சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தமிழ் நாட்டினதும், கேரளத்தினதும் தென்பகுதிக் கரையோரங்களிலும், இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரங்களிலும் ஒரே இரவில் ஏற்படுத்திய உயிரழிவும் அனர்த்தங்களும் யாவரும் அறிந்ததே. சுனாமிக்குப் பின்னர் அப்பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து டூரிஸம் கென்சேர்ண்(Tourism Concern) எனும் அமைப்பு அண்மையில் லண்டன் மெற்றோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் (London Metropolitan University) ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இக்க்கருத்தரங்கில் விசேட பேச்சாளராக கேரளாவில் இருந்து சஜீர் ரஹ்மான் பங்கு பற்றியிருந்தார். சஜீர் கபனி எனப்படும் சமூக நல செயற்பாட்டு அமைப்பின் பொறுப்பாளர். கேரளத்தின் தென்பகுதிக் கடற்கரையோரங்களில் பல நூற்றண்டுகளாக வாழ்ந்து வரும், மீன் பிடித்தலை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு அவர்களது குடிசைகள் இருந்த இடங்கள் எவ்வாறு உல்லாசப் பயணிகள் தங்குவதற்கான விடுதிகளாகவும், ஹோட்டல்களாகவும் மாற்றப்படுகின்றன என்பதை விபரித்தார்.
பல்கலைக்கழ மாணவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாடாளர்கள் நிறைந்திருந்த கருத்தரங்கில் சஜீர் தமது அமைப்பின் பணிகளை தெளிவாக விளக்கினார். தமது அமைப்பினால் கவனமெடுக்கப்படும் பிரதேசங்களில் உள்ள மக்கள் கடல் சார்ந்து வாழ்பவர்கள் எனவும் அவர்களது மூதாதையர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த இடங்களிலிருந்து அவர்கள் அகற்றப் படுவதாகவும் பெரும் வணிக நிறுவனங்கள் கேரள அரசின் சுற்றுலாப் பயணத்துறையின் ஆசீர்வாதத்துடன் எவ்வாறு அந்த நிலங்களை அபகரிக்கின்றன என்பதையும் விபரித்தார். தனது அமைப்பின் செயற்பாடுகள் பற்றி எவ்விதமான மாயப் பிம்பங்களையும் ஏற்படுத்த அவர் முயலவில்லை. இந்த சுமூகங்களின் மக்களது மனநிலையில் சுனாமி ஏற்படுத்திய அவலமான தாக்கத்தை பெரும் வணிகம் எவ்வாறு தனது இலாப நோக்கத்திற்கு பயன்படுத்த முயல்கிறது என்பதையும் இம்மக்கள் மத்தியில் பணியாற்றும் சில தொண்டு நிறுவனங்கள் தூர நோக்கின்றி எவ்வாறு உடனடிப் பொருள் ஆதாயத்தினை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றன என்பதையும் விபரித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களது நிவாரணத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி எவ்வாறு கேரள அரசின் சுற்றுலாத்துறையினால் உல்லாசப் பயண மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விபரித்தார்.
கடல் சார்ந்து வாழும் மக்களை கடற்கரைகளிலிருந்து அகற்றும் பிரதான நோக்குடன் அவர்களுக்கு தூர இடங்களில் தொடர் மாடி வீடுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது தொழில் நிமித்தம் கடலுக்குச் செல்வதற்கு வருமானத்தின் ஒரு பகுதியை பிரயாணச் செலவுக்காக இழக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார். அதைவிடவும் கடுமையானது என்னவெனில் உல்லாச விடுதிகள் அமைக்கப் பட்டுள்ள கரையோரங்களில் அவர்களது படகுகளை நிறுத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுவதும், விடுதிகள் அமைக்கப் பட்டுள்ள கரையோரங்களில் அவர்கள் நடமாடுவதற்கு (கடற்கரையில் நடந்து செல்வதற்குக் கூட) தடை விதிக்கப் பட்டுள்ள நிலையும் எனக் கூறினார். தமது அமைப்பு உல்லாசப் பயணத்துறைக்கு எதிரானதல்ல என்றும் உல்லாசப் பயணம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களை அபகரிப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கையை பாதிப்பதையும் இலகுவில் மாறுபடக் கூடிய கரையோர சுற்றுச்சூழல் (coastal ecology) மாசடைவதையும் தடுப்பதே தமது அமைப்பின் நோக்கம் எனவும் தெரிவித்தார். கரையோரங்களுக்கு வரும் உல்லாசப் பயணிகளால் கரையோரங்களில் வாழும் சமூகங்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். கபனி அமைப்பின் பணிகள் தொடர்பான ஒரு புகைப்படக் கண்காட்சி லண்டன் கார்டியன் கேலரியில் (The Guardian Gallery, King’s Place, 90 York Way, London N1 9GU) மார்ச் 31 வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. டூரிஸம் கென்சேர்ண் அமைப்பு இக் கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளது.
கம்பனியின் பணிகள் டூரிஸம் கென்சேர்ண் அமைப்பின் ஒத்துழைப்புடன் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருவதாக அதன் அமைப்பாளாரான தான்யா கூப்பர் (Tanya Cooper) தெரிவித்தார். ஸ்ரீ லங்காவில் தாம் மேற்கொண்ட இத்தகைய பணியை தாம் முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக அவர் சொன்னார். அதற்கான காரணத்தை வினவியபோது, பாதுகாப்பு என்ற பெயரில் தமது பணியாளர்களின் நடமாட்டம் பெரிதும் கட்டுப்படுத்தப் பட்டதால் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பிரதேசங்களில் தமது பணியைத் தொடர முடியாமல் இருந்ததை குறிப்பிட்டார். எனினும் அறுகம் பே பகுதியில் ஒரு ஹெலிபாட் (helipad) அமைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை உள்ளூர் மக்களும் சிறு வர்த்தகர்களும் சேர்ந்து எதிர்த்ததன் மூலம் முறியடித்ததை மக்கள் போராட்டத்தின் சிறந்த உதாரணமாக தான் கருதுவதாக தெரிவித்தார். தமது பணி ஸ்ரீலங்காவில் முடிவுக்கு வந்துவிட்டாலும் அந்நாட்டு மக்களது மனித உரிமைகள் தொடர்பாக தமது அமைப்பு ஒரு அறிக்கையை தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தார். போர் முடிவுக்கு வந்த பின்னர் கிழக்கினதும் வடக்கினதும் கடற்கரைகள் பெரு நிறுவனங்களுக்கு விலை போவது பற்றி தமது அமைப்பு அக்கறை கொள்வதாகவும் தெரிவித்தார்.
http://www.tourismconcern.org.uk/index.php?page=destination-tsunami