15

15

மக்கள் வழங்கிய ஆதரவே எமது நாட்டின் வெற்றிக்குக் காரணம்! எட்டாவது ஆசிய ஒத்துழைப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ஜனாதிபதி

290909mahinda.jpg பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்திற்கும் சிறந்ததொரு முன்னுதாரணமென நாம் நம்புகின்றோம். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் எமக்கு உலகின் நட்புநாடுகளின் ஆதரவு கிடைத்ததைப் போன்று மிகப் பிரதானமாக எமது வெற்றிக்கு எமது மக்கள் வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும் தான் காரணம்.

இதன் மூலம் ஒரு நாட்டின் பிரச்சினையை அந்த நாட்டைப் பற்றி நன்கு தெரிந்த பிரிவினர்களால் மட்டுமே அதாவது அந்த நாட்டு மக்களால் தான் தீர்க்க முடியும் என்பது தெளிவாகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) காலை கொழும்பில் நடைபெற்ற 8ஆவது ஆசிய ஒத்துழைப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றும்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி  இங்கு மேலும் தெரிவித்ததாவது:-

உங்கள் எல்லோரையும் எமது இலங்கை நாட்டுக்கு நான் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். இம்முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஆசிய பிராந்திய நாடுகளின் நண்பர்கள் இங்கு ஒன்றுகூடியிருப்பதையிட்டு நாம் பெருமைப்படுகிறோம். எம் எல்லோருக்கும் சொந்தமான இந்த ஆசியப் பிராந்தியத்திற்கு பல்லினத் தன்மை கொண்ட மிகச் சிறந்ததொரு வரலாற்றுப் பாரம்பரியம் உள்ளது. உலகின் பிரதான சமயங்களான பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கு சமயங்களும் ஆசியாவிலேயே தோற்றம் பெற்றன. பல்வேறு நாகரீகங்கள் செளித்துவளர்ந்த பூமியும் இதுவே.

கடந்த பல நூற்றாண்டுகளாக எமக்கிடையே மிக நெருங்கிய தொடர்புகள் இருந்துவருகின்றது. பட்டுப் பாதை எம்மை ஐரோப்பாவுடன் இணைத்தது. இப்பாதையூடாகவே இலங்கையின் வாசனைத்திரவியங்களது மனம் ஐரோப்பா வரைச் சென்றடைந்தது.

தூர கிழக்கு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள்; வியாபார நோக்கத்தில் எமது நாட்டிற்கு வருகை தந்தனர். எனவே ஆசிய கூட்டுறவு என்ற எண்ணக்கரு ஏற்கெனவே ஆசிய நாடுகள் மத்தியில் இருந்துவந்த கூட்டுறவை மீள கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமானதொரு பொறிமுறையாகும். மேலும் இந்த எட்டாவது ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் அமைச்சரவை கூட்டம் ஆசியாவின் எழுச்சி – உலகளாவிய பொருளாதார மீற்சியும் அபிவிருத்தி வளவாய்ப்புக்களும் என்ற தொனிப்பொருளில் நடைபெறுவது மிகவும் பொருத்தமாகும்.

உலக சனத்தொகையில் ஆசியா 60 சதவீதத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. துரிதமாக வளர்ந்துவரும் மத்தியதர வர்க்கத்தின் காரணமாக அது உலகின் மிகப்பெரும்பாலன சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ளது. நேரடி சர்வதேச முதலீடுகள் பல ஆசியாவுக்கு உரித்தானதாகும். உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்களிப்பு 30 சதவீதமாகும். மேலும் இப்பிரதேசம் அதிகளவான இயற்கை வளங்களையும் கொண்டுள்ளது. இவை எமது வெற்றியினதும் புதிய பலத்தினதும் எதிர்பார்ப்பாகும்.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் நாம் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளையும் மறந்துவிட முடியாது. குறிப்பாக உலக பொருளாதாரம் கடந்த சில தசாப்தங்களில் காணப்படாத அளவுக்கு மிகப்பாரியதொரு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் சாதாரணமானவையல்ல.

இது ஆசியப் பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியாகும். அவர்கள் ஏற்படுத்திய பிரச்சினை என்பதால் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவர்கள் எமக்கு உதவவேண்டும். மேற்கின் பிரதான நாடுகளின் பலவீனமான சட்டநடைமுறைகளாலும் பேராசையினாலும் ஆசிய நாடுகளும் உலகின் ஏனைய நாடுகளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றன. எனவே இச் சவாலுக்கு புதிய பரிகாரங்களைத் தேட வேண்டும்.

இச்சவாலை நாம் எமது பிராந்தியத்திற்கிடையே வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கும் எமது நிதிச்சந்தைகளில் செல்வாக்குச் செலுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக மாற்றியமைக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உலக பொருளாதாரத்தை நல்லநிலைக்குக் கொண்டுவருவதற்கு எமது போட்டித்தன்மை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நாம் ஏனைய பிராந்தியங்களோடு பெறுமதியான கூட்டு ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கும் உதவும்.

எமது பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் மற்றுமொரு பிரச்சினைதான் வறுமை. எமது மக்களின் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தாழ்;ந்த நிலையில் உள்ளனர். ஆசிய ஒத்துழைப்புக் கலந்துரையாடலின் நோக்கங்களில் ஒன்று வறுமை ஒழிப்பும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுமாகும் என்றவகையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது எமது பொறுப்பாகும்.

கீழ் மட்டங்களில் வெற்றியளித்த முறைமைகளை மிகவும் கவனமாக ஆய்வு செய்வதன் மூலம் இது சாத்தியமாகும். நாம் எமது பிராந்தியத்திற்குள் எமது சொந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவுள்ளன. அந்தவகையில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

சர்வதேச நிதி நிறுவனங்களின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது என்பதனைக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள வறுமைநிலை, ஒவ்வொரு நாட்டுக்குமான தேவைப்பாடுகள், குறிகாட்டிகள் சமனான வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரேவகையான தீர்வைக் கொடுக்க முடியாது.

எமக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் இதனை மனதில் கொள்ள வேண்டும். சர்வதேச நிதி நிறுவனங்கள் எமது பிராந்தியத்தில் மிகக்கூடிய செல்வாக்கைக் கொண்டுள்ளன. உதவி வழங்குவதற்காக அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் மூலம் ஏற்படும் சுமைகள் பற்றி அவர்கள் மிகுந்த கரிசணை செலுத்த வேண்டும்.

வறுமை ஒழிப்பு அத்தகைய நிபந்தனைகளுக்கான கைமாறாக இடம்பெறக்கூடாது. அபிவிருத்திப் பொருளாதாரத்தினூடாக அவர்களுக்கு வழங்கும் உதவிகளின் மூலம் ஏற்படும் நிலைமைகளை இந்த நிறுவனங்கள் விலங்கிக் கொள்ள வேண்டும். அதேபோன்று அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கும்போது பொருளாதார அபிவிருத்தியில் அவர்கள் முகங்கொடுக்கும் சவால்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று இலங்கையின் சொந்த அனுபவங்களை நான் பகிர்ந்துகொள்வதானால் எனது அரசாங்கத்தின் அபிவிருத்திச் சட்டகம் நான் 2005 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது முன்வைத்த ‘மஹிந்த சிந்தனை’ என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

கிராமிய பொருளாதார அபிவிருத்தியும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான உதவியும் எமது கொள்கையின் பிரதான அம்சங்களாகும். இதில் சமநிலைத்தன்மையும் நவீன முறைமைகளை ஏற்படுத்துவதனூடாகவும் நாட்டின் தேசிய திட்டங்களுக்கு உதவிசெய்யும் அதேநேரம் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் இது முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த இரண்டரைத் தசாப்தகாலமாக இலங்கைக்கு மிகவும் சவாலாக அமைந்த பிரச்சினை பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அதன் இறைமை மற்றும் ஆள்புல எல்லையைப் பாதுகாப்பதாகும். எமது நாட்டையும் எமது மக்களையும் பாதுகாப்பதில் நாம் பெரும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

1948 ஆம் ஆண்டு எமது நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டிருந்த முன்னேற்றம் பயங்கரவாதப் பிரச்சினையின் காரணமாக பின்நோக்கிச் செல்லலானது. இலங்கைக்கு அதன் கீர்த்தியை வெற்றி கொள்வதற்காக பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டியிருந்தது. எனவே எனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த மிகமுக்கியமான தீர்மானம் இதுவாகும். என்றாலும் அதனைச் செய்யுமுன்னர் நாம் சமாதானமாக இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எல்லா வழிகளையும் தேடினோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி சர்வதேச சமூகத்தில் சில பிரிவினர் ஒருபோதும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டபோதும் நாம் பயங்கரவாதத்தை வெற்றி கொண்டோம். என்றாலும் இவ்வெற்றி எல்லா விடயங்களையும் கருத்திற்கொள்ளாது பெற்ற வெற்றியல்ல. பயங்கரவாதிகள் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதிலும் அவர்களது நலன்களிலும் கூடுதல் கவனம் செலுத்தினோம்.

ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் என்ற ரீதியில் பொதுமக்களை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்க வேண்டிய மிக முக்கியமானதொரு பொறுப்பு எமக்கிருந்தது. இதற்கு பொறுமையோடு நீண்டகால யுத்த நடவடிக்கையொன்று அவசியமானது. இது நான் நன்கு சிந்தித்து எடுத்த முடிவாகும். எல்லா இலங்கையர்களையும் இன, மத, மொழி, பேதங்களை மறந்து ஒரே வகையில் கவனிப்பதற்கு எனது அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணத்தோடு செயற்பட்டது. இதனால் தான் பயங்கரவாதம் மிக மோசமாக இருந்தபோதும் இராணுவத்தினரது மானசீக நடவடிக்கைகளின்போது பொதுமக்களது பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நாட்டின் சில பிரதேசங்களில் செல்வாக்குச் செலுத்திய மோதல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தமை தாய் நாட்டின் எழுச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளது. எனது அரசாங்கம் தற்போது பயங்கரவாதிகளால் சேதமாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பாடுபட்டுவருகின்றது. மேலும் நாம் மனித உரிமைகள் மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகளை எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தவருகிறோம்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்திற்கும் சிறந்ததொரு முன்னுதாரணமென நாம் நம்புகின்றோம். எமக்கு உலகின் நட்புநாடுகளின் ஆதரவு கிடைத்ததைப்போன்று மிகப் பிரதானமாக எமது வெற்றிக்கு எமது மக்கள் வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும் தான் காரணம். இதன் மூலம் ஒரு நாட்டின் பிரச்சினையை அந்த நாட்டைப் பற்றி நன்கு தெரிந்த பிரிவினர்களால் மட்டுமே அதாவது அந்த நாட்டு மக்களால் தான் தீர்க்க முடியும் என்பது தெளிவாகின்றது.

எமது நாட்டின் மோதலுக்குப் பிந்திய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் ஆசிய ஒத்துழைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். எல்லோரதும் அபிலாஷைகளைப் போன்று ஆசிய நாட்டவர்கள் என்றவகையில் எமது நோக்கமும் கூட்டு ஒத்துழைப்பின் மூலம் எதிர்கால சமாதானத்தையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதாகும்.

கடைசியாக ஆசிய ஒத்துழைப்பு நாடுகளுக்கு மிக விரிந்த அரசியல் பார்வையொன்று அவசியமாகும் என்பதை நான் இந்த இடத்தில் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். இதற்காக அரச மட்டத்தில் அல்லது அரச தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட வேண்டுமென நான் முன்மொழிகின்றேன்.

நடப்பு வருடத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கைக்கு வழங்குவதற்கு இலங்கை மீது கொண்ட விசுவாசத்திற்காக நான் ஆசிய ஒத்துழைப்பு நாடுகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடல் மூலம் ஒருமித்து முடிவுகளை மேற்கொண்டு எமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு நாம் எம்மாலான முயற்சிகளை எடுப்போம் என்றும் ஜனாதிபதி கூறினார்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் – அரசாங்கம் தீர்மானம்

091009puttirasigamani.jpgதடுத்து வைக்கப்படடுள்ள தமிழ்க் கைதிகளை விசாரிக்க விசேட நீதிமன்றமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 600 தமிழ்க் கைதிகளுக்கு இதன் மூலம் நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்;.

கைதிகளின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களின் விடுதலைக்கு விரைவில் தீர்வொன்றைக் காணும் நோக்கில் இந்த நீதிமன்றம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு ஏற்ப 10 சட்டத்தரணிகளை நியமித்து கைதிகளின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட இருப்பதாகவும் இதன் மூலம் சிறைகளில் உள்ள தமிழ் கைதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட, சட்டமா அதிபர், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகாம்களை விட்டும் 58 ஆயிரம் பேர் வெளியேற்றப்படுவது பற்றி எனக்குத் தெரியாது! அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

anura_priyadarshana_yapa.jpgஇரு வார காலத்துக்குள் 58 ஆயிரம் பேர் முகாம்களை விட்டு வெளியேற்றப்படுவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளமை பற்றி தனக்கு எதுவும் கூறமுடியாதென அமைச்சசவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே  அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

தமிழக எம்.பிக்கள் குழுவினர் முதல்முறையாக இலங்கை வந்துள்ளனர். வடக்கிலுள்ள அகதி முகாம்களைப் பார்வையிடவும் அம்மக்களோடு கதைக்கவும் நாம் அக்குழுவினருக்கு பூரண சுதந்திரம் வழங்கினோம்.

சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு ஆரோக்கியமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதென்பதை நாம் அக்குழுவினருக்கு எடுத்துரைத்தோம்.

எனினும் இக்குழுவினரின் வருகை சிலருக்கு பெரும் மனவேதனையை அளித்துள்ளதென்பதை நாம் அறிகிறோம். இதனால்தான் அவர்கள் இக்குழுக்களின் வருகையை கொச்சைப்படுத்தும் வகையில் பொய்த்தகவல்களை வெளியிட்டுவருகின்றர் என்றும் அமைச்சர் கூறினார். 

மனோ கணேசனின் கூற்று விந்தையானது! அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

இலங்கை நிவாரணக் கிராமங்களிலுள்ள குறைபாடுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்குப் புரியாது ஏனெனில் அவர்களும் இலங்கையர்களைப் போன்றவர்களே. இது பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கே நன்கு புரியும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை விந்தைக்குரிய விடயம் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அயராத முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதற்கு பலர் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்காலத்தில் உயர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றார்கள். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அகதிகளை கௌரவமான முறையில் கவனிப்பதற்கே அரசாங்கம் விரும்புகின்றுது. அத்துடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நான்கு மாத காலத்தில் மூன்றரை இலட்ச மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பது மிகவும் சிரமமான காரியமாகும். எனினும் அரசு இயன்றளவில் அந்த சவாலுக்கு முகம் கொடுத்து வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

தீபாவளி கொண்டாடினார் ஜனாதிபதி ஒபாமா!

obama.jpgஜனாதிபதி பரக் ஒபாமா அமெரிக்காவில் முதன் முதலாக தீபாவளி கொண்டாடி வரலாறு படைத்துள்ளார். நாளை மறுநாள் ( 17 ம் தேதி ) உலக நாடுகளில் தீபாவளியைக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் என்றும் இல்லாதவாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். இங்குள்ள ஈஸ்ட் ரூம் என்னும் பாரம்பரிய அறையில் விழா நடந்தது.
 
வேத மந்திரங்கள் முழங்க குத்துவிளக்கில் தீபம் ஏற்றினார். ஸ்ரீ நாராயணச்சாரியார் திகலகோடே வேத மந்திரங்களை படித்தார். உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
 
இவ்விழாவில் இந்திய அதிகாரிகள்,  இந்திய சமூக பிரதிநிதிகள் இந்திய மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.

பன்றிக் காய்ச்சல்-இந்தியாவில் பலி 399 ஆனது

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 399 ஆக உயர்ந்துள்ளது.  புதன்கிழமையன்று மகாராஷ்டிராவில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி  எண்ணி்கை 399 ஆகியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 150 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,334 ஆக உயர்ந்துள்ளது.

வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது! : த ஜெயபாலன்

Wanni_IDPs_Queueing_for_Water._._._._._.

முகாம்களை மூடுங்கள் – கண்டனப் பொதுக்கூட்டம்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் 280 000 மக்களை சிறை வைத்துள்ள வன்னி முகாம்களை மூடுமாறு கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று ஒக்ரோபர் 17ல் லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் ஒருங்கமைப்பு – ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்டனக் கூட்டம் நீண்ட போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்து – என்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தக் கண்டனக் கூட்டத்தை தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து மற்றும் தமிழ் ஒருங்கிணைப்பு மேற்கொள்கின்ற போராட்டங்கள் இன்றைய சூழலில் மிக அவசியமானவையாக உள்ளது. தமிழ் அரசியல் சூழல் மற்றும் புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது ஒற்றைப் பரிமாணமாகி நின்று தமிழ் மக்களை மிகமோசமான அரசியல் சூழலுக்குள் தள்ளியுள்ள நிலையில் அந்த ஒற்றைப் பரிமாண அரசியலை நிராகரிக்கின்ற இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிக்கப்படுவது இன்றைய காலத்தின் தேவையாகின்றது.

தமிழர் ஒருங்கிணைப்பு சோசலிசக் கட்சியின் போராட்ட முன்னரங்க அமைப்பாகும். ஒக்ரோபர் 17ல் சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் பீற்றர் ரப்பே, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஜனனி பரமசோதி, சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய ஆய்வாளர் நாகர்ஜீனன் (ரமேஸ் கோபாலகிருஸ்ணன்), தமிழர் ஒருங்கிணைப்பின் சர்வதேச இணைப்பாளர் சேனன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு: PUBLIC MEETING -sat 17 october, 6pm, Queen mary university, room 210, Laws building
._._._._._.

அரசியல் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்ற இலங்கை அரசு அவற்றுக்கு சளைக்காமல் வன்னி மக்கள் தொடர்பில் திட்டமிட்ட ஒரு இன ஒடுக்குமுறையையும் இனச் சுத்திகரிப்பையும் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மிகுந்த அசமந்தப் போக்கிலேயே அரசு செயற்படுகின்றது. ஆரம்பத்தில் 80 வீதமான மக்களை நவம்பர் மாதத்திற்குள் மீள்குடியேற்றப் போவதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் யூலை 10ல் ஜனாதிபதி ராஜபக்ச நவம்பரில் 60 வீதமான மக்களை மீள்குடியேற்றப் போவதாகத் தெரிவித்தார். “We have a 180-day programme. That is our plan. In 180 days, we want to settle most of these people,” எனத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ச ஆனால் “It’s not a promise, it’s a target.” என்றும் குறிப்பிட்டு இருந்தார். 60 வீதமான மக்களை மீளக்குடியேற்ற வழங்கிய காலக்கெடு இன்னும் இரு வாரங்களில் வந்துவிடும். 180 நாள் இலக்கும் வெகு தொலைவில் இல்லை. ஆனால் மீள்குடியேற்றம் பற்றிய தெளிவான அறிவிப்புகளை அரசு இன்னமும் வெளியிடவில்லை.

உலகின் ‘மிகச் சிறந்த’, ‘மிகக் கட்டுக் கோப்பான’ இராணுவ அமைப்பு என்று பெயரெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை 30 ஆண்டுகள் ஆயுத வன்முறையை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை ‘புரஜக்ற் பீக்கன்’ என்ற திட்டத்தை வகுத்து கால அட்டவணைப்படி இரு வார தாமதத்தில் இலங்கை அரசு துடைத்து அழித்தது. அவ்வளவு வல்லமையைப் பெற்றிருந்து அரசு வன்னியில் உள்ள 300 000 லட்சம் மக்களை தான் குறிப்பிட்ட ஆறு மாதங்களுக்குள் மீள்குடியேற்றத் திணறுவதற்கு அரசின் இனவாதப் போக்கைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

வன்னி முகாம்களில் உள்ள மக்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலையைச் சேர்ந்த மக்கள் அவர்களது அடையாள அட்டையில் உள்ள பிரதேசங்களில் கொண்டு சென்று விடப்பட்டு உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஓக்ரோபர் 13 தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இப்பகுதிகளில் கொண்டு சென்று விடப்பட்டு உள்ளவர்களது ‘பூர்வீகம் அப்பிரதேசங்களாக இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அப்பிரதேசங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை’ என்று தெரிவித்த எம் கெ சிவாஜிலிங்கம் ‘இம்மக்களுக்கு மீளத் தமது வாழ்வை ஆரம்பிப்பதற்கான எவ்வித உதவிகைளயும் அரசு வழங்கவில்லை’ எனவும் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தீவுப்பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களில் இரு கால்களையும் இரு கைகளையும் இழந்த ஒரு போராளிப் பெண்ணும் அவரது தாயும் அடங்குவதாகவும் எவ்வித உதவியும் இல்லாமல் அத்தாய் எவ்வாறு தனது ஊனமாக்கப்பட்ட மகளைப் பராமரிக்க முடியும்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

இவற்றின் பின்னணியில் வன்னி முகாம்களில் உள்ள கணிசமான பகுதியினர் வன்னி முகாம்களைவிட்டு வெளியேறத் தயாராக இல்லை என அங்குள்ள சிலருடன் ஏற்படுத்திக் கொண்ட தொலைபேசி உரையாடல்களில் இருந்து தெரியவருகின்றது. எந்தவொரு வெளிநாட்டுத் தொடர்புகளும் கிடையாத பெரும்பாலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த இம்மக்கள் நிரந்தரமான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை. (பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் 75 வீதத்திற்கும் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தையே சேர்ந்தவர்கள்.) இவர்கள் வன்னி முகாம்களைவிட்டு வெளியேறும் பட்சத்தில் இவர்களது நாளாந்த வாழ்வுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலை ஒன்றும் உள்ளது. அதனால் இம்மக்கள் தாங்கள் முகாம்களைவிட்டு வெளியேறினால் நிர்க்கதியாவோம் எனத் தேசம்நெற்க்கு தெரிவித்தனர். அவ்வாறு இருந்தும் தங்களது சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி அரசு தங்களை கைதிகளாக நடத்துவதாக அம்மக்கள் உணர்கின்றனர்.

இவ்வாறு வன்னி முகாம்களுக்கு உள்ளேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்களில் வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்களும் கணிசமானவர்கள் உள்ளதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பிலும் நடந்து முடிந்த யுத்தத்திலும் இம்மக்கள் மிகுந்த இழப்புகளைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார். இவ்விடத்தில் வன்னிக்குப் புலம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் எதிர்கொண்ட சமூகப் பிரச்சினை தமிழ் மக்களால் கண்டுகொள்ளப்படாத ஒரு பிரச்சினை. (அதனை முடிந்தவரை ஆர் புதியவன் தனது ‘மண்’ படத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.)

அண்மையில் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களில் கணிசமான தொகையினரை அரசு நாட்டின் ஏனைய பகுதிகளில் ‘தற்காலிகமாக’ குடியிருத்த முயற்சிப்பதாகத் தெரியவருகின்றது. அதன்படி வெளிநாடுகளில் உள்ளவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களைப் பொறுப்பெடுக்க முன்வரும்பட்சத்தில் பொறுப்பெடுக்கப்பட்டவர்களை ‘தற்காலிகமாக’ தென்னிலங்கையில் குடியமர்த்துவது பற்றி அரசு ஆராய்கின்றது. அவ்வாறு குடியிருத்தப்படுபவர்களது செலவீனங்களை அவர்களைப் பொறுப்பெடுக்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்த வேண்டும் எனக் கேட்கப்பட இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னி முகாம்களில் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் வடக்கு – கிழக்கில் குடியமர்த்த முடியும் ஆயினும் அரசு அவர்களை வடக்கு கிழக்கில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்துவதற்குப் பதிலாக தென்னிலங்கையில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்த முற்படுவதன் பின்னணி அபாயகரமானது. ஏற்கனவே சனத்தொகை ரீதியாக மிகப் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தெற்கில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்தப்படுவார்களாக இருந்தால் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் சனத்தொகையில் பாரிய விழ்ச்சி ஏற்படும். வட மாகாணத்தின் யாழ் மாவட்டம் தவிர்ந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னியின் மொத்த  வன்னியின் மொத்த மக்கள் தொகை – 551,000. ( மன்னார் – 100,000, கிளிநொச்சி – 142,000, முல்லைத்தீவு – 145,000, வவுனியா – 164,000) இவர்களில் 250 000 மக்கள் தொகையினர் – 50 வீதமான மக்கள் வன்னி முகாம்களில் உள்ளனர். இவர்களில் கணிசமான தொகையினரை அரசு தென்பகுதிகளில் குடியேற்ற முயற்சிக்குமாக இருந்தால் வன்னி நிலப்பரப்பிலும் வடக்கு கிழக்கிலும் தமிழ் மக்களின் சனத்தொகை கணிசமான அளவு வீழ்ச்சி அடைவது தவிர்க்க முடியாதது.

ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் வாழந்த முஸ்லீம் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் தங்கள் வாழ்நிலையை அங்கேயே ஸ்தீரப்படுத்திக் கொண்டதால் அவர்கள் மீண்டும் தங்கள் பூர்வீக மண்ணுக்கு வருவதற்கு தயாராகவில்லை. அவர்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கான மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படாதவரை அவர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்திலேயே தங்களை நிலைப்படுத்திக் கொள்வர்.

இன்று வன்னி முகாம் மக்களை தெற்கில் முடியமர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் இதே விளைவையே ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கடைசியாக 1981லேயே வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சனத்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் வடக்கு கிழக்கில் சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான சுமூகமான சூழலோ அல்லது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் அரச கட்டுப்பாட்டிலோ இருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்பட உள்ள குடிசனமதிப்பீடு 2011ல் இடம்பெற இருக்கின்றது. 1991, 2001 ல் வடக்கு கிழக்கின் சனத்தொகை மதிப்பீடு இலங்கையின் வளர்ச்சி வீதத்துடன் ஒத்ததாக மதிப்பிடப்பட்டது. தற்போது வடக்கு கிழக்கு முழுமையாக அரச கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் 2011ல் குடிசனமதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி வடக்கு கிழக்கின் உண்மையான சனத்தொகைப் புள்ளிவிபரம் வெளிவரும்.

கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு கிழக்கின் சனத்தொகையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. அண்ணளவாக மூன்று மில்லியனாக இருந்த வடக்கு கிழக்கு தமிழர்களில் ஒரு மில்லியன் தமிழர்கள் குறிப்பாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து உள்ளனர். இன்னும் ஒரு மில்லியனுக்கும் சற்று குறைவான தமிழர்கள் தென்பகுதிகளில் வாழ்கின்றனர். எஞ்சிய ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமான தமிழர்களே வடக்கு கிழக்கில் உள்ளனர். இவர்களில் 660 000 பேர் (முஸ்லீம்கள் உட்பட) இடம்பெயர்வு முகாம்களில் வாழ்வதாக தமிழர் தகவர் நடுவம் தெரிவிக்கின்றது.

வன்னி யுத்தத்தில் இலங்கை அரசு மிக மோசமாக மனித உரிமைகளை மீறியது. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது. ஆனால் இலங்கை அரசு இன அழிப்பை மேற்கொண்டதாக நிறுவுவது கடினம் என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுதாபமானவர்கள் லண்டனில் ஏற்பாடு செய்த கூட்டங்களிலேயே சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வன்னியில் மக்களின் உயிரிழப்புகள் அதிகரித்தால் சர்வதேசம் தலையீடு செய்யும் என்ற முட்டாள்தனமான சமன்பாட்டை வைத்துக் கொண்டு மக்கள் கொல்லப்படுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலி ஆதரவு திங்ராங்க். யுத்தத்தின் கொடுமை தாங்காது தங்கள் கட்டுப்பாட்டை மீறி அரச படைகளை நோக்கி ஓட நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஓடித்தப்ப முடியாது சிக்குண்டவர்கள் அரசின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இவ்வாறு  தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் பெரும் மனித அவலத்தை நிகழ்த்தி சர்வதேசத்தை கூவி அழைத்தனர் புலிகள். இம்முயற்சி எவ்வித பலனையும் அளிக்கவில்லை. அதனால் வன்னி யுத்தத்தில் இலங்கை அரசு இனஅழிப்புச் செய்துள்ளது என்பதனை நிறுவுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடம்கொடுக்கவில்லை.

ஆனால் ‘இலங்கை அரசு தற்போது செய்ய முற்படுகின்ற விடயங்களே திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு இனஅழிப்பு நடவடிக்கை’ என்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏபிஆர்சி உறுப்பினருமான எஸ் தவராஜா. தற்போதைய இன அழிப்பு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களை படுகொலை செய்வதும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்துவதும் அல்ல எனத் தெரிவிக்கும் அவர் ‘அரசு மிகத் திட்டமிட்டு நிதானமாக தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது’ என்கிறார். ‘இதுவே தற்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய விடயம்’ எனவும் அவர் தெரிவிக்கின்றார். ‘எப்போதும் வருமுன் காப்பதே நன்று’ எனக் கூறும் எஸ் தவராஜா ‘தமிழ் மக்களுக்கு சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவை ஒரு போதும் மீளப்பெறப்படப் போவதில்லை. கல்லோயக் குடியேற்றத் திட்டம் முதல் இன்றுவரை நிலைமைகள் அவ்வாறே உள்ளது. அவற்றை இனிமேல் நீக்க முடியாது. அதனால் அவ்றை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

வன்னி முகாம்களை தொடர்ந்தும் வைத்திருப்பதில் இலங்கை அரசு பெரும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. அதனால் அந்த முகாம்களை மூடவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளேயும் வெளியேயும் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த முகாம்களை மூடிவிட்டு மக்களை அவர்களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் விருப்பம் அரசிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் அரசு இம்மக்களில் கணிசமான பகுதியினரை வடக்கு கிழக்கிற்கு வெளியே கொண்டு சென்று குடியேற்றவும் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிடுகின்றது. கிழக்கில் அரசு வெற்றிகரமாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்ட போதும் வடக்கில் அவ்வாறான ஒரு நிலை காணப்படவில்லை. ஆனால் தற்போதைய சூழல் வடக்கிலும் அவ்வாறான ஒரு சனத்தொகை மாற்றத்தை அரசு மேற்கொள்வதை நோக்கி நகர்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கை அரசின் இந்தப் போக்கானது மலேசிய அரசு தனது சிறுபான்மை இனங்களை எவ்வாறு கையாள முற்படுகின்றதோ அதை நோக்கியதாக உள்ளதாக அண்மையில் தமிழர் தகவல் நடுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு ஒன்றில் மலேசிய நண்பர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பின்னணிகளைக் கொண்டு வன்னி முகாம்களில் உள்ள மக்களது எதிர்காலம் தொடர்பில் அந்த மக்களுடன் தொடர்புபட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது. நாம் சரியெனத் தீர்மானிக்கும் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் அந்த மக்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களும் கோரிக்கைகளும் முன் வைக்கப்பட வேண்டும். அதற்கு போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் அந்த மக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது.

._._._._._.

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

வன்னி முகாம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக …..

1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.

4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஏ-9 ஊடாக இன்று முதல் யாழ். குடாவுக்கு தபால்

141009post-box.jpgயாழ். குடாநாட்டு மக்களுக்குரிய தபால் பொதிகள் அனைத்தும் இன்று முதல் ஏ-9 வீதியூடாக எடுத்துச் செல்லப்படும் என வட மாகாண பிரதி தபால் மா அதிபர் வீ. குமரகுரு  தெரிவித்தார்.  2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதியுடன் ஏ-9 வீதியூடாக தபால் பொதிகள் அனுப்பும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் ‘கிரீன் ஓஷியன்’ கப்பல் மூலமே தபால் பொதிகள் அனுப்பப்பட்டன.

யாழ். மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் ‘கிரீன் ஓஷியன்’ கப்பல் தபால் பொதிகளை இலவசமாகவே யாழ். நகருக்கு எடுத்துச் சென்றது. கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு இலவசமாக சேவைகளை செய்த கப்பலுக்கு நன்றிகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

இன்று காலை 7.00 மணிக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றின் மூலம் யாழ். நகருக்குரிய சகல தபால் பொதிகளும் கொண்டு செல்லப்படவுள்ளன.

ஆப்கானுக்கு மேலும் 500 பிரிட்டிஷ் துருப்பினர்

ஆப்கானிஸ்தானுக்கு பிரிட்டிஷ் துருப்பினர் கூடுதலாக ஐநூறு பேர் அனுப்பப்படவிருப்பதை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் உறுதிசெய்துள்ளார். கூடுதல் படையினரும் சேரும்போது ஆப்கானில் உள்ள மொத்த பிரிட்டிஷ் துருப்பினரின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து ஐநூறாக உயரும்.

நிறைய நிபந்தனைகளுடனேயே புதிதாக படையினர் அனுப்பப்படுகிறார்கள் என்று லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் பிரதமர் பிரவுன் தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் உள்ள பிற நாடுகளும் தங்களுடைய பங்குக்கு கூடுதல் படையினரை வழங்க விருப்பம் தெரிவித்தள்ளன என்பதும் ஆப்கானிய அரசாங்கம் கூடுதலானோரை படையில் சேர்த்து, பயிற்சி அளித்து, பணியில் ஈடுபடுத்த உறுதி வழங்கியுள்ளது என்பதும் இந்த நிபந்தனைகளில் அடங்கும்.

ஆப்கானில் அதிக துருப்பினரைக் கொண்ட நேட்டோ நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பிரிட்டன் உள்ளது.

தமிழக எம்.பிக்கள் குழுவுடன் கிழக்கு முதல்வர் சந்திப்பு

111009.jpgதமிழக த்திலிருந்து வருகை தந்திரு ந்த இந்திய நாடாளுமன்ற குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் குறி த்து ஆராயும் பொருட்டும் உண்மை நிலைகளை கண்டறியும் முகமாகவும் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்திய குழுவினரை முதலமைச்சர் சந்திரகாந்தன், இந்திய இல்லத்தில் சந்தித்தே கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகா ணத்தின் தற்போதைய நிலவரம், அங்குள்ள மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள், மாகாண சபை உருவாக் கப்பட்டதன் பின்னரான மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரினால் இந்திய தூதுக் குழுவினரிடம் தெளிவாக எடுத்துரை க்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இந்திய தூதுக்குழுவினரினால் கிழக்கு மாகாணம் பற்றியும், மாகாண சபை எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் குறித்தும் முதலமைச்சரிடம் கேட்கப்பட்டது.