புதுக்குடியிருப்பில் ஏப்ரல் 5ல் இடம்பெற்ற தாக்குதலில் பல நூறு போராளிகளை இழந்து காப்பாற்றப்பட்ட புலிகளின் தலைவர் வே பிரபாகரன் தங்கள் இறுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இதனைத் தெரிவிக்கின்ற போதிலும் புலிகள் உத்தியோகபூர்வமாக இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. புலிகளின் தலைவர் வே பிரபாகரன் தற்போது அங்கு இல்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்று உறுப்பினர் ஒருவரும் உறுதிப்படுத்தி உள்ளார். (Related Article : Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )
புதுக்குடியிருப்பில் புலிகளின் அதி முக்கிய தலைவர்கள் சிக்குண்ட நிலையில் இடம்பெற்ற மிக மூர்க்கத்தனமான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட புலிகளின் மையக்கருவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டு இருந்தனர். கொல்லப்பட்டவர்களில் புலிகளின் முழு இராணுவ நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான கொமாண்டர் தீபன் கொல்லப்பட்டு இருந்தார். இதுவரை புலிகளில் கொல்லப்பட்ட போராளிகளில் மிக மிக முக்கியமான கொமாண்டராக தீபன் இருந்துள்ளார். அவர் உட்பட புலிகளின் மையக்கருவைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டு இருந்தனர். இவர்களில் புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும், வே பிரபாகரனின் மெய்ப் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த கடாபியும் ஆட்லரிப் பிரிவுத் தலைவரான மணிவண்ணனும் அடங்கி இருந்தனர். இவர்களுடன் கிழக்கு பகுதிப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கீர்த்தி, மட்டக்களப்புத் தலைவர் நகுலன், ராதா படையணித்தலைவர் சீலாபரன், சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவுத் தலவர் அமிதாப், மோட்டார் பிரிவுத் தலைவர் கோபால் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சுச் செய்திகள் தெரிவிக்கின்றது. ஆயினும் இப்போராளிகளது இழப்புப் பற்றி புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. புலிசார்பு ஊடகங்களும் மௌனமாகவே உள்ளன.
கிடைக்கின்ற தகவல்கள் காயத்திற்கு உள்ளான வே பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி, அவரது மனைவி ஆகியோர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளதாக தெரிவிக்கின்றன. புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் சில முக்கிய தலைவர்கள் காட்டுப் பகுதிகளுக்குள் தப்பி உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
புலிகளின் தலைமை யுத்தப் பகுதியில் இருந்து தப்பித்ததும் அல்லது தப்பிச் செல்ல அனுமதிக்கபட்டதும் இலங்கை அரசாங்கத்தின் யுத்த நிறுத்த அறிவிப்பும் இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பதும் எழுந்தமான நிகழ்வுகளா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. இவையனைத்தும் இந்தியா பொதுத் தேர்தலுக்கு நெருங்குகின்ற நிலையில் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே சமாதான அணுசரணையாளர் பொறுப்பில் இருந்து நோர்வே நீக்கப்பட்டு உள்ளதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் கீழ்நிலைப் போராளிகள் சில நூறுபேரே உள்ளதாகவும் யுத்த நிறுத்த முடிவில் ஏனைய பிரதேசங்களைக் கைப்பற்றியது போல் இப்பிரதேசத்தையும் இராணுவம் பாரிய யுத்தம் இன்றிக் கைப்பற்றும் என்றும் தெரியவருகிறது.
இப்பிரதேசத்தில் இருந்து புலிகளின் தலைமை பின்வாங்கியது அல்லது எஸ்கேப்பானது உறுதியானால் அங்கு ஏற்படக் கூடிய பாரிய மனித அவலம் தவிர்க்கப்படும்.
முல்லைத் தீவில் புலிகளின் தலைமை தப்பித்துக் கொண்டது அல்லது தப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது இது முதற்தடவையல்ல. இந்திய இராணுவத்துடனான மோதலின் இராணுவச் சுற்றி வளைப்பில் இருந்து புலிகளின் தலைமை அன்று தப்பித்துக் கொண்டது அல்லது தப்பித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின் முல்லைத்தீவில் சிக்குண்ட புலிகள் தங்களது தலைமையைப் பாதுகாக்க மக்களை கேடயமாக்கியதும் அதானால் இலங்கை இனவாத அரசின் இராணுவத் தாக்குதலில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். பத்தாயிரம் வரையானோர் மோசமான காயங்களுக்கு உள்ளாயினர். மூன்று தசாப்த கால தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை உறுதுணையாக இருந்த வன்னி மக்கள் புலிகளின் தலைமையைப் பாதுகாக்க அதி உச்ச விலையைச் செலுத்தினர். இனவாத அரசின் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடிய மக்களை பிடித்து அடித்து முதுகுத்தோலை உரித்தனர். அல்லது தப்பியோடியவர்களை புலிகள் சுட்டு வீழ்த்தினர்.
எது எப்படி இருப்பினும் புலிகளின் தலைமை இன்று அப்பிரதேசங்களில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக அல்லது பின்வாங்கிவிட்டதாக தெரியவருகின்றது. இதனை கிளிநொச்சி வீழ்ந்த கையுடன் செய்திருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம். ஆயினும் இப்போது தன்னும் அவர்கள் தப்பியோடியது அல்லது பின்வாங்கியது இன்னும் பல்லாயிரம் இழப்புகளை தவிர்க்க உதவியுள்ளது.
இணைத்தலைமை நாடுகள் இந்தியா உட்பட ஆதரவளித்த பீக்கன் புரஜக்ற் திட்டத்தின்படி;
01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதி குறித்த காலத்தில் கைப்பற்றப்பட்டது.
01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதியும் குறித்த காலத்தில் கைப்பற்றப்பட்டது.
01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியின் கடைசி 15 முதல் 20 கிலோ மீற்றர் வரையான பகுதியும் கைப்பற்றப்படுவது உறுதியாகி உள்ளது.
அடுத்து 01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இது மிகவும் சிரமமானதும் அதிக காலத்தை வேண்டி நிற்பதுமான நடவடிக்கை.
இன்று பின்வாங்கிய புலிகள் மீண்டும் தங்களை சுதாகரித்துக் கொண்டு தாக்குதலை நடத்த தயங்க மாட்டார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுடைய அபிலாசைகளை திருப்திப்படுத்தும் அரசியல் தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் ஏற்படுத்தவில்லை. அந்த நம்பிக்கையை ஏற்படுத்தப் பொவதும் இல்லை என்ற உணர்வே பெரும்பான்மையான தமிழ் மக்களிடம் உள்ளது. அதனால் இன்று புலிகள் ஓரம் கட்டப்பட்டாலும் இலங்கை அரசினதும் அதனுடன் இணைந்து இயங்குகின்ற சக்திகளினதும் செயற்பாடுகள் மீண்டும் புலிகளின் தேவையை உச்சத்திற்கு கொண்டு வரும் என்கின்ற அச்சம் உள்ளது. இந்த வரலாற்று நச்சு சக்கரத்தை மாற்றி அமைக்கின்ற அரசியல் பலம் இன்னமும் இலங்கையில் இல்லை என்பதே வேதனையான உண்மை.
இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை பலவினப்படுத்தியதில் அன்றும் சரி இன்றும் சரி புலிகளின் பங்களிப்பு மிகப்பெரியது. தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்கள் நியாயமான அரசியல் லட்சியங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் தலைமையின் நியாயமற்ற போராட்டங்களால் அடிபட்டுச் சென்றது மட்டுமல்ல எதிர்மறையாக அதுவே தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும் வழிகோலியது.
புலிகள் எதிர்காலத்தில் தங்கள் அரசியலற்ற அரசியலைக் கைவிட்டு தங்களை மீளாய்வுக்கு உட்படுத்துவது அவசியம். அப்படிச் செய்யாத வரை அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏகபிரதிநிதிகளாக அல்ல ஏகப்பட்ட பிதிரிநிதிகளில் ஒருவராகவும் வர இயலாது. துரதிஸ்டவசமாக இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள சமூகங்கள் மத்தியில் உள்ள அரசியல் தலைமைகள் ஒன்றும் புலிகளின் தலைமையிலும் பார்க்க குறிப்பிடத்தக்கவை என்றும் சொல்லிவிட முடியாததாலேயே இலங்கை இவ்வாறான ஒரு பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்கின்றது. குறைந்தபட்சம் யுத்தம் முடிவுக்கு வரும் போது ஒட்டுமொத்த இலங்கை மக்களும் மீளவும் பலம்பெறுவார்கள். அவர்களைப் பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்க முடியும்.