27

27

நீங்களும் ஒருக்கா திங் பண்ணுங்கோ………. : பேராசிரியர் பெக்கோ

(இப்பகுதி நேற்று (மே 26 2010ல்) வெளியான லண்டன் குரல் பத்திரிகையில் வெளியானது.)

Selvaசெல்வாவின்ர கையாள ஒரு விருது:

காசே தான் கடவுளடா எண்டு ஊரில சனம் சொல்லுறது தானே ஆனா இங்க வெளிநாடுகிளில அந்தக் கடவுளுக்கு ஒரு கூரையைப் போட்டுவிட்டா காசு கூரையைப் பிச்சுக் கொண்டு வரும் கண்டியளோ. உந்த விசயம் தெரிய வந்தவுடனே உவங்கள் இயக்கக்காரரும் காசைக் கண்டோன்ன கோயில் கட்டினவை தானே. இப்ப தூள் யாபாரம் செய்தவையே அதைவிட்டுப் போட்டு கோயில் கட்டத்துவங்கிவிட்டினம். அதில எங்கட இல்போர்ட் ‘தூள் விநாயகர்’ ஒரு கில்லாடி தான்.

தலைவர் 30 வருசமா கடற்படை தரைப்படை விமானப் படையெல்லாம் வைச்சு அமைக்க ஏலாமப் போன தமிழீழத்தை செல்வா ‘மூன்று வருசத்தில எடுத்துத் தருவன்’ என்று சொல்லி இருக்கிறார். ‘செல்வா எங்க தமிழீழம் எடுத்துத் தாறன் எண்டவர். அவர் கடவுள் தான் தமிழனைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லோ சொன்னவர்’ என்று நீங்கள் நினைக்கிறது சரி. ஆனால் நீங்கள் நினைக்கிற செல்வா, தந்தை செல்வா. நான் சொல்லிற ஆள், ‘தமிழனைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்ன தந்தை செல்வாவின் கூற்றுப்படி அந்தக் கடவுளுக்கே கோயில்கட்டி செல்வ விநாயகர் என்ற பெயரும் வைத்த செல்வா! தூள் விநாயகரின்ர உரிமையாளர் செல்வா!!நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின்ர எம்பி எல்லோ.

Manoசும்மா சொல்லக் கூடாது, அரசியல் விஞ்ஞானத்தில கலாநிதிப் பட்டம் பெற்ற மனோவையே மண் கவ்வ வைச்ச செல்வச் செம்மல் இல்போர்ட் செல்வா!!!

இப்ப அவரின்றி கிழக்கு லண்டனிலை எதுவும் அசையிறதில்லை கண்டியளோ. இப்ப எல்லாம் தூள் விநாயகரிட்டை ஆசீர்வாதம் வாங்கவும் செல்வாவின்ர கையாள விருதுபெறவும் சைவமுன்னேற்றச் சங்கமே க்கியூவில நிக்கினம். வலுகெதியா தூள் விநாயகரின்ர பெயரில செல்வா கல்லாநிதிப் பட்டங்களையும் வாரி வழங்குவார். சைவ முன்னேற்றச் சங்கத்தின் ராமராதன் ஐயாவுக்குத்தான் முதற்பட்டம் பிறகுதான் மற்றவைக்கு. கலாநிதி மனோவும் உந்த யூனிவர் சிற்றிவழிய வாங்கின பட்டங்களை கிடப்பில போட்டுட்டு ‘தூள் விநாயகர்’ ஆலயத்தில செல்வான்ர கையாள ஒரு கல்லாநிதிப் பட்டத்தைப் பெற்று உருப்படுகிற வழியைப் பார்க்க வேணும்.

அரசியலுக்கு புதுசு என்றாலும் அனுபவம் ஜாஸ்தி:

கிட்டடில கென்டனில செயரிற்றிக்கு நிதி சேகரிக்கிற புரோகிரம் ஒண்டு நடந்தது. நானும் பண்பலாப் போயிருந்தன். வேதக்கார கோஸ்டியலின்ர புரோகிராம் என்றதால கொஞ்சம் பண்பலா போச்சுது. வள வளா கதையல் எல்லாம் இருக்கேல்ல.

அங்க குயின்ஸ்பறியில இருந்து வந்த கவுன்சிலரும் வந்திருந்தார். இந்த முறைதான் அவர் முதல் தரம் கவுன்சிலரா தெரிவு செய்யப்பட்டாலும் அவருடைய PR – Public Relation மெய்சிலிர்க்க வைச்சுது. அவர் வரும்போதே ஒன்று இரண்டல்ல ஐந்து மாலை வாங்கி வந்தது மட்டுமல்ல மாலை போடுவதற்கு ஒருவரையும் கையோடை கூட்டிக்கொண்டும் வந்தார். அவற்றை பிளான் இன்னும் சிலரைப் பிடித்து மிச்ச மாலையையும்; போடுவிப்பதுதானாம். ஆனால் அங்க நின்ற இன்னொருத்தர் வழித் தேங்காயை எடுத்துத் தெருப்பிள்ளையாருக்கு உடைச்சது போல ஒரு மாலையை எடுத்து இன்னொரு கவுன்சிலருக்கு போட்டுவிட்டுட்டார்.

இதில அவரின்ர அனுபவத்தின்ர உச்சம் என்ன தெரியுமோ ரிக்கற்றும் எடுக்காமல் கலந்துகொண்டவர் மாலையின்ர செலவை நிதிசேகரிப்புச் செலவிலையே போடச்சொல்லிக் கேட்டராம். புதுக் கவுன்சிலர் அரசியலுக்கு புதுசு என்றாலும் அனுபவம் அவருக்கு ஜாஸ்தி. இவர் வலுகேதியா இன்னும் பெரிய ஆளவந்திடுவார். வேணுமென்றா இருந்து பாருங்கோ.

Kamalanatha_Kurukkalசாரதி லைசன்ஸ் எடுக்க இலகுவழி:

இந்த றைவிங் ரெஸ்ற் எல்லாம் இப்ப வலு சுலபமாய் பாஸ் பண்றதுக்கு சில ரெக்னிக்குகள் இருக்கு பாருங்கோ. ரைவிங் ரெஸ்ற்க்கு மட்டுமில்ல பலதுக்கும் கையில கம்மாஸ் வைச்சுக்கொண்டிருக்கிற இடம் ஒன்று இருக்கு.

நம்மட கூட்டாளி ஒருத்தர் ரைவிங் ரெஸ்ற் எடுத்து கோட்டைவிட்டுட்டார். காசு மட்டுமில்ல மரியாதையும் போகுது எண்டு அவருக்கு ஒரே feeling. வேலையும் ஓடேல்ல. சரி என்று சொல்லிப் போட்டு போன் எடுத்து விசயத்தைச் சொன்னார். அங்கால இருந்து பதில் வந்தது. ‘அம்பாளுக்கு 300 பவுணுக்கு விசேச அர்ச்சனையைச் செய்தியள் என்றால் அடுத்தமுறை பாஸ் பண்ணிடுவியல்’ என்று. என்பீல்ட் நாகபூசணி அம்பாளுக்கு விசேச அர்ச்சனை செய்தாக்கள் எல்லாம் பாஸ் பண்ணிடுவினமாம்.

உந்த ரைவிங் இன்ஸ்ரக்ரர்மாருக்கு (driving instructors) குடுக்கிறத அம்பாளுக்கு குடுத்தால் பிரச்சினை ஈஸியா முடிஞ்சிடும். மோட்டர் சைக்கிள் லைசன்ஸ் போர்க் லிப்ற் லைசன்ஸ் பிளேன் ஓட்டுற லைசன்ஸ்; இதுகளுக்கான விசேச அர்ச்சனைக்கும் எவ்வளவு என்று ஒரு பிறைஸ் லிஸ்ற் (price list) குடுத்தா அடியார்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். இந்த விசயத்தை எங்கட கமலநாதக் குருக்களின்ர காதில போட்டு வையுங்ககோ. பிறைஸ் லிஸ்ற் கொஞ்சம் கலர்புல்லா அடிச்சாத்தான் அடியார்களை கவரலாம் பாருங்கோ.

Pathmanaba_Iyarமுற்போக்கும் மாலை மரியாதையும்:

தாங்கள் முற்போக்காளர்கள் என்று அறிக்கை விட்டவையெல்லாம் எல்லாம் இப்ப அடக்கமாத் திரிகினம். மாலை கௌரவிப்புக்களும் பொன்னாடைகளும் வேண்டாம் உதெல்லாம் ‘பம்ஸ்’ என்று ஒரு காலத்தில முரண்டு பிடிச்சவை இப்ப யாரும் கௌரவிக்கவில்லை என்றா தங்களுக்குள்ளேயே ஆளுக்காள் கௌரவித்தக் கொள்ளீனம் பாருங்கோ.  இந்தப் கம்பஸ் பெடி பெட்டையள் சேகுவேராவின்ர சேட்டுகளையும் சிவப்புச் சட்டையையும் போடுறது போல எங்கட ஆக்களும் இளமையா இருக்கேக்க முற்போக்கு விளையாட்டு. இளமை ஆடி அடங்கினவுடன மாலையிலையும் பொன்னாடையிலையும் கௌரவிப்பிலையும் சின்னச் சின்ன ஆசை வந்திடுகுது.

தமிழ் கலை இலக்கியத்தின் ஜம்பவான் என்று நம்மட ஐயருக்கும் இந்தச் சின்னச் சின்ன ஆசைகள் வந்திட்டதில ஒரு தப்பும் இல்லை. இதெல்லாம் வயசுக்கோளாறு கண்டியளோ? ஆனா கௌரவத்தை யாரிட்ட வாங்கிறது என்ற விசயம் இருக்கெல்லோ? ரூற்றிங் முத்துமாரி அம்மன் சீவரத்தினம் ஐயா அவர் தான் எங்கட மன்மதக்குஞ்சுவிட்ட இருந்தெல்லோ வாங்கி இருக்கிறார் ஐயர். இன்னும் ஐஞ்சு பத்து வருசம் போனால் எங்களுக்கும் உந்தக் கோளாறு வந்திடும் கண்டியளோ அதால உதுகள அடக்கி வாசிக்கிறது தான் புத்தி.

ஐயர் என்டோன்ன நீங்கள் இயக்க வரலாறு எழுதுற ஐயர் என்று நினைச்சிடப்பிடாது. இந்த ஐயர் எதுவுமே எழுத்தில வடிக்காத கலை இலக்கிய ஜம்பவான். பத்மநாப ஐயர். மற்ற ஐயர் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் ஒன்றியவர்.

யாம்பெற்ற இன்பம்

இப்ப எல்லாம் யார் துரோகி யார் துரோகியில்ல என்று தெரியாமல் போச்சு? கிட்டத்தில புலி முக்கியஸ்தர் தனம், மே 18 போராட்டத்துக்கு புலிக்கொடி கொண்டு வரக் கேட்டவருக்கு புலிக்கொடி வேண்டாம் என்று சொல்லி அரசியல் விளக்கம் கொடுத்திருக்கிறார். போன் பண்ணியவர் புலிக்கொடி வேண்டாம் என்று தனம் சொன்னதை பதிவு செய்து இணையத்தில் உலாவவிட்டு அவருக்கு துரோகி என்று கௌரவ பட்டத்தைச் சூட்டியுள்ளார். நான் என்னத்தைச் சொல்ல. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!.

புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!

விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து, தடுப்பு முகமாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட  200 சிறுவர்கள் 24-05-2010 வவுனியா நீதிமன்றத்தினால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பல மாவட்டங்களைச் சேர்ந்த இச்சிறுவர்கள் இராணுவப் பாதுகாப்புடன் ஐ.நா. சிறுவர் நிதியப் பிரதிநிதிகளின் வழித்துணையுடன் நிதிமன்றததிற்கு அழைத்து வரப்பட்டனர்.  நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளின் ஊடாக அங்கு வந்திருந்த பெற்றோர்களிடம் அச்சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

கொழும்பு இந்துக் கல்லூரியில்  இவர்களுக்கான புனர்வாழ் வளிக்கப்பட்டதாகவும், இவர்கள் புனர்வாழ்வு நடவடிக்கையின் போது திருப்திகரமாக செயற்பட்டதாலும், போதுமான புனர்வாழ்வினைப் பெற்றுக்கொண்டதாலும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பம்மலப்பிட்டி இந்துக் கல்லூரியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புழந்தைப் போராளிகள் சில வாரங்களுக்கு முன் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இசை நிகழ்ச்சி ஒன்றினை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ( முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!) அம்பேபுச புனர்வாழ்வு முகாமில் இருந்து கொழும்பு இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட இச்சிறுவர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு லிற்றில் எய்ட் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ( http://littleaid.org.uk/ and http://littleaid.org.uk/gallery/musical-instruments-to-ambepusse-24th-july-2009 )

மனிதஉரிமையில் மட்டும் கவனம் செலுத்துவதில் நிற்கவேண்டாம் அமெரிக்காவுக்கு கூறுகிறது இலங்கை

glpeiris.jpgமனித உரிமைகள் விவகாரங்களில் கவனத்தைச் செலுத்தும் ஒரு விடயத்தில் மட்டும் நிற்கவேண்டாம் எனவும் இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் ஏனைய வாய்ப்புகளும் அலுவல்களும் இருப்பதாகவும் இலங்கை அமெரிக்காவுக்குத் தெரிவித்திருக்கிறது. யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மனிதஉரிமைகள் விடயத்தில் கவனத்தை செலுத்துவதையிட்டு எந்த வழியிலும் நாங்கள் இணக்கமின்மையை வெளிப்படுத்தவில்லை. அது விளங்கிக்கொள்ளக் கூடியது. அதுதொடர்பாக நாங்கள் புகார் தெரிவிக்கவில்லை என்றும் பீரிஸ் கூறியுள்ளார். கேந்திரோபாய மற்றும் சர்வதேசகற்கைகளுக்கான நிலையத்தில் குழுமியிருந்த புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றும்போதே பீரிஸ் இதனைத் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.  உறவானது ஒரு பரிமாணத்திற்குட்பட்டதாக இருக்கக்கூடாது என்றவிடயத்தையே நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இலங்கையும் அமெரிக்காவும் ஒன்றுபட்டு மேற்கொள்வதற்கான வேறு பல விடயங்களும் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்க செனட்டர்கள், காங்கிரஸாருடன் சந்திப்புகளை மேற்கொண்டதாகக் கூறிய பீரிஸ் அடுத்த இருநாட்களில் மேலும் சந்திப்புகளை நடத்துவதற்கு தாம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கிழக்கு ஆசியாவிற்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனை நாளை வெள்ளிக்கிழமை பீரிஸ் சந்திக்கவுள்ளார்.  யுத்தத்திலிருந்தும் மீண்டு வந்திருக்கும் இலங்கையானது ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தனக்குக் கிடைத்திருக்கும் ஆணையை முன்னெடுக்க வேண்டுமென ஹிலாரியின் பேச்சாளர் பிலிப் குரோவ்லி கடந்த மாதம் வலியுறுத்தியிருந்தார். தேர்தலின் மூலம் குறிப்பிடத்தக்க ஆணையை அரசாங்கம் பெற்றிருப்பதாகத் தென்படுவதாகவும் குரோவ்லி கூறியிருந்தார்.

யாழில் வெசாக் கொண்டாட்டங்கள்

jaffna.jpgயாழ்ப் பாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது,

‘யாப்பா படுனை தஹம் அமாவை’ என்ற தொனிப்பொருளில் இம்முறை பாரிய அளவில் வெசாக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு யாழ் பாதுகாப்பு படைகளின் தலைமையகம் திட்டமிட்டுள்ளது. பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக வெசாக் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த வெசாக் பண்டிகை எதிர்வரும் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம், கோட்டை, துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் யாழ். நூலகம் ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கிய பகுதி விசேட வெசாக் வலயமாக பிரகடனப்படு த்தப்பட்டுள்ளது. பல்வேறு ஜாதக கதைகளை விவரிக்கும் தோரணங்கள், வெசாக் கூடுகள், தான சாலைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு ள்ளதுடன் தமிழில் பக்தி கீதங்களை இசைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ.7000 மில். செலவில் அபிவிருத்தி திட்டங்கள்

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 7000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின் விநியோகம், நீர்ப்பாசனம், மற்றும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டே அரசாங்கம், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வட மாகாண சபை, இலங்கை மின்சார சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி,  மற்றும் ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மன்னாரில் எண்ணெய் வள ஆராய்ச்சியில் இந்தியக் கம்பனி

spj.jpgமன்னார் பிரதேசத்திலுள்ள எண்ணெய் வளம் தொடர்பில் ஆராய்ச்சி செய்யும் நடவடிக்கையில் இந்தியக் கம்பனி ஒன்று ஈடுபடவுள்ளது  என்று பெற்றோலிய வளத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த  தெரிவித்தார். இதற்கான விலைமனுக் கோரல் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரி  மார்ச் மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற இன்று முதல் பாரிய திட்டம்

மேல் மாகாணத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்று (27) முதல் பாரிய வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் பொலிஸார், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தாழ் நிலத்தை மீள நிரப்பும் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் இணைந்து இச் சட்ட விரோத கட்டடங்களை அகற்றி வருகின்றனர்.

பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் அல்லது சூச்சகமான முறையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி ஒரு கட்டிடத்தையோ அல்லது ஒரு நிரப்பப்பட்ட காணியையோ பலாத்காரமாக கைப்பற்றிருப்பின் இன்று (27) முதல் இயங்கும் விசேட கருமபீடத்துக்கு இது பற்றி அறியத்தருமாறு பொலிஸ் மா அதிபர் பொது மக்களை கேட்டுள்ளார். இரகசியப் பொலிஸை சார்ந்ததாக அமைக் கப்பட்டுள்ள இந்த விசேட கருமப்பீடத்தின் தொலைபேசி இலக்கம் 1933 ஆகும். இந்த கருமபீடத்துக்கு கிடைக்கும் முறைப்பாடுக ளை இரகசியப் பொலிஸார் ஆராய்வார்கள்.

தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமானதும் இடிமின்னல் தாக்கம் குறையும்

lightning.jpgதென்மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமானதும் இடி, மின்னலின் தீவிரத் தன்மை முழுமையாக நீங்கிவிடும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி தெரிவித்தார். என்றாலும் இடி, மின்னல் தாக்கம் காரணமாக கடந்த இருமாதங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இடைப்பருவப் பெயர்ச்சி மழை காலங்களில் இடி, மின்னல் தாக்கம் தீவிரமானதாகக் காணப்படுவது வழமையாகும். அந்த வகையில் கட்நத மார்ச் மாதம் 14ம் திகதி முதல் நேற்று முன்தினம் 25ம் திகதி வரையும் இடி, மின்னல் தாக்கம் காரணமாக 21 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். என்றாலும் தென்மேல் பருவ பெயர்ச்சி மழை கால நிலை ஆரம்பமானதும் இடி, மின்னல் தாக்கம் முழுமையாக நீங்கி விடுமென எதிர்பார்க்கின்றோம்.

பஞ்சசீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாம் உயிர்க் கொலை, இரத்தம் சிந்துதல், சித்திரவதை என்பவற்றை ஒருபோதும் அனுமதிப்பதில்லை – ஜனாதிபதி

president.jpgபுத்த பெருமானின் பிறப்பு, முக்தி பெறுதல், பரிநிர்வான நிலையை அடைதல் ஆகிய மூன்று முக்கியமான சுப நிகழ்வுகளை குறித்து நிற்கும் வெசாக் பெளர்ணமி தினம் உலகெங்கிலும் வாழும் பெளத்தர்களுக்கு மிக உயர்ந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

இன்றைய தினத்தில் நாம் பெளத்த சம்பிரதாயங்களிலும் நடைமுறைகளிலும் ஈடுபட்டு இத்தினத்தை மிகவும் அர்த்தமுள்ள வகையில் கழிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் தினச் செய்தியில் கூறியுள்ளார். அச்செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, பஞ்சசீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாம் உயிர்க் கொலை, இரத்தம் சிந்துதல், சித்திரவதை என்பவற்றை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.  நாட்டில் பல்லாயிரம் உயிர்களைக் காவுகொண்ட முப்பது வருடகால பயங்கரவாத யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் இவ் வருட வெசாக் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான சாதகமானதும் சுதந்திரமானமான சூழல் ஏற்பட்டுள்ளமை பெளத்தர்களுக்குக் கிடைத்துள்ள அதிர்ஷ்டமாகும். இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருப்பதற்கு நாம் ஆன்மீக நல்லொழுக்க வழியைப் பின்பற்ற வேண்டும். மெத்தா, கருணா, முதிதா, உபேக்கா என்பவற்றுடன் கூடிய வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும்.

புத்தபெருமானின் போதனைகளுக்கேற்ப சகிப்புத்தன்மையூடாக ஆறுதலைப்பெறும் குறுகியபார்வை இல்லாது தூரநோக்கையும் அர்ப்பணத்தையும் கொண்ட தேசமாக நாம் இருக்க வேண்டும். ‘நிப்பான’ நிலையை அடைவதற்கான எமது பாதையில் கடந்த காலங்களில் தாமதம் தடையாக இருந்திருக்குமானால் அத்தா மதத்தைத் தவிர்க்கும் வழிகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

யோ ச புப்பே பமஜ்ஜித்வா – பச்சா சோ நப்பமஜ்ஜதி
சோ இமங் லோகங் பபாசெதி – அபா முத்தோவ சன்திமா

‘துவக்கத்தில் ஒருவன் தாமதித்தாலும் அதன் பின்னர் அவன் தாமதிக்காவிடின் அவன் மேகத்தினூடே மேலெழுந்துவரும் சந்திரனைப் போல் இவ்வுலகை ஒளிரச் செய்வான்’ -தம்மபதம்

நல்லொழுக்கத்துடன் வாழ்பவர்கள் கடந்தகால தவறுகளுக்காக நிகழ்காலத்தில் வருந்தமாட்டார்கள் ஒரு நல்லொழுக்கமுள்ள தேசத்தை கட்டியெழுப்புவதற்காக இந்த வெசாக் பண்டிகை தினத்தில் புத்த பெருமானின் வழியை முழுமையாகப் பின்பற்றுவதற்கு உறுதி பூணுவோம்.உங்கள் எல்லோருக்கும் மும்மணிகளின் ஆசி கிட்டுவதாக!

வட, கிழக்கு விகாரைகளிலும் இம்முறை வெசாக்கை விமர்சையாகக் கொண்டாட ஏற்பாடு கொள்கையை மதிக்கும் பௌத்தர்களாக மாறுவோம்; பிரதமர்

புத்தர் பெருமானின் பிறப்பு, பரிநிர்வாணமடைதல் போன்றன இடம்பெற்ற வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உலக வாழ் பௌத்த மக்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் பௌத்த மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றினை வழங்கக் கிடைத்தமையானது பிரதம அமைச்சர், புத்தசாசன சமய விவகார அமைச்சர் என்ற வகையில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

2600 ஆவது சம்புத்தஜயந்தி விழாவினை முன்னிட்டு சமய அனுஷ்டானங்களுக்காக ஆயத்தமாகும் இச்சந்தர்ப்பத்திலே இம்முறை வெசாக் உற்சவத்தினை கொள்கையை மதிக்கக் கூடிய பௌத்தர்களை உருவாக்குவதற்கான உன்னத நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு நினைவுகூர வேண்டுமென்பதே எனது உணர்வாகும் என்று வெசாக்கை முன்னிட்டு விடுத்த செய்தியில் பிரதமர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

சொல்லால் மட்டுமன்றி செயலாலும் உண்மையான பௌத்தர் என்பதனை பிரதிபலிக்கக் கூடிய வகையில் இன,மத,குல,வகுப்பு பேதங்கள் அனைத்தினையும் துறந்து கருணைமிக்க சமூகமொன்றினை உருவாக்குவதற்கான உத்தம பணியே தற்போது எம்முன்னால் உள்ள முதல் சவாலாகும்.மற்றையவரின் துயரை துயராகவும், சந்தோஷத்தினை சந்தோஷமாகவும் தாமும் அனுபவிக்கும் ஒருவரையே உண்மையான பௌத்தர் ஒருவராக குறிப்பிட முடியும். அவர் ஒருபோதும் இன, மத, குல, சமய அல்லது உயர்ந்த, தாழ்ந்த போன்ற பேதங்களின் மூலம் மனதை கெட்ட வழியில் செல்ல அனுமதிக்காத ஒருவராக காணப்படுவார். சரி பிழையினை சரியாக இனங்காணக் கூடிய உள்ளம் உண்மையான பௌத்தரிடம் காணப்படுகின்றது. எமது சமூகத்தினுள் அவ்வாறான பௌத்த உள்ளங்களை உருவாக்குதல் வேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உன்னத தலைமைத்துவத்தின் கீழ் பயங்கரவாத பிடியிலிருந்து இலங்கை தாய் நாட்டை மீட்டெடுத்து ஒரு வருட பூர்த்தியுடனான சமகாலத்தில் கொண்டாடப்படும் இம்முறை வெசாக் உற்சவத்தினை வடக்கு, கிழக்கு விகாரைகளிலும் மிக விமர்சையாக கொண்டாடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கிலும் தெற்கிலும் சகோதரத்துவ உணர்வுடன் சாது நாதம் ஒலிக்கும் இந்த உத்தம தினத்திலே உண்மையான பௌத்தர்களாக அறவழியினை சரியாக இனங்கண்டு கொள்வதற்கும் அந்தப் பாதையிலேயே பயணிப்பதற்கும் உங்களுக்கு மும்மணிகளினதும் ஆசீர்வாதம் கிடைக்கப்பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.