கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஏற்பட்டிருந்த ஆயுத வன்முறை கலந்த இனநெருக்கடி 2009ம் ஆண்டு மே 19ம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் போரின் கொடுமைகள் மக்களின் வாழ்வில் பாரிய துன்பத்தை விளைவித்தது. லட்சக்கணக்கான மக்கள் தமது நிரந்தர இருப்பிடங்களிலிருந்து வெளியேறி முகாம்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இராணுவக் கட்டுப்பாடுகள் போதுமான வசதியற்ற தன்மை, குடும்பங்கள் பிரிக்கப்பட்டமை, புலிகளின் ஆதரவாளர்கள் போராளிகள் என பலதரப்பட்டோர் பிரிக்கப்பட்டு தனித்தனியான முகாம்களில் வைக்கப்பட்டமை எனப் பல சிக்கல்கள் இடம்பெற்றன. இராணுவக் கட்டுப்பாடுகள் காரணமாக எழுந்துள்ள நிலைமைகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள், பிரச்சாரங்கள், மிகைப்படுத்தல்கள் அரசியல் மற்றும் பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. சர்வதேச மனிதாபிமான உதவிகள் தடைசெய்யப்பட்டு அரசாங்கமே சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
நாட்டின் பாராளுமன்றத் தேர்தல் அண்மித்திருந்த வேளையில் ஜனாதிபதித் தேர்தலும் சமகாலத்தில் இடம்பெறலாம் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தன. ஜக்கிய மக்கள் முண்னணி, ஜக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிற்குச் சமனான ஆதரவு காணப்படுவதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன. இந்த நிலைமையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் வாக்குகளை அரசு தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற செய்திகள் ஒரு புறமும், மறுபுறத்தில் இத்தடுப்பு முகாம்கள் அந்த மக்களின் நிரந்தர வாழ்விடங்களாக மாற்றப்படலாம் என்ற அச்சங்களும் எழுப்பப்பட்டு, அந்த மக்களின் சொந்த இடங்களுக்குத் திரும்ப அரசு அனுமதிக்க வேண்டும் என்ற வற்புறுத்தல்களும் எழுந்தன.
முட்கம்பி வேலிகளுக்குள் தடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை தமது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் கைங்கரியம் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது கட்டாய கருச்சிதைவு, திட்டமிட்ட படுகொலைகள் இடம்பெறுவதாக என பலதரப்பட்ட பிரச்சாரங்கள் செய்திகள் வெளியாகின. இவ்வாறான மிகவும் துக்ககரமான பின்ணணியில் பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ஜனநாயக சக்திகள் கூடி அடுத்து எடுக்க வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடினார்கள். பல்வேறு விவாதங்களுக்குப் பின்னர் பிரச்சினைகளுக்கான குறைந்தபட்ச அடிப்படையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான வழி வகைகள் குறித்து ஆராய்வது என முடிவு செய்தார்கள்.
குறைந்தபட்ச புரிந்துணர்வு என்பது பிரச்சினைகள் குறித்து பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்டு இருப்பதாலும், அவர்கள் மத்தியிலே புரிந்துணர்வுக்கான வாய்ப்புகள் குறைந்து காணப்படுவதாலும் அவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணம் காரணமாகவும் சில முயற்சிகளை எடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர். குறைந்தபட்ச புரிந்துணர்வுக்கான அடிப்படைகள் என்பது உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கம் கவனத்தில் எடுக்கப்பட்டது. அந்த நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட அனுபவம் கொண்டவர்கள், அரசியல் அமைப்புகளில் பணி புரிந்தவர்கள், அரசியல் தொர்பாக கல்வி அறிவு பெற்றவர்கள், ஜனநாயக செயற்பாடுகளில் நாட்டம் கொண்டவர்கள் எனப் பல தரப்பட்டோர் இணைந்த குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் நாட்டின் பிரச்சினைகளின் மிக முக்கியமான அம்சங்களைத் தேர்வு செய்து அவைபற்றி குறைந்தபட்ச தீர்மானங்களை எட்டுவதற்குக் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு அமர்வுகள் மூலமாக மிக நீண்ட விவாதங்கள், எழுத்து ழூலமான கட்டுரைகள் என்பன சமர்ப்பிக்கப்பட்டன.
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் பல ஆயிரக்கணக்கானோர் இன்னமும் அம்முகாம்களில் சுயவிருப்பத்தின் பேரில் தங்கியுள்ளனர். இதற்கான காரணம் இம்மக்கள் தத்தமது இருப்பிடங்களுக்குச் சென்று சுய வாழ்வை ஆரம்பிப்பதற்கான உள் கட்டமைப்புக்கள் எதுவுமே இல்லாமையால் அங்கு தங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. இம்முகாம்களில் காணப்பட்ட இராணுவக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் சமூக ரீதியான ஏற்றத் தாழ்வுகள், பொருளாதார பின்புலங்கள், கூலி உழைப்பை நம்பி வாழும் பரிதாப நிலைமை, இதனால் ஏற்படக்கூடிய சமூகக் கட்டுப்பாடுகள் என்பன பிரச்சினைக்குரிய அம்சங்களாகவே உள்ளன. இந்த மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்தவர்களாகும். இவர்களுக்கான விவசாய நிலங்கள் இன்னமும் நிலக்கண்ணி அகற்றப்படாமல் உள்ளன. விவசாயத்தை மேற்கொள்வதற்கான உபகரணங்கள், பசளைவகைகள், விதை வகைகள் என்பன போதுமான அளவில் வழங்கப்படாமையாகும். வீட்டு வசதிகள், நீர்ப்பாசன வசதிகள் என்பன போதுமான அளவில் இல்லையெனில் விவசாயத்தை மேற்கொள்ள முடியாது.
தற்போது தற்காலிக வீடுகளை அமைப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டபோதிலும் அவற்றை நிர்மாணிப்பதற்கான நிதி உதவிகள் போதுமானதாக இல்லை என்பது பொதுவான குறைபாடாக உள்ளது.
விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் நிரந்தர குடியிருப்புகளில் வாழ்பவர்களாகும். இக்குடியிருப்புகள் என்பது வெறுமனே வீடுகள் மட்டுமல்ல அச்சமூகத்திற்கான கல்வி சுகாதாரம் என்பவற்றிற்கான உள் கட்டுமானங்களும் தேவைப்படுகின்றன. இவை யாவற்றையும் முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்குமெனினும் குறைந்தபட்ச தேவையாக அக் குடியிருபபுகளுக்கு அண்மையில் தற்காலிக முகாம்களில் பாடசாலை வசதிகளையும், நடமாடும் சுகாதார சேவைகளையும் அதேபோன்று நடமாடும் அரச சேவைகளையும் வழங்க முடியும்.
மக்களின் பல்வேறு இன்னோரன்ன தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஆளணி, நிதி திட்டமிடல் என்பனவற்றை நிறைவேற்றுவதற்கான பலம் அரசிடமே உள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மக்களின் வாழ்வாதாரங்கள் என்பது உடனடியான ஆரம்பிக்கப்பட வேண்டியவைகளாகும். இவற்றினை அரசியல் தீர்வுகளோடு இணைத்துச் செல்வது தற்போதுள்ள சகல புறச் சூழல்களையும் கவனத்திற் கொண்டு பார்க்கையில் பொருத்தமற்ற அணுகுமுறையாகவே உள்ளது. இவை சரியான ராஜதந்திர அடிப்படையில் திட்டமிட்டுச் செயற்பட வேண்டியுள்ளது.
தமிழ்ப் பிரதேசங்களில் செயற்படும் அரசியற் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள் மத்தியிலே பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தெளிவான தத்துவார்த்த அடிப்படையிலான கொள்கைகளோ, திட்டமிடுதல்களோ இல்லாத நிலையில் மக்களின் பொருளாதாராத் தேவைகள் தனியாக அணுகப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது. போரினால் சீரழிந்துள்ள ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது தெளிவான திட்டமிடல் மூலம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இத்திட்டமிடல் என்பதன் அடிப்படைகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது குறித்து கருத்துப் பரிமாறல்கள் அவசியமாகிறது. ஒரு புறத்தில் அபிவிருத்திபற்றிப் பேசப்படுகின்ற போதிலும் இவ் அபிவிருத்தி பற்றிய திட்டமிடுதலில் அப்பிரதேச மக்களின் பங்களிப்பு பெறப்படாத நிலையும், கொழும்பிலிருந்தே அவை திட்டமிடப்படுவதும் மறைமுகமான அரசியல் நோக்கங்கள் கொண்டவைகளாக காணப்படுகின்றன. இந்நிலையில் குறைந்தபட்ச ஒருங்கிணைவு என்பது சம்பந்தப்பட்ட பிரதேச மக்களின் பங்களிப்பினை வற்புறுத்துவதாக அமைதல் அவசியமாகிறது.
இதற்கான பிரதான அம்சமாக மனிதவள அபிவிருத்தி அம்சங்களே கவனத்தில் கொள்ளப்பட்டன. வடக்கு, கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்கள் மனிதவள அபிவிருத்தியை மையமாகக் கொண்ட திட்டங்கள் என்பதற்குப் பதிலாக லாபநோக்கை மையமாகக் கொண்டனவாக உள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்பை வளங்குவதோடு, மனித சக்தியை மேலும் அதிகரிப்பதற்கான நீண்ட கால நோக்கங்களை நிறைவேற்றுவதாகவும் அமைதல் வேண்டும். உற்பத்தித் திறன் என்பது நிலத்தின் வளத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மனிதவளத்தின் உற்பத்தி சக்தியையும் மேம்படுத்த வேண்டும். எனவே நிலைத்து, நீடித்து வளரக்கூடிய உற்பத்தி முறைகள் அறிமுகம் செய்யப்படுதல் வேண்டும்.
மனித வளங்களை அபிவிருத்தி செய்தல் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, குடிப்பரம்பலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை கவனத்தில் கொள்ளாமல் இருக்கமுடியாது. தற்போது குடியேற்றம் என்பது தற்போது அரசியல் சார்ந்த பிரச்சினையாக மாற்றம்பெற்று வருகிறது. ஒரு புறத்தில் காலநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும், மறுபுறத்தில் குடிசனப் பெருக்கமும், குடிப்பரம்பலுக்கான பிரதான காரணிகளாகின்றன. இவை அரசின் இனவாத அரசியலுக்கு இன்னொரு காரணியாக அமைகிறது. எனவே இப்பிரச்சினையை அர்த்தமுள்ள விதத்தில் அணுகுவது அவசியமாகிறது. உலகின் தட்ப, வெப்ப நிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் ஈரவலயப் பரதேசங்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றது. மழைவீழ்ச்சி குறைவடைதல், இதனால் நதிகளின் நீர்வளம் குறைதல் என்பன அதிகரித்துள்ளன.
இயற்கையின் பாதிப்புகளால் மக்களின் குடிப்பரம்பல் பாதிக்கப்படும் அதேவேளை, பொருளாதார திட்டமிடுதலும் இன்னொரு காரணியாக அமைகிறது. போக்குவரத்து தொலைத்தொடர்பு என்பன நாட்டின் சகல பகுதிகளையும் இணைப்பதால், குடிப்பரம்பல் மேலும் இலகுவாகியுள்ளது. திறந்த பொருளாதார வசதிகள், சுதந்திர வர்த்தக வலயங்கள் என்ற பெயரில் உற்பத்தித் துறைகள் குறைவிருத்தி பிரதேசங்களில் நிறுவப்படுதல் போன்ற பல இன்னோரன்ன பொருளாதார வசதிகளும் குடிப்பரம்பலை மேலும் அதிகரிக்க உதவியுள்ளன.
எனவே குடிப்பரம்பல் என்பதை வெறுமனே அரசியற் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அர்த்தமுள்ள விதத்தில் அணுகுவது அவசியமாகிறது. இதற்கான குறைந்தபட்ச தீர்வாக அரச குடியேற்றத்திட்டங்கள் என்பது அப்பிரதேச மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும், இதற்கான திட்டமிடுதல்களில் வெளிப்படைத்தன்மை காணப்படுவதையும் வற்புறுத்தலாம். வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான அம்சங்களை கவனத்தில் கொள்ளும்போது குறிப்பாக அப்பிரதேச குடியேற்றத் திட்டங்களில் மலையக மக்களை குடியமர்த்துவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் தேயிலை, ரப்பர் உற்பத்தியில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியும், குடிசன அதிகரிப்பும் அவர்களுக்கான மீள் குடியேற்றங்களை வற்புறுத்தி நிற்கிறது.
இலங்கையின் பிரச்சினை குறித்த குறைந்தபட்ச அடிப்படைகளைக் கண்டறிவதற்கான முயற்சியில் பின்வருவன மிக முக்கிய கவனத்தைப் பெற்றிருந்தன. நாடு தழுவிய ரீதியில் காணப்படும் ராணுவ மயமாக்கல் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் காணப்படும் அதிகரித்த ராணுவ முகாம்கள், அரசியல் கட்டுமானங்களில் குறிப்பாக சிவில் நிர்வாகங்களில் ராணுவ அதிகாரிகளின் பிரசன்னம், இதனால் ஜனநாயகச் செயற்பாடுகளில் காணப்படும் கட்டுப்பாடுகள் குறிப்பாக தமிழ் மக்களின் ஜனநாயக நடவடிக்கைகள் மீது போடப்படும் அதிகரித்த கண்காணிப்புக்கள் என்பவை ஒட்டுமொத்தமாகவும், தனித் தனியாகவும் ஆராயப்பட்டன. அத்துடன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் பிரதேசங்களில் காணப்பட்ட ஜனநாயக விரோத சூழலில் இருந்து அந்த மக்கள் மீண்டும் அர்த்தமுள்ள ஜனநாயக அரசியல் வாழ்வை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதும் கலந்துரையாடப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணம் சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு ராணுவ மயமாக்கல் குறைந்தபட்ச நிலைக்குத் திரும்புதல் வேண்டும். போருக்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள் தற்போது ஓரளவு மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், தேசிய பாதுகாப்பு என்ற அம்சத்தினை அரசு உயர்ந்தபட்ச நிலையில் வைத்துக்கொண்டே இவை மேற்கொள்ளப்படுகின்றன. “தேசிய பாதுகாப்பு” என்ற அம்சம் அரசின் நீண்டகால கொள்கையாக நிலைக்கப் போகிறது என்பது மிகவும் தெளிவாகவே உணர்த்தப்பட்டு வருகிறது.
அரசின் இக் கொள்கைப் போக்கு அரசியல் ரீதியான நோக்கங்களையும் உள்ளடக்கி இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தமிழ்ப் பிரதேசங்களில் அதிகரித்த அளவிலான ராணுவ மயமாக்கல் என்பது அரசியல் தீர்வு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே அமையலாம் என்பதையும், ஜனநாயக ரீதியான அரசியல் தீர்வு தற்போது சாத்தியமில்லை என்பதையும் அடையாளப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் நாட்டின் தேவைக்கு அதிகமான அளவில் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை காணப்படுவதும் பாதுகாப்பு செலவீனம் மொத்தத் தேசிய வருமானத்தின் பெரும்பகுதியை விழுங்கி வருவதும் நாட்டின் நீண்டகால போக்கைத் தீர்மானிக்கப் போதுமானவை. அத்துடன் நாட்டின் சிவில் நிர்வாகங்களில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் நியமனங்கள் சாட்சியங்களாக உள்ளன. எனவே ராணுவ மயமாக்கல் என்பது ராணுவ முகாம்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என்பது வெளிப்படை.
எனவே ராணுவ மயமாக்கல் என்பது கடந்த 30 வருடங்களாக தமிழ்ப் பகுதிகளில் அதிகரித்துள்ளமைக்குக் காரணம் தமிழ்க் குறும் தேசியவாத சக்திகளின் அதி தீவிரவாத செயற்பாடுகளே என்பதை நாம் ஏற்றாக வேண்டும். ஆயுத வன்முறை வெறுமனே ராணுவத்திற்கு எதிரானதாக மட்டும் இல்லாமல், தமிழ்ச் சமூகம் முழுவதுமே ராணுவ மயமாக்கப்பட்டது. மொத்தத்தில் தமிழ், சிங்கள சமூகங்கள் ராணுவ மயமாக்கப்படட்டுள்ள சூழலில், தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் ராணுவ முகாம்கள் பற்றி விவாதிப்பது அர்த்தமற்றது. இவை அரசியல்த் தீர்வு, சமாதானக் கட்டுமான திட்டங்கள் ஜனநாயகப்படுத்தல், மனித உரிமைகளைப் பேணல் எனப் பல்வேறு அம்சங்கள் இணைத்ததாக அமைதல் அவசியமாகிறது.
தற்போது வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பற்றிப் பேசுபவர்கள் ஜனநாயக மயப்படுத்தல், ராணுவ மயமாக்கலை தணித்தல், மனித உரிமைகளைப் பேணுதல் போன்றவற்றை வற்புறுத்துவதை அல்லது அவற்றின் இன்றியமையாத தேவைகளை கவனத்தில் கொள்ளாது வாதிக்கின்றனர். இது ஒருவகையில் அரசின் இனவாத உள் நோக்கங்களுக்கு உதவி புரிவதாக அமைகிறது. ஜனநாயக அடிப்படைத் தேவைகளை புறம் ஒதுக்கி அபிவிருத்தி என வாதிப்பது மனித வளங்களை வளர்ப்பது என்பதைவிட கால்நடைகளின் தேவைகளுக்கான கோஷங்களாகவே உள்ளன.
அரசியல் தீர்வு பற்றிய அம்சங்கள் மிக நீண்ட கருத்துப் பரிமாறல்களையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. மனித உரிமைகளை மேம்படுத்துவது, முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மை இனங்களின ஜனநாயக உரிமைகள், தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப் படுத்துவது போன்ற அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டதாகும். எனவே ஒருசேர ஆராயப்பட்டது. குறிப்பாக தமிழர் தரப்பில் காணப்பட்ட அரசியல் தலைமைகள் அதாவது சுதந்திரத்திற்குப் பின்னதான காலப் பகுதியில் செயற்பட்டவர்களின் அணுகுமுறைகளில் காணப்பட்ட பொதுவான அம்சங்கள் ஆராயப்பட்டன. 1947ம் ஆண்டுமுதல் 2007ம் ஆண்டு வரையான 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனைகளாகக் காணப்பட்ட ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
– ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் முன்வைக்கப்பட்ட 50க்கு 50 என்ற கோரிக்கை.
– 1957ம் ஆண்டு யூலை மாதம் ஏற்படுத்தப்பட்ட பண்டா- செல்வா ஒப்பந்தம்.
– 1965ம் ஆண்டின் டட்லி- செல்வா ஒப்பந்தம்..
– 1970ம் ஆண்டு தமிழரசுக் கட்சியினரால் அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள்.
– 1976ம் ஆண்டு மே 14ம் திகதி தமிழரசுக்கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம்.
– 1980ல் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை பிரமாணங்கள்.
– 1985ல் இடம்பெற்ற திம்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள்.
– 1987ல் ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம்.
– இவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்;ட 13ம் 16ம் திருத்தங்கள்.
– 1991ம் ஆண்டில் இடம்பெற்ற மங்கள முனசிங்க தலைமையிலான ஆணைக்குழு.
– 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி சந்திரிகா அவர்களால் முன்வைக்கப்பட்ட ;அதிகார பரவலாக்க’ முன்மொழிவுகள்.
– 2002ம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ பிரகடனம்.
– 2003ம் ஆண்டு அக்ரோபர் மாதம் விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகள்.
– 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வகட்சிக் குழுவுக்காக அறிஞர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை.
– 2003ம் ஆண்டு ஜனவரி மாதம் முஸ்லிம் காங்கிரசினால் வெளியிடப்பட்ட ஒலுவில் பிரகடனம்.
மேற்குறித்த முக்கியமான வரலாறுகளிலிருந்து பெறப்பட்ட சாராம்சம் என்ன? என்பது குறித்து ஆராய்ந்தபோது, இவையாவும் ஜக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழும் நோக்கை வெளிப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிந்தது. தற்போதுள்ள அரசியற் சூழலை அர்த்தமுள்ள விதத்தில் மாற்ற வேண்டுமெனில், வரலாற்றின் போக்கை அவதானிக்க வேண்டியது அவசியமாகிறது. அவ்வப்போது இணைந்து வாழ்வது என்பது கேள்விக்குறியாக்கப் பட்டபோது, பிரிவினைக்கான எத்தனிப்புக்கள் இயல்பானதாகவே காணப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டைத் தீர்மானம், இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகள் என்பன வரலாற்றின் போக்கோடு இணைத்துப் பார்க்கும்போது அவை சமூகத்தில் காணப்பட்ட ஏமாற்றங்கள் விரக்திகளின் வெளிப்பாடாகவே தென்படுகின்றன. இவை தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்தமான போக்காகக் காணப்படவில்லை. அரசியற் தீர்வுக்கான அடிப்படைக் கோட்பாடுகளாக ஒற்றை ஆட்சி, ஜக்கிய இலங்கைக்குள் பிராந்தியங்களின் ஒன்றியம், சமஷ்டி கட்டுமானம், அதிகாரபகிர்வு, அதிகார பரவலாக்கம், சுயநிர்ணயஉரிமை போன்றவை அடிக்கடி பயன்படுத்தப் பட்டுள்ளன.
தமிழ் அரசியற் கட்சிகள் மத்தியிலே சமஷ்டி நிர்வாகக் கட்டமைப்பு, சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகள் தெளிவாக முன்வைக்கப்படவில்லை. இக் கோட்பாடுகள் மேலெழுந்தவாரியாக முன்வைக்கப்பட்ட அதேவேளை பிரிவினையைத் தூண்டும் விதத்தில் அவற்றின் நோக்கங்கள் விபரிக்கப்பட்டன. சமஷ்டி ஆட்சி அமைப்பு என்பது நாட்டின் நிர்வாகம் ஜனநாயகப் படுத்தப்படுவதற்கான அணுகுமுறை என்பதை வற்புறுத்துவதற்குப் பதிலாக, அது தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான உபாயம் என்ற வகையில் விளக்கங்கள் அமைந்திருந்தன. இதனால் சிங்கள தேசியவாத சக்திகள் சமஷ்டி என்பதை தமிழ் மக்களோடு சம்பந்தப்பட்ட விவகாரமாக அவதானிக்கத் தொடங்கினர்.
இதேபோலவே சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடும் ஜனநாயகத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று என்பதைவிட தமிழர்களின் பிரிவினைக்கான கோட்பாடாகவே கருதப்பட்டது. இலங்கையின் அரச கட்டுமானம் லிபரல் ஜனநாயகக் கோட்பாடுகளை மையமாக வைத்தே கட்டப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற ஆட்சிமுறையை ஒத்தவிதத்தில் நிர்வாகக் கட்டுமானங்களும், அவற்றின் செயற்பாடுகளை வரையறை செய்யும் அரசியல் அமைப்பும் லிபரல் கோட்பாடுகளை மையமாகக் கொண்டதாகும். அதாவது தனிநபரின் உரிமைகளையும், கடமைகளையும் வரையறுப்பதாகும். தனிநபரின் சந்தை நடவடிக்கைகள் சார்ந்த முதலாளித்துவ கோட்பாடுகளை அது கொண்டிருக்கிறது.
தனிநபரின் பேச்சுரிமை, எழுத்துரிமை, சிந்திக்கும் உரிமை என்பன போன்ற ஜனநாயக உரிமைகள் தனிநபர் சம்பந்தமானதாகும். எனவேதான் தனி மனிதன் தனது ஆளுமையை முழுமைப் படுத்துவதற்கான சகல வாய்ப்புக்களும் வழங்கப்பட வேண்டுமென தாராளவாத கோட்பாடு வரையறுக்கிறது. இதுவே சுயநிர்ணய உரிமை என அழைக்கப்படுகிறது.
எனவே சுயநிர்ணய உரிமை என்பதற்கான விவாதம் என்பது இலங்கையில் நிலவும் அரச கட்டுமானத்தின் கோட்பாட்டிலிருந்தே அணுகப்பட வேண்டும். சுயநிர்ணய உரிமை என்பது சமூகங்களின் தனித்துவத்தைப் பேணும் உரிமை என வரையறுத்துக் கொண்டாலும், தனிநபர் சுயநிர்ணய மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் அரச கட்டுமானம் இனங்களினதும் அல்லது குழுக்களினதும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாயின் அந்த நாடு துண்டுகளாக சிதறும் ஆபத்தில் சிக்கும் நிலைமையே ஏற்படும் இதுவே தமிழ் அரசியலில் காணப்படும் துர்ப்பாக்கிய நிலைமையாகும். சுயநிர்ணய உரிமை என்பது இனங்களினது உரிமை என்பதைவிட தொழிலாளர் என்போரின் உரிமை என வரையறுக்கப்படுமாயின் அவற்றின் விளைவுகள் எவ்வாறு அமையும்?
சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகள் பிரிவினையை ஊக்கப்படுத்தும் போது குறிப்பாக இலங்கையின் அரசியற் சூழலில் அவை தீர்வை நோக்கிய கதவுகளைத் திறக்க உதவாது.
இலங்கையில் காணப்படும் அரசியல் பிரச்சினைக்கான குறைந்தபட்ச அடிப்படைகள் எவை என்ற தேடலை நாம் மேற்கொள்ளும்போது பின்வரும் அம்சங்களிலிருந்தே தொடங்க வேண்டும். அரசியல் பிரச்சினை எனச் சுருக்கமாகக் கூறினாலும் அது நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார அடிப்படைகளை மேம்படுத்தும் ஆரம்பமாக அமைதல் அவசியமாகிறது. வரலாற்றின் அனுபவங்கள், ஒப்பந்தங்கள், சர்வதேச உறவுகள், போக்குகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பார்க்கையில் பின்வருவனவற்றில் தெளிவான பார்வை அணுகுமுறை அவசியமாக உள்ளது.
அரச கட்டுமானம்
கடந்த 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றைப் பார்க்கும்போது நாட்டில் காணப்பட்ட ஒற்றை ஆட்சி அடிப்படையிலான அரசியல் கட்டமைப்பு நாட்டின் பெரும்பான்மை இனத்தின் தேசியவாத சிந்தனைகளைப் பலப்படுத்த உதவவில்லை. குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள அதாவது கடந்த 32 ஆண்டுகளாக செயற்பாட்டிலுள்ள இரண்டாவது குடியரசு யாப்பு சிங்கள தேசியவாத சக்திகளின் அவாக்களை நிறைவேற்ற உதவவில்லை. பதிலாக முரண்பாடுகளைத் தோற்றுவித்து நாட்டில் அமைதி அற்ற சூழலையே உருவாக்கியது. சிறுபான்மை இனங்களை நாம் இலங்கையர் என்ற பரந்த தேசியக் கட்டுமானத்தை உருவாக்கும் முயற்சியில் இணைக்கத் தவறியுள்ளது. இதனால் இலங்கையர் என்ற தேச உருவாக்கம் படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. இதற்கான முதன்மைக் காரணி அரசியல் அமைப்பாகும்.
அரசியல் நிர்வாகக் கட்டுமானம் பரந்த தேசியத்தை நிர்மாணிக்கும் வகையில் “ஜக்கிய இலங்கை” என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.ஜக்கிய இலங்கை என்பது நாட்டில வாழும் சகல தேசியங்களினதும் ஒன்றிணைந்த கட்டுமானம் என்ற மையக்கருத்தை அது கொண்டிருக்கும்.
அதிகார பகிர்வு
ஜக்கிய இலங்கை என்ற பதம் நாட்டில பல் இனங்கள் ஒருங்கிணையும் ஓர் தேசத்தைக் குறிக்கிறது. பல்லினங்கள் வாழும் ஓர் தேசத்தில் அத் தேசியங்களின் தனித்துவம் பாதுகாக்கப்படுவது அவசியமாகிறது. இத்தேசிய இனங்களின் தனித்துவம் அவற்றிற்கான சுயாட்சி அலகுகள் மூலமாகவே பேணவும், பாதுகாக்கவும், வளர்க்கவும் முடியும். எனவே சிறுபான்மை தேசிய இனங்கள் தத்தமது மொழி, கலை, கலாச்சாரம் என்பவற்றைப் பாதுகாப்பதோடு தமக்கே உரித்தான விதத்தில் சட்டங்களை இயற்றி சமூகத்தை வழிநடத்தும் விதத்தில் சுயாட்சி அலகுகள் உருவாக்கப்பட்டு அவற்றிற்கு மத்தியிலிருந்து அதிகாரங்கள் பகிரப்படுதல் வேண்டும். இதற்கான ஒரு பொறிமுறையே அதிகார பகிர்வு எனப்படுகிறது.
உதாரணமாக ஜக்கிய இராச்சியத்தில் ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள சுயாட்சி நிர்வாகங்கள் அதிகார பகிர்வு என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு வெஸ்ட்மினிஸ்ரர் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் இச்சுயாட்சி நிர்வாகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றின் நிர்வாகங்கள் அதிகார பரவலாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அதேவேளை வட அயர்லாந்து நிர்வாகம் அதிகார பகிர்வின் அடிப்படையிலான சுயாட்சி அமைப்பு ஆகும். இதில் அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்பவற்றிலுள்ள அடிப்படை வித்தியாசம் புரிந்து கொள்ளப்படல் வேண்டும்.
அதிகார பரவலாக்கம்
மத்திய அரசின் அதிகாரங்களில் சிலவற்றை அதன் கீழுள்ள உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு தெளிவான வரையறுத்தல்களுடன் கையளிப்பதாகும். உதாரணமாக இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுக்கும் 8மாகாணசபைகள் உள்ளன. இவ் நிர்வாகங்களின் செயற்பாட்டு எல்லை என்பது மூன்று பிரிவுகளாக உள்ளது. மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகள், மாகாணசபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள், மத்திய மற்றும் மாகாண சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதி என உண்டு. இருப்பினும் மாகாணசபையின் அதிகார எல்லை தெளிவாக வரையறுக்கப்படாமையால், மத்திய அரசு மாகாண சபையின் அதிகாரத்தில் அதிகளவு தலையிட வாய்ப்பு உள்ளது. இதனால் மாகாண சபையை ஓர் சுயாட்சி அலகாக கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய மற்றும் மாகாண சபையின் அதிகார எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு அட்டவணை C முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பது சர்வகட்சி மாநாட்டுக்குழுவின் தீர்மானமாகும்.
அதிகார பரவலாக்கத்திற்கான குறைந்தபட்ச அலகு
அதிகார பரவலாக்கம் என்பது கிராமசபை, நகரசபை, பிரதேசசபை, போன்ற மட்டத்தில் வழங்கபபட வேண்டும் என்பது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானமாகும். நாட்டு மக்களின் கைகளில் மீண்டும் அதிகாரத்தைக் கையளித்தல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இத்தீர்மானம் நாட்டில் பரவலான ஜனநாயக கட்டுமானத்தை உருவாக்குவதற்கான சிறந்த திட்டமாகும். ஆனால் இந்த நிர்வாககங்கள் சுயாட்சி அலகுகளாக இயங்குவதற்கான போதுமான நிலப்பரப்பைக் கொண்டிருக்கவில்லை. எனவே கணிசமான பூகோளப் பகுதியையும், மக்கள் குடிப்பரம்பலையும் கொண்டிருக்கக்கூடிய நிர்வாக அலகை தேர்ந்தெடுத்தல் வேண்டும். அந்த அடிப்படையில் பார்க்கும்போது மாகாணசபைகளே குறைந்தபட்ச அலகாக இருக்க முடியும்.
இவ் அதிகாரப் பரவலாக்கம் என்பது ஜனநாயக நிர்வாகக் கட்டுமானத்திற்கான குறைந்தபட்ச அலகு என்பதோடு மட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; அதிகளவு தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்வதால் இவ் நிர்வாகக் கட்டுமானம் தேசிய சிறுபான்மை இனங்களின் கலை, கலாச்சார, மொழி மற்றும் பண்பாட்டையும் வளர்ப்பதற்கான மேலதிக வாய்ப்பையும் வழங்குகிறது. எனவேஅதிகாரப் பரவலாக்கம் என்பது மக்களின் ஜனநாயக வாழ்வைப் பயன்படுத்துவதோடு தேசிய இனங்களின் தனித்துவங்களைப் பலப்படுத்தவும் உதவுகிறது.
இலங்கை இந்திய ஒப்பந்த உருவாக்கத்தின் போது தேசிய சிறுபான்மை இனங்கள் செறிந்து வாழும் பகுதிகளின் குடிப்பரம்பலில் திட்டமிட்ட அடிப்படையில் மாறுதல்களை குறிப்பாக அரச நிலங்களில் குடியேற்றத் திட்டங்களை உருவாக்குவது ஜனநாயக விரோதமானது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இத்தேசிய சிறுபான்மை இனங்கள் செறிந்து வாழும் பகுதிகளின் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டே மாகாண சபைகளின் அதிகார எல்லைகள் பற்றிய விவாதங்களும் தனித்தனியான அட்டவணைகளும் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்போது உருவாகின.
இலங்கையில் தொடர்ச்சியாக பதவியில் இருந்த அரசுகள் நாட்டின் தேசிய இனங்களின் ஜனநாயக பங்களிப்பு தொடர்பாக பாரபட்சமாக செயற்பட்டமை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் காரணமாகவே, அந்த நிலையைத் தடுப்பதற்கு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய சமாதானப் படையின் பிரசன்னமும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.
வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களும் குறிப்பாக கிழக்கில் செறிந்து வாழ்வதால் அவர்களின் ஜனநாயக வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு தனியான சுயாட்சி அலகின் தேவை பற்றிய விவாதங்களும் இடம்பெற்றிருந்தன.
இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு பார்க்கையில் குறைந்தபட்ச அடிப்படைகளாக பின்வருவன அமையலாம் எனக் கருதுகிறோம்.
இக் குறைந்தபட்ச யோசனைகள் நாட்டினதும் குறிப்பாக சிறுபான்மை இனங்களினதும் விசேடமாக தமிழ் மக்களினதும் நீண்டகாலத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு, நிகழ்காலத் தேவைகளின் அடிப்படைகள் எவையாக அமையலாம் என்பதை அடையாளப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.
– நாட்டின் அபிவிருத்தி என்பது பொருளாதார அபிவிருத்தி மட்டுமல்லாது மனிதவள அபிவிருத்தியையும் உள்ளடக்கியதாகும். மனிதவளம் அதன் உச்சத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டுமெனில் முழுமையான மனித ஆளுமை வெளிப்படுத்தும் விதத்தில்அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும்;.
– அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டுமானங்களில் ராணுவத் தலையீடு நீக்கப்படல் வேண்டும். பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி ராணுவத் தலையீடுகளை அதுவும் ஒரு குறிப்பிட்ட இனம்மீது அல்லது இனங்கள்மீது அதிகரிப்பது தேசிய நல்லிணக்கத்திற்குக் குந்தகமானது.
– போருக்குப் பின்னான அபிவிருத்தி என்பது மக்களின் பங்களிப்புடனானதாக அமைதல் வேண்டும். பொருளாதார திட்டமிடுதல் என்பது அரசியல் திட்டமிடுதலுடன் இணைந்ததாக அமைதல் வேண்டும்.
– வடக்கு கிழக்குபகுதிகளில் நிறுவப்படும் ராணுவ முகாம்களின் நோக்கங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக அவை நிறுவப்படுமாயின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் இல்லாமல் போகும்போது, அம்முகாம்களும் அகற்றப்படல் வேண்டும்.
– பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் மிக அதிக அளவிலான நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பிரதேசங்களில் நீண்ட காலமாக வாழ்ந்த மக்கள் தமது வருமானங்களையும் மண்ணோடு இணைந்த பண்பாட்டு விழுமியங்களையும் இழந்துள்ளனர். இம்மக்களின் எதிர்காலம் குறித்த போதிய திட்டமிடல் இல்லாதிருப்பது இம்மக்களை ஏதிலிகளாக மாற்றுவதாக அமைகிறது. எனவே ராணுவ முகாம்கள் மக்கள் பாவனையில் இல்லாத நிலங்களாக அமைதல் வேண்டும். அத்துடன் நிலங்களை இழந்த மக்களக்க நஷ்டஈடு வழங்கப்படுவதோடு மாற்று வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
– வடக்கு, கிழக்கு மாகாணசபைகளுக்கு பூரண அதிகாரம் வழங்கப்படுவதோடு, இம்மாகாண சபையின் எல்லைக்குட்பட்ட அரச நிலங்களின் கட்டுப்பாடு இச்சபைகளிடம் வழங்கப்பட வேண்டும்.
– தற்போதைய இரண்டாவது குடியரசு யாப்பு முற்றாக நீக்கப்பட்டு, சர்வகட்சி மாநாட்டுக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவான அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு என்ற கோட்பாடுகளை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.
– புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை, தற்போதைய அரசியல் அமைப்பிலுள்ள 13வது 16வது 17வது திருத்தங்கள் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும்.
– இலங்கை முழுவதிலும் தற்போது மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதோடு பாதாளக் குழுக்களின் செயல்களும் அதிகரித்துள்ளன.
– தமிழ்ப் பிரதேசங்களில் ஜனநாயக அடிப்படையிலான செயற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் வட மாகாண சபைக்கான தேர்தல்கள் இடம்பெற வேண்டும். இதன்மூலமே ஜனநாயக கருத்துப் பரிமாறல்களுக்கான வாய்ப்புகளை திறக்க முடியும். தற்போது இன்றைய தேசிய இனப் பிரச்சினையின் வடிவமும், உள்ளடக்கமும் என்ன? என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவை சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் அரச நிர்மாணத்தைப் பற்றிய தெளிவான அறிவின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும்.
முன்னைய பதிவுகள்:
அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்
‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’
MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim