February

February

தேர்தலின் பின் அனைத்து கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை – இந்துவுக்கு ஜனாதிபதி பேட்டி

he_the_president.jpgஇனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பொதுத்தேர்தலின் பின்னர் சகல கட்சிகளு க்கும் அழைப்பு விடுக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘இந்து’ பத்திரிகைக்கு விசேட பேட்டியொன்றை வழங்கிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் சகல கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துப் பேச்சு நடத்துவேன். தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கு கொள்வார்கள். தமிழ், முஸ்லிம் தலைவர்களை அழைத்துப் பேசுவதற்கு கூடுமானவரை முயற்சி செய்திருக்கிறேன். பிரபாகரன் இருக்கும் வரை அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுக்களில் ஆர்வம் காட்டவில்லை.

இப்போது காலம் கனிந்திருக்கிறது. நான் ஜனாதிபதி என்ற வகையில் அவ ர்கள் என்னோடு பேசவேண்டும். என்னோடு அவர்களுக்கு பேச முடியாது விட்டால், புதிய தலைவர்களுடன் நான் பேசுவேன்.

13 வது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அது ஏற்கனவே அமுல்படுத்தப்பட் டுள்ளது. இதன்படி பொலிஸ் அதிகாரங்களைத் தவிர அனைத்தும் அமுலிலுள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றுவதற்கே நான் முன்னுரிமை கொடுக்கிறேன். இப்போது நிவாரணக் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் பேரே இருக்கின்றனரென்றார்.

ஐ.தே.க – ஜே.வி.பி மோதல்

ஐ.தே.கவுக்கும், ஜே.வி.பிக்கும் இடை யிலான கருத்து முரண்பாடுகள் உக்கிர மடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. இரு சாராரும் இப்போது நேரடி மோத லில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தால் ஜே.வி.பிக்குத் தேசியப் பட்டியலில் மூன்று இடங்களை ஒதுக்கித்தர முடியும் என ஐ.தே.க தெரிவித்துள்ளதால் அந் தக் கட்சி மீது ஜே.வி.பி. கொதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“பொதுத் தேர்தலில் யானைச்சின்னத் திலேயே ஐ.தே.க போட்டியிடும். ஜே.வி.பி. விரும்பினால் யானைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடலாம். இல்லையேல் எமக்கு ஆதரவளித்தால் அவர்களுக்கு தேசிய ப்பட்டியலில் மூன்று ஆசனங்களை வழங்க முடியுமென்று ஐ.தே.க.வின் காலி மாவ ட்ட அமைப்பாளர் வஜிர அபேவர்தன கூறி யிருக்கின்றார். இதனையடுத்து ஜே.வி.பி. அதன் அனைத்துக் கூட்டங்களிலும் ஐ.தே.க.வை கடுமையாகச் சாடி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

“வேறு கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்ற த்துக்குச் செல்லும் அவசியம் கிடையாது. ஒவ்வொரு கட்சியினதும் தேசிய பட்டியலில் செல்ல வேண்டிய தேவையும் எமக்கு இல்லை” என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பகிரங்கமாகவே ஐ.தே.க.வை விமர்சித்து வருகிறார்.

பாராளுமன்றத் தேர்தலும் – தனிநபர் – சமூகப் பொறுப்புணர்வும் : மீராபாரதி

One_Country_One_Nationமனித நலன் எனும் போது குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கை கவனத்தில் கொள்ளும் பொழுது, உடனடி நலன் அல்லது குறுகிய காலத்தில் நலன்களைப் பூர்த்தி செய்வதற்கான திட்டம் என்றும் மற்றது நீண்ட காலடிப்படையில் மனித நலன்களை அடைவது அல்லது பெற்றுக் கொள்வது என்பதாற்கான நீண்ட கால திட்டம் என்றும் இரண்டு திட்டங்களை முன்வைத்து செயற்படவேண்டியதாக உள்ளது இன்றைய சூழல்.

குறுகியகால அல்லது உடனடி திட்டம் என்று கூறும் பொழுது, இது குறிப்பாக போர் மற்றும் வன்முறை போன்றவற்றால் மிகவும் பாதிப்படைந்திருக்கும் மனிதர்களுக்கான உடனடி தேவைகளை நிறைவேற்றுவதாக அர்த்தப்படும். இந்த மனிதர்கள் எதிர்கொள்கின்ற பாதிப்பானது பலவகைப்படும். அதாவது அவர்களது உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அங்க அவயங்கள் இழந்தது முதற்கொண்டு உளவியல் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் வீடுகளை உறவுகளை இழந்து வீடற்றவர்களாக உறவற்றவர்களாக இடம்பெயர்ந்து நிரந்தரமற்ற வாழ்வை வாழ்கின்றனர். கல்வியை சீராக தொடர்வதற்கான மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்க்கான வாய்ப்புகளும் குறைவாகவும் நம்பிக்கையற்றும் இருக்கின்றன. மேலும் நாளாந்த வாழ்வு உரிமைகள் மட்டுமல்ல சுதந்திரமும் இல்லாது இராணுவப் படைகள் சூழ பயந்த வாழ்வை மேற்கொள்கின்றனர். வடக்கு கிழக்கில் வாழும் மனிதர்களது இவ்வாறான வாழ் நிலையிலிருந்து உனடியான மாற்றம் தேவைப்படுகின்றது. இது நாளாந்த வாழ்வுக்கான தேவைகள் மற்றும் அத்தியாவசியமானதுமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்யலாம். இது ஒரு உடடியான குறிகிய கால திட்டம் ஒன்றின் மூலமே சாத்தியமானது. அதற்கான தேவை இன்று உள்ளது. இதை எவ்வாறு மேற்கொள்வது….

இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழிப்பதிலும் போரை வெல்வதிலும் காண்பித்த அக்கறை அவற்றுக்கு மூல காரணமான தமிழ் பேசும் மனிதர்கள் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறையை இல்லாது செய்வதற்கோ அவர்களது உரிமைகளை மீள நிலைநாட்டுவதிலோ தொடர்ந்தும் அக்கறை இல்லாதே செயற்படுகின்றனர். இந்த அக்கறை உணர்வுடன் அல்லது இன முரண்பாடுகளை களைந்து முன்னோக்கி செல்வதற்குப் பதிலாக அடக்குமுறை அரசை அதன் இயந்திரத்தையே தொடர்ந்தும் பயன்படுத்தும் அதேவேளை மனித நலன்கள் மற்றும் அவர்களது நாளந்த பிரச்சனைகளில் கூட அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றனர். இதனடிப்படையில்தான் அவர்கள் மேற்கொண்ட ஜனாதிபதி தேர்தலும் மேற்கொள்ளப்போகின்ற பாராளுமன்ற தேர்தலும் பார்க்கப்படவேண்டும். ஜனாதிபதி தேர்தல் போலவே பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகள், மற்றும் உரிமைகள் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலை முன்வைத்தும் மனிதர்களுக்கு அரசியல் அறிவை தெளிவை ஏற்படுத்தி அவர்களை வளர்த்தும் செல்வது நோக்கமல்ல. மாறாக தமது வர்க்க மற்றும் அரசியல் இலாபங்களின் அடிப்படையில் பிழைப்புவாத அரசியலை முன்னெடுத்து சிங்கள இனவாத கட்சிகளுக்கு முண்டுகொடுக்கும் வேலை திட்டத்தையே கடந்த காலங்களைப்போல அதன் தொடர்ச்சியாக இப்பொழுது இருக்கின்ற தமிழ் பேசும் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கட்சிகள் முன்னெடுத்தன. இந்த தவறை மறைக்கும் முகமாக வடக்கு கிழக்கில் அல்லது தமிழ் ஈழத்தில் பச்சை நிறம் சிறிலங்காவில் நீல நிறம் ஆகவே தேசங்கள் பிரிந்திருக்கின்றது எனவும் மக்கள் சரியான முடிவை தெரிவித்துள்ளார்கள் எனவும் மகிந்தவின் அரசாங்கத்தின் முகத்தில் அறைந்துள்ளார்கள் எனவும் கூவித்திரிந்து திருப்தியடைகின்றனர்.

வடக்கு கிழக்கில் பச்சை நிறத்தை உருவாக்கியதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அடிப்படையில் எதைச் சாதித்தோம் அல்லது வென்றோம் எனப் பார்த்தால் பூச்சியமே. ஆனால் சிறிலங்காவின் அரசியல் அடிப்படையில் அவர்களது பார்வையில் வடக்கு கிழக்கு அரசியல் தம்மில் தங்கியிருக்கும் பிழைப்புவாத அரசியல் என்பதையே அவர்களுக்கு மேலும் நிரூபித்திருக்கின்றது. இது சிறிலங்காவில் அதாவது வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள சிறிலங்காவின் அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிழைப்புவாத அரசியல்வாதிகளுக்கு தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தெரிவித்த ஒரு நற்செய்தியே. தமிழ் பேசும் மனிதர்களின் அரசியலைப் பொறுத்தவரை இது நற்செய்தியல்ல.

தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் துரதிர்ஸ்டம் என்னவென்றால் தொடர்ந்தும் பழிவாங்கும் அரசியல் வழியில் தொடர்ந்தும் செயற்படுவதே. அதன் உடனடி வெற்றியில் குளிர்காய்வது. இதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களையும் ஏமாற்றி அவர்களது உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருப்பது அவற்றை சுரண்டுவதுமே. இது இருபக்க பிழைப்புவாத அரசியல்வாதிகளுக்கும் சாதகமானதே. இதனால்தான் மகிந்தாவை வடக்கு கிழக்கில் தோற்கடித்ததாக புளகாங்கிதமடைபவர்கள் சரத் பொன்சேக்காவிற்கு வாக்களித்தற்காக வெட்கப்படவுமில்லை மற்றும் அது வெளிப்படுத்துகின்ற அரசியலை புரிந்து கொள்ளவுமில்லை.

இதற்கான காரணம் அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலில் தங்கி நிற்காது அதனை முதன்மையாக முன்வைக்காது மேலோட்டமாக அரசியலை வியாபாரமாக கருதி செயற்பட்டமையே. இவ்வாறு சிறிலங்காவின் அரசியலில் இருந்து தமது அரசியலை தீர்மானிக்காது அவர்களது நிறத்தில் ஒன்றை தெரிவு செய்யாது தமது அரசியலில் ஊன்றி நின்று ஒரு புதிய நிறத்தை தமது அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறத்தை வெளிப்படுத்துவது தொடர்பாக தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களும் புலிகளின் சித்தாந்தத்திற்குள் அகப்பட்டவர்களும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு வால்பிடிப்பவர்களும் சிந்திப்பதில்லை. அதன் வழி தமிழ் பேசும் மனிதர்களை வழிநடாத்த முயற்சிப்பதுமில்லை. தமிழ் பேசும் மனிதர்களும எந்தக் கேள்வியுமின்றி அவர்கள் பின்னால் கொடிபிடிப்பது தொடர்கின்றது.

இந்த நிலைமையில் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களிடம் எவ்வாறு உருப்படியான ஒரு செயற்பாட்டை எதிர்பார்ப்பது. ஆகவே அவ்வாறன ஒரு அரசியலை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டிய உடனடி தேவை சமூக பொறுப்பு உள்ளவர்களுக்கும் மற்றும் எல்லாவகையான அடக்குமுறைகளை எதிர்கொள்கின்ற மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது சமூக மாற்றம் ஒன்றிக்காக செயற்படுகின்ற அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களினதும் பொறுப்பாகவும் உடடியாக செய்யவேண்டிய செயற்பாடாகவும் இருக்கின்றது. அல்லது இந்த இருபக்க பிழைப்புவாத அரசியல்வாதிகள் இந்த இன அடக்குமுறையிலும் இன முரண்பாட்டிலும் குளிர்காய்ந்து தமது வாழ்வை நலமாக கொண்டு செல்வர். அடக்கப்பட்ட மனிதர்கள் தொடர்ந்தும் உரிமைகளற்றும் சுதந்திரமற்றும் நிரந்தர இருப்பிடமில்லாதும் அலைந்து திரிந்துகொண்டு இருக்கவேண்டியதுதான். இதற்காக செயற்படுவதற்கு தலைமறைவு வாழ்வு இனிமேலும் அர்த்தமற்றது. அடக்கப்படும் மனிதர்களுடன் வெளிப்படையாக வாழ்ந்து அவர்களது அரசியல் அபிலாசைகளை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் பல முனைகளிலும் பல தளங்களிலும் செயற்படுவேதே இன்றைய தேவை.

இந்த அடிப்படையில் மனித நலன்களிலும் அவர்களது வளர்ச்சியிம் மற்றும் சுற்று சூழலிலும் அக்கறை கொண்ட மனிதர்கள் இணைந்து மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி ஒன்றை உருவாக்கி இந்த பாராளுமன்ற தேர்தலில் அல்லது தொடர்ந்து வரும் தேர்தல்களில் பங்குபற்றுவது ஒரு வழிமுறையாகும். இதன் மூலம் அடக்கப்பட்ட மனிதர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி தொடர்ந்தும் பதவி சுகங்களை மட்டும் அனுபவித்துக்கொண்டும் இனவாத அடக்குமுறை அரசுகளுக்கு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கும் மரபு மற்றும் இயக்க வழிவந்த பிழைப்புவாத, மற்றும் வன்முறை அரசியல்வாதிகளின் செயற்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது அல்லது மாற்றாக ஒன்றை நிலைநிறுத்துவது மிகவும் அவசர அவசியமானது.

இதன் மூலம் தலைமறைவு வாழ்வுக்கு அல்லது புலம் பெயர் பாதுகாப்பு வாழ்வுக்கு விடைகொடுத்து அடக்கப்பட்ட மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டு செயற்படுவதற்கு இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படலாம். ஆகக் குறைந்தது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்து வாழும் அரசியல் மற்றும் சமூக அக்கறையுடைய மனிதர்கள் இது தொடர்பாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. அல்லது புலம் பெயர்ந்த இடங்களிலிருந்து நாம் எழுதும் எழுத்துக்களுக்கு அர்த்தம் இல்லாது போய்விடும்.

மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியல் அபிலாசைகளை அவர்களது உரிமைகளையே, இந்த அமைப்பு அல்லது கட்சி சார்பாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் அல்லது பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இதன் மூலம் போரினாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அடக்கப்பட்ட மனிதர்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை உருவாக்கி செயற்படலாம். இவ்வாறான பாராளுமன்ற செயற்பாடுகளையே முதன்மையான நோக்கங்களாக கொண்டு பதவிகளுக்காக செயற்படும் பிற கட்சிகளைப் போலன்றி, இவ்வாறான செயற்பாடுகள் பல்வேறு வேலை திட்டங்களின் ஒரு பகுதியாகவும், அடக்கப்பட்ட மனிதர்களின் முழுமையாக விடுதலைக்கான நீண்ட கால வேலைத்திட்டங்களை முடக்கிவிடுவதற்குப் பதிலாக அதற்கான அத்திவாரங்களாகவும் செயற்பட வேண்டும். இதை அமைப்பு அல்லது கட்சி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல்வேறு அமைப்பு துறை சார்ந்த வழிகள் மூலமாக இதனை மீள மீள உறுதி செய்துகொண்டு முன்னேறலாம்.

இவ்வாறு முன்னோக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கம் சந்தர்ப்பத்தில் அமைப்பு அல்லது கட்சி தனிநபர் சார்ந்த தன்னியல்பான தன்முனைப்பு செயற்பாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு கடந்த காலங்களைப் போன்றே முகம் கொடுக்க வேண்டிவரும். இவ்வாறான தனி நபர் செயற்பாடுகளை அக் குறிப்பிட்ட நபர்களின் வர்க்க சாதிய பால் பாலியல் போன்ற குணாம்சம் அல்லது வீயூகம் சஞ்சிகை குறிப்பிடும் ஒரு சமூகப் போக்காக அடையாளம் காண்பது சரியான பார்வையே. ஒவ்வொரு மனிதர்களும் பலவகைகளில் இந்த சமூக போக்குகளாலும் அதன் அடக்கு முறைகளாலும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் இவ்வாறு “சமூக போக்காக” மட்டும் அடையாளம் காண்பதால் இந்தப் பிரச்சனைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. ஏனெனில் இது மறுபுறம் தனிநபரின் பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே இருக்கும். ஆகவே இவ்வாறான பிரச்சனைகளை “சமூக போக்காக” மட்டுமல்லாமல் தனிநபரின் பொறுப்பு சார்ந்த பிரச்சனையாகவும் புரிந்துகொண்டு தீர்வு கண்டு முன்னேறுவது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும். அதாவது ஒரு மனிதர் தன் மீதான தான் சார்ந்த சமூகத்தின் ஆதிக்கத்தை புரிந்து கொள்வதும் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பாக சிந்திப்பதும் அதன் அடிப்படையில் செயற்படுவதும் முக்கியமானதாகும். இங்குதான் தனிநபர் பொறுப்புணர்வு முக்கியத்துவம் பெறுகின்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரனும் பிற இயக்கங்களின் தலைவர்களான உமாமகேஸ்வரன், பத்பநாபா, சிறிசபாரட்னம், பாலகுமார் போன்றவர்கள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒவ்வொரு காலகட்டங்களில் ஒன்றாகவோ தனித்தனியாகவோ முன்னெடுத்த போதும் தங்களது வர்க்க சாதிய மற்றும் பிரதேச அடிப்படையில் தம்மை பிரதநிதித்துவப் படுத்தியது மட்டுமல்ல குறுகியவாத ஆணாதிக்க வன்முறை அரசியலுக்கும் வித்திட்டனர். இதை ஒரு “சமூகபோக்காக” இனம் காண்பது சரியான போதும் அவ்வாறான இனங்காணல் மட்டும் அப் பிரச்சனைக்குத் தீர்வாகாது. ஏனெனில் தனி நபரின் பொறுப்பை மறந்து விடுகின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் நமது செயற்பாடுகள் சிந்தனைகள் மூலம் குறிப்பாக நமது சமூகத்திற்குள் இருக்கும் ஆதிக்க அடக்கும் சக்திகளையும் அவர்களது பிற்போக்கான அரசியலையும் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்ல அவற்றில் பங்கும் கொள்கின்றோம் என பெண்ணியவாதிகள் முன்வைக்கும் வாதத்தை புரிந்து கொள்வது நல்லது. ஆகவே இவ்வாறான பிரச்சனைகள் தனிநபரின் பொறுப்புணர்வு மற்றும் பிரக்ஞை சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்கப்பட வேண்டும்.

இதற்கு காரணம் ஒருவரை குறிப்பிட்ட சமூகமாகவும் அவரது செயற்பாட்டை சமூக போக்காகவும் என சரியாக இனங்காணும் அதேவேளை தனிநபரின் பொறுப்பை அவரது பிரக்ஞையின் முக்கியத்துவத்தை தட்டிக்கழிப்பது தவறானதாகும். ஏனெனில் சமூக மாற்றம் என்பது வெறும் வர்க்க பொருளாதரா அடிக்கட்டுமானங்களையும் மற்றும் புற அல்லது மேல் கட்டமைப்புகளையும் கட்டுமானங்களையும் மட்டும் மாற்றுவதன் ஊடாக ஏற்படுவதல்ல. மாறாக தனிநபர் மாற்றமும் முக்கியத்துவம் பெறுகின்றது என்பது கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் கற்கவேண்டியதாகும். ஏனெனில் தனி மனிதர்கள் இல்லாது ஒரு சமூகம் இல்லை. இந்த தனி மனிதர்களின் கூட்டினால் உருவானதே இன்றைய சமூக கட்டமைப்புகள் மற்றும் அது கட்டமைத்த சித்தாந்த மேலாதிக்கங்களும். இதைக் கட்டிக்காப்பதில் நாம் ஒவ்வொருவரும் பிரக்ஞையின்றி ஏதோ ஒரு வழியில் பங்கு கொள்கின்றோம். இதிலிருந்து பிரக்ஞையாக விடுபடுவது என்பது பிற செயற்பாடுகளான கோட்பாடு, கட்சி கட்டுதல், புரட்சிகர செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்று மிக முக்கியமானது. அதாவது சமூகத்தை சகல மனிதர்களின் நல்வாழ்விற்காகவும் மாற்றுவதற்காக புரட்சிகர வழியில் செயற்படும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக புரட்சியாளர்கள் சமூக மாற்றம் வரை காத்திராமல் இப்பொழுது இருந்தே தம்மையும் புரட்சிகரமாக மாற்றவும் தமது பிரக்ஞையை வளர்க்கவும் ஆகக் குறைந்தது அதில் அக்கறை கொள்ளவும் முயற்சிக்கவுமாவது வேண்டும்.
 
நாம் மேற்குறிப்பிட்டவாறு தனிநபர் மாற்றத்தில் அக்கறை இல்லாது இருப்பது, கார்ல் மார்க்ஸின் தத்துவ அடிப்படையில் புரிந்து கொண்ட பொருள் முதல்வாத கோட்பாட்டை அதன் அடிப்படையிலான இயங்கியலை கேள்விக்குள்ளாக்கின்றது. ஏனெனில் சமூகத்தை வெறும் வர்க்க அடிப்படையில் சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் சமூகங்களுக்கு இடையிலான இயக்கமாக காண்பதும் கீழ் கட்டுமானம் மற்றும் மேல் கட்டுமானம் என்பவற்றுக்கு இடையிலான இயக்கமாக மட்டும் காண்பது சரியானதாக இருந்தபோதும் போதாமையாகவே கருதப்பட வேண்டி உள்ளது. இது எந்த வகையிலும் மார்க்ஸின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகாது. ஏனெனில் அவரது தத்துவம் அல்லது கோட்பாடு அவர் வாழ்ந்த சுழலில் அன்றைய அனுபவத்திற்கும் அறிவின் பரம்பல்களுக்கும் ஏற்ப உருவான ஒரு முன்னேறிய கோட்பாடு. இதை அவர்களும் அதன்பின் வந்த லெனினும் மாவோவும் தங்களது சமூகங்களுக்கு ஏற்ப மாற்றி வளர்த்து உரசிப் பார்த்தனர்.

இருந்தும் அவர்களது முயற்சி இன்று தோற்றுப் போய்விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம் அதன்பின் வந்தோரின் அதிகாரமும் குறுகிய கோட்பாட்டுத்தளமும் ஆகும். முன்னேறிய கோட்பாடு மட்டும் இருப்பது போதாது மாறாக சுய மாற்றமும் சுய பிரக்ஞையும் அதன் வளர்ச்சியும் அவசியமானது என்பதே இத் தோல்விகள் சுட்டி நிற்கின்றன. ஆகவே “முன்னேறிய பிரிவினர்” என்பது புரட்சிகர கோட்பாட்டை மட்டும் உள்வாங்கிக் கொண்டவர்கள் அல்ல. மாறாக அதனுடன் சுயமான புரட்சிகர மாற்றத்தை தன்னளவில் உருவாக்கியவர்கள் அல்லது உருவாக்க முயற்சிப்பவர்கள் மற்றும் உடல் மற்றும் ஆன்மா சார்ந்த பிரக்ஞையில் தம்மை வளர்ப்பவர்களுமே ஆகும். ஆனால் பலர் மார்க்ஸிய தத்துவத்தை வேதாகமாக மாற்றம் இன்றி கடைபிடிப்பது மார்க்ஸின் கோட்பாட்டிற்கே எதிரானது என்பதை புரிந்துகொள்ள தவறுகின்றனர்.

ஏனெனில் இன்று நாம் வாழும் சூழல் பல புதிய பிரச்சனைகள் முரண்பாடுகளை மட்டுமல்ல பலவேறு விதமான அறிவுகளையும் தந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பார்வையும் இனிவரும் காலங்களில் அக் கோட்பாடுகளின் முக்கியத்துவமும் சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டில் அதன் முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவாக இருக்கின்றன. இது போன்றே தனி நபர் மற்றும் அவர் மீதான சமூகத்தின் தாக்கம் அதானால் உருவான உளவியல் பாதிப்பு மற்றும் அதிலிருந்து எவ்வாறு வெளிவருதல் தனிநபர் இருப்பு பொறுப்பு தொடர்பான அக்கறை முக்கியத்துவம் என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவையாக இருக்கின்றன. இதற்கு மேற்கத்தைய உளவியலை மட்டும் புரிந்து கொள்வது குறைபாடானதாகவே இருக்கும்.

இங்குதான் புத்தர் என்கின்ற கௌதம சித்தாத்தர் முக்கியத்துவம் பெறுகின்றார். மார்க்ஸியத்தின் மீது நம்பிக்கை கொண்டு வாழும் நாஸ்திகர்ளுக்கு புத்தர் மேலைத்தேய சோக்கிரட்டீசைப் போல ஒரு கீழைத்தேய தத்துவஞானி என்பதை ஏற்றுக் கொள்வது கஸ்டமானதே. ஆனால் வெகுவிரைவில் மேலைத்தேய சிந்தனையாளர்களில் ஒருவர் புத்தரின் தத்துவங்கள் சமூக மாற்றங்களுக்கான செயற்பாட்டிற்கு முக்கியமானவை என தமது பொருள்முதல்வாத மற்றும் மார்க்ஸிய அடிப்படையில் நிறுவும் போது காலனியாதிக்கத்திற்கு உட்பட்டு பழக்கப்பட்ட சிந்தனையாளர்கள் அதன் பின் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையாக நிற்கப்போகும் காலம் வெகுதுராமில்லை. இந்தப் போக்குக்குக் காரணம் நாம் இன்றும் நமக்கருகில் இருப்பதை புரிந்துகொள்ளாது மேலைத்தேய வெள்ளை ஆதிக்கத்திற்கு உட்பட்ட நமது சிந்தனையில் அடிமைப்பட்டிருப்பதுதான் என்றால் மிகையல்ல.

கடந்த காலங்களில் தனி மனிதர்கள் வெறும் பண்டங்களாக பொருட்களாக பார்க்கப்பட்டமைக்கும் மனித படுகொலைகளுக்கும் வரட்டுத்தனமான பொருள்முதல் வாத கண்ணோட்டம் ஒரு முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல. இதுபோன்றதே ஆணாதிக்க பார்வையில் அமைந்த வன்முறை செயற்பாடும் அதன் வழிமுறையும். இவற்றிலிருந்து விடுபட புதிய அறிவுப் பரம்பல்களை பெற்றுக்கொள்வது மட்டுமல்ல அதற்காக தேடலில் ஈடுபடவும் உருவாக்கவும் வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில் இன்று நாம் அறிந்த அறிவு என்பது அறிவின் ஆழமும் பரம்பல்களும் அதிகரித்த போதும் மீளவும் சிறிதளவே என்பது எப்பொழுதும் புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்று. அதாவது அறிவு எப்பொழுதும் முழுமையாதல்ல என்பது எப்பொழுதும் நமது பிரக்ஞையில் இருக்கவேண்டும்.

அது மட்டுமல்ல சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் தாம் முன்மாதிரியாக மட்டுமல்ல அடக்கப்பட்ட மனிதர்களின் பிரதிநிதிகள் என்ற பிரக்ஞை ஒவ்வொரு கணமும் அவர்களில் ஓளியாக வீசவேண்டும். இதுவே அடக்கப்பட்ட மனிதர்களுக்கு நம்பிக்கையையும் செயற்பாடுவதற்காகன உந்துதலையும் தரும். அல்லது மீளவும் மீளவும் அரசின் அடக்குமுறை இயந்திரங்களிள் அடக்குமுறையிலிருந்தே எதிர்செயற்பாடாகவே போராட்டங்கள் மேலேழுவது தவிர்க்கப்பட முடியாததாக இருக்ககும். மாறாக பிரக்ஞைபூர்வமான போராட்டமாக முன்னெடுக்கப்பட மாட்டாது.

இதைப் புரிந்துகொள்வதற்கு முதலில் நாம் ஒவ்வொரு மனிதரும் இந்த ஆணாதிக்க இருபால் மற்றும் ஐரோப்பிய வெள்ளை இனவாத மேல் அல்லது மத்திய வர்க்க சிந்தனைளால் பரந்தளவிலும் நமது சமூக அளவில் ஆணாதிக்க இருபால் மற்றும் சாதிய வர்க்க சிந்தனைகளால் நமது பால் பாலியல் உளவியல் மற்றும் பல வழிகளிலும் அடக்கப்பட்டு முடமாக்கப்பட்டவர்கள் என்பதையும் தமிழ் சுழலைப் பொறுத்தவரை புலிகளினதும் மற்றும் விடுதலை இயக்கங்களின் குறுகிய ஆயுத வன்முறை சித்தாந்தமும் இன்றும் மேலாதிக்கம் செய்கின்றது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேணடும். மேலும் இதன் வழி நாம் பிரக்ஞையின்றி நம் மீதான ஒடுக்குமுறைகளுக்கே நாமும் பங்களிக்கின்றோம் என்பதை புரிந்துகொள்வதன் மூலம் அதை மாற்றுவதற்கான காரணிகளைக் கண்டுபிடித்து அதிலிருந்து வெளிவரமுடியும்.
 
மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி என்பது இலங்கைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் பேசும் மனிதர்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஒன்று சர்வதேச அளவில் இருப்பதன் தேவை நீண்டகாலமாகவே உணரப்பட்டு வருகின்றது. இது தொடர்பான முயற்சி ஒன்று 1998ம் ஆண்டு தமிழீழ மக்கள் கட்சியின் ஒரு முன்ணணியாக புலம் பெயர் நாடுகளில் உருவாக்க முயன்ற முயற்சியும் பல காரணங்காளால் கட்சியைப் போல வெற்றியளிக்கவில்லை. மேலும் அவ்வாறு ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்று இல்லாமையின் பாதகமான தன்மையை கடந்த வருடம் புலம் பெயர் நாடுகளில் நடந்த போராட்டங்களிலும் அதைத் தலைமை தாங்க எந்த ஒரு அமைப்பு முன்வராதது மட்டுமல்ல தமிழ் பேசும் மனிதர்களை அரசியல் அடிப்படையில் சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்த எந்த ஒரு அமைப்பும் இல்லாதிருந்ததும் மிகவும் துரதிர்ஸ்டமானதே. 

நாடு கடந்த அரசம் மற்றும் அதுபோன்ற பிற அமைப்புகளும் இருக்கின்றன என்று சிலர் கூறலாம். இவர்களும் அவர்களது ஊடகங்களும் மீளவும் புலிகளின் சிந்தாத்த அரசிலையே தொடர்கின்றது மட்டுமல்ல புலம் பெயர் மனிதர்களிடம் ஒரு வகையான அரசியல் வியாபாரரீதியான தொடர்பாடலையும் செயற்பாட்டையுமே முன்னெடுக்கின்றன. கடந்த காலங்களில் நடந்த தவறுகளுக்கு புலம் பெயர் மனிதர்களிடம் பெற்ற நிதிகளுக்காக விபரங்களை எதையும் இதுவரை மனிதர்கள் முன்வைக்கவில்லை.  மாறாக புதிய செயற்பாடுகளை பல்வேறு பிரிவுகளாக அதுவும் கொள்கை அல்லது கோட்பாட்டின் அடிப்படையில் பிரிந்து செயற்பாட்டால் கூட ஏற்றுக்கொள்ளலாம் மாறாக பிரபாகரன் இருக்கிறார் இல்லை என்றடிப்படையில் அல்லவா பிரிந்து செயற்படுகினறனர்.

மேலும் சிலர் இலங்கை அரசாங்கத்துடன் அல்லது இனப் பிரச்சனைகளுக்கு காரணமான இனவாத கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதா இல்லையா என பிரிந்து இருக்கின்றனர். புதிய கருத்துக்கைளை உள்வாங்கியவர்களாகவோ அல்லது பெண்கள் தொடர்பான முன்னேறிய கருத்துகள் உடையவர்களாகவோ இவர்கள் இன்னும் இல்லை என்பது ஒரு துர்ப்பாக்கியமானதே. இனிவரும் காலங்களில் அமைப்பின் அங்கத்துவத்தில் மட்டுமல்ல அதன் தலைமைக் குழுக்களிலும் பெண்கள் சம பலத்துடன் எண்ணிக்கையுடன் இருக்க வேண்டியது ஆணாதிக்க பாதையில் செல்வதை சிறிதளவாவது தடுத்து நிறுத்த உதவுவது மட்டுமல்ல ஆரோக்கியமாக செயற்படவும் வழிவகுக்கும். இவற்றுடன் புலம் பெயர் நாடுகளின் தமிழ் பேசும் மனிதர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு தேர்தல்களிலும் நின்று வெற்றி பெறுகின்றனர். தமிழ் பேசும் மனிதர்களும் “தமிழ் பேசும் மனிதர் தேர்தலில் நிற்கின்றார்” என்பதற்காக தமது வாக்கை அளித்து வெற்றிபெறச் செய்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகளாலும் பின்பு குறிப்பிட்ட பிரதிநிதிகளாலும் வடக்கு கிழக்கில் வாழும் மனிதர்களுக்கு எந்தவிதமான ஒரு நன்மையும் இல்லை. காரணம் இவர்களிடம் ஒரு அமைப்பின் கீழான ஒருங்கிணைப்பு இல்லை. இதற்கும் மேலாக நிதி பங்களித்தவர்களுக்கோ அல்லது வாக்களித்தவர்களுக்கோ நம்பகத்தனமாக பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் இல்லை. ஏனெனில் அவ்வாறான ஒரு அமைப்பு கட்டுப்பாடு இல்லை. ஆகவே இவர்களிடம் இது தொடர்பாக சுய பிரக்ஞை இருக்கும் என்பதை எவ்வாறு எதிர்பார்ப்பது.

ஆகவே புலம் பெயர் வாழ் தமிழ் பேசும் மனிதர்களுக்கும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்களுக்கும் நம்பகத்தனமாகவும் பொறுப்பாகவும் இருப்பதற்காக ஒரு பொதுவான அமைப்பின் கீழ் செயற்படுதலுக்கான தேவை இன்று உள்ளது. இதுவே நீண்ட கால நோக்கில் அரசியல் அடிப்படையில் சாதகமாகவும் இருக்கும்.  இதன் மூலம் பரஸ்பரம் நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைந்து செயற்படுவதுடன் வடக்கு கிழக்கு மனிதர்களின் உடனடி தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் குறுகிய கால திட்டங்களுக்கும் நீண்ட கால அடிப்படையிலான திட்டங்களுக்கும் தமது பங்களிப்பை வழங்கலாம். வடக்கு கிழக்கு மனிதர்கள் பல தேவைகளை இன்று எதிர்நோக்கி இருந்த போதும் பல புலம் பெயர் அமைப்புகள் அந்த அக்கறை இன்றி இருப்பதையே காணமுடிகின்றது.

மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி என்பது அதன் பெயரில் உள்ளதைப் போன்று மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாப்பதற்குமே முதன்மையாக செயற்படவேணடும். கடந்த காலங்களைப் போன்று கருத்துகளுக்கோ கோட்பாடுகளோ சொற்களுக்கோ முதன்மை கொடுக்காது அதற்காக மனிதர்கள் செயற்படாது மாறாக அதனடிப்படையில் மனித நலன்களைப் பெறுவதற்கான வழிகாட்டியாகவே அவை உதவவேண்டும், இருக்க வேண்டும். மற்றும் அனைத்துக் கோட்பாடுகளுமான மார்க்ஸியம் பெண்ணியம் தலித்தியம் இருப்பியல் உளவியல் பின் நவீனத்துவம் சூழலியல்…மற்றும் ஆன்மீகவியல் அல்லது பிரக்ஞையியல் மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் சுழல் பாதுகாப்பிற்கும் பயன்படவேண்டும். எதுவும் முடிந்த முடிவல்ல…மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன…அதற்கேற்ப நாமும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே இப்பொழுது வரவிருக்கும் தேர்தல் மிக குறுகியா காலத்தில் நடைபெறவிருப்பதால் அதில் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி செயற்பட கால அவகாசம் போதாது. ஆகவே இனிவரும் காலங்களில் இப்படியான சந்தர்ப்பங்களில் செயற்படக் கூடியவாறு முன்கூட்டியே தயாராக இருப்பது பல்வேறு வகைகளில் அடக்கப்படும் மனிதர்கள் சார்பாகவும் நீண்டகால நோக்கில் சமூகமாற்றத்திற்காக செயற்படுவதற்கும் சாதகமாக இருக்கும். இது தொடர்பாக இன்றே சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். அதேவேளை நடைபெறப் போகும் பாராளுமன்ற தேர்தலில் சிறீலங்காவின் இனவாத கட்சிகளின் நிறங்களான நீலத்தையோ பச்சையையோ வடக்கு  கிழக்கில் பிரதிநிதித்துவபடுத்துவதற்குப் மாறாக புதிய ஒரு நிறத்தை தமிழ் பேசும் மனிதர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளையும் அரசியல் அபிலாசைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிறத்தை நிலைநாட்ட சிறிதளவாவது முயற்சிப்பது வடக்கு கிழக்கு வாழ் மனிதர்களைப் பொறுத்தவரை பயனுள்ளதாக இருக்கும்.

புலிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’! வியூகம் அமைக்கின்றார் ஆர் சம்பந்தன். : த ஜெயபாலன்

Sampanthan_Rதமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய முடிவை இறுதிக் கட்டத்திலேயே அறிவிக்க உள்ளது. 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை. இறுதிக் கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதன் மூலம் ஆசனங்கள் வழங்கப்படாதவர்கள் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியில் இறங்கிவிடாமல் தடுக்கவே அக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இரகசியமாக வைத்திருப்பதாக தேசம்நெற்றுக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனங்கள் வழங்கப்பட மாட்டாது என அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்து இருந்தார். இச்செய்தி முதன்முறையாக பெப்ரவரி 10ல் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன் இதே தகவலை எம் கெ சிவாஜலிங்கமும் பெப்ரவரி 17ல் தி ஐலண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்து இருந்தார். http://www.island.lk/2010/02/17/news30.html

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் போட்டியிடுவது என்பது இறுதி நேரத்திலேயே வெளியிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேசி ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது கடினமாக்கப்படும் மேலும் சுயேட்சையாக நிற்பது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் கால அவகாசம் இருக்காது. இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்கால்’ கட்ட ஆர் சம்பந்தன் குழு தயாராகி வருவது தெரியவருகின்றது.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலகட்டத்தில் அவரினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானவர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக மாறிய போதும் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம்வகித்தார். ஜனாதிபதித் தேர்தலில் கூட ஆர் சம்பந்தனுக்காக எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வாக்களித்தவர்.

தற்போது ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’இல் முதல் களப்பலியாகி உள்ளார் தங்கேஸ்வரி கதிர்காமநாதன். அவரைத் தொடர்ந்து கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல) மற்றும் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, விநோதரலிங்கம் சுப்பிரமணியம் ஆகியோர் ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்கால்’ இல் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும் வெல்லப்படக் கூடிய ஆசனங்கள் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

தங்கேஸ்வரி கதிர்காமநாதன் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்படவுள்ள மற்றுமொருவர் பத்மினி சிதம்பரநாதன். பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் மறுக்கப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பெண் வேட்பாளர்கள் யாரும் இருக்கின்றார்களா என்பது சந்தேகமே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் வெல்லப்படக் கூடிய தொகுதிகளில் நிறுத்தப்படுவார்கள் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்து உள்ளார். எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விக்கிரமபாகு கருணாரட்னவின் என்எஸ்எஸ்பி கட்சியில் போட்டியிடுவது பற்றி பேசிவருகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க முன்னால் ஈபிடிபி உறுப்பினரும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனின் ஆலோசகருமான கலாநிதி விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளதாகத் தெரியவருகின்றது. கலாநிதி விக்கினேஸ்வரன் ஆர் சம்பந்தனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய மற்றுமொருவர் ஓய்வுபெற்ற நீதிபதி விக்கினேஸ்வரன் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஆதரித்தவர். இவரது கருத்துக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலம் சேர்த்து இருந்தது.

கடந்த தேர்தல் போலல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை பலவீனமான நிலையில் எதிர்கொள்ள உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கின்ற சக்திகள் இல்லாத காரணத்தினால் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக அரசியல் இப்பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

கிளிநொச்சியில் மக்கள் மீள் குடியேற்றம்

தொடர்ந்து நடைபெறும் மீள்குடியேற்றத்தின் ஒரு கட்டமாக நேற்றைய தினம் ஆனந்தபுரம் தெற்கும் வடக்கிலும், நாளை மறுநாள் தொண்டைமாநகர் பிரதேசத்திலும் மீள்குடியேற்றங்கள் நடைபெறகின்றன. மீள்குடியேறும் மக்களுக்கு UN உதவிப் பொருட்களும் சில அன்றாட உதவிப் பொருட்கள் அரசினாலும் கொடுக்கப்படுகின்றது. அரச இராணுவத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் அவரவர்களின் சொந்த இடங்கள் சென்று பார்வையிட அனுமதித்தும் பின்னர் அவர்களை தமது சொந்த இடங்களில் குடியேறவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இப்படியாக குடியேறியவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியபோது தாம் தமது வீட்டுக்கு வந்து சேர்ந்தது தமக்கு மகிழ்ச்சியாக உள்ளபோதும் தமது பிள்ளைகளை புலிகள் பலவந்தமாக இழுத்துப்போய் பலிகொடுத்ததை தம்மால் மறக்க மடியாமல் இருப்பதாகவும் கூறினார். தமது அயலில் உள்ள தாய் தனது வீட்டுக்கு வந்ததும் பலிகொடுத்த தன் குழந்தையை நினைத்து அழுததாகவும் அவர் கூறினார்..

இராணுவத்தினர் வசம் உள்ள யுத்தகாலங்களில் விட்டுப்போன வாகனங்கள் இராணுவத்தினரால் பொது மக்களுக்கு விற்கப்படுவதாகவும் மீள்குடியேறியவர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்

sridar.jpgஇலங் கையின் பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 47.  நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், ‘மிமிக்ரி’, மற்றும் ஓவியம் என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்த ஸ்ரீதர் பிச்சையப்பா. 
1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்தவர்

இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் லொக்கு பண்டார ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளார்

lokku_bandara.jpgஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்து கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக  தெரிவாகி பாராளுமன்ற சபாநாயகராக செயற்பட்ட  வி.ஜெ.மு.லொக்குபண்டார அவர்கள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டார்.  பண்டாரவளை நகரில்  இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆறாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான லொக்கு பண்டார இந்த முடிவை எடுத்துள்ளார்.

தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளார்

thangeswary.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் போட்டியிடவுள்ளதாக தேசம்நெற் க்குத் தெரிவித்தார். தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட நாடியிருந்ததாகவும்,  இறுதிநேரத்தில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது விடயமாக தேசம்நெற் தங்கேஸ்வரியுடன் தொடர்புகொண்டு வினவியபோது தான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதாக உறுதிப்படுத்தினார். இன்று இது விடயமாக ஜனாதிபதியை சந்தித்து நேரடியாகக் கதைத்ததாகவும் தெரிய வருகின்றது.

அரசியல் பேரணிகளை நடத்த பொலிஸார் தடைவிதிப்பு!

police_logo.jpgபொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் தினம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரையில் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களோ அல்லது பேரணிகளையோ நடத்தக் கூடாது எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வது தொடர்பிலும் சில விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டுமென பிரதிக் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது குறித்த வேட்பாளரும், அவரது உதவியாளரும் மட்டுமே பிரசன்னமாக முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவையற்ற முரண்பாடுகள் மற்றும் மோதல்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே நாடாளுமன்றத் தேர்தலையும் அமைதியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் நபர்கள் குறித்து புலனாய்வூப் பிரிவினரும் தகவல்களைத் திரட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பயிற்றப்படாத, ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் திட்டம் இன்று ஆரம்பம்!

sri-lankan-school-teacher-01.jpgபயிற்றப் படாத, சகல ஆசிரியர்களுக்கும் விஷேட பயிற்சி அளித்து அவர்களின் சேவையை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 42 மத்திய நிலையங்களில் இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

நாட்டிலுள்ள  அரசாங்கப் பாடசாலைகளில் கடமையாற்றும்; பட்டதாரியல்லாத பயிற்றப்படாத, சகல ஆசிரியர்களையூம் பயிற்றுவிக்கும் இந்த விஷேட திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவும் தேசிய கல்வி நிறுவகத்தின் நிறுவன அபிவிருத்திப் பிரிவும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

வார இறுதி நாட்களில் இப்பயிற்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ் மொழி மூலம் 18 மத்திய நிலையங்களும் சிங்கள மொழி மூலம் 17 மத்திய நிலையங்களும் ஆங்கில மொழி மூலம் 7 மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றில் கடமைபுரிய பகுதி நேர அடிப்படையில் வருகை தரும் விரவுரையாளர்களாக சுமார் 200 பேர் வரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்தப் படவுள்ளனர்.

இப்பாடநெறி இரு வருடங்களைக் கொண்டது. முதலாம் வருடம் அளவீடும் மதிப்பீடும், கல்வி உளவியல், வகுப்பறை முகாமைத்துவம் முதலான பாடப் பரப்புகளைக் கொண்டிருக்கும்