மறுபிரசுரங்கள்

மறுபிரசுரங்கள்

நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – அமைச்சர் டியூ குணசேகர

200909-deu.jpgதற்போதைய சூழ்நிலையில் முதலில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சமாதானம் பற்றிப் பேச முடியாது.  அம்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது நாம் பேசுவது போன்று எளிதான விடயமல்ல என்று அரசியல் யாப்பு விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ குணசேகர தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கியிருந்த நேர்காணலில்.தெரிவித்திருந்தார்
 

கேள்வி : நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை எப்படியிருக்கிறது?

பதில் : முப்பது வருடகால பயங்கரவாதம், 30 வருட கால யுத்தம் நாட்டின் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை மாற்றியமைப்பதே இப்போதைய தேவையாக உள்ளது. இரண்டாவதாக 1977 காலப் பகுதியில் ஆரம்பித்த திறந்த பொருளாதாரக் கொள்கையானது 2006இல் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எனினும் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பொருளாதார வழிமுறைகளில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் சரிவு நிலை ஏற்பட்டிருப்பினும் கூட எமது தேசிய உற்பத்திகளைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.

விசேடமாக தேசிய உற்பத்தியை கிராமிய, மாகாண மட்டத்தில் அதிகரிப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சிறந்த முறையில் செயற்படுவதற்கு ஏதுவாய் அமைந்தது. தேசிய உற்பத்தியில் 50 சதவீத அதிகரிப்பை மேல் மாகாணமும், 2.9 வீதம் வட மாகாணமும், கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்கள் 4 சதவீத அதிகரிப்பையும் காட்டுகின்றன. இதேவேளையில் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற பொதுத் தேர்தல், மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள் இவற்றின் பெறுபேறுகளிலேயே தங்கியிருக்கின்றன.

கேள்வி : யுத்தத்தின் பின்னரான சமாதான முன்னெடுப்புக்கள் பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில் : தற்போதைய சூழ்நிலையில் முதலில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சமாதானம் பற்றிப் பேச முடியாது.

அம்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது நாம் பேசுவது போன்று எளிதான விடயமல்ல. வேறு நாடுகளில் அகதிகளைப் பராமரிப்பதில் நிலவும் பிரச்சினைகளைப்போல நமது நாட்டில் இல்லை. அமெரிக்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். சிறிய தீவான எமது நாட்டில் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை நிவாரணக் கிராமங்களில் வைத்து பராமரிப்பதென்பது சாதாரண விடயமல்ல.

முதலில் மக்கள் மீளக்கூடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர் பிரதான பாதைகள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். அப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சிறந்த போக்குவரத்து வசதிகள் இருந்தால்தான் அப்பகுதிகள் பொரு ளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.

அடுத்த கட்டமாக அப்பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். மன்னார் மாவட்டத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்க்கூடியதொரு நிலைமை ஏற்படும். மன்னார் மாவட்டத்தில் 45 பொலிஸ் நிலையங்கள் இருந்தன. அவற்றில் பல முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளில் பொலிஸார் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும். படிப்படியாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் தனியொரு அமைச்சினால் மட்டும் செய்துவிட முடியாது. அனைத்து அமைச்சுக்களினதும் முழு ஒத்துழைப்புடனேயே இவ்வாறான பணிகளைச் செய்ய முடியும். வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை. அடையாள அட்டை இல்லாமல் அவர்களால் எந்தவொரு தேவையையும் பூர்த்திசெய்துகொள்ள முடியாது. இவ்வாறு பிரச்சினைகள் அதிகம்.

கேள்வி : பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றி?

பதில் : இது ஒன்றும் புதிய விடயமல்ல: 1987ம் ஆண்டிலிருந்து இன்றுவரை செயற்படும் மாகாண சபை முறை 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

தமிழ் மொழியையும் அரச கரும மொழியாக ஏற்று சட்ட ரீதியாக செயற்படுத்துவது 13ஆவது திருத்தத்தின் கீழ் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆயினும் கடந்த 20 வருடங்களாக தமிழ் மொழியை அமுலாக்க முடியாது போய்விட்டது. தற்போதைய ஜனாதிபதி அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழியை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

அதற்கமைய நான் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள், பிரத்தியேக முயற்சிகள் ஆகியன காரணமாகவும் அதனை முன்னெடுக்க ஜனாதிபதி அவர்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பின் காரணமாகவும் தமிழ் மொழியை அரச கரும மொழியாக முழு அளவில் முன்னெடுக்க அரசியல் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ் மொழியை அரச கரும மொழியாக முன்னெடுப்பதற்கான அரசியல் தடைகள் முற்றாக நீங்கியுள்ளன.

எனினும் தமிழ் மொழியை அரச திணைக்களங்களில் உரிய முறையில் அமுல்படுத்துவதற்கேற்ற ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது. இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தாய்மொழி தமிழாக இருப்பின் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைக் கற்றிருத்தல் அவசியமாகும். அதுபோல் தாய் மொழி சிங்களமாக இருப்பின் இரண்டாம் மொழியாக தமிழ் மொழியை கற்றிருத்தல் அவசியமாகும். அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் உயர் அதிகாரிகள் மட்டத்திலிருந்து சாதாரண ஊழியர்கள் வரையிலானோர் இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெற வேண்டியதன் அவசியம் குறித்துக் கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.

2007 ஜுலை முதலாம் திகதியிலிருந்து அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் அனைவரும் இரண்டாம் மொழியை கற்றிருக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் சம்பள அதிகரிப்புப் பெற முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது அரச திணைக்களங்களில் இரண்டாம் மொழி தொடர்பாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தெற்கே சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் கற்பிக்கும் அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரச உத்தயோகத்தர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பதினான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். தெற்கில் சிறுபான்மையினர் முகங்கொடுக்கும் அதேவிதமான பிரச்சினைக்கு வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பான்மை சமூகம் முங்கொடுக்கிறது. இதுவே கள யதார்த்தமாகும்.

இந்த வாரம் தொடக்கம் அனைத்து அரச நிறுவனங்களிலும் மொழி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க செயலாளர் மட்டத்திலான அதிகாரியொருவர் நியமிக்கப்படவுள்ளார். அந்தந்த அரச நிறுவனங்களில் அரசகரும மொழித் திட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு அவரையே சாரும். நமது நாட்டில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் இருக்கின்றனர். இதுவொரு அரசியல் தீர்வுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான செயலாக அமையும்.

கேள்வி : எப்போதும் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்து வரும் தெற்கில் உள்ள அரசியல் தடைகளை எவ்வாறு சமாளிக்கப் போகிறீர்கள்?

பதில் : அதற்கு நாம் கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். எமது அரசியல் பிரச்சினைகளை இதுவரை தீர்க்க முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் சிறுபான்மையினர் அல்ல என்பதையும் இவ்விடத்தில் கூற வேண்டும். இதுவரை காலமும் நாட்டை ஆண்டுவந்த பிரதான இரு அரசியல் கட்சிகளுக்கிடையே இது தொடர்பில் ஒரு இணக்கம் ஏற்படாமை இதற்கு முக்கிய காரணமாகும்.

தேசியப் பிரச்சினை தொடர்பாக மொழி, மதம், இனம் ஆகிய விடயங்களில் ஒரு இணக்கம் ஏற்படத் தவறியமையும் முக்கிய காரணமாகும். அனைத்துக் கட்சிகளின் மாநாட்டை ஜனாதிபதி கூட்டுவதற்கான காரணம் இந்தப் பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கேயாகும். இவ்விடத்தில் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் குறைந்த பட்ச இணக்கப்பாட்டுக்காவது வரவேண்டும்.

கேள்வி : இதற்கு பதின்மூன்றாவது திருத்தம் எந்த வகையில் உதவியாக அமையும்?

பதில் : பதின்மூன்றாவது திருத்தம் புதிய விடயமல்ல. நமது அரசியல் யாப்பின் ஓர் அங்கமாகவே இருக்கிறது. அதனைக் கொண்டுவருவதற்கான முக்கிய நோக்கமே வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதாகும். ஆனால் கடந்த 17 வருடகாலமாக அம் மாகாணங்கள் தவிர்ந்த வேறு மாகாணங்களில் அது செயற்பட்டு வருகிறது. யுத்தத்தின் பின்னர் கிழக்கில் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல், பின்னர் மாகாண சபைத் தேர்தல்களின் பின்னர் கிழக்கு மாகாண சபை இயங்கி வருகிறது.

வடக்கில் ஏற்கனவே நான் கூறியதுபோன்று அனைத்து விடயங்களையும் கட்டம் கட்டமாகவே செய்ய வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு நிர்வாகம் தொடர்பான ஐயப்பாடு தெற்கில் இருக்கிறது. முக்கியமாக காணி, பொலிஸ் ஆகிய விடயங்களில் அதிகாரம் தொடர்பான பீதி அர்த்தமற்ற ஒன்றாகும். வடக்கு, கிழக்கில் சிறு தொகை காணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து காணிகளும் தனிநபர்களுக்குச் சொந்தமானதாகும். அப்பிரதேசங்களில் சொற்ப அளவிலான நிலங்களே அரசுக்கு சொந்தமானதாகும்.

கேள்வி : 13ஆவது திருத்தம் தொடர்பில் அரச தரப்பினருக்கிடையே ஒருமித்த கருத்தை எட்டமுடியாதுள்ளதே?

பதில் : ஜே. வி. பி., ஜாதிக ஹெல உறுமய, விமல் குழு இவர்கள்தான் 13ஆவது திருத்தம் தொடர்பான எதிர்ப்பை முன்வைக்கின்றனர். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் அதனைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மொழிப் பிரச்சினை தொடர்பான எதிர்ப்பைச் சமாளித்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியது போன்று இதனையும் தீர்த்துக்கொள்ள முடியுமென்றே நான் கருதுகிறேன்.

கேள்வி : இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென கருதுகிறீர்கள்?

பதில் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நாம் 88, 89 களில் இருந்தது போன்ற நிலையிலேயே இருந்து வந்தனர். அவர்களால் சுயாதீனமாக செயல்பட முடியாமல் இருந்தது. கடந்த காலங்களில் நிலவிய யதார்த்த நிலை அது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இந்நிலையில் அவர்களின் செயற்பாடுகளும் மாற வேண்டும். நிச்சயம் மாறும் என்றே நானும் கருதுகிறேன். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் அந்த மாற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைத்து புலிகளை ஏசுவதையோ, விமர்சிப்பதையோ விடுத்து அவர்களைச் சுயமாகச் செயற்பட விடுவதே சிறந்தது. அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரையில் அவர்கள் அப்பகுதி மக்களால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். அவர்கள் உண்மையான பிரதிநிதிகளா இல்லையா என்ப தையும் அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும். அது வரையில் அவர்களை அப்பிரதேச ஜனநாயக பிரதிநிதிகளாக ஏற்றுச் செயற்பட வேண்டும்.

கேள்வி : இடதுசாரிக் கட்சிகளின் செயற்பாடுகள் எப்படியிருக்கின்றன?

பதில் : வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஐந்து இடதுசாரிக் கட்சிகள் எப்போதும் இணைந்தே செயற்பட்டு வருகிறோம். எதிர்காலத்தில் கூட்டமைப்பாக செயற்படுவது பற்றிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஒருவர் இன்னொருவரின் மனம் புண்படாதவாறு செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.

கேள்வி : வடபகுதி மக்களின் மனங்களைத் தெற்கு எவ்வாறு வெற்றிகொள்ளலாம்?

பதில் : வடக்கில் அகதிகளாக இருக்கும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டிவரும் தெற்கு மக்களின் கரிசனையிலிருந்தே மக்களின் மனங்களை வென்று பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ளமை சந்தோஷத்திற்குரியதாக இருப்பினும் அளவுக்கு மிஞ்சி அதைத் தூக்கிப்பிடிக்காமல் ஏற்பட்டிருக்கும் சுமுக நிலையை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

முப்பது வருட காலமாக இடம்பெறாத சுமுக அரசியல் நிலையை ஏற்படுத்தி அதற்கான களம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அரசு, பொது மக்கள், சமூகக் குழுக்கள், அரசியல் வாதிகள் உட்பட அனைவருமே இதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

நேர்கண்டவர் : பி. வீரசிங்கம்

நாடு கடந்த தமிழீழ அரசு அவசியம் ஏன்? : உருத்திரகுமாரன் விளக்கம்

120909rudrakumaaran_v.jpgஇலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் அனைத்துலக சட்ட மரபு நெறிகளுக்கு உட்பட்டு, தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வரும் தமிழ் ஈழத்தவர்கள் தற்போது ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என்று அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மானிடம் பேணும் சட்டநெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்று முழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாயமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.

வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாக தடைசெய்யப்பட்ட கனரகப் போர் ஆயுதங்களினாலும், அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக் குண்டுகளினாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட சிறை முகாம்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்களும், அனைத்துலக அரச நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ் தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியல் சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாக உள்ளது.

சிறிலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுவது தினந்தோறும் நடைபெறுகிறது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணாமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாயமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமை வெளியும் அழிந்து போய் உள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிர் ஆபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். யோசப் பரராச சிங்கம் (2005), நடராசா ரவிராஜ் (2006), க.ந.சிவநேசன் (2008) ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர்கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர, இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை குறுகச் செய்துள்ளது.

இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கி உள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தரும் வகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை.

இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமே இல்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழ் ஈழத்தவர்களும் தற்பொழுது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான, மிக முக்கிய பணி எனக் கருதுகின்றார்கள்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும் சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க் குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ius cogens அடிப்படை சட்டநெறித் தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.

இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும்.

நன்றி: வெப்துனியா

கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு தனித்தனிக் கட்சிகளாக இணைந்து செயற்படுவதே பலனளிக்கும் – சித்தார்த்தன்

130909sittar.jpgத. தே. கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் சேர்வதால் தெற்கில் மேலும் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர இடமுண்டு. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கிக் குழப்பிவிட இது காரணமாக அமைந்துவிடும் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்

புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு

கேள்வி: தற்போதைய அரசியல் நிலைமைகள் எப்படியிருக்கின்றன?

பதில்: அரசியல் நிலைமை பற்றி கூறுவதானால் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இவை இரண்டும் முடியும் வரையிலும் அரசியல் ரீதியான எந்தவொரு முன்னெடுப்பையும் அரசாங்கம் நிச்சயமாக எடுக்கப்போவதில்லை என்றே நான் நம்புகின்றேன்.

அதனை முன்னெடுப்பதற்கான பலம் அரசிடம் இல்லை. பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் ஜே. வி. பி, ஹெல உறுமய, விமல் வீரவன்ச மூன்று பகுதியினரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

இவ்வாறு எடுக்கும்போது அரசியல் ரீதியான ஒரு தீர்வோ அல்லது பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான முயற்சியோ சாத்தியமில்லை. ஆகவே, அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசின் பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்களாக யார் வரப்போகின்றார்கள் கடும் போக்காளர்கள் மக்களால் ஒதுக்கப்படுவார்களா என்பவற்றைப் பொறுத்துத்தான் ஒரு அரசியல் தீர்வை நாம் பார்க்க முடியும்.

சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும் இப்போது அவை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மேற்குலக நாடுகள் கூட தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காட்டிலும் இப்போது மனித உரிமைகள் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கின்றன.

யுத்த காலத்தில் நடைபெற்ற விடயங்களில் அக்கறை காட்டுவதன் மூலம் இங்கு மீண்டும் இனங்களுக்கிடையே ஒற்றுமையற்ற நிலைமையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

யுத்த காலத்தில் எமது உறுப்பினர்கள் பலர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை நாம் ஆதாரபூர்வமாக இலங்கை கண்காணிப்பு பணியகத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் கூறிய போதும் அவர்கள் அதுபற்றி எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. அன்று முதல் இன்றுவரை அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பக்கசார்பானதாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

முதலில் இனங்களுக்கிடையே சுமுகமான உறவுகளை ஏற்படுத்த வேண்டும். நீண்ட காலமாக யுத்தத்தினால் மூவினங்களுக்கிடையேயும் ஒரு அவநம்பிக்கை வளர்ந்திருப்பதும் அரசியல் தீர்வைக் கொண்டு வர முடியாமைக்கான ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே இனங்களுக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முற்பட வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் கூட கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றை மறக்க முடியாவிட்டாலும் கூட ஒருவரையொருவர் மன்னித்து ஓன்றுபட்ட நிலையை உருவாக்கி சரியானதொரு தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்தது. இச் சந்திப்பு தமிழ் மக்களிடையே ஒரு நம்பிக்கையைத் தோற்றுவிக்குமா?

பதில்: எம்மைப் பொறுத்தவரையில் த. தே. கூட்டமைப்பு கடந்த காலத்தில் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். புலிகளாலேயே 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெல்லக்கூடியதாக இருந்தது. புலிகள் எதைக் கூறினார்களோ அதனையே த. தே. கூட்டமைப்பும் செய்து வந்திருக்கிறது.

இன்று புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பினர் சுயமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்கக்கூடிய நிலையில் இருக்கின்றனர். யார் விரும்புகிறார்களோ இல்லையோ மஹிந்த ராஜபக்ஷ தான் இந்நாட்டின் ஜனாதிபதி.

எமது பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் (நான் இங்கு அரசியல் தீர்வுப் பிரச்சினையைக் கூறவில்லை) மிக அதிகளவில் இருப்பதால், யுத்தத்தினால் அழிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களில் வாழும் இந்நிலைக்கு ஜனாதிபதியுடன் பேசாமல் ஒரு தீர்வு காண முடியாது.

ஆகவே இவர்கள் கடந்த காலங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதெல்லாம் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். அவ்வாறு இறுமாப்போடு இருந்ததால் மக்களுக்குச் செய்யக்கூடிய பல அடிப்படையான விடயங்களைக்கூட செய்ய முடியாமல் போனது. அவ்வாறு தட்டிக்கழித்ததால் அது அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கிறது.

ஆகவே இன்று இவர்கள் இப்படியானதொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதை மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள். மக்களைக் பொறுத்தவரையில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பது ஒருபுறமிருக்க ஒவ்வொரு தனிமனிதனும் தனது அன்றாடப் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பர்.

அகதி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் இருக்கும் இவ்வேளையில் அரசியல் பிரச்சினைகளை விட அவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சினையாகும்.

இதையே நாமும் இன்று முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்தது உண்மையில் வரவேற்கக்கூடிய விடயமாகும். இதுவொரு ஆரம்பமாக இருக்கலாம். இச்சந்திப்பினால் உடனடியாக எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படாது போனாலும் இது நல்லதொரு ஆரம்பம். த. தே. கூட்டமைப்பை பொறுத்தவரையில் சரியோ பிழையோ இன்று வடக்கு, கிழக்கில் மிகப்பெரிய பலம் பொருந்திய 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருக்கின்றது.

ஆகவே அவர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. வெறுமனே நாங்கள் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம், தமிழ் மக்களின் தன்மானத்தைக் காப்போம் எனக்கூறிக்கொண்டு மாத்திரம் இருக்காது அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். அதற்கானதொரு நல்ல ஆரம்பமாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்குமென நீங்கள் கருதுகிaர்கள்?

பதில்: அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் கடந்த 5 வருட காலமாக புலிகளே ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். யுத்தம் நடைபெற்றபோது கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் மக்களைக் காப்பாற்றுவதை விட புலிகளைக் காப்பாற்றுவதில்தான் அதிக கவனம் செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான சிறுவர்களை புலிகள் தமது படையில் பலவந்தமாக சேர்த்தபோது உலகமே அதைப்பற்றி பேசியது. அப்போதும் த. தே. கூட்டமைப்பு அதனை நியாயப்படுத்திப் பேசியது. பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியிலும் அச்சிறுவர்கள் தாங்களாகவே சென்று சேர்ந்துகொள்வதாக கூறினர்.

ஒரு விடயத்தில் நாம் அனைவரும் தெளிவுடன் இருப்போமானால் அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். அதாவது மே 18 இற்கு முந்திய காலம், மே 18 இற்கு பிந்திய காலம் அல்லது பிரபாகரனுக்கு முன்பு, பிரபாகரனுக்கு பின்பு என தமிழ் மக்களின் பிரச்சினைகளை வகுக்க வேண்டும்.

மே 18 இற்கு முன் நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். மே 18 இற்குப் பின் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும். நாம் அனைவருமே ஒரு கருத்தொருமையுடன் சிந்தித்து செயற்படுவோமேயானால் நிச்சயம் தமிழ் மக்களுக்கு ஏதோ எங்களால் முடிந்த சேவையை ஆற்ற முடியுமென்று நான் நம்புகிறேன்.
கேள்வி : தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறதே?
பதில்: தமிழ் மக்களின் நலன் விரும்பிகள் மத்தியில் இவ்வாறானதொரு எதிர்பார்ப்பும், எண்ணமும் இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகளால் உருவாக்கப்பட்ட, தெற்கில் சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு அமைப்பாகும்.

தமிழ்த் தேசியவாத சாயம் பூசப்பட்ட அமைப்பாகவே பெரும்பான்மை இன மத்தியில் பேசப்படுகிறது. ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஏனைய அமைப்புகள் சேரவேண்டும் என்பது முக்கியமல்ல. த. தே. கூட்டமைப்பு என்ற பெயரெல்லாம் கைவிடப்பட்டு அனைத்து கட்சிகளும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் கூடிப்பேசி ஒரு அமைப்பை கொண்டு வருவதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை தருவதாக அமையும். த. தே. கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் சேர்வதால் தெற்கில் மேலும் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர இடமுண்டு.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கிக் குழப்பிவிட இது காரணமாக அமைந்துவிடும்.

கேள்வி: உங்களைப் போன்றோர் இவ்வாறான விடயங்களை முன்வந்து செய்ய முடியாதா?

பதில்: நாங்கள் அதனைச் செய்யத் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறோம். ஆனால் இதனை தனியொரு தரப்பினரால் முன்னெடுக்க முடியாது. தனிநபராகவோ அல்லது தனிக் குழுவின் செயற்பாடாகவோ இருக்கக் கூடாது. ஏகப் பிரதிநிதித்துவக் கதைகளை விட்டுவிட்டு தமிழ்த் தரப்புக்களிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இப்போதைய தேவையாக இருக்கிறது. தமிழ் மக்களை மேலும் கூறு போடாது இருப்பதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

கேள்வி: 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை, நடைமுறைப்படுத்துவது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: நிச்சயமாக இது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. ஜே. ஆர். ஜயவர்த்தன ஆட்சிக் காலத்தில் ஒரு இலட்சத்திற்கு மேலான இந்திய அமைதிப் படையின் வருகை, இந்தியாவின் அழுத்தம் என்பன இருந்தும் கூட எம்மால் 13ஆவது திருத்தத்தையும் அதன் மூலம் கிடைத்த மாகாண சபையையுமே எம்மால் பெற முடிந்தது.  இன்று தமிழ் மக்களின் அரசியல் நிலமை மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் ஏனைய அனைவரையும் பலவீனப்படுத்திய பின் அவர்களே தம்மை ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிச்செயற்பட்டனர். இன்று அவர்களும் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இத்தருணத்தில் 13ஆவது திருத்தத்திற்குக் கூடுதலாக எதையும் நாம் பெற்றுவிட முடியாது.

அது மாத்திரமல்ல. இந்திய அரசாங்கம் கூட அன்று 13ஆவது திருத்தத்தை விடக் கூடுதலாக அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போதிலும் இன்று 13 + என்ற எல்லையில் நின்று கொண்டிருக்கின்றனர். ஆகவே 13ஆம் திருத்தத்திற்கு இன்னும் சில முக்கிய அம்சங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் சுயமாக எதையும் செய்ய முடியவில்லையென அதன் முதலமைச்சர் கூறுகிறார். 13ஆவது திருத்தத்தை ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து படிப்படியாக தேவையான அம்சங்களை அதிகாரங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தம் ஒரு முடிவாக அல்லாமல் ஆரம்பமாகவே அமைய வேண்டும்.

கேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். அது இணைந்ததாகவே இருக்கவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி: இனப்பிரச்சினைக்கான தீர்வில் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எப்படியிருக்கின்றது?

பதில்: ஜே. வி. பியை இடதுசாரிக் கட்சியெனக் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் அடிப்படையில் இனவாதக் கருத்துக்களையே முதன்மைப்படுத்துகின்றனர். ஏனைய இடதுசாரிக் கட்சிகள் இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துகளைக் கொண்டுள்ளன.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களின் பலம் போதுமானதாக இல்லை. இடதுசாரிக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகள் இன்னும் இருக்கின்றன. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டோம். எதிர்வரும் காலங்களிலும் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்தே செயற்படுவோம்.

கேள்வி: இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆராயும் சர்வகட்சி மாநாடு தொடர்பில் உங்களது கருத்தென்ன?

பதில்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்விடயத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்ட போதிலும் அதில் ஐ. தே. க., த. தே. கூட்டமைப்பு ஆகிய பிரதான கட்சிகள் பங்குபற்றவில்லை.

இதனால் ஒரு தீர்வைக்காண முடியுமா என்பது சந்தேகம்தான். உண்மையாக ஒரு தீர்வைக்காண வேண்டுமானால் எதிர்க்கட்சியான ஐ. தே. க. மற்றும் த. தே. கூட்டமைப்பு ஆகியன இதில் பங்குபற்றியே ஆகவேண்டும்.

கேள்வி: கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளிர்கள்?

பதில்: எதிர்கால நடவடிக்கைகள் பற்றி எதிர்வுகூற முடியாவிட்டாலும் கூட இன்று இடம்பெயர்ந்து மிகவும் இக்கட்டானதும் துரதிஷ்டமானதுமான நிலையில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்குத் தொடர்ந்தும் பிச்சை கொடுத்துக் கொண்டிராமல் அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

சொந்த இடத்தில் சுதந்திரமானதும், நிம்மதியானதுமான வாழ்க்கையினை அவர்கள் பெறுவதற்கு வெறுமனே அரசாங்கத்தை குறைகூறாமல், புலம்பெயர் மக்கள், சக்திகள் உட்பட சகல வளங்களையும் பயன்படுத்தி எமது மக்களை மிக விரைவில் நல்வாழ்வுக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நேர்கண்டவர் பி. வீரசிங்கம்

இலங்கை அரசின் அடுத்த குறி, உருத்ரகுமாரன்? “அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார் அமெரிக்க அதிகாரி” : ஜூனியர் விகடன்

120909rudrakumaaran_v.jpgகுமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயோர்க்கில் இருந்து கொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது
 
இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடன் நிறுவனத்தாரின் வார இதழான ஜூனியர் விகடன் சஞ்சிகையில் மேற்கண்டவாறு தகவல் வெளியாகியுள்ளது.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டிருப்பதாவது:-

கே.பி-‘யை தலைவராக அறிவித்து பிரபாகரன் மறைவுக்குப் பிறகு உலக அளவில் ஈழத்தமிழர்களை தன் நாவன்மையால் வசீகரித்தவர் உருத்திரகுமாரன். ‘இனி ஆயுதம் வேண்டாம்; அமைதிப் பேச்சு வார்த்தையே தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தரும்!’ என்று கூறி இந்தியாவிடமும் நேசக்கரம் நீட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச கிரிமினல் கோர்ட்டிலும் இலங்கை அரசின் முகத்திரை கிழியக் காரணமாக இருந்தவரே இந்த உருத்திரகுமாரன். எனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்!” என்று அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.

உருத்திரகுமாரனை உயிருடன் பிடிக்க இலங்கை அரசின் தீவிரவாதத் தடுப்புத் துறை பொலிஸார், இராணுவ அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றுள்ளது. கே.பி. ஸ்டைலில் அலேக்காக அவரை இலங்கைக்கு தூக்கிச் சென்று புலிகளின் சர்வதேசத் தொடர்புகளை விசாரிக்கத் திட்டமாம்.

‘கே.பி.’ மீது பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்ததால், கடைசி காலகட்டங்களில் அன்ரன் பாலசிங்கத்தின் அபிமானத்தைப் பெற்ற உருத்திரகுமாரனைத்தான் பிரபாகரன் வெகுவாக நம்பி வந்தார். புலம்பெயர்ந்த நாடுகளின் ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியும் கொடுக்கப்பட்டது.

வழக்கறிஞரான உருத்திரகுமாரன் தன் கூர்மையான வாதத்திறனால் புலிகளின் மீது அமெரிக்க அரசு விதித்திருந்த தடையை நீக்கப் போராடியும் வந்தார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலை பற்றியும் ஆதாரங்களுடன் பேசி அவர்களை மசிய வைத்தார். இதில் தொடங்கி ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஒபாமா வரை தமிழ் ஈழம் பற்றி பேசுமளவு செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக கனடா, ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி விஜயம் செய்து நாடு கடந்த தமிழ் ஈழம் ஆதரவாக மக்களைத் திரட்டியும் வந்தார். இது இலங்கைக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்து வந்தது. உருத்ராவை எப்படியாவது பிடித்துப் போட்டுவிட்டால்… புலிகளே இல்லாமல் செய்து விடலாம் என்று கணக்குப் போட்ட இலங்கை அரசு அவரைக் கைது செய்ய தனிப்படையே அமைத்தது.

இது பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதில், ”அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை…” என்று கூறினார்கள். ”அமெரிக்கா ஒன்றும் மலேசியா இல்லை. இங்கு சட்டதிட்டங்களே வேறு. முதலில் ஓர் அமெரிக்க பிரஜையைக் கைதுசெய்ய சர்வதேச வாரண்ட் வேண்டும். அவர்மீது வழக்குப் பதிவாகி நீதிபதியின் தீர்ப்பு நகலை முதலில் தரவேண்டும். முக்கியமாக அந்நாட்டுடன் ‘நாடு கடத்தப்படுவதற்கான ஒப்பந்தம்’ (EXTRADITION TREATY) அமுலில் இருக்கவேண்டும். இலங்கையிடம் அமெரிக்காவுக்கு அப்படி ஒரு ஒப்பந்தமோ வாக்குறுதியோ இல்லை.

கே.பி. கைது வேறு கதை! அவர் இண்டர்போல் அமைப்பினால் தேடப்பட்ட சர்வதேசக் குற்றவாளி. ஆகவே, மூன்று நாடுகளைக் கடந்து கடத்திப் போக முடிந்தது. எங்களுக்குத் தெரிந்த வரை உருத்திரகுமாரன் மீது எவ்வித வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை கைது செய்வதானால் முதலில் எங்கள் அனுமதி பெறவேண்டும். அமெரிக்காவின் தனிமனித சுதந்திரம் மிகவும் போற்றப்படக் கூடியது!” என்று கூறினார்கள்.

உருத்திரகுமாரனின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசே கூட மிகத் தீவிரமாகக் கண்காணித்து வந்தாலும், அவர் மீது தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இவ்வளவுக்கும் நியூயோர்க் மாநகரில் பிரபாகரன் படம், புலிக்கொடி ஏந்தி பத்தாயிரம் ஈழத்தமிழர்களை வைத்துப் பேரணியைப் நடத்தியவர் உருத்திரகுமாரன்.

உருத்திரகுமாரனையும் சேர்த்து நான்கு தலைவர்களை இலங்கை அரசு ‘கைது’ செய்யத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் லண்டனில் வாழும் அடேல் பாலசிங்கம், கலிபோர்னியாவில் வாழும் ஜெயந்தா டொனால்டு ஞானக்கோன் மற்றும் ஐரோப்பாவிலுள்ள காஸ்ட்ரோ ஆதரவாளரான நெடியவன்.

அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு அவர் மனைவி அடேல், பல்வேறு குழுக்களாக உள்ள தமிழ் ஈழத் தலைவர்களை தனது அன்பினால் தாயைப்போல் உரிமையுடன் கண்டித்து ஒருங்கிணைத்தார். லண்டனில் எந்த ஆர்ப்பாட்டம் என்றாலும் முதலில் நிற்பார். இவரது சக்தி வெள்ளையர்களை புலிகளின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஞானக்கோன் ஒரு விமான பைலட். முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர். கலிபோர்னியாவில் வாழும் இவர் புலிகளுக்கு ஆயுத விநியோக முகவர் என்று கூறுகிறது இலங்கை அரசு. லக்ஷ்மன் கதிர்காமர் கொலையிலும் இவரை வளைத்துப்போடப் பார்க்கிறது. ஆனால், எதற்கும் அஞ்சாதவர் ஞானக்கோன். ”என்னைப் பிடிப்பதற்குள் அவர்களைத் தீர்த்து விடுவேன். அமெரிக்காவில் உயிரை காப்பாற்றிக் கொள்ளக் கொன்றால் குற்றமில்லை!” என்று சிரிக்கிறார் அவர்.

இலங்கையில் விழுந்த பிணக் குவியல்களையும், நிகழ்ந்த பட்டினிச் சாவுகளையும் கண்டு கொதித்ததோடு… பிஞ்சுக் குழந்தைகளை வதைமுகாம்களில் அடைத்துக் கொடுமை செய்ததை அமெரிக்காவில் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்தவர் உருத்திரகுமாரன். கழிப்பிடம் இல்லாத பெண்களும், கஞ்சி இல்லாத குழந்தைகளையும் கண்டு அமெரிக்க அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான ‘சனல்-4’ வெளியிட்ட பயங்கரமான காட்சிகளைக் கண்டு உலகமே அதிர்ந்தது. அதே சனல், எப்படி அப்பாவி மக்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் என்றும் காட்டியது. ஐக்கிய நாடுகள் இந்த வீடியோக்களை மிக மிக சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது. இதனால், கடுப்பாகிப்போன இலங்கை அரசு, கூலிப் படைகளை வைத்தாவது அமெரிக்காவில் உருத்திரகுமாரனை போட்டுத் தள்ளவும் தயாராகி வருகிறது என்கிறார்கள்.

‘என் தந்தை யாழ் மாநகரின் மேயராக இருந்தவர். எனக்கு அந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் உள்ள பிணைப்பை என்ன பயமுறுத்தினாலும் போக்கி விட முடியாது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் உலகம் முழுவதும் இப்போது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது. என்னை அவர்கள் அழிக்கப் பார்ப்பது உண்மைதான்! என் உயிரைப்பற்றி கவலைப்படுகிறவன் இல்லை நான். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பற்றித் தான் கவலைப்படுகிறேன்” என்று நறுக்கென்று இதற்கு பதில் தருகிறார் உருத்திரகுமாரன்.

திஸ்ஸநாயகத்துக்கு இருபது வருட கடூழியச் சிறை ஊடகத்தளத்தில் உருவாகியிருக்கும் அதிர்வலைகள்!

Tissanayagam_S_Jஊடகவியலாளன் திஸ்ஸநாயகத்துக்கு இருபது வருட கடூழியச் சிறை. திஸ்ஸநாயகம் ஆங்கிலத்தில் எழுதித் தண்டனை பெற்றுக் கொண்டவர்.  அவருக்குத் தண்டனை விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம். புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான மோதலைப் பற்றியும் அதனோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பற்றியும் எழுதிய திஸ்ஸநாயகம் தமிழ்த்தேசியம் சம்பந்தமான சம்பவங்கள் பற்றியும் கருத்துக்களைச் சொன்னார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதன் முதலாகத் தண்டிக்கப்பட்ட பத்திரிகையாளர் என்பதோடு பத்திரிகையில் எழுதிய கருத்துக்களுக்காகத் தண்டனை பெற்ற ஒரு தமிழன் அவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த |தீப்பொறி| என்ற வாரப் பத்திரிகையின் ஆசிரியர் எம்.கே.அந்தனிசில் என்பவருக்கு யாழ் நீதிமன்றம் ஒன்றரை வருடச் சிறைத் தண்டனை வழங்கியது. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இச் சம்பவம் இடம்பெற்றது. நீதிமன்றத்தை அவமதித்தார் என்பதே அந்தனிசில் மீதான குற்றச்சாட்டு. சாதாரண சட்டங்களின் கீழேயே அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் கிடையாது. 1979 இல்தான் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. திஸ்ஸநாயகம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

|நோர்த் ஈஸ்ரேண் மந்லி| (வடக்கு, கிழக்கு மாசிகை) என்ற சஞ்சிகையை வெளியிட்டு இனவாத உணர்வுகளைத் தூண்டினார், இந்தச் சஞ்சிகைக்கு நிதி சேகரித்ததன் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரித்தார் அல்லது கொடுத்தார், அவசரகாலச் சட்ட விதிகளை மீறிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கினார், ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் திஸ்ஸநாயகத்தின் மீது சுமத்தப்பட்டிருந்தன. திஸ்ஸநாயகம் இரகசிய புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமும் அவருக்கு எதிராகத் தண்டனை விதிப்பதற்குக் காரணமாக அமைந்தது என்று மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர அம்மையார் விதித்த தீர்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் முஹமத் ராஸிக் என்பவர் விடுத்த மிரட்டலுக்கு அஞ்சியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகத் திஸ்ஸநாயகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். திஸ்ஸநாயகம் தமிழிலும் தனது கைப்பட ஒப்புதல் வாக்குமூலம் எழுதியுள்ளார்.

2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் 2007ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்குமிடையில் வழக்குத் தொடுநர்களுக்குத் தெரியாதவர்களோடு இணைந்து, திட்டமிட்டோ அல்லது இல்லாமலோ, குற்றச் செயலொன்றினைப் புரியும் பொதுவான நோக்குடன், ~நோர்த் ஈஸ்டர்ன் மந்லி|யை எழுதி, அச்சிட்டு அல்லது விநியோகித்து இனவாத உணர்வுகளை உசுப்பிவிடக் காரணமானார் என்றே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திஸ்ஸநாயகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரத்தின் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் தம்மை அடித்து மிரட்டியே ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்று நீதிமன்றங்களில் கூறுவது வழக்கம். ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுபவர்களும் தாம் அடித்தோ, மிரட்டியோ ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறவில்லையென்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தன்னிச்சையாகவே அதனை அளித்தார்களென்றும் நீதிமன்றங்களில் தெரிவிப்பது வழக்கம். குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்குத் தமிழில் சரளமாகப் பேசமுடியாதென்று கூறி ஆங்கிலத்திலேயே நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு யுத்தத்தின் விளைவாக அநாதைகளாக்கப்பட்ட பிள்ளைகள் பற்றியும் தான் எழுதியுள்ளாரென்றும், தனது அந்த ஆங்கிலக் கட்டுரைகள் வேறு சிலரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்றும் திஸ்ஸநாயகம் தெரிவித்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ராஸிக்கினால் சொல்லப்பட்டதைப் போன்று, தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோதே, முதல் தடவையாகத் தமிழில் எதையாவது எழுதினாரென்றும் திஸ்ஸநாயகம் தெரிவித்திருக்கிறார்.

பத்துப் பேரை வழக்குத் தொடுநர்கள் நீதிமன்றத்துக்குச் சாட்சிகளாக அழைத்திருக்கின்றனர். ரெலிகொம் நிறுவனத்தைச் சேர்ந்த பிரியந்த மனோரட்ன என்பவர் சாட்சியமளிக்கையில், 021-2285179 என்ற இலக்கம் கொண்ட தொலைபேசி, கிளிநொச்சி வாசியான கே.ஞானகுமார் என்பவரின் பெயருக்கு வழங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்கள் ஐந்து மாதங்களுக்கிடையில் இந்தத் தொலைபேசி இலக்கத்துக்குத் திஸ்ஸநாயகம் 21 தடவைகள் அழைப்பெடுத்துப் பேசியுள்ளாரென்றும் சாட்சி கூறியுள்ளார். இதே தொலைபேசி இலக்கத்திலிருந்து திஸ்ஸநாயகத்துக்கு எட்டுத் தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருக்கின்றன என்று இன்னுமொரு சாட்சியான டயஸ் ஜயசுந்தர என்பவர் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார். குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் கொழும்பில் வசித்து வந்தாலும் வட பகுதியுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சாட்சி குறிப்பிட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு பபா என்று அழைக்கப்படும் ஒருவர் திஸ்ஸநாயகத்தின் செல்லிடத் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து, தான் கிளிநொச்சியிலிருந்து பேசுவதாகவும், அந்த அழைப்பைத் திஸ்ஸநாயகம் ஏற்றுக் கொண்டாரென்றும் வாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை திஸ்ஸநாயகம் ஏற்று கிளிநொச்சிக்குச் சென்றிருக்கிறார் என்பதும் வாதிகள் தரப்புக் குற்றச்சாட்டு. தாண்டிக்குளத்துக்குச் சென்ற திஸ்ஸநாயகம் பாரதி, வண.பிதா கருணாரத்தினம், பி.பாலகுமார், எஸ்.பி.தமிழ்ச்செல்வன், பால்ராஜ் ஆகியோரைச் சந்தித்தாரென்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புலிகளின் யுத்த வெற்றிகள் குறித்து பால்ராஜ், திஸ்ஸநாயகத்துக்குத் தெரிவித்தாரென்றும், மீண்டும் யுத்தம் தொடங்கினால் அதனை எதிர்கொள்ளத் தாம் தயாரென்றும் பால்ராஜ் கூறினாரெனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கலாமென்று தமிழ்ச்செல்வன் சொன்னாரென்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திஸ்ஸநாயகம் கொழும்புக்குத் திரும்பித் தான் கிளிநொச்சியில் கண்டவை பற்றித் தனது சஞ்சிகையில் எழுதினாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பெப்ரவரியில் சென்று மல்லவன், கணேசானந்தன், தமிழ்ச்செல்வன் ஆகியோரையும் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்தாரென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2006ஆம் ஆண்டு ஒரு கட்டத்தில் பபா, சஞ்சிகைக்குப் பணம் வழங்கினாரென்றும் அதனைத் திஸ்ஸநாயகம் மறுத்தாரென்றும் கூடக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டுக்கும் 2007ஆம் ஆண்டுக்குமிடையில் தலா ஐம்பதாயிரம் ரூபாவை மூன்று தடவைகள் அனுப்பினாரென்றும், பின்னர் இது பிரச்சினைகளை ஏற்படுத்தலாமென்று கூறி அதனைப் பெறத் திஸ்ஸநாயகம் மறுப்புத் தெரிவித்தாரென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1988ஆம் ஆண்டு ஜே.வி.பி.கிளர்ச்சிக் காலகட்டத்தில் காணாமல்போன பிள்ளைகள் சம்பந்தமான பெற்றோர்கள் சங்கத்துடன் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டவர் திஸ்ஸநாயகம் என்று ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இனவாதத்தைத் தூண்டுபவராக இருந்திருக்க மாட்டாரென்றும் வாசுதேவ நாணயக்காரா திட்டவட்டமாகவே தெரிவித்திருந்தார். கொல்வின் ஆர்.டி.சில்வாவின் மகளும் முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.பீ. சரத் முத்தெட்டுவேகமவின் மனைவியுமான மனோரி முத்தட்டுவேகம, இடதுசாரியான வண. பத்தேகம சமித தேரர் ஆகியோர் பல உதாரணங்களை முன்வைத்து, திஸ்ஸநாயகம் இன உணர்வுகளைத் தூண்டுபவராக இருந்திருக்க மாட்டாரென்று தமது சாட்சியங்களில் தெரிவித்திருக்கின்றனர்.

~வாசுதேவ நாணயக்காரா, மனோரி முத்தெட்டுவேகம, வண பத்தேகம சமித தேரர் ஆகியோர் ஒரே அரசியல் கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள். ஆதலால்  இவர்களின் கருத்தினைப் பொதுமக்களின் கருத்தென ஈடுசெய்ய முடியாது. எனவே அவர்களின் புரிந்துணர்வு, பொதுமக்களின் புரிதலிலிருந்து வித்தியாசப்படுகிறது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கீழ்க்கண்டவாறும் திஸ்ஸநாயகம் சொன்னாரென்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
~~எல்.ரி.ரி.ஈ. யிடமிருந்து தான் என்றுமே பணம் பெற்றதில்லையென்று அவர் மேலும் சொல்லியிருக்கிறார். ஆனால் வர்த்தக ரீதியிலேயே தனது பிரசுரங்களுக்காகப் பணம் திரட்டினாரென்று அவர் கூறியுள்ளார். புலி இயக்க உறுப்பினர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும் அவர்களுடன் திஸ்ஸநாயகம் பேசியிருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் உண்மைகளை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்தித்திருக்கிறார். அவர் எழுதிய கட்டுரைகளில் எதுவுமே பயங்கரவாதத்துக்கு உதவுவதற்காக எழுதப்பட்டவை அல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

திஸ்ஸநாயகம் நோர்த் ஈஸ்டர்ண் சஞ்சிகையில் எழுதி வெளியிட்ட ஆசிரியர் தலையங்கங்கள் இரண்டினில் தெரிவிக்கப்பட்டிருந்த இரண்டு கருத்துகளை மையமாக வைத்தே குற்றங்கள் சாட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2006ஆம் ஆண்டு ஜுலையிலும், டிசம்பரிலும் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களில் தெரிவிக்கப்பட்ட இரண்டு பந்திகளே பிரச்சினையின் மையமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. ”இப்போது தமிழர்களுக்குப் பாதுகாப்பளிப்பது, எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு அரசியலை வரைவிலக்கணம் செய்யும்” என்ற தலைப்பில் ஜுலை மாதத்தில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் ஒன்று.

”அரசாங்கம் அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்கப் போவதில்லையென்பது ஓரளவுக்கு வெளிப்படையானது. உண்மையில் அரசாங்க பாதுகாப்புப் படையினர்தான் கொலைகளைப் புரியும் முக்கியமானவர்கள்.” இது ஜுலையில் பிரசுரமாகியிருந்தது.
”சிவிலியன்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்களுடன் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றை வழங்க மறுப்பதனூடாக அவர்களைப் பட்டினி போடுவதற்கான முயற்சிகள், வாகரையிலிருந்து மக்களை விரட்டி, அங்கு மக்களை வசிக்காமல் செய்யும் நோக்கோடு மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விடயத்தை இங்கு இதனை எழுதிக்கொண்டிருக்கையில் வாகரை கடுமையான ஷெல் மற்றும் விமானத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொண்டிருக்கிறது.”  இந்தப் பந்தி கிழக்கு மாகாணத்தின் வாகரையில் அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தம் உச்சம் பெற்றிருந்தபோது எழுதப்பட்டது. அதாவது டிசம்பர் மாத நோத் ஈஸ்டர்ண் மந்லியின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்த இரு பந்திகளில் தெரிவிக்கப்பட்டவற்றை, இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்குடனும் வன்செயல்களை உருவாக்கும் நோக்குடனும் எழுதப்பட்டவையென்று நீதிமன்றம் அர்த்தப்படுத்தியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது, அது குறித்துக் கருத்துத் தெரிவிப்பது மற்றும், அவை பற்றிக் கலந்துரையாடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமென்று ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் ஊடக அமைப்புகள் பல பட்டும் படாமலும் தீர்ப்புப் பற்றிய கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றன. வெளிநாட்டு ஊடக அமைப்புகளும், மனித உரிமை ஸ்தாபனங்களும் தெரிவித்திருக்கும் எதிர்க் கருத்துகளையும் பல ஊடகங்கள் அப்படியே பிரசுரித்திருக்கின்றன.

பாராளுமன்றம், நீதித்துறை, செயலாற்று அதிகாரமிகு ஜனாதிபதிக்கு எல்லாம் பத்திரிகைகளும் மீற முடியாத சிறப்புரிமைகள் இருக்கின்றன. பயங்கரவாதச் சட்ட விதிகளுக்கு அமையவே திஸ்ஸநாயகம் தண்டிக்கப்பட்டுள்ளாரென நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தச் சிறப்புரிமையும் மீறக் கூடிய அளவுக்கு வார்த்தை ஜாலங்களை ஆடக் கூடிய ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க ஊடகவியலாளர்களான ஜொஸ் வூல்ப், செல்வி ஜுடித் மில்லர் போன்றவர்கள் தமது எழுத்துக் கருத்துக்களுக்காகச் சிறை வைக்கப்பட்ட சம்பவங்களையும் இவர்கள் குறிப்பிட்டுச் சிலம்பம் ஆடுவார்கள். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஊடக அமைப்புகள் விடுத்த அறிக்கையை மீள்பிரசுரம் செய்வார்கள். கூடார்த்தச் சித்திரங்கள் மூலம் வார்த்தைகளைப் பயன்படுத்தாமலேயே தாம் சொல்ல நினைக்கும் கருத்தை மக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைப்பார்கள். எது எப்படியிருந்தாலும், ஊடகவியலாளர்களைப் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாதென்பதே ஊடகங்களும் ஊடக அமைப்புகளும் ஒருமித்து எழுப்பும் குரல்களாக உள்ளன.

1983 ஆடி இன சங்காரத்தின் சூத்திரதாரியும் ~நரி பானா என்று அழைக்கப்பட்டவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் 1979இல் கொண்டு வரப்பட்டதே பயங்கரவாதத் தடைச் சட்டம். சித்திரவதை, சுதந்திர உரிமையை வேண்டுமென்றே மீறுதல், ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இனவெறி, பாரபட்சம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மறுத்தல் போன்ற பல்வேறு துஷ்பிரயோகங்களுக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டம் வழிவகுப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இவைகளில் ஓரளவுக்கேனும் உண்மைகள் இல்லையென்றும் சொல்ல முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட சில இளம் பெண்களை ஆடையைக் கழற்றுவேன் என்று விசாரணையாளர்கள் மிரட்டினார்கள் என்று கூடக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

திஸ்ஸநாயகத்தின் வழக்கு விசாரணையோடு சம்பந்தப்பட்ட பல கதைகள் பத்திரிகைக் காரியாலயங்களில் உலா வருகின்றன. திஸ்ஸநாயகத்துக்குக் கிடைத்த இருபது வருட சிறைத் தண்டனை பற்றிய தீர்ப்பைச் சகல பத்திரிகைகளுமே தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. ஒரேயொரு ஆங்கிலப் பத்திரிகை மட்டும் அன்றைய தினம், தீர்ப்பு வழங்க வருகை தந்த நீதிபதிக்குப் பாதுகாப்பு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலைத் தலைப்புச் செய்தியாகத் தந்திருந்தது.

2006இற்கும் 2007இற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவற்றுக்காக, 2008 மார்ச் மாதம் ஜசீகரனையும் வளர்மதியையும் பார்ப்பதற்குப் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றபோதே திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டார். திஸ்ஸநாயகத்துக்கு ஒன்றில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும். அதாவது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட இ.தொ.கா.தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். இப்படி மன்னிப்பு வழங்கப்படுமா? இல்லையா? என்பது சரிவரத் தெரியவில்லை. மன்னிப்பு வழங்கப்படுவதைத் திஸ்ஸநாயகம் எதிர்பார்க்கவில்லை என்பது போலவும் தெரிகிறது. மேன்முறையீடு செய்யப்படவிருக்கிறது. தீர்ப்புத் திருத்தப்படும் என்ற நம்பிக்கையோடுதான் மேன்முறையீடு செய்யப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை ஊடகவியலாளர்கள் விமர்சிக்க முடியாது.

ஆனால் ஊடகவியலாளர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாதென உரத்துக் குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.

(நன்றி தினமுரசு)

Winchester High School senior fights for human rights in Sri Lanka : Brad Petrishen

Pearl_Logoவின்செஸ்ரர் ஹை ஸ்கூலில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான சந்திப்பு பற்றிய தொகுப்பு www.wickedlocal.com இணையத்தில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை Brad Petrishen என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. அதனை இங்கு மீள் பிரசுரம் செய்கின்றோம்.

இந்நிகழ்வில் ‘பேர்ள்’ என்ற அமெரிக்க தமிழ் அமைப்பின் பிரதிநிதியான மாணவி ஒருவர் முக்கியமாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளதுடன் தங்கள் அமைப்பில் இணைந்து பணியாற்றவும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் 20000 மக்கள் கொல்லப்படுவதற்கு சில மாதங்களிற்கு முன்னாக பேர்ள் அமைப்பு வெளியிட்ட அவசரச் செய்திக் குறிப்பில் யுத்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா உதவியளிக்கக் கூடாது என அழுத்தமாகக் கேட்டுக் கொண்டது. முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன்

இவ்வாறான புலம்பெயர்ந்து வாழும் அமைப்புகளின் செயற்பாடுகள் பல வன்னியில் பல்லாயிரக் கணக்காண மக்களின் உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்துள்ளது. நடந்து முடிந்த யுத்தத்தில் அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்தது பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளது.

இறுதி யுத்தத்தில் அமெரிக்கா கனடா பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளில் உள்ளவர்கள் சிலர் வழங்கிய மிகைப்படுத்திய நம்பிக்கைகளே விடுதலைப் புலிகளின் இறுதி முடிவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் தற்போது பலமாக எழுகின்றது. இந்நாடுகளில் உள்ள அமைப்புகள் தங்கள் முடிவுகள் மிகப்பெரும் மனித அவலத்திற்கு வன்னி மக்களைத் தள்ளியது பற்றிய சுயவிமர்சனம் எதுவும் இன்றி தங்கள் வங்குரோத்து அரசியலைத் தொடர முற்படுகின்றன.

._._._._._.

Winchester High School senior fights for human rights in Sri Lanka : Brad Petrishen

Winchester, MA – At first glance, Priya Suntharalingam, a slender, polite, 17-year-old Winchester High School senior, is not a particularly physically imposing figure.

Politically, however, she is becoming a major force in the movement of numerous human rights organizations to publicize what they believe to be gross atrocities taking place on the war-torn island nation of Sri Lanka.

A member of the People for Equality and Relief in Lanka (PEARL), Suntharalingam was one of eight Americans who went on a 12-day hunger strike to bring awareness to what she believes is genocide taking place in the country.

“There are 300,000 people interned in camps, innocent civilians, and they need to be freed immediately,” Suntharalingam told a group of Tamils who gathered at the Massachusetts Institute of Technology (MIT) in Boston last Saturday to discuss the issue. “Thousands are dying every day.”

According to an event handout, since the British left Sri Lanka in 1948, conflict has abounded on the island between the two main peoples, the Sinhalese and the Tamils, who differ in language, religion and customs.

The Sinhalese constitute the majority, and since independence have gradually enacted legislation that restricted the freedoms and quality of life for Tamils, Suntharalingam said.

Since 1983, she said Tamils, whom the government deemed terrorists (“Tamil Tigers”), have been fighting for independence from the Sinhalese.

Suntharalingam’s connection to the issue runs deep. Though her mother, a Tamil, came to America after getting married, Suntharalingam said she feels responsibility to all her relatives who have suffered and are still suffering.

“My uncle was abducted when he was 12, and taken to a camp and tortured because they said he was a Tamil Tiger,” she said. “In order to get him to talk, they tied him upside down, put his head in a can of gasoline and beat him.”

Suntharalingam said her uncle managed to escape his captors and the country, but says she can’t sit by and let the same thing happen to other Tamils without taking action.

 Faces in the crowd

Audience member Thaya Paramanathan has experienced firsthand too much of what Suntharalingam, who was born in the United States, has only seen and heard.

Like many Americans, Paramanathan recently graduated from Northeastern University on a scholarship.

The similarities end there.

“When I was 10 years old, my whole house was burned to ashes,” he said. “When I grew up in Jaffna, which isn’t even in the war zone, I didn’t have much. I didn’t even have Coke or chocolate. It wasn’t allowed.”

Paramanathan said he was lucky to get a scholarship and come to the United States.

“When I got here, I drank a lot of Coke and ate a lot of chocolate,” he said, adding that he feels guilty when he thinks of his parents, whom he said are still stuck in a country in which they cannot enjoy the same freedoms.

“My parents are in Jaffna, which is much safer than the war zone,” he said. “But still, when I visited the capitol last year for a wedding, I could not see them because travel to the north is prohibited.

“I feel very guilty, because they are suffering there, and I have freedom here. But, for my own sake, they said they never want me to come back.”

A different perspective

Also in attendance at the meeting was Thusith Mahanama, who said he was probably the only Sinhalese Sri Lankan in the room.

Mahanama, now the CEO of a Boston-based software company, grew up in Sri Lanka without many of the hardships faced by those surrounding him, and said he is trying to do all he can to help.

“What happened, happened,” he said after the event. “It’s in the past, almost like slavery in America, and … we need to cut through that and meet as humans.”

To that end, Mahanama has started a Web site, srilankansforunity.org, through which he hopes to bring members of the two groups together.

“I have many Tamil friends and coworkers, and I don’t even think of them as Tamil,” he said. “I think what’s happened is a broad socio-economic problem. It’s time to go beyond anger and disunity so that citizens of Sri Lanka can move forward as one voice.”

 Mahanama said he believes the country can survive without splitting in two — a sentiment not shared by Paramanathan.

“I think only a two-state solution is viable,” said Paramanathan. “We’ve seen what’s happened over the past 50 years. It hasn’t worked out.”

Mahanama admitted much in the country must change before trust can be built.

“I agree that the problem of the [internment camps] needs to be solved,” he said, adding that he did not believe, however, that any form of genocide was occurring.

“For the 300,000 people who are in camps, there are 1.7 million who are not,” he said, adding that the United States government would not be providing aid to the Sri Lankan government if it suspected it of slaughtering the IDPs (internally displaced persons) for whom the money is intended.

According to an Aug. 19 press release from the U.S. embassy in Sri Lanka, the government has given $8 million in aid this year to Sri Lanka to “support the welfare and safety of IDPs until they can return to their homes.”

 Recent controversy

Human rights groups, however, believe that IDPs are being treated inhumanely, and the debate has been sparked further on the heels of a crudely shot video that depicts savage beatings and executions of Tamils supposedly carried out by the Sri Lankan government.

“It’s genocide,” Suntharalingam insisted, adding that the atrocities she believes are being committed are what sustained her during the hunger strike — so much so that she had to be force-fed by her mother, who feared for her health, putting an end to the strike.

“Most people say hunger strikes are useless,” she said. “But this one had results.”

Indeed, media accounts of the strike prompted Sen. John Kerry (D-Massachusetts) to invite her to Washington, D.C. over the summer, as his personal guest while the senate discussed the issues in Sri Lanka.

She vowed to continue to fight for what she believes is right, and plans on holding a number of events at Winchester High this year to raise awareness among classmates.

“That could be me over there,” she said earnestly. “I feel it’s my obligation to use my luxury of freedom to speak out against such atrocities.”

(Courtesy www.wickedlocal.com Sep 05 2009)

சிறிலங்காத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற பத்திரிகையாளர்கள் கைது

img080909.jpgதமிழ் பத்திரிகையாளர் ஜே.எஸ். திசைநாயகத்தை பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டித்து சிறையில் அடைத்துள்ள சிறிலங்கா அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள், சிறிலங்காத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்றுபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க அவர்கள் மீது போர் தொடுத்த சிறிலங்க அரசு, முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கு உணவு கூட கொடுக்காமல், உணவையே போர் கருவியாக்கி தமிழர்களை ஒடுக்குகிறது என்று பத்திரிக்கையாளர் திசைநாயகம் எழுதினார். இதற்காக அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து 20 ஆண்டுக் கால கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திசைநாயகத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரவீந்திர தாஸ் தலைமையில் சென்னையிலுள்ள சிறிலங்காத் துணைத் தூதரகம் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன், துணைச் செயலர் சி.மகேந்திரன், இலட்சியத் திமுக தலைவர் டி. இராஜேந்தர், சி.ஐ.டி.யு. பொதுச் செயலர் செளந்தரராசன், பத்திரிக்கையாளர்கள் பாஸ்கரன், அய்யநாதன் ஆகியோர் சிறிலங்க அரசின் மனித உரிமை மீறல்களையும், பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அது மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் கண்டித்துப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் ராஜபக்ச அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிறிலங்கத் துணைத் தூதரகத்தை நோக்கி முன்னேறினர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ராஜபக்ச அரசைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர்.

அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், பத்திரிகையாளர்களை காவல் துறை வாகனங்களில் ஏற்றிச் சென்று தேனாம்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைத்தனர்..

டி. இராஜேந்தர், பாஸ்கரன், பாஸ்கர தாஸ் ஆகியோர் உட்பட ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு, சிறிது நேரத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

நன்றி ;வெப்துனியா

நிலையான அரசியல் தீர்வின் மூலம் தேசிய ஒற்றுமையும் சமத்துவமும் – அமைச்சர் டியூ குணசேகர

due-gunasekara.jpgவவுனியா கம்யூனிஸ்ட் பிரமுகர் கே. பத்மநாதனின் நினைவு தினக் கூட்டம் வவுனியாவில் நடைபெற்ற போது அரசியலமைப்பு விவகார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டியூ குணசேகர ஆற்றிய உரை.

தோழர் பத்மநாதனுக்கு மரியாதை செலுத்தவும் அவரைக் கெளரவிக்கவும் அவருக்கு நன்றி தெரிவிக்கவுமாக நினைவுச் சொற்பொழிவை ஆற்றும் பணி எனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் எனக்கு விடுத்த அன்பான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

தோழர் பத்மநாதன் 2005, ஜுலை 13ம் திகதி காலமானார். வன்னியில் அப்போது நிலவிய நிலைமை காரணமாக, எம்மைப் பிரிந்து சென்ற தலைவருக்கு உரிய மரியாதையுடனும் கெளரவத்துடனும் நன்றியறிதலுடனும் அப்போது எம்மால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அவரது குடும்பத்தினர் இந்த நினைவுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற காரணத்தினால் நான்காவது சிரார்த்த தினமான ஜுலை 13ம் திகதி இதனை நடத்துவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அவரது நான்காவது சிரார்த்த தினமும் அவரது கட்சியின் 66 வது ஆண்டு விழாவும் ஒரே சமயத்தில் வருவதால் நான் அவர்களுடன் இதற்குச் சம்மதித்தேன். தோழர் பத்மநாதன் வன்னியில் புகழ்பூத்த பிரமுகர், தனது மக்களுக்கு அர்ப்பணிப்புடன், கடமைப் பொறுப்புடன், துணிவுடன் அயராது பணிபுரிந்தவர். எனவே அவருக்கு வேறு எந்த அறிமுகமும் தேவையில்லை. பாரம்பரிய சுதேச மருத்துவத் தலைமுறையைச் சேர்ந்த அவர் விவசாயிகள் இயக்கம், கூட்டுறவு இயக்கம், அரசியலில் இடதுசாரி இயக்கம் ஆகியவற்றின் தலைவராக விளங்கியவர்.

அவருடைய சமூக, அரசியல் சமயச் செயற்பாடுகள் வன்னி மக்கள் மத்தியில் பிரசித்தமானவை. எனவே அவை பற்றி நான் இங்கு அதிகமாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும் கூட, இளம் தலைமுறையினரின் நலன் கருதி அவரது செயற்பாடுகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

1927 ஆம் ஆண்டு அவர் பிறந்த வேளையில் பிரித்தானிய காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட நாடாக இலங்கை விளங்கிற்று. எமது நாட்டின் முழுமையான சுதந்திரத்துக்கான போராட்டம் குழவிப் பருவத்தில் இருந்தது. அப்போது எமது நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களுக்காகவே உரத்த குரல்கள் எழுப்பப்பட்டனவேயன்றி முழுமையான சுதந்திரத்துக்காக அல்ல.

ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் தேச விமோசனப் போராட்டத்துக்கான யுகத்துக்குக் கட்டியங்கூறிய 1917 ஆம் ஆண்டின் மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சி பற்றிய செய்தியை வெளியுலகுக்குக் கொண்டு வந்த முதலாவது இலங்கையர் பொன்னம்பலம் அருணாச்சலம்.

இந்தப் பின்புலத்திலேயே யாழ்ப்பாண மாண வர் காங்கிரசும் பின்னர் ஹண்டி பேரின்ப நாயகம் தலைமையில் இளைஞர் காங்கிரசும் 1924 ஆம் ஆண்டு தீவிரமான வேலைத்திட்டங்களுடன் செயல்பட்டன. 1931 ஆம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் காங்கிரசும் 1933 ஆம் ஆண்டில் சூரிய மலர் இயக்கமும் முழுமையான சுதந்திரத்துக்கான போராட்டத்தில் மேலும் முன்னேற்றமான நிகழ்வுகளாகின.

1935 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சியும் 1943 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவானமை அந்த இயக்கத்தின் உறுதியான சித்தாந்தவியல் திசைவழிகளைக் கொண்ட விரிவுபடுத்தல்களேயாகும்.

ரீ.துரைசிங்கம்,  ஏ.வைத்தியலிங்கம்,  பொன். கந்தையா, எஸ். ஜெயசிங்கம், வ. பொன்னம் பலம், எம். கார்த்திகேசன்,  எஸ். பி. நடராஜா,  ஐ. ஆர். அரியரத்னம் போன்ற பெரும் அறிவாற்றல்மிக்க இடதுசாரித் தலைவர்களை வட பகுதி உருவாக்கியிருந்தது.  அவர்கள் இடதுசாரி இயக்கத்தைக் கணிசமான அளவுக்குச் செழுமைப்படுத்தினர்.

முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர்களான கே. சி. நித்தியானந்தன், செல்லப்பா குமாரசாமி, பொன் குமாரசாமி, எஸ். செல்லையா, கே. நவ ரட்ணம், போன்றவர்கள் வடக்கில் உருவாகி இடதுசாரி இயக்கத்துடன் ஒன்றித்துச் செயல்பட்னர். வெவ்வேறு காலகட்டங்களில், வட பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த ஒரே இடதுசாரிக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிதான்.

இடதுசாரி இயக்கத்தின் இந்தப் பின்புலத்தில் தான் வ. பொன்னம்பலம், எம். கார்த்திகேசன் ஆகியோர் மூலமாக தோழர் பத்மநாதன் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

1949 ஆம் ஆண்டின் மகத்தான சீனப் புரட்சியும் 1945 முதல் 1975 வரையில் வியத்நாம் மக்கள் நடத்திய சுதந்திரப் போராட்டமும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கமும் 1952 ஆம் ஆண்டில் எமது கட்சியில் இணைந்து கொண்ட பத்மநாதன் போன்ற இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உந்து சக்திகளாக விளங்கின.

அவர் ஸ்ரீ.ல.சு.க -ல.ச.ச.க- கம்யூனிஸ்ட் கட்சிகளது ஐக்கிய முன்னணி தலைமையில் 1970 ஆம் ஆண்டு வவுனியாவில் போட்டியிட்டார். மாஸ்கோவில் அவர் தனது அரசியல் கல்வியை மேம்படுத்திக் கொண்டார். 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வட மாகாணத்தில் ஹெக்டர் கொப்பேகடுவ ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெறுவதில் தோழர் பத்மநாதன் முக்கிய பங்கினை வகித்தார்.

அப்போது பதவியில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, குமார் பொன்னம்பலம் ஆகியோரைத் தோல்வி காணச் செய்து யாழ், வன்னி மாவட்டங்களில் சமூக வேறுபாடின்றி அவருக்கு ஆகக் கூடுதலான வாக்குகளை அளித்திருந்தனர்.

அரசியல் கட்சிகள் மத்தியில் அரசியல், சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும் கூட அடிப்படையிலேயே தேசிய ஐக்கியம் நிலவிய காலம் இது. மக்கள் மட்டத்தில் தேசிய ஐக்கி யமும் சமூக ஒற்றுமையும் உச்ச கட்டத்தில் இருந்தன. இந்த ஒற்றுமையை 1983 ஆம் ஆண்டின் ஆடிக்கலவரம் சிதறடித்துவிட்டது. 26 ஆண்டுகாலம் நீடித்திருந்த தொடர்ச்சியான யுத்தத்துக்குப் பின்னர் இன்று நாம் சந்திக்கின்றோம்.

30 ஆண்டுகளுக்கு மேலாகப் பயங்கரவாதம் நிலவியது.  இந்தக் காலப்பகுதியில் நடந்தவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியடைய முடியாது. அதற்குப் பின்னர் நடந்தவை யாவும் விலைமதிக்க வொண்ணாத உயிர்களின் இழப்பு, சொத்துக்களின் அழிவு, பொருளாதாரச் சீரழிவு, மக்களின் தொடர்ச்சியான துயரம், கலாசாரச் சீர்குலைவு, வன்முறைக் கலாசார ஆளுமையின் தோற்றம், நல்லாட்சி வீழ்ச்சி கண்டமை, தேசிய ஒற்றுமையும் ஒருங்கிணைவும் முழுமையாக வீழ்ச்சி கண்டமை, பாதாள உலகத்தின் தோற்றம் ஆகிய எல்லாமே இதன் உற்பவிப்புக்களும் துணை உற்பவிப்புக்களுமே ஆகும்.

எந்தவொரு சமூகத்தினதும் மறைந்துவிட்ட தலைவர்களுக்கோ அல்லது எமது தேசத்தின் கதிப்போக்கிற்கு வழிகாட்டியவர்களுக்கோ நான் கெளரவம் அளிக்காதவனாக இருக்க விரும்பவில்லை.  இப்போது புண்ணை ஆற்றவும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவுமான காலம். துரதிருஷ்டவசமான சம்பவங்களை மீண்டும் கிளற நான் விரும்பவில்லை.

ஆனால் வரலாற்று உண்மைகள் உள்ளன.  இவற்றை நாம் மறந்துவிட முடியாது. அழிவிலிருந்து மீண்டும் புத்துயிர் பெற வேண்டுமானால் அவற்றில் இருந்து நாம் தேவையான படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது இன்றியமையாதது. வரலாற்றைக் கற்றுக்கொண்டிருப்பவன் என்ற வகையில் சுதந்திரத்துக்குப் பின்னரான காலத்துத் தலைவர்கள் நாட்டு நிர்மாணக் கடமையில் தவறிவிட்டனர் என்பேன்.

எமது கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில் தேசிய இனப் பிரச்சினையை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே நாம் இனங்கண்டோம். உண்மையில் எமது நாட்டின் சமகால அரசியலுக்கு பிராந்திய சுயாட்சிக் கருத்தமைப்பை எமது கட்சியே அறிமுகப்படுத்தியது. சமூக, பொருளாதார, கலாசார எதார்த்தங்கள், சர்வதேச அனுபவங்கள் ஆகியவற்றின் விஞ்ஞானபூர்வப் பகுப்பாய்வை அது அடிப்படையாகக் கொண்டது.

சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த முதலாளித்துவக் கட்சிகள் இந்த எதார்த்தங்களை உணரத் தவறின. அற்பமான, குறுகிய அரசியல் நலன்களால் ஈர்க்கப்பட்டன. இலங்கை என்ற தேசத்தை, நாட்டு நிர்மாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தமது வரலாற்றுக் கடமைப் பொறுப்பைக் கைகழுவின.

வட பகுதியில் (தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகிய இரண்டினதும்) தமிழ்த் தலைவர்களைப் பொறுத்த வரையிலும் இதுவே உண்மை. அரசியலில் அவர்கள் பழமைவாத, பிற்போக்கான பங்கை வகித்தனர், தமது குறுகிய வர்க்க நலன்களை முதன்மைப்படுத்தினர். அவர்கள் பிற்போக்கான, பழமைவாத அரசி யல் நிலைப்பாடுகளுடன் தம்மை இனங்காட்டிக் கொண்டார்கள்.

இதனால்தான், பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது, நெற் காணிச் சட்டம், தேசியமயமாக்கக் கருத்திட்டங்கள் குடியுரிமை, முற்போக்கான அரசியல், சமூகச் சீர்திருத்தங்கள், ஆகியவற்றை எதிர்த்தனர்.  இயல்பாகவே அவர்கள் முற்போக்குச் சக்திகளிடமிருந்து தம்மைத்தாமே தனிமைப் படுத்திக் கொண்டனர்.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தவறியமை 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் முதலாளித்துவ த்திலிருந்து சிறு முதலாளித்துவத்துக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது. துரதிர்ஷ்டவசமாக வலதுசாரி சிறு முதலாளித்துவம் தலைமைப் பொறுப்பை ஏற்றது. அது, அதிதீவிர தேசியவாதம், குறுகிய தேசிய இனவெறி ஆகியவற்றின் அடிப்படையில் வன்முறை, பயங்கரவாதம், பிரிவினை ஆகிய பாதையில் பிரவேசித்தது.

தேசிய ஒற்றுமை, ஜனநாயகப்பாதை, ஐக்கிய இலங்கையின் கட்டமைப்புக்குள் அரசியல் தீர்வு காண்பது ஆகியவற்றைத் தேர்ந்த இடது சாரி சிறு முதலாளித்துவக் கட்சிகள் ஓரங்கட்ட ப்பட்டன, ஒழிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. மக்கள் மட்டத்திலும் முற்போக்குச் சக்திகள் மட்டத்திலும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பாலம் தகர்ந்தது.

ஆரம்பத்திலிருந்தே தேசிய சிறுபான்மை யினங்களின் குறிக்கோள்களுக்காகவும் தேசிய ஒற்றுமைக்காகவும் 13 வது திருத்தத்தின் நடை முறைப்படுத்தலுக்காகவும் போராடிய இடது சாரி இயக்கத்தைச் சேர்ந்த நாம் கூட விட்டு வைக்கப்படவில்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த, பல்வேறு மட்டங்களில் இருந்த எமது 49 தலைவர்கள் ம.வி.மு. வினாலும் எல்.ரீ.ரீ. இயக்கத்தினாலும் கொல்லப்பட்டனர்.

கடந்த 30 ஆண்டுகளில் தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி இயக்கம் மற்றும் முற்போக்குச் சக்திகளின் செலவில் தெற்கிலேயே குறுகிய தேசிய இனவெறியும் வடக்கிலே தமிழ் தேசிய இனவெறியும் செழிப்புற்றன. இதன் காரண மாக நடுநிலை, ஒற்றுமை, ஐக்கியம் ஆகிய உணர்வை நாடு இழந்து விட்டது.

எமது கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பயங்கர வாதத்தையோ அல்லது வன்முறையையோ ஒருபோதும் ஏற்றதில்லை. அதுபோலவே, எமது கட்சியின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல் வதற்காகக் காடைத்தனத்தையோ, துன்புறுத்தல் செய்வதையோ கடைப்பிடித்ததும் இல்லை. எமது கரங்கள் இரத்தக் கறை படிந்தவையல்ல.

எமது கட்சி எப்போதுமே நாட்டுப் பற்றுள் ளதாகவே இருந்துள்ளது. அதேசமயத்தில் அது சர்வதேசியத் தன்மையைக் கொண்டது. யாவ ற்றுக்கும் மேலாக நாம் மனித உயிர்களாக இருப்பதால் நாட்டுப்பற்றும் சர்வதேசியமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே.

நாம் எமது நாட்டில் சோலிசத்தை அறிமுகப் படுத்தினோம். அதுபோலவே, எமது நாட்டுக் காக சோசலிச நாடுகளையும் அறிமுகப்படு த்தினோம். நிலப்பிரபுத்துவத்தின் பிதுரார்ஜிதமான சாதி அமைப்புக்கு எதிராக வடக்கிலும் தெற் கிலும் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கம் யூனிஸ்ட்டுகளே. மக்களின் மனங்களில் இரு ந்து கட்டுக்கதைகளையும் பொய் நம்பிக்கை களையும் நீக்கி அவர்களுக்கு அறிவுக் கண் ணைத் திறந்து வைத்தோம்.

இந்தப் பின்னணியில்தான், தனது தத்துவார்த்த ஆதாரத்தளம் மற்றும் நடைமுறை அனுவ பம் ஆகியவற்றைக்கொண்டு தேசிய இனப் பிரச்சினைகளில் மெளனமாகவும் அதேசமயம் துணிவாகவும் கோட்பாட்டு ரீதியான நிலைமை ப்பாட்டை எடுத்த தோழர் பத்மநாதனின் பங்களிப்பை நான் மதிப்பீடு செய்ய விரும்புகின்றேன். அவரைப் பொறுத்தவரையில், தேசிய ஒற்றுமை, சமூக இணக்கப்பாடு, மக்களின் நல ன்களில் பேரார்வம், ஒரு சோசலிச இலங்கை க்கான தொலைநோக்கு ஆகியவனவே நிர்ணயமான காரணிகளாக விளங்கின.

இப்போது யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. தேசிய ஒற்றுமைக்கும் பாரபட்சத்துக்கும் அநீதிக்கும் முடிவு கட்டுவதற்கும் சமத்துவம், சமூக நீதி, சமூக அபிவிருத்தி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கும் போராடுவதற்கான மற்றுமொரு சந்தர்ப்பத்தை வரலாறு எமக்கு வழங்கியுள்ளது.

இன்று வடமாகாணத்தின் மொத்தத் தேசிய உற்பத்தி 2.9 சதவீதமே. அதேசமயம் மேல் மாகாணத்தின் வீதம் ஏறக்குறைய 50 சதவீதம். யுத்த வலயத்துக்கு அணித்தாயுள்ள வட மத்திய மாகாணம், ஊவா மாகாணம் ஆகிய ஒவ்வொன்றும் கூட மொத்தத் தேசிய உற்பத்தியில் 4 சதவீதமே.

யுத்தத்தின் விளைவுகள் வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் மட்டுப்பட்டிருக்கவில்லை. இதனால் தான் வடக்கு, கிழக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ஆகக்கூடுதலான முன்னுரிமையைக் கொடுக்கின்றோம்.

இடம்யெர்ந்துள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு முடிந்த அளவு துரிதமாகத் தீர்வுகாணப்பட வேண்டும். சிவில் நிர்வாகம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டி யிருக்கின்றது. அடிமட்டத்திலுள்ள நிறுவகங்க ளுக்குத் தமது சொந்தத் தலைவர்களைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளன.

இந்தப் பூர்வாங்க நடவடிக்கைகள் நிலை யான அரசியல் தீர்வுக்கான எமது தேடலுக்கு வாய்ப்பளிக்கும் இசைவான சூழ்நிலையை உருவாக்கும் என நம்புகின்றேன். பரஸ்பர நம்பிக்கையைப் பொறுத்த வரையில் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு இடையே பெரும் இடை வெளி இருப்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.  இந்த இடைவெளியை மக்கள் மட்டத்தில் நாம் போக்க வேண்டும். பரஸ்பர அச்சம், அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியன ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

நிலையான அரசியல் தீர்வின் மூலமே இந்த நம்பிக்கையை உறுதியாகக் கட்டியெழுப்ப முடி யும். தெற்கிலும் வடக்கிலும் உள்ள இடதுசாரி சக்திகளது நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாம் விரும்புகின்ற தேசிய ஒற்றுமையை உறுதி செய்ய முடியும் என்பது எனது திட நம்பி க்கை. பயங்கரவாதமும் யுத்தமும் இடது சாரி இயக்கத்தைப் பலவீனப்படுத்திவிட்டன. வடக்கிலே இடதுசாரி இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். சர்வதேச அரங்கில் ஏற்பட்டுவரும் ஆழமான மாற்றங்கள் பற்றியும் உங்களுக்கு எடுத்துக்கூற இது ஒரு சந்தர்ப்பம்.

இருபதாண்டுகளுக்கு முன்னால் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு (அதாவது சோசலிச கிழக்கு ஜெர்மனி வீழ்ச்சியடைந்தபோது), சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தவுடன் உலகம் முழுவதிலுமுள்ள முதலாளித்துவத் தலைவர்கள் சோசலிசத்தின் முடிவு பற்றி ஹேஷ்யம் கூறினார்கள்.

சீனாவும் இந்தியாவும் உலகப் பொருளாதார வல்லரசுகளாக தோற்றம் பெற்றதுடன் நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக உலகம் மாற்றமடைந்து வருகின்றது. உலகப் பொருளாதார மையம் ஆசியக் கண்டத்துக்கு மாறி வருகின்றது.

உலக நிதி நெருக்கடி மோசமடைந்து வருவதுடன் முதலாளித்துவத்தின் கொத்தளங்களான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் ஆட்டங்கண்டுவிட்டன. லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட எழுச்சி சுமார் 13 இடதுசாரி மற்றும் இடதுசாரி ஆதரவுக் கட்சிகளை அதிகாரத்துக்குக் கொண்டு வந்திருப்பதால் அமெரிக்கக் கண்டத்தில் சக்திகளின் சமநிலை மாற்றமடைந்திருக்கின்றது.

புதிய பொருளாதாரக் கேந்திரங்களாக லத்தீன் அமெரிக்காவில் பிரேசிலும், ஆபிரிக்கக் கண்ட த்தில் தென்னாபிரிக்காவும், ஈரோ ஆசியாவில் சீனாவும் இந்தியாவும் இணைந்து ரஷ்யாவும் உலகப் பொருளாதார வல்லமையில் சம நிலையை முற்றாக மாற்றியமைத்துள்ளன.

டொலரின் பெறுமதி பலவீனமாடைந்துள்ளது. உலகின் வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கங்களில் 75 சதவீதம் வளர்முக நாடுகளுக்கு உரியவை. உலகின் வெளிநாட்டு நாணமாற்று ஒதுக்கங்களில் மூன்றில் ஒரு பங்கை சீனா தன் வசம் வைத்திருக்கின்றது.

இலங்கை தொடர்பான விடயங்கள் பற்றி ஐ. நா. மனித உரிமைக் குழுவிலும் சர்வதேச நாணய நிதியத்திலும் நடைபெற்ற கூட்டங்க ளில் மேலைநாட்டு வல்லரசுகள் தாம் விரும்பியபடி செயல்பட முடியாது என்பதில் இந்த மாற்றங்கள் பிரதிபலித்தன. உலக நிகழ்வுப் போக்குக்களின் புதிய எதார்த்தங்கள் இவை தான்.

இடதுசாரி இயக்கம் புத்துயிர் பெற்றுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் தேர்தல்கள் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ளன. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் சமீபத்தில் பின்னடைவைக் கண்ட போதிலும் கூட சித்தாந்த ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் ஏற்றப்போக்கில் உள்ளது. இன்று கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் ஒருமைப்பாட்டின் உலகமயமாக்கம் விளங்குகின்றது.

மக்கள் விடுதலை முன்னணி சிங்களக் குறுகிய தேசிய இன வெறி மற்றும் இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அலைகளில் வேகமா கச் சவாரி செய்தது. இந்த இயல் நிகழ்வு இப்போது இறக்கப்போக்கில் உள்ளது. மார்க்சி யமும் குறுகிய தேசிய இன வெறியும் எண் ணெயும் நீரும் போன்றவை. அவை ஒருபோதும் கலக்க முடியாது. ம.வி.முவில் காணப்படும் உள் முரண்பாடுகள் பிளவுகளுக்கு வழிவிட்டன. அதுபோலவே தான் ஜாதிக ஹெல உறுமயவும்.

தோழர் கே. பத்மநாதன் 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கடமைப் பொறுப்புடனும் அர்ப்ப ணிப்போடும் உயர்த்திப் பிடித்த செம்பதாகையை மேலும் உயர்த்திப் பிடிப்பதே அவரை நினைவுகூர்வதற்கான ஒரே மார்க்கமாகும்.

அவர் ஒன்பது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். அவர்கள் இன்று வன்னி மக்களின் அன்பையும் ஆதரவையும் வென்றுள்ளனர். சமூகச் செயற்பாட்டின் பல்வேறு துறைகளில் புகழ்பூத்த பிரமுகர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தமது வழிகளில் நாட்டிற்குத் தமது பங்குப் பணியைச் செலுத்தி வருகின்றனர்.

தோழர் பத்மநாதனின் நான்காவது சிரார்த்த தின சமயத்தில் அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் 66 வது ஆண்டு விழா வேளையில் ஆழ்ந்த மரியாதை, கெளரவம், நன்றியறிதலுடன் அவரின் நினைவாகத் தலை வணங்கி அஞ்சலி செலுத்துகின்றேன்.
 
 

வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு : காலச்சுவடு

Wanni_War_Bombed_Safe-Zoneஉண்மைகள் சொல்லப்படாதவரையில் பொய்களின் ஊர்வலமே நடக்கும் என்பார்கள். இந்தப் பொய்கள் எப்போதும் எல்லோரையும் எல்லாவற்றையும் மயானத்துக்கே அழைத்துச் செல்லும். வன்னியுத்தமும் ஈழத்தமிழர் போராட்டமும் ஏறக்குறைய இத்தகையதொரு நிலையையே இன்று எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட புனைவுகள் ஒருபுறமும், சிறிலங்கா அரசினதும் சிங்களத் தரப்பினதுமான புனைவுகள் மறுபுறமுமாகப் பெரும் புனைவுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புனைவுகளுக்கெதிரான மறுப்புக் குரல்களோ எதிர்க் குரல்களோ கலகக் குரல்களோ உரியமுறையில் வெகுசனத்திரளால் கவனத்திற்கொள்ளப் படவில்லை. எனவே இன்று வன்னி யுத்தம் பற்றியோ புலிகளின் இறுதி நாட்களைப் பற்றியோ அங்கே இருந்த மக்களின் நிலை பற்றியோ கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்தோ எதுவும் தெரியாதவாறு இந்தப் புனைவு மண்டலம் நீள்கிறது. இது மிகத் துயரமான ஒரு நிலை; அது மட்டுமல்ல ஆபத்தான நிலையும்கூட.

வன்னியில் என்ன நடந்தது? புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர்? அல்லது எப்படித் தோற்றனர்? உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது போன்ற ஏராளமான கேள்விகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. ஐ.நா. உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிலைமைகள் மற்றும் விவரங்கள் தொடர்பாகப் பலவகையான அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் உண்மை நிலவரத்தை எந்தத் தரப்பும் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே. ஆனால் அவர்களோ இப்போது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நலன்புரி நிலையங்கள் என்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு பேசக்கூடிய நிலைமை உருவாகுமானால் எல்லாவற்றினதும் மெய்விவரங்களும் வெளித்தெரிய வரும். ஆச்சரியமளிக்கூடிய அதிர்ச்சியளிக்கூடிய உண்மைகள் அப்போது வெளியாகும்.

முதலில் இந்தப் பத்தியாளர் இன்னும் எல்லா உண்மைகளையும் சொல்ல முடியாத அச்சத்துடனேயே உள்ளார் என்பதை நீங்கள் உணர வேண்டும். இதுதான் இலங்கை நிலவரம். ஆனால் எல்லா உண்மைகளையும் இங்கே சொல்ல முடியாவிட்டாலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திருக்கிறார். விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் உருவாக்கிய அச்சப் பிராந்தியமும் அபாய வெளிகளும் இன்னும் முற்றாக நீங்கவில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசால் தொடரப்படும் நெருக்குவாரங்களும் ஜனநாயக மறுப்பும் ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் சவால்களும் அகலவில்லை. எனவே வன்னியில் புலிகளின் தடைகள், ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரமின்மைக்குள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாமை என்னும் நிலைமை இருந்ததைப் போலவே இப்போது அங்கிருந்து தப்பிவந்து இடைத்தங்கல் முகாம், (நலன்புரி நிலையம்) என்ற தடுப்பு முகாம்களில் இருந்துகொண்டும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை.

இங்கும் தொடர்பு வசதி இல்லை. அது மட்டுமல்ல, வன்னியிலிருந்து வெளியேறப் புலிகள் விதித்திருந்த பயணத் தடையைப் போன்றே இந்த முகாமிலிருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது. ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தத் தகவல் யுகத்தில் எந்தத் தொடர்பாடலுமில்லாமல் எல்லாவற்றிலிருந்தும் எல்லோருடனுமான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். ஒரு பத்திரிகை வாசிப்பதற்குக்கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இப்படியே இன்று மூன்று லட்சம் வரையான சனங்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றைப் பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது வன்னியில் என்ன நடந்தது என்று பார்ப்போம். ஏனெனில் வன்னி நிலையே, புலிகளின் அரசியலே, ஈழத் தமிழரின் இந்த வீழ்ச்சிக்கு முழுக் காரணம்.

2

2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும் முற்றுகைக்கும் உள்ளாக வேண்டியதாகியது. யுத்தம் ஓய்வற்று நடந்த இரண்டரை ஆண்டுகளிலும் வன்னி மக்கள் பட்ட துயரங்களும் கொடுமைகளும் அழிவுகளும் அவமானங்களும் சாதாரணமானவையல்ல.

போர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.

புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.

முக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.

இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.

கட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர். இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின.

ஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது. இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது. அகதிப் பெருக்கம், இடப்பெயர்வின் அவலம், சாவின் பெருக்கம் என நிலைமை மோசமான கட்டத்துள் வீழ்ந்தது. தினமும் இடப்பெயர்வு, கிராமங்கள் பறிபோதல், சிறு பட்டிணங்கள் வீழ்ச்சியடைதல் என்பதே செய்தியாயிற்று. ஆனால் புலிகளின் ஊடகங்கள் இதற்கு எதிரான செய்திகளையே சொல்லிக்கொண்டிருந்தன. ராணுவம் பொறியில் சிக்கப் போகிறது என்று அவை சொல்லிக் கொண்டிருந்தன. இடப் பெயர்வும் உயிரிழப்பும் மக்களை மிக மோசமாகத் தாக்கியது. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த இந்தச் சனங்கள் இடம்பெயர்ந்தபோது மிக மோசமான அவலத்திற்குள்ளானார்கள். இடம் பெயர்ந்திருந்த இந்த மக்களிடமிருந்து புலிகள் கட்டாய ஆள் சேர்ப்புக்காகவும் போர்ப்பணி என்ற பெயரிலும் ஏராளமானவர்களைப் பிடித்துச் சென்றனர். தவிர போர் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவர்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்துகொண்டேயிருந்தனர். இவர்கள் போகும் ஒவ்வொரு ஊரைத் தேடியும் படையினர் விரட்டத் தொடங்கினர். புலிகளின் இறுதி வீழ்ச்சி நடந்த இடமான புதுமாத்தளன்-முள்ளி வாய்க்கால் பகுதிவரையில் ஏறக்குறைய 20 தடவைவரை மன்னார் மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஒரு இடத்தில் ஐந்து நாட்கள் மூன்று நாட்கள் என்ற அளவிலேயே இருக்கக்கூடிய நிலை உருவானது. அந்த அளவுக்குப் படைத்தரப்பின் தாக்குதலும் படை நகர்வும் வேகமாக இருந்தன.

படையினரின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்கக் கொல்லப்படும் புலிகளின் தொகையும் அதிகரித்தது. கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பலவந்தப்படுத்தித் துப்பாக்கி முனையில் புதியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எப்படி மூர்க்கத்தனமாக முன்னேறிவரும் படையினருடன் போரில் ஈடுபட முடியும்? அதிலும் புலிகள் தரப்பில் மிக இள வயதினர், குறிப்பாக மாணவப் பருவத்தினர். 15-22 வரையானவர்களே அதிகம். ஒரு வாரம் பயிற்சி, பின்னர் மூன்று நாள் பயிற்சி, இறுதியில் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் என்ற அளவிலேயே புலிகள் இவர்களைக் கள முனைக்கு அனுப்பினர். ஏற்கனவே முன்னேறிவரும் படையினர் வெற்றிபெற்றுவரும் சூழலில் அதற்கான உளவியலைப் பெற்றிருந்தனர். புலிகள் தரப்பில் பின்னடைவு நிலையில் மூத்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையும் உளச்சோர்வும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் தலைமையின் கட்டளைக்கும் வற்புறுத்தலுக்கும் பணிந்து நடவடிக் கையை மேற்கொண்டாலும் படைத்தரப்பைச் சிதைக்கக் கூடிய மாதிரியோ அல்லது படைநகர்வை கட்டுப்படுத்தவோ தாமதப்படுத்தவோ கூடிய அளவுக்கு அவர்களின் தாக்குதல்கள் அமையவில்லை. இதன் காரணமாகக் கள முனையிலிருந்து கட்டாய ஆட்சேர்ப்பின் மூலமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தப்பி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் களமுனையிலிருந்தோ பயிற்சி முகாமிலிருந்தோ ஓடினால் அதற்குப் பதிலாக அந்தந்தக் குடும்பங்களில் இருந்து தாய் அல்லது தந்தை அல்லது குடும்பத்தின் வேறு உறுப்பினர்கள் எவரையாவது அவர்கள் பிடித்துச்சென்று கட்டாயத் தண்டனைக்குட்படுத்தினார்கள். இதன் காரணமாகச் சில பிள்ளைகள் போர்க்களத்தில் தப்புவதற்கு வழியற்று நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு இக்கட்டான நிலையில் போர்க்களத்தில் நின்று உயிரிழந்த இளைஞர்களும் பெண்களும் ஆயிரக் கணக்கில் அடங்கும். சனங்கள் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடப் பெயர்வைச் சமாளிப்பதா? இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொளவதா? பிள்ளைகளைக் காப்பாற்றுவதா என்று தெரியாத பேரவலம் ஒரு பெரும் சுமையாகச் சனங்களின் தலையில் இறங்கியது. சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உருவாகின. இறந்த பிள்ளைகளின் உடலை பெற்றோரிடம் காட்டுவதற்கே புலிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. பல பெற்றோர் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புலிகளைத் தாக்கியிருக்கின்றனர்.

இப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, ‘சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்’, ‘எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?’ என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள். படைத் தரப்பின் தாக்குதல்களும் சனங்களை அச்சமடையவே வைத்தன. இதனால் கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் மிகவும் கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்த சனங்கள் இன்னும் இன்னும் அச்சமடையத் தொடங்கினார்கள். இது ஒருவகையில் புலிகளுக்குச் சாதக நிலையைத் தோற்றுவித்தது. மன்னாரிலிருந்து சிறிலங்கா படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்து ஒன்றரை வருடமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இந்தக் காலத்தில் மிக மூர்க்கமாக விமானத்தாக்குதல்கள் நடந்தன. இதன்போது பல நூற்றுக்கணக்கான சனங்கள் கொல்லப்பட்டிருந்தனர். செஞ்சோலைப் படுகொலை, தமிழ்ச்செல்வன் கொலை என்பவை பலருக்கும் நினைவுக்கு வரலாம். கிளிநொச்சியில் நடந்த பிறிதொரு தாக்குதலில் 26.11.2007 அன்று பிரபாகரன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

இக்காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவம் சனங்களின் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்ததாக யாரும் சொல்ல முடியாது. ஆனால் படைத்தரப்பின் தாக்குதல் வலயத்திற்கு அப்பால் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வ தற்கான இடம் சனங்களுக்கிருந்தது. ஆனால், இப்படி ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான உழைப்பு, வருமானம், இருப்பிடம், பொருட்கள் என்பன இல்லாத நிலை உருவாகியது. பொருட்களைக் கொழும்பில் இருந்து வன்னிக்குள் எடுத்துவருவதற்கான தடையும், கட்டுப்பாடுகளும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பஞ்சம் பட்டினியும் தலைவிரித்தாடின. ‘வன்னி’ இலங்கையின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுவதுண்டு. சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை. சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினர் ஆனையிறவினூடாக யாழ்ப்பாணத்துடன் இணைந்தனர். இந்த இணைவோடு யாழ்ப்பாணத்திற்குள் முடக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் இராணுவத்தினரும் படை நடவடிக்கையில் ஈடுபடும் நிலை உருவானது. உடனேயே தொடர்நடவடிக்கையைப் படைத்தரப்பு மேற்கொண்டு புலிகளை மேலும் விரட்டத் தொடங்கியது. ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமைகள் இதனுடன்தான் ஆரம்பிக்கின்றன. உலகைக் குலுக்கும் நிலைமைகள் 2009 ஜனவரி 15க்குப் பின்னரான நடவடிக்கை வன்னி கிழக்கை நோக்கியது. ஏற்கனவே மணலாற்றில் இருந்து முல்லைத்தீவுப் பட்டிணம் வரையான பகுதியைப் படைத்தரப்புக் கைப்பற்றியிருந்தது. இதற்குள் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். அடுத்தது புலிகளின் உறுப்பினர்களிடமும் சனங்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த தாக்குதல் தளபதி பிரிகேடியர் பால்ராஜின் மரணம். (இவர் மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.) இவை புலிகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அதிலும் கருணா அரசுடன் இணைந்திருந்ததனால் புலிகளின் போருத்திகள், படைவலு, பிரபாகரனின் சிந்தனைப் போக்கு, கள அமைவு எனச் சகலவற்றையும் கருணா படைத்தரப்புக்கு வழங்கியிருப்பார் என்ற அபிப்பிராயமும் உண்டு.

இவ்வாறு நிலைமைகள் பாதகமாக அமைந்திருந்த போதும் புலிகளின் ஊடகங்களும் உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் ‘தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். எந்தச் சூழலிலும் நாம் தோற்றுப்போக மாட்டோம்’ என்று மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தனர். எந்த வகையான தருக்கமுமில்லாமல் வெறும் வாய்ப்பேச்சாகவே இந்தச் சொற்கள் இருந்தன. எவ்வளவுதான் புலிகளின் நம்பிக்கையூட்டல்கள் அமைந்தாலும் அதை நம்புவதற்குச் சனங்கள் தயாராக இல்லை. யுத்தமோ மிக மூர்க்கத்தனமாகச் சனங்களைத் தாக்கிக்கொண்டிருந்தது. இப்போது சனங்களின் சாவு வீதம் சடுதியாக அதிகரிக்கத்தொடங்கியது. கட்டாய ஆட்சேர்ப்பு எல்லா வகையான வரம்புகளையும் மீறிக் குடும்பத்தில் எத்தனைபேரையும் எங்குவைத்தும் எப்படியும் பிடித்துக்கொள்ளலாம் என்றாகியது. முன்னர் போராளிக் குடும்பங்களும் மாவீரர் குடும்பங்களும் ஆட்சேர்ப்பில் விலக்களிக்கப்பட்டிருந்தன. இறுதியில் இந்த வேறுபாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல் கண்டபடி ஆட்சேர்ப்பு நடக்க ஆரம்பித்தவுடன் சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. சனங்கள் புலிகளைப் பகிரங்கமாகவே எதிர்க்கவும் தாக்கவும் தொடங்கினர். அவர்களுடைய உடைமைகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினர். இந்தக் கட்டத்தில் புலிகளின் கடந்தகால முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையும் பிற இயக்கங்கள் மீது புலிகள் விதித்த தடைகளையும் மேற்கொண்டிருந்த தாக்குதல்கள்; படுகொலைகளையும் புத்திஜீவிகள் மீதான கொலை அச்சுறுத்தலையும் சிலர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பிரபாகரனை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சனங்கள் திட்டினர்.

இதேவேளை ஜனவரி 15க்குப் பின்னர் வன்னி கிழக்கில் விசுவமடு தொடக்கம் மக்கள் கொல்லப்படத் தொடங்கினர். போர் மிகவும் உக்கிரமாக நடக்கையில் சனங்கள் இனி ஓடுவதற்கு இடமில்லை என்ற நிலை உருவானது. முல்லைத்தீவுக்கு அண்மையில் இருந்த ஓட்டுசுட்டான் புதுக்குடியிருப்புப் பகுதிகளையும் படைத்தரப்பு கைப்பற்றியதுடன் சனங்களின் கதி மிகவும் ஆபத்தாகியது. இங்கிருந்து புலிகள் சனங்களைக் கவசமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஏற்கனவே சனங்கள் வெளியேறுவதற்கு இறுக்கமான தடையை விதித்திருந்த புலிகள் மேலும் பாதுகாப்பு நிலையை உயர்த்திச் சனங்கள் எங்கும் தப்பிச் செல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டனர். சனங்களின் செறிவு அதிகரிக்கும் போது யுத்தமும் சனங்களுக்குக் கிட்டவாக, நெருங்கிய சூழலில் தாக்குதல்களில் சனங்கள் கொல்லப்படத் தொடங்கினர். இந்த நாட்களின் நிகழ்ச்சிகளை விவரிக்கவே முடியாது.

குறிப்பாகப் படையினர் விசுவமடு என்ற இடத்தை நெருங்கியபோது நடத்திய தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உடையார்கட்டுப் பகுதியில் இருந்து இந்தப் படுகொலை நாடகம் மிக உக்கிரமான நிலையில் ஆரம்பித்தது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சனங்கள் மட்டும் படையினரிடம் அகப்பட்டிருந்தனர். ஆனால் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிமீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சனங்களை நிலைகுலைய வைத்தன. முன்னர் நடந்த படை நடவடிக்கைகளின் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மருத்துவமனைகள் வெவ்வேறு இடங்களில் மட்டுப்பட்ட அளவில் இயங்கினாலும் அவற்றால் முழு அளவிலான சேவைகளை வழங்க முடியவில்லை. ஆனால் இரவு பகல் என்றில்லாமல் அங்கிருந்த மருத்துவர்கள் – இப்போது சிறிலங்கா அரசால் தடுத்து வைக்கப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் டொக்ரர் சத்தியமூர்த்தி, டொக்ரர் வரதராஜன், டொக்ரர் சண்முகராஜா உட்படப் பல மருத்துவர்கள் – பெரும் சேவையாற்றினர். மனித குலம் தன் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத அளவுக்கான பெரும் சேவையை இவர்கள் செய்தனர். ஆனால் இவர்களுடைய அரசியல் பார்வை குறித்த விமர்சனங்கள் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மருந்துத்தடை அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் மத்தியிலும் தாக்குதல்களில் காயப்படும் மக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மிகவும் உயிராபத்துகள் நிறைந்த சூழலில் இந்த மருத்துவர்களும் பணியாளர்களும் தொண்டாற்றினார்கள். அதேவேளை புலிகள் இந்த மருத்துவமனைகளைத் தமது நிழல் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தி வந்தனர். மருந்துப்பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.

உடையார்கட்டுப் பகுதியில் படைத்தரப்பு நடத்திய தாக்குதல்கள் மிகக் கொடியவை. சனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்து அவர்களைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் உபாயத்தைப் படைத்தரப்புக் கைக்கொள்ளத் தொடங்கியது. இது மிகக் கேவலமானது. மனிதாபிமானத்துக்கு முற்றிலும் எதிரான செயல் இது. எந்த வகையான நியாயப்படுத்தல்களையும் செய்ய முடியாத நடவடிக்கை இது.

மிகச் செறிவாக அடர்ந்திருந்த சனங்களை இலக்கு வைத்து ஆட்லறி மற்றும் எரிகணைத் தாக்குதல்கள் – றொக்கற் தாக்குதல்களைப் படைத்தரப்பு நடத்தியது. இதன்போது ஐ.நாவின் உலக உணவுத்திட்ட அதிகாரியும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியும் வன்னியிலிருந்தனர். இந்தத் தாக்குதல்களை அடுத்து இவர்கள் வன்னியை விட்டு வெளியேறினர். அந்தளவுக்கு அவர்களுக்கே பாதுகாப்பற்ற நிலைமை என்றானது. சனங்கள் என்ன செய்வது, எங்கே செல்வது, எப்படித் தப்புவது என்று தெரியாமல் திணறினர். கண்முன்னே சிதறிப் பலியாகும் உடல்கள். இரத்தமும் சிதிலமுமான சூழல். சாவோலம். தீயும் புகையுமாக எரியும் காட்சி. சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாமல் கொல்லப்படும் இடங்களிலேயே சடலங்களைப் புதைக்க வேண்டிய நிலை. சவப்பெட்டிகளே இல்லை. சடங்குகளுக்கு அவகாசமில்லை. ஆனால் சாவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. குடும்பம் குடும்பமாகக் கொலைகள் நடந்தன.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.

தாக்குதல்களும் சாவுகளும் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, அவலம் உச்சநிலையைக் கடந்துவிட்டபோதும் புலிகள் தமது நடவடிக்கைகளை மாற்றவில்லை. பதிலாகத் தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவித்துப் பகிரங்கத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த அறிவிப்புடன் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. எதிர்ப்பைக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள், இனத்துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனை சுட்டுக் கொல்லுதல் என்பது வரையில் சென்றது. சனங்கள் என்னதான் வந்தாலும் பரவாயில்லை என்று தீர்மானித்துப் படையினரிடமே தப்பிச் செல்லத் தொடங்கினார்கள். சிலர் கடல் வழியாகத் தப்பிச் சென்றனர். மிகச் சிலர் இந்தியாவுக்குத் தப்பி ஓடினர். இவ்வாறு தப்பிச் செல்லும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையை அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் தலைமையிலான புலிகளின் அணிகள் மேற்கொண்டன. புலிகளின் தடையை மீறிச் சென்ற மக்களின் மீது அவர்கள் ஈவு இரக்கமின்றித் தாக்குதல்களை நடத்தினர். சில சந்தப்பங்களில் மக்களின் மீது எரிகணைத் தாக்குதல்களைக்கூட மேற்கொண்டனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் கொல்லப்பட்டனர். படையினரின் கொலைவெறித் தாக்குதல்களில் இரண்டாயிரம் வரையான மக்கள் உடையார்கட்டு, சுதந்திரபுரம், வன்னிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் கொல்லப்பட்டனர்.

எனினும் புலிகளின் தடைகள், தாக்குதல்களையும் மீறிப் பதினைந்தாயிரம் வரையான சனங்கள் இராணுவத்தின் பக்கம் சென்றனர். சனங்கள் தொடர்ந்து தம்மிடம் வருவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் படைத்தரப்பு மேலும் மேலும் சனங்களின் மீதே தனது இலக்கை நிர்ணயித்தது. இது மிகக் கேவலமானதும் கொடூரமானதும் மன்னிக்க முடியாததுமான நடவடிக்கை. ஆனால், இதை மறைத்துக் கொண்டு வெற்றிகரமாகப் படையினர் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் சனங்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்டதாகவும் படைத்தரப்பும் அரசும் பிரச்சாரம் செய்தன. இதில் இன்னும் கொடுமையானது பாடசாலைகளிலும் தற்காலிகமாக அவசர நிலையில் இயங்கிய மருத்துவமனைகள் மீதும் படையினர் நடத்திய தாக்குதல்கள். காயப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களையும் காப்பாற்றுவதற்கு முடியாது என்ற நிலை பயங்கரமாகியது. புலிகளின் ஆட்பிடி மற்றும் பலவகையான பலவந்த நடவடிக்கைகள் ஒரு பக்கமும் படையினரின் படுகொலைத் தாக்குதல்கள் மறுபுறமுமாக இரண்டு தரப்புக்குமிடையில் சிக்கித் திணறினர் மக்கள். ஆனால், இந்த நிலை குறித்து வெளியுலகத்துக்கு எந்தச் செய்தியும் வெளியே செல்ல முடியாதவாறு இரண்டு தரப்புகளும் இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் பார்த்துக்கொண்டன.

இதேவேளை புலிகளின் பரப்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர். அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.

இது அவர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. முழு உண்மை. சகல வளங்களையும் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்குமாகவே பயன்படுத்திவரும் இயல்பு புலிகளினுடையது. தமது இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதாரத் தளமாகவே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தினர். பிரபாகரன் எப்போதும் இராணுவ நடவடிக்கைகளிலும் இதற்கான தயார்படுத்தல்களிலும் வளங்களிலுமே கூடிய கவனத்தைச் செலுத்திவந்தார். அவருடைய அணுகு முறையே அரசியலில் இராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தது. அதாவது புலிகளின் இராணுவ பலத்தின் மூலம் எதிரியையும் மக்களையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார். தமது படையணிகளைக் கட்டமைப்பதிலும் தளபதி களைப் பெருக்குவதிலும் அவர் காட்டிய ஈடுபாட்டுக்கும் முன்னுரிமைக்கும் சமமாக அவர் பிற துறைகளில் எந்த ஆற்றலாளர்களையும் உருவாக்கவில்லை. எனவே எல்லா நிர்வாகத் துறைகளும் துணை அலகுகளும் அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பவையாகவே இருந்தன. அப்படியே அவற்றைப் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.

எனவே சிதைந்த அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் சனங்களைப் போரை நோக்கித் திருப்புவதில் மும்முரமாகின. சனங்களோ அதுவரையிலும் நிபந்தனையற்ற முறையில் எல்லா வகையான தவறுகளுக்கும் அப்பால் அளிந்துவந்த தமது ஆதரவுத் தளத்தை மாற்றித் ‘தப்பினால் போதும்’ என்ற கட்டத்துக்கு வந்தனர். புலிகளால் சிறிலங்கா இராணுவத்தை வெல்லவும் முடியாது. தங்களையோ சனங்களையோ காப்பாற்றவும் முடியாது என்று அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே அவர்கள் எப்படியும் வன்னியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் புலிகளின் ஊடகங்கள், இணையதளங்கள் எல்லாம் வேறு கதைகளையே பேசின. தமிழகம் உட்படப் புலம்பெயர் நாடுகள் வரையில் இந்தப் பொய்ப்பரப்புரையின் மண்டலம் நீண்டது, புலம் பெயர் மக்களுக்கு வன்னியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இந்த அறியா நிலையைப் பிரபாகரன் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இதேவேளை புலிகளும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் ‘புலிக் குடும்பங்கள்’ என்ற உயர்மட்டத் தலைவர்களின் குடும்பங்களும் எப்படியும் படைத்தரப்பை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வாதிட்டனர். ‘சிங்களப் படைகளிடம் மண்டியிடுவதை விடவும் இறுதிவரைப் போராடிச் சாவது மேலானது’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘போராட்டம் என்பது விடுதலையுடனான வாழ்வைப் பெறுவதற்கே’ என்று சிலர் வலியுறுத்தியபோது அதைப் பொருட்படுத்தாது, பிரபாகரன் 300 போர் வீரர்கள் (The Three Hundred) என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கத்தைத் தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்குக் காண்பித்து தனது இறுதி முடிவு இப்படி இருக்கும் என்றார். அதுவே உயர்ந்த வீரம் என்றும் தாய்நாட்டுக்கான தியாகம் என்று சொன்னார்.

ஆனால் வன்னியில் இருந்த புத்திஜீவிகள் சிலர் இதை மறுத்தனர். இந்த முடிவு மிக மோசமானது என்றும் வரலாற்றை மிகவும் பிழையான இடத்திற்கு அழைத்துச்செல்லும் செயல் இது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர இவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட தீர்மானங்களுக்குப் போகக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். ஆனால், பிரபாகனிடம் யாரும் இதற்கான உரையாடலைச் செய்ய முடியவில்லை. அவர் எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை நிறுத்திக்கொண்டார். சனங்களுடன் என்றுமே தொடர்புகளையோ உறவுகளையோ கொண்டிராத அவர் சனங்கள் குறித்து எவர் என்ன சொன்னாலும் எதையும் பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. தவிரவும் தனது இயக்க உறுப்பினர்களைத் தவிர அவர் வேறு எவரையும் – மக்கள் பிரதிநிதிகளைக்கூட – சந்தித்தவரல்ல. அவ்வாறு பிறரைச் சந்திப்பதாக இருந்தால் அவருடைய இயக்கத்தலைவர்களோ பொறுப்பாளர்களோ சிபாரிசு செய்யும் ஆதரவாளர்களையே சந்திப்பார். அவர்களோ புலிகளின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் இயல்பும் குணமுமுடையவர்கள். அவர்களால் ஒரு போதுமே மக்கள் குறித்து நீதியாகவும் நியாயமாகவும் சிந்திக்கவும் முடியாது; செயல்படவும் முடியாது. அப்படியான செயல்வழமையை அவர்கள் கொண்டதுமில்லை. அப்படியொரு பழக்கமும் அவர்களுக்கில்லை. எனவே அவர்களால் புலிகளின் தீர்மானங்களைப் பற்றிய எந்த விமர்சனங்களையும் முன்வைக்க முடியவில்லை.

கிறிஸ்தவ மத குருமார் அமைப்பு இவ்வாறு எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. நலன் விரும்பிகள் எடுத்த எந்த முயற்சிகளுக்கும் அவர் செவி சாய்க்கவும் இல்லை. இதேவேளை புலிகள் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை- போர் முறையை மாற்றி- அமைக்க வேண்டும் எனச் சிலர் வலியுறுத்தி வந்தனர். களத்தை மாற்றுங்கள் யுத்திகளை மாற்றுங்கள், என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதில் ஒரு சில புலம்பெயர் தமிழரும் அடங்குவர். ஆனால் இந்தப் புலம்பெயர் தமிழர்கள் புலிகளை விமர்சன பூர்வமாக ஆதரித்ததால் இவர்களின் கருத்தை ஏற்கப் புலிகள் தயாராக இருக்கவில்லை. இதே வேளை புலிகளின் ஊடகங்களோ மிக மூர்க்கமான விதத்தில் பொய்ப் பரப்புரைகளைச் செய்துவந்தன.

சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனத்தையும் விமர்சனத்தையுமே அவை தீவிரப்படுத்தின. அத்துடன் மாற்றுச் சிந்தனையாளர்களைக் கடுமையாக விமர்சித்தன. எந்தவிதமான அபிப்பிராயங்களையும் புறக்கணித்து விட்டுத் தனது அதிகாரத்தின் மூலம் தான் விரும்பிய மாதிரி பிரபாகரன் நடந்துகொண்டார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே ஒரு கட்டத்தில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்துத் திகைப்படைந்து விட்டனர். அவர்கள் அளித்துவந்த ஆதரவை வைத்துக்கொண்டு அவர்களையே சிறைபிடித்தனர் புலிகள். எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் எல்லோரும் சிக்கியிருந்தோம். ஜார்ஜ் ஆர்வெலின் ‘1984’ நாவல் நினைவுக்கு வந்தால் அதையும்விடப் பலமடங்கு இறுக்கமான நிலைமையும் அதிகார வெறியும் வன்னியில் நிலவியது என்று நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம்.

இதேவேளை படைத்தரப்பின் தாக்குதல்கள் மேலும் மேலும் மோசமடைந்தன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கிலானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியே கப்பல் மூலம் எடுக்கும் நடவடிக்கையைச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்தது. இதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு மருத்துவமனை அங்கே இயங்கியபோது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அங்கே நிலைகொண்டிருந்தது. சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொண்ட விதிகளின் பிரகாரம் செஞ்சிலுவைச் சங்கக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (இது அமெரிக்கத் தயாரிப்பு, ஆளில்லா வேவு விமானம். அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது) வட்டமிட்டு நோட்டமிட்டது. (இந்த விமானம் எப்போதும் வானத்தில் பறந்து கொண்டேயிருக்கும். இந்த வேவுக் கண்ணை வைத்தே சிறிலங்கா அரசு போரில் பெரும் வெற்றியைப் பெற்றது.) வேவு விமானத்தின் தரவுகளின் படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது. பின்னர் புதுமாத்தளன் பகுதி கடற்கரையிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சையும் மேலதிக மருத்துவத்துக்காகக் கப்பல் மூலம் திருகோண மலைக்கும் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் எடுத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 400க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். கை கால் இழந்தவர்கள், கண் பறிபோனவர்கள் உறவுகளை இழந்தவர்கள் என்றே இவர்கள் இருந்தனர். தினமும் தெருவிலும், ஆஸ்பத்திரியிலும், தார்ப்பாலின் கூடாரங்களின் மத்தியிலும் சாவடைந்த பிணங்கள் தொகை தொகையாகக் கிடந்தன. மரணம் எல்லோருடனும் குதித்து விளையாடியது. தாம் உயிர் பிழைப்போம் என்று அந்த நாட்களில் எவரும் நம்பியிருக்கவில்லை. சாவு அந்தக் கணம்வரைத் தங்களை நெருங்கவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி கொலை வலயத்தினுள்ளேதான் எல்லோரும் இருந்தனர்.

ஒரு சிறு அமைதியோ இடைவெளியோ வராதா; இந்தியாவோ தமிழகமோ ஐ.நாவோ பிற சர்வதேசச் சமூகமோ சிறியதொரு அமைதிச் சூழலை உருவாக்கித் தரமாட்டாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலுமிருந்தது. இதேவேளை புலிகளின் கடுமையான கண்காணிப்பையும் மீறிப் பொதுமக்கள் எப்படியோ வன்னியைவிட்டு வெளியேறிக்கொண்டேயிருந்தனர். ஆனால் அந்தத் தொகை பெரியதல்ல. புதிய புதிய காட்டுவழிகள், கடல்வழிகள், சதுப்பு நிலப்பாதைகளினூடாக மிக உச்சமான அபாயங்களின் மத்தியில் சனங்கள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.

வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு எளிதில் வெளியேற முடியாது. அப்படிச் சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள் கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் விடுவிக்கப்படுவார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களும் காயப்படுத்தப்பட்டவர்களும் அதிகம். என்றாலும் சனங்கள் தப்பியோடுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன. மருந்துத் தடை, உணவுப்பொருட் தடை என்பனவும் தீவிரமடைந்தன. சனங்களின் கையில் பணமில்லை, உற்பத்திகளில்லை வருமானமில்லை, சேமிப்பில்லை. வங்கிகள், பாட சாலைகள் எதுவுமில்லை. தூங்குவதற்கோ சமைப்பதற்கோ குளிப்பதற்கோ அவகாசமில்லாமல் எரிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின. புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன.

ஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன. படைத்தரப்பு முன்னேற முன்னேற நிலைமை மோசமடையவே தொடங்கியது. இப்போது பங்கர்களும் பாதுகாப்பாற்றவையாகின. வெளியே நடமாட முடியாத அளவுக்கு ஓய்வில்லாத தாக்குதல். பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே தாக்குதல்கள். புலிகளும் இந்தப் பகுதிக்குள் இருந்தே தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிரியைச் சினமடைய வைக்கும் வகையிலான தாக்குதல்கள். புலிகளின் இந்த மாதிரியான பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சனங்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் தாக்குதல் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றதோ அந்தப் பகுதியை நோக்கி பதிலடியைப் படையினர் கொடுப்பார்கள். இதன்போது கொல்லப்படுவது சனங்களே.

முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போலச் சனங்களின் சாவுப் பட்டியலில்தான் தமது எதிர்கால அரசியல் நலன் தங்கியிருக்கிறது எனப் புலிகள் நம்பினார்கள். இதற்கு ஏற்றமாதிரி அவர்கள் தம் வசமிருந்த இணைய தளங்களையும் செய்மதிற் தொலைபேசிகளையும் பயன்படுத்தினார்கள். அக்காலப் பகுதியில் வன்னியின் குரலாக வெளிப்பட்ட மருத்துவர்களின் வாக்கு மூலங்களில் பாதி உண்மைகள் மட்டுமே வெளிவந்தன. அதற்காக மற்றதெல்லாம் பொய் என்று பொருளல்ல. அவர்கள் மீதி உண்மையைச் சொல்லவில்லை. புலிகள் தரப்பு நடவடிக்கையைப் பற்றிப் பேசவில்லை. வெளி ஊடகங்கள் எதுவும் இல்லாத சூழலில் தாம் சொல்வதே வேத வாக்கு எனப் புலிகள் நிரூபிக்க முயன்றனர்.

புலிகளின் மரபின்படி எப்போதும் பிற தரப்பினரைக் குற்றம் சாட்டும் இயல்போடு தம்மைப் பற்றிய மீள் பரிசீலனை, சுய விசாரணை எதுவுமில்லாமல் அவர்கள் இயங்கினார்கள். இந்தக் குணாம்சத்துடனேயே அவர்களின் மீடியாக்களும் இயங்கின. புலிகள் களத்திலிருந்து கொடுக்கும் தகவல்களை எந்தவிதமான மறுவிசாரணைகளும் இல்லாமல் சுய சிந்தையே அற்றுப் புலம்பெயர் தேசங்களில் உள்ள – அவர்களின் ஏஜென்ஸிகளாக இயங்கும் – ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதுதான் அடுத்த பெரிய தவறாக அமைந்தது. முழுவதும் புனைவாகவே தமது கதையை அவர்கள் வளர்த்தனர். வன்னியில் என்ன நடக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் உணர்வு நிலை என்ன? அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? போராளிகளின் மனநிலை என்ன? படைத்தரப்பு எப்படி நகர்கிறது? கள யதார்த்தம் என்ன? இவை எதைப் பற்றியும் வெளிப்படையான எந்த ஆய்வுக்கும் செய்திக்கும் புலிகள் இடமளிக்கவில்லை. பதிலாகப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் முற்றிலும் பொய்களையே சொல்லி வந்தார். மீள முடியாத தோல்வியை நோக்கி முழுதாக இருத்தப்பட்ட பின்னரும் அவர் வெற்றி குறித்த பிரமைகளிலும் எந்த முகாந்திரமுமில்லாத புனைவுகளிலுமே ஈடுபட்டார்.

இதைப் போன்றே சிறிலங்கா அரசு தரப்பிலும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாகப் பேசவல்ல அமைச்சர் ரோஹித பேகல்லாகம, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா பிரதமர் ரமணசிறீ விக்கிரம நாயக்க உட்படச் சகலரும் முழுப் பொய்களையே சொல்லி வந்தனர். அதிலும் இந்தக் கொடூர யுத்தத்தை -போர் விதிமுறைகளை முற்றிலும் மீறிய கொடிய தாக்குதல்களை – இவர்கள் மனிதாபிமான நடவடிக்கை என்று அழைத்தனர். யுத்தத்தின்போது முதலில் பலியாவது உண்மை என்பார்கள். இந்த உண்மை முழுதாகவே பலியானது. இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவமதக் குருமார்கள் சொன்னார்கள்: “உண்மையில் இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம், விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளா? இவ்வளவு கொடுமைகளா? இதைவிடக் கேவலமானது, ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இப்படிச் சனங்களை இலக்கு வைத்தே தாக்குவதை எப்படி அனுமதிப்பது”. இது பற்றி இரண்டு தரப்பினரிடமும் தமது ஆட்சேபனைகளை அவர்கள் தெரிவித்துமிருந்தனர். ஆனால் இரண்டு தரப்புமே அவர்களின் குரலைப் பொருட்படுத்தவில்லை. வெறிகொண்ட இரண்டு மதயானைகளைப் போலத் தொடர்ந்து மோதிக் கொண்டேயிருந்தனர் அவர்கள்.

ஆனால் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத விசயமாக இருப்பது புலிகளின் கரும்புலிகள் அணிகள் ஏன் செயற்பட முடியாமல் ஆகின என்பதே. படைத்தரப்பு புலிகளின் ஒவ்வொரு கோட்டையையும் கைப்பற்றி முன்னேறும்போது புலிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் சனங்களின் மனதிலும் கரும்புலிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தவிரவும் பிரபாகரன் அரசியல்ரீதியாகச் சாணக்கியமோ கெட்டிக்காரத்தனமோ அக்கறையோ இல்லாதவராக இருந்தாலும் இராணுவரீதியாக மிகவும் ஆற்றலுள்ளவராக மதிக்கப்பட்டவர். ஆனால், எவருக்கும் தெரியாத, விளங்காத ஒரு புதிராக அவர் அமைதி காத்தபடி பின்வாங்கிக்கொண்டிருந்தார். கண் முன்னே பல ஆயிரக்கணக்கான சனங்கள் செத்து மடிந்துகொண்டிருந்தனர். அப்போதும் அவர் தனது நடவடிக்கையைக் கைவிடவில்லை. முன்னேறும் படையினரைத் தடுக்கும் அதே மாதிரியான ஒரே வகையான தாக்குதலையே தொடர்ந்தார். இந்தத் தடுப்பு நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு முறியடிப்பது என்று படைத்தரப்பு மிக நன்றாகப் படித்திருந்தது. அதன்படி அது எல்லா எதிர்ப்புகளையும் மிக லாவகமாகவும் இலகுவாகவும் முறியடித்தது.

இதன்போது நூற்றுக்கணக்கில் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் புலிகளிடம் இருக்கவில்லை. அவர்கள் வெறிகொண்டலைந்து இன்னுமின்னும் ஆட்களைப் பிடித்தார்கள். ஆட்பிடிப்பில் எந்தவிதமான மனிதாபிமானத்தையும் நாகரிகத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்று தெரிந்த பின்னர் தங்களுக்கு மக்கள் அபிமானம் தேவையில்லை என்று புலிகள் சிந்திக்கின்றனர் எனப் புலிகளின் முக்கிய ஊடக வியலாளர் ஒருவரே சொன்னார். அந்தளவுக்கு அவர்களின் உளநிலை மாறியிருந்தது.

மாத்தளன் தொடக்கம் வட்டுவாகல் வரையிலான முன்னூறு மீற்றர் அகலமும் 10 கிலோ மீற்றர் நீளமும் உள்ள கடற்கரையில் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் செறிந்திருந்தனர். சாப்பாடு, குடிநீர், தங்குமிடம், பாதுகாப்பு, மருத்துவம், கழிப்பறை எனச் சகலத்துக்கும் பிரச்சினை. ஏற்கனவே இந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. இரண்டு கிராம அலுவலர்கள் பிரிவிலுமாக சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த இடத்தில் இப்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? அதுவும் எந்த அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாத சூழலில்!

சனங்கள் இந்தப் பகுதியில் தஞ்சமடைந்தபோது படையினர் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம் பகுதிகளில் மட்டும் முற்றுகைச் சமரில் ஈடுபட்டனர். புலிகளின் இறுதி எதிர் நடவடிக்கை இங்கேதான் நடந்தது. இந்த நடவடிக்கையை அவர்கள் மிகத் தீவிரமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். மக்களுக்கு ஏற்பட்டிருந்த உளச்சோர்வு, பேரவலம் எல்லாவற்றையும் இந்த நடவடிக்கை மூலம் போக்கிவிடலாம் என்று இறுதி நம்பிக்கையோடு புலிகளின் சில மூத்த தலைவர்கள் சொன்னார்கள். இந்தத் தாக்குதலில் அவர்களுடைய மூத்த முன்னணித் தளபதிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன், கேனல் சேரலாதன், கேனல் ராகேஸ் உட்படப் பல தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். முழு நம்பிக்கையுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளின் வரலாற்றிலேயே பெரும் தோல்வியாகவும் மாபெரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் முடிந்தது. இது பிரபாகனை நிலைகுலைய வைத்தது. கொல்லப்பட்ட தளபதிகளின் சடலங்களைக்கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே இன்னும் பல தளபதிகள் கள முனைகளில் கொல்லப்பட்டிருந்தனர்.

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். (இப்போது அத்தனை பேரும் தடுப்புமுகாம்களில் தடைக்கைதிகளாக அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளனர்.) இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.

இதேவேளை இன்னும் ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக் கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள். எனினும் புலிகள் அவர்களைவிடவில்லை. கட்டாயப்படுத்தி முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த முள்ளிவாய்க்கால் பகுதிதான் புலிகளின் களமாகியது. இறுதிநாட்கள் என்று சொல்லப்படும் ஏப்ரல் 18க்குப் பிந்திய மே 18 வரையிலான நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகியது. சனங்கள் ஏற்கனவே இரகசிய வழிகளைத் தேடித் தேடி மிகவும் ஆபத்தான வழிகளில் படைத் தரப்பிடம் தப்பிச்செல்ல முற்பட்டனர். சிலர் கடல் வழியாகப் படகுகளிலும் புறப்பட்டனர். ஆனால் புலிகள் உருவாக்கிய ஒரு படையணியினர் ‘பச்சை மட்டை’யுடன் நின்று சனங்களுக்கு அடிபோட்டுக் கலைத்தார்கள். சனங்கள் எதிர்ப்பைக் காட்டியபோது துப்பாக்கியால் சுட்டார்கள்.

இவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதுபோலப் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிகழ்ந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு முழுப்பொறுப்பாக முதலில் தங்கனும் அவருடன் இணைந்து புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த வரும் பின்னர் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவருமான மாதவன் மாஸ்டர், திருமலை, சூட்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர். சனங்கள் தமது முழுமையான எதிர்ப்பையும் இந்தச் சந்தர்ப்பங்களில் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மாத்தளன் பகுதியிலுள்ள கப்பல் துறையில் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் முக்கியமானவை.

கட்டாய ஆட்சேர்ப்பின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு காலை மூன்று பேரைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சனங்கள் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தூக்கிக்கொண்டு கப்பலுக்கு வழித்துணையாக வரும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் சென்றனர். அங்கே புலிகளின் கொடுமையை அவர்கள் அந்தப் பிரதிநிதிகளுக்கு விவரித்தனர். அப்போது கூட்டம் கூட்ட வேண்டாம் என்று சனங்களை விரட்டியடிக்க வந்த புலிகளையும் அவர்களின் காவல் துறையினரையும் மக்கள் கலைத்துக் கலைத்து அடித்தனர். அவர்களுடைய வாகனங்கள் பலவும் எரியூட்டப்பட்டன. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியால் புலிகள் ஆடிப்போனார்கள். ஆனால் மறுநாள் அந்தப் பகுதியில் 1500க்கு மேற்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் காவல் துறையினரும் சுற்றிவளைப்பை மேற்கொண்டு கண்டபடி ஆண்களைப் பிடித்துத் தாக்கி எல்லோரையும் தமது வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் நாள் கலவரத்தையடுத்து மக்கள் 30 படகுகளில் அந்தப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று சேர்ந்தனர். இதுபோலப் பல சம்பவங்கள் உண்டு. வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த கொந்தளிப்பான நிகழ்ச்சிகள் அவை.

ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது.

இந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.

காரணம் இந்தப் போராட்டங்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில் இவற்றைச் சுருக்கி புலிகள் தமக்கு வாய்ப்பை உருவாக்கும் முறையில் மாற்றிக்கொண்டனர். போராட்டங்களை நடத்திய முறையும் புலிகள் புலம்பெயர் தமிழர்களையும் அமைப்புகளையும் பயன்படுத்திய முறையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்குப் புலம்பெயர் மக்களால் முடியாமல் போனதையிட்டு இதை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால் புலிகளின் ஜனநாயக மறுப்பைப் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் போதுமான அளவு பேசியதில்லை. புலிகளின் பகுதியில் அல்லது இலங்கைத் தீவில் புலிகளின் மீது விமர்சனங்களை யாரும் வைக்க முடியாது. அதற்கான வெளியை புலிகள் விட்டுவைக்கவில்லை. ராஜினி திரணகம செல்வி, ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய கோவிந்தன் உட்பட ஏராளமானவர்களின் படுகொலைகள் இதற்கு உதாரணம். எனவே புலம்பெயர் மக்களால் மட்டும்தான் ஓரளவுக்குப் புலிகளின் ஜனநாயக மறுப்பையும் அரசியல் பார்வையற்ற தன்மையை யும் சர்வதேச மற்றும் போராடும் மக்களின் மனநிலை சூழ்நிலை என்பவற்றைக் கணக்கில் கொள்ளாத போர்முனைப்பையும் இன்னும் பலவாறான எதிர்மறை அம்சங்களைப் பற்றியும் பேசியிருக்க முடியும். அவர்களுக்குத்தான் இந்தப் பொறுப்பு அதிகமுண்டு.

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். இதற்கான பிரதான காரணம் இவர்கள் தமது தாய்நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து தூர இடங்களில் இருக்கும்போது ஏற்படும் சொந்த நிலத்தின் மீதான தாகம். அடுத்தது தாம் பாதுகாப்பாக இருக்கும்போது தமது உறவினர்கள் போரால் வதைபடுவதும் கொல்லப்படுவதும். மூன்றாவது காரணம், சிறிலங்கா அரசு மீதான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும். இந்தக் காரணங்கள் அவர்களை விசுவாசமாகப் போராடத் தூண்டின. ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு நண்பர் சொல்வதைப் போலப் பிரபாகரன் எல்லாவற்றையும் தியாகம் – துரோகம் என்ற பிரிகோட்டைப் போட்டுப் பிரித்து வைத்திருந்தார். புலிகளின் சிந்தனை முறைக்கு எதிராகச் சிந்திப்பவர்களும் செயல்படுபவர்களும் துரோகிகளாகவும் எதிர்நிலை யாளர்களாகவும் பார்க்கப்பட்டனர். வெகுஜனத் தளத்தில் இலகுவில் பதிந்துவிடக்கூடிய இன உணர்வு, மொழி உணர்வு போன்றவற்றை ஆதாரமாகக்கொண்டு பிரபாகரன் இதை வெற்றிகரமாகச் செய்துகொண்டார்.

எனவே ஜனநாயக உள்ளடக்கமற்ற புலிகளின் போராட்டத்தை – இந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் தங்களின் கைகளில் பிரபாகரனின் படத்தையும் தமிழ் ஈழப் படத்தையும் வைத்திருந்ததை நினைவில் கொள்க -மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எப்படியும் யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், ஈழத்தில் ஒரு அமைதிச் சூழலை கொண்டுவரத் தாம் பாடுபட வேண்டும் என்று இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் விசுவாசமாகவே முயன்றனர். அதற்காக அவர்கள் இரவு பகலாகத் தொடர்ந்து போராடினர்.

புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.

பிரபாகரன் எத்தகைய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பார் என்று தெரியாத ஒரு அச்சம் நிறைந்த புதிர் சிறிலங்கா அரசுக்கும், படைத் தரப்புக்கும் இருந்தது உண்மை. அதனால் அவர்கள் தமது நடவடிக்கையை முதலில் மந்தகதியிலேயே நடத்தினர். ஆனால் புலிகளின் பலவீனமான அம்சங்களை அடையாளம் கண்ட பின்னர் படை நகர்வின் வேகம் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் தமது இறுதிக் கணம் வரையிலும் புலிகளின் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தபோதும் பிரபாகரன் தன்னுடைய போரின் மூலம்-யுத்தத்தின் மூலம்-இனிமேல் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மையை வந்தடைந்தார். பிரபாகரனைப் போலவே ஏனைய புலிகளின் உறுப்பினர்களும் இந்த உண்மைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குறிப்பாக மேற்குலகம் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசுக்கு ஏதாவது அழுத்தங்களைக் கொடுக்கும்; யுத்த நிறுத்தமோ நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைச் சூழலோ உருவாக்கப்படலாம் என்று அவர்கள் நம்பினர்.

இதற்கு முன்னர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும், கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு தனியே புலிகளுக்கு மட்டும் இருக்கவில்லை. சகல தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருந்தது. இந்திய மத்திய அரசு தன்னுடைய தீர்மானங்களில் அல்லது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமை சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜீவின் படுகொலையைப் புலிகள் சாதாரணமாகக் கருதினார்கள். இந்தியா அப்படி அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய யதார்த்தத்தின்படி இந்தியாவால் அந்தக் கொலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் பிரபாகரனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவ்வாறு அவர் நம்ப விரும்பினார். தமிழக எழுச்சி நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பிரபாகரனுக்கு நம்பிக்கையூட்டினார். இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது. நீண்டகால ஈழப்போராட்ட ஆதரவாளர்களாக இருக்கும் நெடுமாறன் போன்றோர், மக்கள் திரட்சியை ஓரளவுக்குக் கொண்ட ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்குகளுக்கும் ஒரு எல்லையுண்டு. அதிகாரத்திலிருக்கும் தரப்பைத் தவிர பிற சக்திகளின் ஆதரவுகளுக்கு ஒரு வரையறை உண்டு என்ற விசயங்களையெல்லாம் பிரபாகரன் பிந்தியே புரிந்துகொண்டார். இதேவேளை மாற்று நடவடிக்கைக்கான அவகாசமே இல்லாமல் மகிந்த அரசு அரசியல் நடவடிக்கைகளையும் இராணுவத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது.

சர்வதேசத் தரப்பை ஒரே முகப்படுத்திய சிங்கள இராசதந்திரம் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், பிரித்தானியா எனச் சகல நாடுகளில் இருந்தும் ஆயுத உதவிகளையும் போர்த்தொழில் நுட்பத்தையும் அரசியல் ஆதரவையும் பெற்றுக்கொண்டது. மகிந்த ராஜபக்சே எந்த விளைவுகளுக்கும் முகம் கொடுக்கத் தயார் என்ற நிலையில் தீர்மானங்களை எடுத்தார். ஏற்கனவே பெற்றிருந்த வெற்றிகள் சிங்களத் தரப்புகள் அத்தனையையும் போருக்கு ஆதரவாகத் திரட்டின. பிரபாகரன் எல்லோருடைய வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளானவர் என்ற அடிப்படையில் தமக்குள் முரண்கொண்ட சக்திகளும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டன. தமிழர்களோ – புலிகளோ நெருக்கடியில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள எந்த நண்பர்களும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இதேவேளை இந்த இராணுவத் தாக்குதல்களால் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல் இராணுவக் கட்டமைப்பும் ஆட்டம் கண்டது. குறிப்பாகப் புலிகளின் வெடிபொருட் தொழிற்சாலைகள் இடப்பெயர்வுக்கும் குண்டுவீச்சுக்கும் இலக்காகின. என்றபோதும் அவர்களின் உற்பத்திகள் நடந்துகொண்டேயிருந்தன. ஆனால் வரையறுக்கப்பட்ட அளவில் இறுதிவரை தாக்குதலை நடத்தும் திறனை இதன் மூலம் பிரபாகரன் தக்கவைத்திருந்தார்.

புது மாத்தளன், அம்பலவன் பொக்களையில் ஏப்ரல் 19, 20ஆம் திகதிகளில் இராணுவமும் உள்நுழைந்தவுடன் மாறிய நிலைமைகள் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தன. கடலில் தீவிரக் கண்காணிப்பு, சிறிய நிலப்பகுதி, வெளிச்செல்ல முடியாத அளவுக்குச் சுற்றிவளைப்பு-இராணுவ வளையத்தின் இறுக்கம், தளர்வடைந்த தளபதிகள், எந்தப் போருபாயத்தாலும் இனி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை நிச்சயமாகிவிட்டது. ஆனால், அப்போதும் தங்களால் போரில் வெற்றிபெற முடியும் என அவர்கள் சனங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலி போர் வெற்றி குறித்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளையும் அறிவிப்புகளையும் செய்துகொண்டேயிருந்தது. ஆட்பிடிப்பும் குறைவில்லை. அதேவேளை புலிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தனர்.

இப்பகுதிகளில் இருந்து சனங்கள் புலிகளின் தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் சென்றனர். கடலில் பயணம் செய்தோரை நோக்கிக் கடற்புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், தாக்குதல்களுக்கு இலக்கான படகுகளைத் தவிர ஏனையவை தப்பிச் சென்றுவிட்டன. இரவிரவாகப் படகுகள் புல்மோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சென்றன.

மாத்தளன் பிரதேசம் படைக்கட்டுப்பாட்டுக்கு வந்தபோது அங்கே இயங்கிவந்த கப்பல்துறையை வன்னியில் இருந்த ஒரே அரசாங்க அதிகாரியான பார்த்தீபன் முள்ளிவாய்க்காலுக்கு மாற்றும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். புலிகளும் அதை விரும்பினர்.

புது மாத்தளன், அம்பலவன் பொக்களை, வலைஞர் மடம் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களைத் தவிர ஏனையோர் இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்கினர். இது முல்லைத் தீவு நகரத்தின் நுழைவாயிலில் உள்ள பகுதி. சிறு கிராமம். ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தச் சிறு கிராமங்கள் இரண்டிலும் நெரிசலாகத் தங்கினர். பலருக்குத் தார்ப்பாலின் கூடாரங்களே இல்லை குளிப்பில்லை. சாப்பாடில்லை. பதுங்கு குழியில்லை. போவதற்கு வழியில்லை. அங்கே தங்கவும் முடியாது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தது. சனங்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். புலிகளின் தலைமை இந்தப் பகுதியினுள்ளேயே சிக்கியிருக்கிறது என்பதை இராணுவத் தரப்பு உறுதி செய்திருக்க வேண்டும். எனவே முழு முனைப்போடு தாக்குதல் நடந்தது.

இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தீவிரப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டங்களின் மூலம் பிரிட்டனிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று பிரபாகரன் நம்பினார். சில புலம்பெயர் தமிழ் முக்கியஸ்தர்கள் பிரபாகரனுக்கு இந்த வகையில் நம்பிக்கையூட்டியதாக தகவல்கள் உண்டு. வேறு வழியோ கதியோ இல்லாதபோது இவ்வாறு நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. எனவே புலம்பெயர் தமிழர்களை அவர் முழு நம்பிக்கையோடு நம்பியிருந்தார். அவர்களின் அந்தப் போராட்ட இயந்திரத்தை அவர் முழு வேகத்தோடு இயக்கினார். இதற்கு நல்ல ஆதாரம் புலிகளின் புலம்பெயர் ஊடகங்கள். வன்னியிலிருந்து லண்டனில் இருந்து இயங்கும் மிஙிசி வானொலிக்குத் தகவல்களைத் தொலைபேசி மூலமாக வழங்கிய புலிகளின் சர்வதேசப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் (இவர் தமிழ்ச் செல்வனின் மனைவியினுடைய உடன் பிறந்த சகோதரர்) விடுத்த கோரிக்கையும் தெரிவித்த கருத்துகளும் இதற்கு ஆதாரம். இவரே வெளிநாடுகளில் நடந்த போராட்டங்களை இணைந்து நடத்தினார்.

இந்தச் சந்தர்ப்பங்களில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சிறிலங்காவுக்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். வவுனியா அகதி முகாம்களுக்கும் சென்றிருந்தனர். ஐ.நாவிலும் இலங்கை விவகாரம் உரத்த தொனியில் பேசப்படுவதான ஒரு தோற்றம் உருவாகியது. ஐ.நா செயலரின் சிறப்புத் தூதுவராக விஜய் நம்பியார் கொழும்புக்கு விரைந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டங்களும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒபாமா நிர்வாகமும் இலங்கை நிலவரம் குறித்துக் கவனத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதற்கு அல்லது புலிகளின் தலைமையை ஏதோவொரு வகையில் காப்பாற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கை புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மக்களின் ஒரு சிறுபகுதியினருக்கும் இருந்தது. ஆனால், நிலைமைகளைச் சரியாக அவதானிப் போருக்கும் அரசியல் ஞானமுடை யோருக்கும் இவற்றில் சிறு நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏனெனில் யுத்தத்தை நடத்திய தரப்புகளே இவைதானே. சர்வதேச அரசியல் பகைப்புலத்தில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திய இந்த நாடுகள் தமது நாடுகளில் தடைசெய்த புலிகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன என்ற யதார்த்தம் அரங்கேறியது.

பிரபாகரனுக்கு இராணுவரீதியிலும் மாற்று வழிகள் இல்லை என்றாகிவிட்டது. அரசியலிலும் வேறு தெரிவுகள் இல்லை. சர்வதேசப் பரபரப்பு இருந்ததே தவிர நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே சிறிலங்கா அரசு இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்கு இன்னும் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அந்தப் பகுதிக்கு உணவு, மருந்துடன் கப்பலை அனுப்பிக் கொண்டு, அதே சமயத்தில் பீரங்கிக் குண்டுகளையும் அங்கே ஏவியது.

மிஞ்சிய புலிகளின் கதையும் கதியும் இங்கே தான் வரலாற்றில் தீவிரக் கவனத்தைப் பெறும்வகையில் அமைந்திருந்தது. பிரபாகரன், அவருடைய குடும்பம், பொட்டம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை, கேனல் பானு, கேனல் ஜெயம், கேனல் ரமேஷ், பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இங்கேதான் இருந்தனர். இப்போது பிரபாகரன் தான் அதிகம் நம்பிய துப்பாக்கியால் எதையும் செய்ய முடியாது என்பதை முழுதாக உணர்ந்திருந்தார். ஆனால் எதற்கு மாற்றீடாக எதையும் செய்ய முடியாது என்றும் அவருக்குத் தெரிந்தது. எல்லாவற்றுக்கும் காலம் கடந்த நிலை என்ற யதார்த்தம் முன்னின்றது.

இறுதி மூச்சை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்று பிரபாகரனும் அந்த மூச்சை எப்படிப் பறிப்பது என்று அரசாங்கமும் இறுதிநிலையில் இருந்தன. மெல்ல மெல்லப் படைத்தரப்பு முன்னேறியது. மனித உரிமை மீறல்களைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாத அரசாங்கம் போரை ஈவிரக்கமில்லாமல் நடத்தியது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கைகள், கண்டனங்களையெல்லாம் சிறிலங்கா அரசாங்கம் தூக்கித்தூர வீசிவிட்டது. ஏற்கனவே நவநீதம் பிள்ளையின் அறிக்கைகளும் இவ்வாறு தூக்கியெறியப்பட்டிருந்தன. வெற்றியை முழுதாகப் பறிக்கும் வெறியில் சரத்பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சேவும் இருந்தனர்.

அரசாங்கத்தின் திட்டப்படி மே 20ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்தது.

பெரும் புகழோடும் தீராத கண்டனங்களோடும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த வினோதமான கலவையாகவும் இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிறிலங்கா அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்புவதா விடுவதா என்ற தடுமாற்றத்தில் பல தரப்பினரும் இருந்தனர். அதற்கான காரணங்களும் உண்டு. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று முன்னரும் இந்திய அரசும், சிறிலங்கா அரசும் பல தடவைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அந்தச் செய்திகளுக்குப் பின்னரும் பிரபாகரன் உயிருடனேயிருந்தார். அடுத்துப் பிரபாகரனோ அவருடைய குடும்பமோ என்றைக்கும் மக்களுடன் வாழ்ந்ததும் இல்லை, வெளியரங்கில் நடமாடியதும் இல்லை. அவருடைய நடமாட்டம், நடவடிக்கைகள் குறித்துப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள், தளபதிகளுக்கே எதுவும் தெரியாது. எனவே அவருடைய பாதுகாப்பு அணியினரையும் பொட்டம்மான், சூசை ஆகியோரையும் தவிர வேறு எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர் இரட்ணம் மாஸ்டர் எனப்படுபவர். இவரும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தது.

மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடு – சவக்களை என்று சொல்வார்களே – இராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

இப்போதுள்ள சில கேள்விகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா? கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி? படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா? என்பது ஏனெனில் பிரபாகரனின் தலையில் அடிகாயமே காணப்படுகிறது என்று பலரும் கேட்கிறார்கள்.

உண்மையில் இந்தக் கேள்விகளையும்விட முக்கியமானவையும் தேவையான கேள்விகளும், பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.

மக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளே இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாவற்றையும் தானே எடுத்து தானே போட்டுடைத்த மனிதராக வரலாற்றில் மாறிவிட்டார் அவர்.

பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.

(நன்றி காலச்சுவடு)

தமிழ் விக்கிப்பீடியா – முனைவர் மு. இளங்கோவன்

ilnco.jpgகலைக்களஞ்சியம் என்பது எழுத்துவடிவிலான அறிவுத்தொகுப்பு என்பர். ஒவ்வொரு மொழியிலும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுளன. இக்கலைக்களஞ்சியங்கள் அம்மொழியின் அறிவுச்செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைகிறது. இம்முயற்சி உலகெங்கும் நடைபெற்று வருகிறது. பிரஞ்சுமொழியில் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியங்கள் அந்த நாட்டில் வழங்கிய பழைய கலைகளைப் பதிவு செய்தன. பிரான்சில் மக்கள் புரட்சி ஏற்படவும் ஐரோப்பிய நாடுகளில் தொழில்புரட்சி ஏற்படவும் கலைக்களஞ்சியங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.

ஒரு மொழியில் உள்ள சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி ஆகும். அகராதியில் சொல்லுக்கு உரிய பொருள், சிறு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு சொல்லின் அனைத்து விவரங்களையும் பெற இயலாது. ஆனால் கலைக்களஞ்சியங்களில் அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம். அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் அகரவரிசையில் சொற்களுக்கு விளக்கம் தருகின்றன. ஒரு பொருள் சார்ந்தும் துறை சார்ந்தும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கும் முயற்சி அறிவார்வம் நிறைந்த சமூகத்தில் இயல்பாகவே உள்ளது. தமிழ்க் கலைக்களஞ்சியம் பல்லாண்டுகளுக்கு முன் வந்தாலும் அதனை மறுபதிப்பு செய்யும் ஆர்வம் நமக்கு இல்லாமல் போனது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்று இசைக்கு ஒரு கலைக்களஞ்சியத்தை முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் வழியாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பிரெஞ்சு மொழியில் கலைக்களஞ்சியம் வெளியிட்ட டெனிஸ் டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார். கலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுவதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந்தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் சேவையாகவும் இது அமையும்.(விக்கிப்பீடியா மேற்கோள்)

அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. ஒவ்வொரு கணிப்பொறி நிறுவனமும் இணையத்தளங்களும் தங்கள் மென்பொருளில் அகராதியைப் பார்வையிடும் வசதியை வைத்துள்ளன. அதுபோல் இணையத்தில் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடும் வசதியையும் வைத்துள்ளன. இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா (wikipedia) என்ற கலைக்களஞ்சியம் உள்ளது.

விக்கி (Wiki) என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு “விரைவு’ என்னும் பொருள் உண்டு. விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி (wiki)+ என்சைக்கிளோபீடியா (Encyclopedia) என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிப்பீடியா (wikipedia) என்ற சொல் உருவானது.

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத் திட்டத்தை விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனம் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு சனவரியில் ஆங்கில மொழியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.பின்னர் பல மொழிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. விக்கிப்பீடியா தொழில் நுட்பம் உலகப்போக்கு உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.இதில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகள் தாங்கி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு உலக அளவில் 68 வது இடத்தில் உள்ளது.

அமெரிக்க இணையத்தொழில் வல்லவரான ஜிம்மி வேல்சு என்பவரும் அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கர் அவர்களும் இணைந்து இந்தக் களஞ்சியப் பணியை தொடங்கினர். ஜிம்மி வேல்சு முன்பு நூப்பிடியா என்ற களஞ்சியம் நடத்தியவர். அந்தக் களஞ்சியத்தில் வரையறை உண்டு. முழுக்கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. பின்னாளில் உருவாக்கிய விக்கிப்பீடியா கட்டற்ற தளமாகத் திறந்துவிடப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் கூட்டு முயற்சித் தளமாக இது உலகுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில் உள்ள அறிவுத்துறைச் செய்திகளை எழுதி விக்கிக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். இதற்குக் காலம் எல்லை கிடையாது. அறிவு வேறுபாடும், துறை சார்ந்த பேரறிவும் இருக்கவேண்டிய தேவை இல்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை எழுதி நாமே விக்கிக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய,விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளி விவரங்களை இணைக்கலாம். இத்தகு வசதியுடைய விக்கிக் கலைக்களஞ்சியத்தில் தமிழ் முயற்சி 2003 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கில இடைமுகத்துடன் வெற்றிடமாகவே முதல் பதிவு ஒரு சோதனை முயற்சியாக இருந்தது.

2003 நவம்பர் மாதம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் அவர்கள் ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்துப் பல கட்டுரைகளை உருவாக்கி விக்கியின் தமிழ்ச்சேவையை வளப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் இவர் தமக்கு அமையும் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்திப் பல துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கித் தமிழ்விக்கிப் பகுதிக்குப் பங்களிப்பு செய்தார்.இவர் இதுவரை 2760 கட்டுரைகள் வரைந்துள்ளார்.

இந்திய மொழிகளில் தெலுங்கு(42,918), இந்தி(32,681), மணிப்புரி(23,414), மராத்தி(23211) என்ற அளவில் கட்டுரைகள் உள்ளன. தமிழில் கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் தரமுடையதாகவும், செறிவுடையதாகவும் உள்ளன. ஆனால் இந்தியாவின் பிறமொழிக் கலைக்களஞ்சியங்களில் கட்டுரைகள் எண்ணிக்கை அதிகம் என்றாலும் அவை தானியங்கி முறையில் எண்ணிக்கை மிகுத்துக்காட்டப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. அதுபோல் சிறு, சிறு குறிப்புகளும் கட்டுரைகளாகக் கணக்கிடப்பட்டுள்ளனவாம்.

தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு அயலகத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கியுள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் 9000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனால் அனைவரும் தமிழ் விக்கி வளர்ச்சிக்கு எழுதுவதில்லை. குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவர்களாக ஐம்பது பேர் தேறுவர். இதிலும் தீவிரமாக எழுதுபவர்கள் சற்றொப்ப இருபத்தைந்து பேர் இருப்பர்.

தமிழ் விக்கியில் பலர் பங்களிப்பு செய்தாலும் குறிப்பிடத்தக்க சில முன்னோடிகளை நன்றியுடன் நினைவுகூர்வது பொருத்தமாகும். திருவாளர்கள் மயூரநாதன், சொ.இல.பாலசுந்தரராமன், நற்கீரன், இரவிசங்கர், சிவகுமார், உமாபதி, கனகசிறீதரன், பேரா.செல்வக்குமார், பேராசிரியர் வி.கே,குறும்பன், கார்திக் பாலா, டானியல் பாண்டியன்,தேனி எம்.சுப்பிரமணி, அருண், செல்வம், பரிதிமதி (பட்டியல்நீளும்) ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பல்வேறு துறைகளில் பேரறிவு பெற்றவர்களாக விளங்குகின்றனர். தகவல் தொழில் நுட்ப அறிவு மிகுதியானவர்களாகவும் உள்ளனர். தமிழுக்கு உழைக்க வேண்டும் எனவும் தமிழ் உலகின் பிறமொழிகளுக்குத் தாழ்ந்தது இல்லை என நிறுவும் வேட்கை கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். எனவே இவர்களின் முயற்சியில் பல துறை சார்ந்த கட்டுரைகள் தமிழில் மிகுந்துள்ளன. விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்குவதால் யாரும் எழுதலாம். குறிப்பிட்டவர்கள்தான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எந்தப் பொருள் பற்றியும் எழுதலாம். எனவே இன்று தமிழ் விக்கியில் தகவல் தொழில்நுட்பம், கணினித்துறை, கணக்கு, மின்னியல், கட்டடக்கலை, உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த பலர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். மருத்துவம், சட்டம், பொருளியல் போன்ற துறைகளில் இன்னும் மிகுதியான கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.

விக்கிப்பீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஓரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். எனவே பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகமாவர். எனவே துறை சார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம்,தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள்,சடங்குகள், மனக்கணக்குகள் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். கட்டுரைகளாக இருப்பவை கலைக்களஞ்சியத்திலும் பாடல், பழமொழிகள் இவற்றை மூலம் என்ற விக்கி பகுதியிலும் பதிவு செய்யலாம்.

விக்கிப்பீடியாவில் தமிழ்ச்செய்திகளை எப்படி உள்ளிடுவது?

விக்கிப்பீடியாவில் செய்திகளை உள்ளிடப் பல வழிகள் உள்ளன. முதலில் நமக்கு என விக்கி பக்கத்தில் ஒரு பயனர் கணக்கு தொடங்க வேண்டும். நமக்கு என ஒரு கடவுச்சொல்லும் தருதல் வேண்டும். விக்கியின் முகப்புப் பக்கத்தில் நாம் உள்ளிட நினைக்கும் சொல்லைத் தட்டச்சிட்டால் அந்தச் சொல் பற்றி முன்பு விளக்கம் இருந்தால். அதனை விக்கி காட்டும். அதன் வழியாகச் சென்று புதிய விளக்கம் திருத்தம் செய்யலாம். பயனர் கணக்கு இல்லாமலும் ஒருவர் எழுதிய கட்டுரையைத் திருத்தலாம். அவ்வாறு செய்பவர்களின் கணிப்பொறி ஐ.பி.எண் விக்கியின் வரலாற்றுப்பகுதியில் பதிவாகும். எனவே விக்கிப்பீடியாவில் கட்டுரை உள்ளிட்டாலும், திருத்தங்கள் மேற்கொண்டாலும் அதன் துல்லியமான பதிவுகள் நம்மையறியாமலே பதிவாகிவிடும்.

நாம் தேடும் சொல்லுக்குரிய விளக்கம் அல்லது கட்டுரை இல்லை என்றால் இந்தத் தலைப்பில் கட்டுரை வரைய விருப்பமா என்ற ஒரு குறிப்பு இருக்கும். ஆம் என நாம் நினைத்தால் அங்குத் தோன்றும் அந்தப் பெட்டியில் கட்டுரைக்குரிய செய்தியை ஒருங்குகுறி எழுத்தில் தட்டச்சிட்டுப் பக்கத்தைச் சேமிக்கவும் என்றால் நாம் எழுதிய கட்டுரை விக்கியில் இணைந்துவிடும்.இவ்வாறு வெளியிடும் முன்பாக இணைப்பு வழங்கவும், படங்கள்,அட்டவணைகள் இணைக்கவும் வசதிகள் உள்ளன. மேலும் நாம் தட்டச்சு இட்டதை வெளியிடுவதற்கு முன்பாக வடிவமைப்பு, எழுத்துப் பிழைகளைச் சோதித்துக்கொள்ளவும் முடியும். அங்குத் தோன்றும் பெட்டியில் உள்ள அடையாளக் குறிகளை அழுத்தி உரிய தேவைகளைப் பெறலாம்.

முதலில் பழகுபவர்கள் அங்கு உள்ள மணல்தொட்டியில் பழகிப் பின்னர் நம் பதிவுகளை முறையாக இடலாம். சிறு தவறுகளுடன் வெளியிட்டால் நம்மைப் பார்த்து மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்று யாரும் தாழ்வுமனப்பான்மையடைய வேண்டாம். மூத்த பயனாளர்கள் நாம் செய்துள்ள தவறுகளைத் திருத்தி அந்தக் கட்டுரைகளை மிகச்சிறந்த கட்டுரைகளாக மாற்றவும் வாய்ப்பு உள்ளது.

விக்கியில் கட்டுரைகள் வரைபவர்கள் பல தரத்தினர். திறத்தினர். சிலர் துறை சார்ந்த கட்டுரைகளை எழுதுவார்கள். சிலர் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வரைவார்கள். சிலர் பிறர் வரைந்த கட்டுரைகளை அனுமதி பெற்று அல்லது பிறர் விருப்பத்திற்கு இணங்க விக்கியில் வெளியிடுவர். அவ்வாறு பிறர் கட்டுரை என்பதற்கு இணைப்பு வழங்கியோ அவர் பெயர் குறித்தோ பெருந்தன்மையாக நடந்துகொள்வர். பதிப்புரிமை விக்கியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு இல்லை. யார் வேண்டுமானாலும் மாற்றவும் திருத்தவும் செய்வர். விக்கியின் கட்டுரைகள் தரமுடையனவாக இருந்தாலும் பார்வைக்கு,தகவல் அறிய உதவுமேயல்லால் ஆதாரப்பூர்வ சான்றாகக் காட்ட இயலாது.

விக்கியில் தமிழ்க் கட்டுரைகள் பல துறை சார்ந்து வெளிவருவதால் புதிய கலைச்சொற்கள் நமக்குக் கிடைத்துள்ளன. முன்பு ஒருவர் ஒரு கலைச்சொல்லை உருவாக்கினால் அந்தச் சொல் வெளியில் தெரிவதற்கும் பயன்பாட்டுக்கு வருவதற்கும் பலகாலம் ஆகும்.ஆனால் இன்று புதிய கலைச்சொற்கள் அறிமுகமானால் அதுபற்றிய கலந்துரையாடல்கள் இணையத்தில் உடன் நடந்து திருத்தம் தேவை என்றால் திருத்தத்துடன் அல்லது சரியான சொல் என்றால் உடன் வழக்கிற்கு வந்துவிடுகின்றன. அந்த வகையில் இற்றைப்படுத்தல், ஒருங்குகுறி, சுட்டி, மென்பொருள், வன்பொருள், குறுவட்டு, உலாவி, இணையம், வலைப்பூ, திரட்டி, பயனர், கடவுச்சொல் என்ற சொற்களைச் சான்றாகக் காட்டலாம்.

உயர்கல்வியில் தமிழ் நடைமுறைக்கு வரும்பொழுது மிகச்சிறந்த கட்டுரைகள் தமிழ் விக்கியில் வெளிவர வாய்ப்பு உண்டுஅதுபோல் ஆட்சியிலும் அலுவலிலும் தமிழ் முழுமையாக நடைமுறைக்கு வரும்பொழுது அனைவரின் பயன்பாட்டுக்கு உரியதாக விக்கி மாறும்.

கற்றவர்கள் விக்கியில் எப்படி பங்களிக்கலாம்?

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது மட்டும் நம் கடமை என நினைக்க வேண்டாம். முன்பு எழுதிய கட்டுரைகளை நாம் திருத்தலாம். எழுத்துப்பிழை, தொடர்ப்பிழை,பொருட்பிழைகளைக் களையலாம். படங்கள், புள்ளி விவரங்களை இணைக்கலாம். விக்கியில் கட்டுரை எழுதுவதைக் கல்வி நிறுவனங்களில் ஒரு பாடமாக அல்லது செய்முறைப் பயிற்சியாக மாற்றலாம்.

விக்கிப்பீடியா களஞ்சியமாக மட்டும் இல்லாமல் விக்சினரி என்ற பெயரில் அகரமுதலியாகவும் உள்ளது. விக்கி செய்திகள் என்ற பகுதியில் செய்திகளைக் காணலாம். விக்கி மேற்கோள் என்ற பகுதியில் சிறந்த மேற்கோள்களின் தொகுப்பு காணப்படும். விக்கிமூலம் என்ற பகுப்பில் பல்வேறு மூல ஆவணங்கள் இருக்கும். விக்கி மேப்பியா என்ற வசதியைப் பயன்படுத்திப் புவி அமைவிடம் விளக்கும் படங்களைக் காண முடியும். நாம் இருந்த இடத்திலேயே நாம் பார்க்க நினைக்கும் இடத்தைப் பார்த்துவிட முடியும். விக்கி கட்டற்றக் கலைக்களஞ்சியம் என்னும் தன் பெயருக்கு ஏற்ப கட்டற்ற தகவல்களைத் தாங்கி நிற்கிறது.

விக்கிக்கு எனச் சில நெறிமுறைகள் உள்ளன. கலைக்களஞ்சிய வடிவில் இருத்தல், கட்டுரைகள் நடுநிலையுடன் இருத்தல். கட்டற்ற உள்ளடக்கம், அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள், இறுக்கமான சட்டத் திட்டங்கள் இல்லாமை என மயூரநாதன் இதனை நினைவுகூர்வார்.

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் விக்கியைத் தமிழர்கள் அனைவரும் அறியவேண்டும் என்ற நோக்கில் இன்று தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விக்கிப்பீடியா பயிலரங்கம் நடைபெறுகிறது. தொழில் நுட்பம் அறிந்தவர்கள் விக்கியின் பல்வேறு பயன்களை விளக்கி விக்கியில் கட்டுரைகள் உள்ளிடும் முறையைப் பயிற்றுவிக்கின்றனர். படங்கள், விவரங்கள், இணைப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கும் முறையையும் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கி வருகின்றனர். கலைக்களஞ்சியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் செலவாகும். பாதுகாக்க இடவசதி வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அறிவுக்கருவூலத்தை அனைவரும் பயன்படுத்துவோம். பலதுறை அறிவு பெறுவோம்.

http://muelangovan.blogspot.com/