நேர திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர் சட்ட மூலங்களால் மட்டும் நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்த முடியாது. என தெரிவித்தார். ஜனாதிபதி ராஜபக்ச தமிழ் மொழி அமூலாக்கத்திற்கு தனது தனிப்பட்ட பலமான ஆதரவை அளித்து வருவதாகத் தெரிவித்தார். ஜனாதிபதியின் காரியாலயத்தில் உள்ள 40 அதிகாரிகள் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் தமிழ் கற்று வருவதாகத் தெரிவித்தார்.
தமிழ் பிரதிநிதி ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் திஸ்ஸ விதாரண இன்று அரசியலின் மறைமுகமான மூன்றாவது பலம் ஒன்று இயங்கி வருவதாக கூறினார். இந்த மூன்றாவது பலம் போரை தொடர்வதில் மிகவும் அக்கறை செலுத்துவதாக தெரிவித்தார்.
போருடன் கூடி வரும் நிர்வாக சீர்கேடு, ஊழல், மோசடிகள் ஆகியவற்றில் இருந்து பலர் பல கோடிக் கணக்கான ரூபாய்களை உழைத்து வருவதாகத் தெரிவித்தார். இவ்வாறான நபர்கள் எப்போதும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த இடையூறாக இருப்பார்கள் என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சில வருடங்களுக்கு முன்னர் நத்தார் தினம் அன்று கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு பின்னணியில் இதே சக்திகள் இருந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த மூன்றாம் சக்திகள் தற்போது பல கோடிகளை செலவழித்து தமது அடியாட்களை பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட நிறுத்தி வருவதாக தெரிவித்தார்.
கிழக்கின் உதயம்:
கேள்வி பதில் கலந்துரையாடலை தொடர்ந்து வடமாகாணத்திற்குரிய அபிவிருத்தி தொடர்பாக கிழக்கின் உதயம் ஆலோசகர் சந்திர பெர்னான்டோ உரையாற்றினார். அவரின் உரையின் போது கிழக்கில் மேற்கொள்ளப்படும் பாரிய வேலைத்திட்டங்களின் படங்கள் காண்பிக்கப்பட்டன.
கொடுக்கப்பட்ட தரவுகளில் இருந்தும், காண்பிக்கப்பட்ட விளக்கப் படங்களில் இருந்தும் கிழக்கில் பெரிய வேலைத்திட்டங்கள் இடம்பெறுவது கண்கூடு. ஆனால் இவ்வேலைத்திட்டத்தில் கிழக்கின் முக்கிய ஜனநாயக துருவங்களான முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர் கருணாவிற்கும் பெரிய தொடர்புகள் இருப்பதாக புலப்படவில்லை. சகல அபிவிருத்தி திட்டங்களும் ஜனாதிபதியின் உயர் ஆலோசகர் பசில் ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பிலேயே இடம்பெறுகின்றது.
கலந்துரையாடல்: ஸ்ரீலங்கா அரசியலில் பிரதேச, சமய, இன சார்ந்த அரசியல் கட்சிகள் பலமாக அமைவது ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்கு உகந்தது அல்ல. இது மிகவும் ஆபத்தான வளர்ச்சி. வெளிவிவகார அமைச்சர்
இதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம தலைமையில் கேள்வி, பதில், கலந்துரையாடல் பகுதி ஆரம்பமாகியது. கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரோகித போகொல்லகம பின்வரும் விடயங்களை தெரிவித்தார்.
1. வடக்கிற்கான தேர்தல் வெகு விரைவில் நிகழும்.
2. அகதிகள் மீள் குடியமர்வு வேலைத்திட்டம் மிகவிரைவில் அமுல்படுத்தப்படும்.
3. ஸ்ரீலங்கா அரசியலில் பிரதேச, சமய, இன சார்ந்த அரசியல் கட்சிகள் பலமாக அமைவது ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்கு உகந்தது அல்ல. இது மிகவும் ஆபத்தான வளர்ச்சி.
4. வடக்கிலிருந்து தெற்கிற்கு குடியேறும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இக்குடிப் பெயர்வைக் குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
5. விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரச்சாரங்கள் மிக சிறப்பாக செயற்படுகின்றன. இதனை முகம் கொடுப்பதற்கு நாம் இப்போது தயாராகிவிட்டோம்.
தமிழ் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கூடுதலாக ஒரு அடிப்படையில்லாத போதனைகளாக இருந்த போதிலும், அவுஸ்திரேலியாவில் இருந்து கலந்து கொண்ட ரவீந்திரனின் கருத்து மிகவும் ஆணித்தரமாகவும், தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த அபிலாசைகளை பிரதிபலிப்பதாகவும் அமைந்தது. தமிழ் டாக்டர் பிரதிநிதி ஒருவர் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசிறி என சூழுரைக்க இன்னொரு பிரதிநிதி தனியாக கைதட்ட கோமணத்துடன் நடமாடும் தமிழரின் சுயமரியாதை, அந்த சிறுதுண்டையும் இழந்த உணர்வு எனக்குள் ஏற்பட்டது.
29-03-09 ஞாயிற்றுக்கிழமை
அமைச்சர் டியு குணசேகர:
கடைசி நாள் அமர்வு அபிவிருத்தி தொடர்பாகவும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு தொடர்பாகவும் இடம்பெற்றது. இத்தொடரில் அரசியல் சட்ட தேசிய ஜக்கிய அமைச்சர் டியு குணசேகர முக்கியமாக உரையாற்றினார். அமைச்சர் டியு குணசேகர சிறீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் பழைமையான அரசியல்வாதியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் எவ்வாறு அனைத்து அரசியல் சிந்தனைகளையும் வேறுபட்ட அரசியல் கட்சிகளையும் அடக்கியது என்பதை ஞாபகப்படுத்திய அமைச்சர் தனது கட்சியின் வடமாகாண அமைப்பாளர் விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சகமும் எரியூட்டப்பட்டதை குறிப்பிட்டார். அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் நலன் பேணும் விடயங்கள் பற்றியும் சரணடைந்தவர்களின் மறுவாழ்விற்கு சட்டரீதியான பாதுகாப்பு பற்றியும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
தடுப்பு முகாம்கள் – நலன்புரி நிலையங்கள்:
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மிக நீண்ட காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் நிலைமை குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்ட போது: இவ்விடயத்திற்கு பொறுப்பான நீதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் இத்தமிழ் இளைஞர்களை சட்டத்தின்முன் கொண்டுவருவதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களை விபரித்த பின்னர் மிக விரைவில் சட்ட ரீதியாக குற்றமற்ற அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளிலிருந்து கைது செய்யப்படும் அல்லது சரணடையும் சிறுவர்களை பராமரிக்கும் மூன்று நிலையங்கள் குறித்து நீண்ட நேரம் கருத்து பரிமாறப்பட்டது.
கொழும்பிற்கும் கண்டிக்கும் இடையிலுள்ள அம்பேபுச என்ற இடத்திலுள்ள சிறுவர்கள் நிலைய பராமரிப்பு நிலையத்தை வந்து பார்க்குமாறு தமிழ் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் பிரகாரம் மறுதினம் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அம்பேபுச நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு போர்களத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர்களையும் யுவதிகளையும் பார்வையிட்டனர்.
கல்வி உணவு உடை பாதுகாப்பு உட்பட சகல வசதிகளுடனும் பராமரிக்கும் இப்பராமரிப்பு நிலையங்களுக்கு பல உதவிகளை அரசு புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மிக நீண்டநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் உதவி பல தடவைகள் அமைச்சர்களால் கோரப்பட்டது. உதவிசெய்ய விரும்பும் தமிழ்ர்கள் தமது உதவியை சிறீலங்கா அரசிற்கு நேரடியாக அளிக்கத் தேவையில்லை எனவும் சம்பந்தப்பட்ட நிலையங்களை அல்லது பொறுப்பதிகாரிகளை நேரடியாக சந்தித்து உதவிகளை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தொடரின் முடிவு:
இக் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி உரையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித்த கோகன்ன பின்வரும் விடயங்களைத் தெரிவித்தார்.
1. புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ள முன்வரவேண்டும்.
2. கடந்த கால சம்பவங்களை இதயசுத்தியுடன் பேசி பிரச்சினைக்கு பரிகாரம் கூட்டாக தேட முன்வரவேண்டும்.
3. இவ்வாறான ஒன்றுகூடல்களும் தமிழர்களுடனான கலந்துரையாடல்களும் முன்பே நடாத்தப்பட்டிருக்க வேண்டும் எனவே இனியும் தாமதிக்கக் கூடாது.
4. உள்நாட்டில் புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்கப்படுவது அவசியம்.
5. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசு தற்போது 225 ஆசனங்களில் 59 மட்டும் தான் தன்வசம் வைத்துள்ளது. ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் எனவே அரசியலில் ஏற்ப்படும் நடைமுறைச்சிக்ல்களை உணர்ந்து அனைவரும் சமாதானத்திற்கான வேலைத்திட்டத்தில் ஒத்துழைக்க வேண்டும்.
6. நாட்டிலுள்ள தற்போதய பிரச்சினைகளுக்கு அனைவரும் பொறுப்பு. எனவே அனைவரும் இணைந்து பரிகாரம் தேடவேண்டும்.
7. இன்று நாட்டில் நடைபெறுவது இனப்படுகொலை என்பது முற்றிலும் தவறான பிரச்சாரம். இன்று இவ்வளவு பிரச்சினைகளின் மத்தியிலும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொழும்பிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் குடிபெயர்ந்து வாழ்கிறார்கள். வெள்ளவத்தையில் 95 சதவீதமான மக்கள் தமிழர்கள். இதை அரசு மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சியாகவே கருதுகிறது.
8. பழைய புண்ணை திரும்பத் திரும்ப சொறிவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. அனைவரும் தங்கள் இதயங்களில் இருந்து சிந்தித்து பிரச்சினைக்குப் பரிகாரம் தேட வேண்டும். (think from the heart)
9. எமக்கு அகதிகள் பிரச்சினைகள் ஒன்றும் புதிய பிரச்சினையில்லை. வாகரை மூதூர் பகுதியில் இருந்த 95 வீதமான மக்கள் தற்போது மீண்டும் தமது நிலப்பரப்பில் மீளக்குடியேற்றப் பட்டுவிட்டார்கள். இதே வேலைத் திட்டத்தை நாம் வடக்கிலும் செய்து வருகிறோம்.
புலம்பெயர் குழுவின் கேள்விகளுக்கு பசில் ராஜபக்சவின் பதில்கள்:
இந்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் கலந்து கொள்ள ஜனாதிபதியின் விஷேட ஆலோசகர் பசில் ராஜபக்ச அவர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் பசில் ராஜபக்ச மொன்ட்லவெனியா கொட்டலுக்கு வருகை தரவில்லை. அவர் கூட்டத் தொடருக்கு வருகை தராதது ஒரு கடைசிநேர பாதுகாப்பு ஏற்பாடாக இருக்க வேண்டும் என்ற உணர்வே அங்கு இடம்பெற்ற சம்பவங்களில் இருந்து உணரக் கூடியதாக இருந்தது.
இக்கூட்டத் தொடர் முடிவுற்றதும் அனைவரும் வாகனமொன்றில் ஏற்றப்பட்டு காலி வீதியிலே பழைய பாராளுமன்றத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தமிழ் உறுப்பினர்களுக்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நான்கு மணிநேர கலந்துரையாடல் இடம்பெற்றது. மிகமிக சாந்தமாகவும் பொறுமையாகவும் அனைத்துக் கேள்விகளுக்கும் தகுந்த முறையில் ஆதாரங்களுடன் பதிலளித்த பசில் ராஜபக்ச தான் ஒரு hand on நபர் என்பதை எவ்வித சந்தேகமும் இன்றி புலப்படுத்தினார்.
புலம்பெயர்ந்த மக்கள் காணாமல் போவதாக வரும் செய்திகளைப் பற்றியும் இடம்பெயரும் தமிழ் அகதிகளின் நீண்டகால எதிர்காலத்தைக் குறித்து கடுமையான கேள்விகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை நேரடியாக முகம்கொடுத்து தகுந்த பிரதிவாதங்களுடன் பதிலை முன்வைத்தது ஆலோசகர் ராஜபக்சவின் ஆளுமையையும் ஆற்றலையும் மிகவும் தெளிவாகப் புலப்படுத்தியது.
முதலில் 20 தொடக்கம் 25 கேள்விகள்வரை உள்வாங்கிய ராஜபக்ச எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியாக பதிலளித்தார். பசில் ராஜபக்சவின் முக்கிய பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. மகிந்த சிந்தனையில் இந்த அரசு விடுதலைப் புலிகளுடனும் அதன் தலைவர் பிரபாகரனுடனும் நேரடியாகப் பேசி பிரச்சினைகளைத் தீர்க்கத் தயார் என வெளிப்படையாகவே தெரிவித்து தேர்தலில் வெற்றிகாண்பது.
2. நாட்டில் நிலவும் பிரச்சினையைத் தீர்ப்பதில் நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். இதில் நாம் எந்த வரையறைக்கும் உட்பட்டவர்கள் இல்லை. நான் தனிப்பட்ட முறையில் புலித்தேவன் காலம்சென்ற பாலசிங்கம் தமிழ்ச்செல்வனுடன் நேரடியாக தொடர்பில் இருந்தேன். இரகசியமான முறையில் பத்திரிகையாளர்களுக்குத் தெரியாமல் இவர்களைச் சந்திக்க ஜெனீவா சென்றிருந்தேன்.
3. விடுதலைப் புலிகளின் ஆயுதபலம் மிகவும் பாரியது. இது எமக்குத் தெரியும். வன்னிவாழ் மக்கள் எவ்வித அரசியல் சக்தியும் இல்லாத மக்கள். இவர்களின் கருத்தை வெளிநாடுகளில் உள்ள தமிழ்பேசும் மக்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு உணர்த்த வேண்டும்.
4. இன்று வன்னியிலுள்ள அகதிகளை பலர் மிருகக் காட்சிச் சாலையில் உள்ள மிருகங்களைப் போல் போய்ப் பார்க்க எத்தனிக்கிறார்கள். இது நியாயமில்லை. சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் காட்சிப் பொருட்கள் இல்லை.
5. நான் தனிப்பட்ட முறையில் ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் வினோதனை அகதிமுகாமிற்கு அனுப்பி இவ்முகாம் தொடர்பான நல்ல விடயங்களை பாராளுமன்றத்தில் தெரிவிக்க ஊக்குவித்ததாக குறிப்பிடுகிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது. வினோதன் அவர்கள் தனது உறவினர்களை அகதி முகாமில் பார்வையிட அனுமதி கோரினார். அதன் பிரகாரம்தான் ஒழுங்குகள் செய்து கொடுத்தேன். அவ்வளவுதான். அவர் பாராளுமன்றத்தில் அகதிகள் பற்றி கூறிய கருத்து அவர் கண்ணால் கண்ட விடயம். அதை பாராளுமன்றத்தில் தெரிவிக்க யாரும் அழுத்தம் கொடுக்கவுமில்லை. அப்படி கேட்கவும் இல்லை.
6. தற்போதய அகதி முகாம்களை தொடர்ந்து வைத்திருப்பது சாத்தியமுமில்லை. அது எமது நோக்கமுமில்லை. நாங்கள் அரசியல்வாதிகள். மக்களின் வாக்குகளில் தங்கியிருப்பவர்கள். கடந்தகால அனுபவங்களில் இருந்து எமக்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும். அதாவது அகதி முகாம்களில் உள்ளவர்கள் எப்போதும் அரசிற்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். கடந்த தேர்தலில் நாம் சில அகதி முகாம்களில் எட்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டோம். இது தேவையா??
7. எமது திட்டத்தின்படி மூன்றுவருட காலத்தில் சிறீலங்காவில் அகதி என்ற பேச்சிற்கே இடம் இருக்காது. சிறீலங்கா அரசு மிக குறுகிய காலத்தில் 200 000ற்கு அதிகமான அகதிகளை மீளக் குடியமர்த்தியது. இது உலகத்தில் ஒரு சாதனை.
8. தற்போது வன்னியில் உள்ள அகதிகள் ஒரு குறுகிய இடத்தினுள் முற்கம்பி வேலிகளினுள் அடைக்கப்பட்டு அவர்கள் வெளியே செல்வதற்கு தடை இடப்பட்டுள்ளது. இது உண்மைதான். இந்தநிலை பல நாட்களுக்கு நீடிக்கப் போவதில்லை. நூற்றுக்கணக்கான மக்களை ஆவணப்படுத்தி அடையாள அட்டை வளங்குவது இலகுவான காரியமில்லை. அகதிகள் பலரிடம் அவர்கள் யார் என்பதை நிரூபிக்க எதுவித அத்தாட்சியும் இல்லை. கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றது போல் நாம் சகலரையும் பதிவுசெய்து வெகு சீக்கிரத்தில் விசேட அடையாள அட்டைகள் கொடுப்போம். இதே வேலைத்திட்டத்தை நாம் கிழக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக செய்தோம். இதை வடக்கிலும் அமுல்படுத்தி வருகிறோம்.
9. உங்கள் அனைவருக்கும் நான் சுயாதீனமாக இந்த அகதிமுகாம்களுக்கு சென்று பார்வையிட ஒழுங்குகள் செய்து தருகின்றேன். நீங்கள் போய்ப் பாருங்கள். அங்கு நடைமுறைப் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் அவற்றிற்கு இயன்றவரை உடன் பரிகாரம் தேடுகிறோம். கடந்த சில வாரங்களில் மட்டும் குற்றம் சாட்டப்பட்ட 10 அதிகாரிகளும் உடன் இடம் மாற்றினோம்.
10. அகதி முகாம்களில் உள்ளவர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படுவதாகவும் கருத்தடை தடுப்பூசிகள் போடப் படுவதாகவும் வெளிநாடுகளில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. நீங்களே போய் நிலைமைகளைப் பாருங்கள். எமது மக்களுக்கு நாம் துரோகம் இழைக்கவில்லை. டாவூர் மற்றும் உலகிலுள்ள அனைத்து அகதி முகாம்களுடன் ஒப்பிடும் போது எமது அகதி முகாம்கள் நல்ல தரத்தில் உள்ளன. இது மிகவும் குறுகியகால நடவடிக்கை. நாம் மீளக் குடியமர்த்துவதில் மிகவும் அக்கறையாக உள்ளோம்.
11. இன்று அகதி முகாம்களில் அரசியல் இராணுவ நடைமுறைப் பிரச்சினைகளைவிட பல சமூகப் பிரச்சினைகளும் உள்ளது. வெளியில் உள்ள பலர் தமது உறவினர்கள் எனக்கூறி அகதிகளை அழைத்துச் சென்று தமது வீட்டில் வேலைக்காக வைத்துள்ளனர். அகதி முகாம்களில் உள்ளவர்கள் பொருளாதாராத்திலும் கல்வி அறிவிலும் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள். சிறியகடிதம் எழுதுவது தொடக்கம் அதிகாரிகளுடன் பேசுவது வரை ஒன்றுமே ஏதும் உதவி இல்லாது செய்ய முடியாதவர்கள். இவர்களிடம் பெரும் ஆதங்கங்கள் உள்ளன நாம் இவற்றை முழுமையாக உணர்வோம்.
12. இன்று அரசு அகதிப் பிரச்சினைகளை முடுக்கி விட்டு தமிழர்களை தமது பாரம்பரிய பிரதேசத்திலிருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றுவதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மிகவும் உண்மைக்கு புறம்பானது. அண்மையில் கிழக்கு மாகாணத்திலிருந்து அகதிகளாக வெளியேறிய 97சதவிகித மக்கள் அதே நிலத்தில் மீள குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.
13. உத்தியோகப்பற்றற்ற முறையில் நாம் நோர்வே அரசை மற்றும் புலிகளின் புதிய உயர் உறுப்பினர் கே.பி மற்றும் பல வெளிநாட்டு புலிகளின் உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளோம. நேற்றுக் கூட John Holmes கே பி யுடன் பேசியுள்ளார. இவை வெளியில் ஒருவருக்கும் தெரியாது. நாம் போர் மறுபக்கத்தில் அரசியலை மறந்து விடவில்லை. எது எப்படி இருப்பினும் நாம் பிரபாகரன் பொட்டம்மான் உட்பட 7 பேருக்கு எதிரான சர்வதேச பிடியாணை குற்றச்சாட்டு தொடர்பாக எமது கொள்கைகளை மாற்ற முடியாது. மாற்றவும் மாட்டோம். இவர்கள் 7 பேரும் சர்வதேச சட்டததிற்கு முகம் கொடுக்க வேண்டியவர்கள் இந்த விடயத்தை தவிர அனைத்து விடயங்களை நாம் பேசித்தீர்க்க தயாராக உள்ளோம்.
14. நாம் ரிஎன்ஏ உடன் இணைந்து வேலை செய்ய ஆயத்தமாக உள்ளோம். எம்முடன் பேசாமல் இருந்தால் நாம் எப்படி பிரச்சினைகளை பேச முடியும்? இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் ரிஎன்ஏ தலைவர் குரு சம்பந்தருக்கு சொல்லி வருகிறேன்.
பசில் ராஜபக்ச வின் பதில் அனைத்தும் ஆதாரங்களுடன் கூடியிருந்தது அவர் தனக்கு பக்கத்தில் ஆள் உயரத்திற்கு ஆவணங்களை குவித்து வைத்திருந்து ஒவ்வொரு கருத்திற்கும் அதற்கு தகுந்த ஆவணங்களை எடுத்து எமக்கு காட்டினார். அவரைச் சுற்றி 3 செயலாளர்கள் இருந்த போதும் செயலாளர்களை விட பசில் ராஜபக்ச சகல ஆவணங்களுடனும் மிகவும் பரிட்சயமாக இருந்தார். செயலாளர்கள் ஆவணங்களை ஆலோசகருக்கு சுட்டிக்காட்டுவதைவிட அவரே சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஏன் பக்கங்களைக் கூட தனது செயலாளர்களுக்கு கூறி உதவி செய்தார். சில தருணங்களில் மிகவும் நகைச் சுவையாகவும் பதில் அளித்த ராஜபக்ச சம்பந்தப்பட்ட தருணத்தில் அங்கிருந்த பத்திரிகையாளர்களை குறிப்பாக வீடியோ படப்பிடிப்பாளர்களை சைகை மூலம் அறையை விட்டு வெளியேற்றினார்.
ஒரு கட்டத்தில் (IDP) ஜடிபி முகாம்களைப் பற்றி விளக்கிய பசில் ராஜபக்ச தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி தனக்கு எழுதிய கடிதம் ஒன்றை ஆதாரமாக காட்டினார். இக்கடிதத்தில் வன்னியில் உள்ள அகதி முகாமில் காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் பிஸ்கற்றும் தேனீரும் கொடுக்க வேண்டும் என ஆனந்தசங்கரி குறிப்பிட்டு இருந்தததை ராஜபக்ச சுட்டிக்காட்டியதும் சிரிப்பொலி எழுந்தது.
அதேபோல தமிழர் மீது நடாத்தப்படும் கடுமையான சோதனை குறித்து கேட்கப்பட்ட போது தான் அண்மையில் ஜெனீவாவிற்கு சென்ற போது ஏற்ப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
தான் UN இற்கு வேட்டியுடன் சென்றபோது தனது இடுப்புப் பட்டியை கழற்றுமாறு பாதுகாப்பாளர்கள் உத்தரவிட அதற்கு தான் இந்த பெல்ட்டைக் கழட்டினால் அதனுடன் கூடவே இந்த வெள்ளைப் போர்வையும் – வேட்டியும் சேர்ந்து விழுந்துவிடும் என்று தான் விளக்கியதாகத் தெரிவித்தார்.
நான் சந்தித்த பிரமுகர்கள்:
இந்த இரண்டு நாள் கூட்டத் தொடரிலும் அதனையொட்டி இடம்பெற்ற விருந்துபசாரங்களிலும் நாம் சம்மதித்த நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்டு பல விடயங்கள் நடந்தேறின. பல அரச ஊழியர்கள் கலந்துகொண்ட சிலரை தனியாகக் கதைத்து எதேச்சையாக சில சந்திப்புகளை ஏற்படுத்தினர். இந்த சந்திப்புகளில் நான் சந்தித்தவர்களில் முக்கிய பிரமுகர்கள்:
1. அமைச்சர் ரோகித்த போகொல்லாகம
2. செயலாளர் டாக்டர் பலித கோகன்ன
3. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க
4. ஜனாதிபதியின் விஷேட ஆலோசகர் பசில் ராஜபக்ச
5. அமைச்சர் டியூ குணசேகர
6. அமைச்சர் திஸ்ஸ விதாரண
7. ரிஎன்ஏ எம்பி சிறிகாந்தா
8. அமைச்சர் கருணா
9. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
10. புளொட் தலைவர் சித்தார்த்தன்
11. TULF தலைவர் திரு ஆனந்தசங்கரி
12. ஈபிஆர்எல்எவ் நாபா அணி-சுகு
13. கிழக்கு மாகாண அமைச்சின் ஆலோசகர் சந்திரா பெர்ணான்டோ
14. அமைச்சர் மிகந்த ஆனந்த அலுத்கம
15. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேட் பிளேக்
16. இந்திய தூதராலயத்தின் முதற்செயலாளர் பி சியாம்
17. சட்ட அமைப்பின் செயலாளர் கம்லத்
18. அமைச்சர் கருணாவின் பிரத்தியேக செயலாளர் சாந்தினி பெரேரா
இவர்களைத் தவிர பலதரப்பட்ட அதிகாரிகளையும் ஆலோசகர்களையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதில் முக்கியமாக நான் கவனித்த விடயம் என்னவெனில் (குறிப்பாக சிங்கள அதிகாரிகளிடம்) இன்று சிங்கள அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக மிகவும் பக்குவப்பட்டுள்ளார்கள். தமிழ் அரசியல் வன்முறையை மையப்படுத்தி தமது அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுக்க சிங்கள அரசியல்வாதிகள் இராணுவத்தடன் கூடிய ஒரு பாரிய அரசியல் வேலைத் திட்டத்தையும் கூட்டாக முன்னெடுத்துச் சென்றுள்ளனர். இதனால் தமது நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் மிகக் கச்சிதமாக முன்னெடுக்க தமிழ் சமுதாயமோ மேளங்களுடன் கத்திக் கூத்தாடி தேம்ஸ் நதியில் கூட்டாக பாயும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
புலம்பெயர் குழுவின் சுயபுராணம்:
சிங்கள அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இருந்த அரசியல் பக்குவமும் அரசியல் அணுகுமுறையும் 20 வருடத்திற்கு மேலாகமேலத்தேய நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் காண முடியவில்லை. இந்த புலம்பெயர் தமிழ் குழுவிடமும் அதனைக் காண முடியவில்லை.
இந்தப் புலம்பெயர் குழுவில் கலந்துகொண்ட சில பிரதிநிதிகள் புலிகளைச் சாடுவதிலும் தமது சொந்த தம்பட்டங்களை அடிப்பதிலும் சுயபுராணம் பாடுவதிலும் துதிபாடுவதிலும் தமது கவனத்தை செலுத்தினரேயொழிய கூட்டாக அரசை ஆதாரத்துடன் கேள்வி கேட்கும் அரசியல் சம்பாஷணைகளில் ஈடுபடவில்லை. சிலர் தமது தொழிலை மையப்படுத்தியும் தமது பிள்ளைகளை மையப்படுத்தியும் கருத்துக்கள் தெரிவித்ததை கேட்டபோது மிகவும் வெட்கித் தலைகுனிய வைத்தது.
பல தமிழ் பிரதிநிதிகள் ஜன்ஸ்டைன் செர்ச்சில்வின் தத்துவங்களை எழுதி வாசித்து தமிழ் பேசும் மக்களின் எஞ்சியுள்ள மானத்தையும் சபையில் வாங்கினார்கள்.
ஒருசபையில் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் எவ்வாறு பேசவேண்டும் அணுக வேண்டும் என்ற அடிப்படையான protocol பலரிடம் இல்லாதிருந்தது கவலையளித்தது.
கூட்டத்தின் இறுதியில் நன்றி கூறப் புறப்பட்ட தமிழ் பிரமுகர் தனது வேலையைப் பற்றியும் தனது மனைவியின் பின்புலத்தையும் பற்றிப் பேசியது தமிழர்கள் அங்கு சென்ற குழுவினர் இன்னமும் அரசியலில் கிணற்றுத் தவளைகள் என்பதை படம்போட்டுக் காட்டியது.
அதுமட்டுமல்லாமல் சில பிரதிநிதிகள் தம்மை தமிழ்த் தலைவர்களாகவும் தமிழர்களின் பிரதிநிதிகளாக தம்மைத்தாமே உயர்த்திக் கொண்டது கவலைக்குரியது.
இக்கூட்டத் தொடரினைத் தொடர்ந்து சில தமிழ் பங்காளர்கள் கொழும்பு பத்திரிகைகளுக்கு வலிந்து கொடுத்த பேட்டிகள் அனைத்தும் பிரதிநிதிகளின் கூட்டான கருத்தின் பிரதிபலிப்பல்ல.
இக்கூட்டத்தில் தமிழ் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட மகஜர் அரசின் உத்தியோகபூர்வ அறிக்கை மற்றும் இக்கூட்டத் தொடர் தொடர்பாக வெளியாகிய செய்திகளை இவ்விணைப்பில் பார்க்கலாம். http://srilankan-diaspora.org/
புலம்பெயர் குழுவின் பொதுக்கருத்து:
இக்கூட்டத் தொடரில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஒருவிடயம் பொதுவாக இருந்தது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை இனியும் இராணுவ ரீதியில் அணுக முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் பேசும் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. சிறீலங்கா அரசுடன் பேசுவதன் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். மற்றும் விடுதலைப் புலிகளினால் மேல்நாடுகளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் புலிகளின் தலைமையைக் காப்பாற்றுவதையே அடிப்படையாகக் கொண்டதே தவிர தமிழ் மக்களின் அரசியல் விடிவிற்கல்ல. போர்நிறுத்தம் அமுல் செய்யப்படல் வேண்டும். அகதிகள் தமது சொந்தப் பிரதேசங்களில் குடியமர்த்தப்படல் வேண்டும் போன்றன.
31-03-2009 – செவ்வாய்கிழமை
வவுனியா IDP camp விஜயம்:
இவ்விஜயம் தமிழ் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க பசில் ராஜபக்சவின் உத்தரவின் பேரில் வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ்விஜயத்தில் 9 தமிழ் பிரதிநிதிகளும் 4 வெளிவிவகார அமைச்சின் உத்தியோகத்தவர்களும் பல பாதுகாப்பாளர்களுடன் தரை மார்க்கமாகப் புறப்பட்டனர்.
மதவாச்சியை அண்மித்த பிரதேசத்தில் இருந்து காடுகள் பற்றைகள் என்ற பேதம் இல்லாமல் 50 அடிக்கு ஒரு இராணுவம் அல்லது பொலிஸ் கடமையில் ஈடுபட்டிருந்தனர். எமக்கு விஷேட பாதுகாப்பு ஒழுங்கு கொடுக்கப் பட்டிருந்ததால் அவர்களுடன் பேசும் சந்தர்ப்பமோ அல்லது நீண்ட நேரம் நிலைமைகளை அவதானிக்கும் சந்தர்ப்பமோ எமக்குக் கிடைக்கவில்லை. எது எப்படி இருப்பினும் அனைத்துத் தடை முகாம்களிலும் சோதனைச் சாவடிகளிலும் மக்கள் இறக்கப்பட்டு முழுமையாக சோதனையிடப்படுவதை கண்கூடாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இச்சோதனைகளில் பலவந்தமோ அல்லது அதிகார துஸ்பிரயோகமோ இடம்பெறவில்லை. நாம் அவதானித்தவரை அனைத்து சோதனைகளும் வேகமாகவும் பிரச்சினைகள் எதுவுமின்றி நடந்தேறின. இச்சோதனைச் சாவடிகளில் நீண்ட வரிசையும் இருக்கவில்லை.
மதவாச்சி தாண்டிக்குளம் ஈரப்பெரியகுளம் செட்டிகுளம் ஊடாக A9 பாதை வழியாக சென்றபோது கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெறும் தடயங்களும் அதற்கான அறிவுப்புகளையும் காணக் கூடியதாக இருந்தது. மதவாச்சிச் சந்திவரை புத்த விகாரைகளும் பள்ளிவாசல்களும் இந்துக் கோயில்களும் சாதாரணமாகவே காணப்பட்டன.
வவுனியா சந்தியை மகிந்த ராஜபக்சவின் பாரிய போஸ்டர் ஒன்றும் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவதற்கு எதிரான பெரிய போஸ்டர் ஒன்றும் பிரமாண்டமாக நிமிர்ந்து நின்றன. கலகலப்பற்ற ஒரு சோக நிலமாக வவுனியா காட்சியளித்தது. வவுனியா உதவி அரசாங்க அதிபர் சம்பந்தன், உயர் அதிகாரி பரமநாதனுடன் வவுனியா நிலைமைகள் குறித்து சுருக்கமாக கலந்துரையாடப்பட்டது. 30.3.09 வரை 49,859 அகதிகள் போர் பிரதேசத்தில் இருந்து வருகை தந்து 15 பாடசாலைகளில் தங்க வைத்துள்ள விபரத்தை சம்பந்தன் தந்தார்.
அகதி முகாம்களில் உள்ள மக்கள் மிகவும் விரக்தியுடன், கவலையுடன் கோபமாக உள்ளதாக கூறிய உதவி அரசாங்க அதிபர், இம்மக்கள் தமது கோபங்களை தமது அதிகாரிகள் மீது காட்டுவதாக கூறி கவலைப்பட்டார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து நாம் வவுனியா சந்தியில் இருந்து அரை மைல் தொலைவில் உள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அரசாங்க அதிபரின் கணக்கின் படி அங்கு 1487 பேர் 30.3.09 வரை பதிவாகி இருந்தனர். நாங்கள் சென்ற நேரத்தில் 300 இற்கும் மேற்பட்ட புதிய அகதிகள் உள்ளே செல்வதற்காக வாசலில் காத்து நின்றனர். இவ்வாறு புதிதாக வந்த மக்கள் மத்தியில் இறங்கிய போது எம்முடன் விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சின் ஊழியர்கள் தொடக்கம் அனைவரினதும் கண்கள் ஈரமாகின. புதிதாக வந்து இறங்கிய மக்களின் கோலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
மனைவி சேற்றிலே புதையும் போது மகளை கையிலேந்தி கரை மீண்ட கணவன், மகளின் சடலத்தைக் கடந்து வந்த தாய்………………… காமினி மகா வித்தியாலயத்திற்குள் புக முன் நாம் சந்தித்த மக்களின் முகங்களும், குரல்களும் எம் வாழ்நாள் முழுவதும் எம் மனதிற்குள் ஓர் மூலையில் எதிரொலித்துக் கொண்டிருக்கும். நாம் யார், நாம் எதற்காக அங்கு வந்திருக்கிறோம் என்று அறியாத அந்த அப்பாவி மக்கள் நாங்கள் ஏதோ வெட்டிக் கிழிக்கப் போகிறோம் என எண்ணி தமது துயரங்களை குவிந்து நின்று எங்களுக்கு சொல்லத் தொடங்கினார்கள். அவர்களுக்கு எதைக் கூறுவது எப்படிக் கூறுவது என்று நாங்கள் திணறிக் கொண்டிருக்க எங்களுடன் விஜயம் செய்த சிங்கள வெளிவிவகார அமைச்சின் ஊழியர்கள் கூட அழத் தொடங்கினர்.
அமைச்சரின் கடிதம் காட்டிய போதிலும் அங்கு கடமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இறுதியில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி உயர் இராணுவ அதிகாரியைத் தொடர்பு கொண்ட பின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அந்த அகதி முகாமினுள் நாம் கண்ட காட்சிகள் இதயத்தை பிழிந்து எடுத்தன. ஒரு வாரத்தினுள் பிறந்த 16 கைக் குழந்தைகள் தரையில் படுத்திருந்த காட்சி, இரு கால்களும் ஒரு கையும் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த ஒரு இளைஞன், ஒரு கை அரைகுறையாக துண்டிக்கப்பட்ட சிறுவன், புறமுதுகில் துப்பாக்கி சன்னத்துடன் 8 வயது சிறுவன்………………………….. ஒரு மனம் எவ்வளவு கொடுமையை சிந்திக்க முடியுமோ, அவ்வளவு கொடுமையையும் அந்த சிறு இடத்திற்குள் காணக் கூடியதாக இருந்தது.
தப்பி ஓடும்போது விடுதலைப் புலிகள் தாக்கிய வடுவை ஒரு பெண் வெளிப்படையாகவே காட்டினார். அங்கு உள்ள மக்கள் மிகவும் வெளிப்படையாகவும் இயல்பாகவும் பேசுகிறார்கள். யார் ஆண்டாலும் பரவாயில்லை, எம்மை எமது கிராமங்களுக்குத் திருப்பி அனுப்புங்கள் என்ற கோசமே அங்கு பரவலாகக் கேட்டது. ஸ்ரீலங்கா இராணுவம் அல்லது வைத்தியசாலைகளில் ஊசி ஏதாவது உங்களுக்கு போடப்பட்டதா என 25 பேர் வரை கேட்டோம். அனைவருக்கும் அது ஒரு புதுமையான கேள்வியாக இருந்தது. கீபீர் விமானத்தில் இருந்து விமானப்படை தாக்கியழித்தது பற்றி சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. கடுமையான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்று இதில் பல உயிர்களை இழந்ததாகக் கூறினர். அரச படைகளின் உக்கிரமான வான் தாக்குதல்கள் பற்றி கூறிய மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேகரிப்பு, கட்டாய வேலை, கட்டாய பணச் சேகரிப்பு பற்றியும் கூறினர்.
வவுனியா காமினி வித்தியாலயத்தில் உள்ள மக்களைச் சந்தித்த பின்னர் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் அவர்களை சந்தித்தோம். மிகவும் ஆளுமை கொண்ட அதிகாரியாக புலப்பட்ட திருமதி சார்ல்ஸ் நாம் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நேரடியாகவே பதில் அளித்தார்.
இன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் IDP முகாம்களில் கருத்தடை ஊசிகள் ஏற்றப்படுகின்றன, பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என பிரச்சாரங்களை செய்து வருகின்றன. வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு பதில் சொல்வதற்கு எமக்கு வசதிகள் இல்லை. நீங்களே போய் அங்குள்ள மக்களுடன் பேசிப் பாருங்கள். அங்கே நடப்பனவற்றை கேட்டறியுங்கள். இங்கு இனப்படுகொலை நடப்பதாக இருந்தால் அதை நான் தான் செய்கிறேன் என்று அர்த்தம், எனக் கூறிய திருமதி சார்ல்ஸ் IDP முகாம்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை ஏற்றுக் கொண்டார். வெளிநாட்டில் உள்ளவர்கள் பிள்ளைகள், பெண்களுக்கான ஆடைகள், ஊட்டச்சத்துள்ள உணவுகளை வாங்கித்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இடம்பெயர்ந்த மக்களை பாடசாலைகள் தவிர வேறு இடங்களில் வைத்திருக்க வசதிகள் இல்லை என தெரிவித்த அவர் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
30.3.09 வரை வவுனியா மாவட்டத்தில் 15 தற்காலிக அகதி முகாம்களில் 49,859 பேர் பதிவாகியுள்ளனர். போர் பிரதேசங்களில் இருந்து வெளியேறும் மக்களின் தொகை இந்த 15 முகாம்களை மையப்படுத்தியே கணிக்கப்படுகின்றது. ஆனால் போர்ப் பிரதேசங்களில் இருந்து எத்தனை பேர் வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வருகிறார்கள் என்ற கணக்கு ஒருவர் கையிலும் இல்லை. இந்த இரண்டு இடைவெளியினுள் பலர் காணாமல் போகிறார்கள் என விடுதலைப் புலிகள் சொல்கிறார்கள். இது குறித்து அங்குள்ள பல மக்களிடம் நாம் கேட்ட போது மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
இந்த 15 தற்காலிக அகதி முகாம்களைத் தவிர மேலதிகமான ஓரளவு நிரந்தரமான 4 அகதி முகாம்களை அரசு நிறுவியுள்ளது. அதில் 2 தற்போது திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் விபரம் வருமாறு.
1. கதிர்காமர் கிராமம் – தற்போது முழுமையாக பாவனையில் உள்ள கிராமம். 6000 பேர் இங்கு வசிக்கின்றனர்.
2. அருணாச்சலம் கிராமம் – 333 ஏக்கர் நிலப்பரப்பு. 11,863 பேர் தற்போது இங்கு வசிக்கின்றனர்.
3. ஆனந்தகுமாரசாமி கிராமம் – 260 ஏக்கர் நிலம். இன்னும் திறக்கப்படவில்லை.
4. ராமநாதன் கிராமம் – 376 ஏக்கர் நிலம். இன்னும் திறக்கப்படவில்லை.
கதிர்காமர் கிராமம்:
காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு பரந்துபட்ட பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கிராமம். தென்னோலைகளினால் அமைக்கப்பட்ட கூரையுடன் கூடிய ஓரளவு பெரிய வீடுகள். மக்கள் வங்கி, தபால்கந்தோர், கைத்தொழில் பயிற்சி நிலையங்கள், கோயில், வைத்தியசாலை என அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இவை எல்லாம் இருந்த போதிலும் இவை நிச்சயமாக ஒரு கிராமத்திற்கு ஈடாகாது.
வன்னி, முல்லைத்தீவு மக்கள் இப்படியான இறுக்கமான சூழ்நிலையில் வாழ்ந்து பழக்கப்படாதவர்கள். இந்த முகாம்களில் பல சமுதாய மனநோய் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எல்லா வசதிகளும் உணவும் இருந்தாலும் அங்குள்ள மக்கள் குறிப்பாக வேலை செய்யும் வயதில் உள்ளவர்கள் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். பிள்ளைகள் படிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள பாடசாலை நல்ல வசதிகளுடன் உள்ளது. அங்கு உயர்தர வகுப்பு வரை இருக்கின்றது. தாம் முன்பு படித்த பாடசாலையை விட கதிர்காமர் கிராமத்தில் படிப்பு வசதிகள் நன்றாகவே உள்ளதாக அங்கு படிக்கின்ற மாணவிகள் சரோஜி, தர்சிகா ஆகியோர் தெரிவித்தனர். இ தயாகரன் என்ற 19 வயது மாணவன் பேசிய போது தன்னுடைய குடும்பம் நவம்பர் மாதம் 23ம் திகதி குடிபெயர்ந்து கனகராயன் குளத்தில் இருந்து வவுனியா வந்ததாக தெரிவித்தார்.
ஆகமொத்தமாக பார்க்கும் போது எமக்கு எந்த IDP முகாமிற்கும் சென்று எவரும் எம்மை பின்தொடராமல் சுயாதீனமாக யாரையும் அழைத்து கதைக்கும் சுதந்திரம் இருந்தது. சில சந்தர்ப்பங்களில் மக்கள் எம்மைச் சுற்றிக் குவியும் போது ஒரு மனப்பயம் தோன்றினாலும் சிறிது நேரத்தில் யாவரும் மிகவும் பரிட்சயமுடையவர்கள் போன்ற உணர்வு ஏற்பட்டது.
நான் சென்ற 2 அகதி முகாம்களிலும் 8000 மக்கள் வரை இருந்தனர். இதில் 20 பேர் வரை நீண்ட நேரம் கதைத்தார்கள். மற்றும் கூட்டாக பலருடன் கதைத்தேன். என்னுடன் பேசியவர்களில் ஒருவர் கூட தமிழீழத்தைப் பற்றியோ, அல்லது புலிகளைப் பற்றியோ நல்லாகச் சொல்லவில்லை. சிலர் புலிகள் பணம் சேர்ப்பதையும், வேலைக்கு அழைப்பதையும் பற்றி சொன்னார்கள். 7 வயதிற்கும் 10 வயதிற்கும் இடையிலான 25 சிறுவர்களுடன் கதைத்தேன். வயதிற்கேற்ப குறும்புடன் அழகான தமிழில் கதைத்தார்கள். கீபீர் விமானத்தைப் பற்றி அடிக்கடி கூறினார்கள். முகாம்களில் உள்ள இராணுவ பொலீஸ் அதிகாரிகளினால் தமக்கு பிரச்சனை இல்லை என்பதே எல்லோருடைய அபிப்பிராயமாக இருந்தது.
IDP முகாம்களினுள் சிங்கள வைத்தியர்களும், சிங்கள அதிகாரிகளும் தமிழ் அதிகாரிகளும், சிங்கள இராணுவமும், முஸ்லீம் அதிகாரிகளும் என ஒரு சாம்பாராக இருந்தனர். இக்கால கட்டத்தில் இந்த முகாம்கள் தவிர்க்க முடியாதது தான். போர் நிலவும் நிலப்பரப்பில் என்ன நடக்கின்றதோ தெரியாது. ஆனால் IDP முகாம்களில் உள்ள மக்களைப் பற்றி விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் பிரச்சாரங்களில் எதுவித உண்மையும் இல்லை. அங்கு வாழும் மக்களுக்கு உதவ வேண்டியது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் கடமை.
மீண்டும் வலியுறுத்தி கூறுவேன். இன்றைய காலகட்டத்தில் அந்த முகாம்கள் தவிர்க்க முடியாதது தான். ஆனால் அந்த முகாம்கள் வெகுவிரைவில் மூடப்பட்டு அங்குள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல வசதிகள் செய்து கொடுக்கப்படாத பட்சத்தில் இன்னும் 10 பிரபாகரன்களும் நூற்றுக் கணக்கான தற்கொலை இளைஞர்களும் உருவாகப் போவது திண்ணமே.