July

July

சொந்த இடங்களில் 198 குடும்பங்கள் – முல்லைத்தீவில் நாளை குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 198 குடும்பங்களைச் சேர்ந்த 602 பேர் நாளை சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.

இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தங்கியுள்ள இவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளில் மீள் குடியேற்றப்பட உள்ளனர். ஏற்கெனவே 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றதோடு இதுவரை மீள்குடியேற்றப்படாதவர்களே நாளை மீள்குடியேற்றப்படுகின்றனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 23 கிராமசேவகர் பிரிவுகளில் இதுவரை மீள்குடி யேற்றம் இடம் பெறவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா வீசா அலுவலகம் இடமாற்றம்

london-uk.jpgகொழும்பு கொள்ளுப்பிட்டியில் இயங்கி வந்த பிரித்தானியா வீசா அலுவலகம், கொழும்பு யூனியன் பிளேஸூக்கு இடமாற்றம் செய்யப்பட்டவுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வீசா அலுவலகம், யூனியன் பிளேஸில் இலக்கம் 278 , எக்சஸ் டவர் கட்டடத்தின் 5 ஆவது மாடியில் இயங்கவுள்ளது.

அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதால், 22 ஆம் 23 ஆம் திகதிகளில் கொள்ளுப்பிட்டி, டுப்லிகேஷன் வீதியில் உள்ள அலுவலகம் மூடப்பட்டிருக்கும் எனவும் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக மாத்திரம் 22 ஆம் திகதி பிற்பகல் 3 மணியில் இருந்து 5 மணி வரையும், 23 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் அலுவலகம் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யஷ்வந் சிங்ஹ நிகழ்த்தும் டட்லி ஞாபகார்த்த உரை

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான யஷ்வந் சிங்ஹ (பா.உ), டட்லி சேனாநாயக்கவின் ஞாபகார்த்த உரையை இன்று வியாழாக்கிழமை 6 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பண்டாரநாயக்க நிலைய கேட்போர் கூடத்தில் நிகழ்த்துவார்.

திரு. யஷ்வந் சிங்ஹ இந்த ஞாபகார்த்த உரையாற்றும் முதலாவது இந்தியப் பிரமுகராவார்.

முன்னாள் போராளிகளை கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.

LandMine_Signகண்ணி வெடியகற்றும் பணிகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 30 பெண் போராளிகளை ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு திர்மானித்துள்ளது. ஆறு தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் ஊடாக விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிகளவிலான இராணுவத்தினர் தற்போது கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதே வேளை, வன்னியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் தற்போது கண்ணிவெடி மற்றும் வெடிபொருட்கள் அகற்றுவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்க@டாக பணிபுரிந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களை வைத்திருந்த ஐவர் கைது!

வன்னியில் இறுதி யுத்தத்தின்போது பொது மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களை கழற்றி வைத்திருந்த ஐந்து பேர் கிளிநொச்சியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் கைவிடப்பட்ட கனரக வாகனங்கள், உழவு இயந்திரங்கள், ஆகியவற்றின் உதிரிப்பாகங்களை வைத்திருந்த மூவரும், அவர்களிடமிருந்து அப்பொருட்களை கொள்வனவு செய்த இருவருமாக ஐவர் பொலிஸாரிடம் பிடிபட்டனர். இவர்கள் நேற்று (20-07-2010) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். எதிர்வரும் 3ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இறுதிப்போரின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட பல வாகனங்கள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களிடம் அவற்றைக் கையளிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் அதிகளவிலானவை மோட்டார் சைக்கிள்களாகும் ஏனைய வாகனங்கள் சிறிதளவிலேயே கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் உதிரிப்பாகங்கள் பல கழற்றப்பட்ட நிலையிலேயே பெரும்பாலான வாகனங்கள் காணப்படுகின்றன என்பது  குறிப்பிடத்தக்கது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட தாய்க்கும் அவரது இரு மகன்களுக்கும் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது!

கொலை குற்றச்சாட்டு காரணமாக ஒரு தாய் அவரது மகன்கள் இருவர் ஆகியோருக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2004ம் ஆண்டு ஒலுவில் பிரதேசத்தில் வைத்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்தததான குற்றச்சாட்டில் எஸ்.உம்மா(வயது45) என்ற பெண்ணுக்கும், அவரது மகன்களான எம்.பைஸால் (வயது 26) ஐ.றிசான் வயது (24) ஆகிய மூவருக்குமே நேற்று (21-07-2010) கல்முனை நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீhப்பளித்தது.

தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவமாது ச.தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து வைத்தியப் பரிசோதனை செய்ய ஊர்காவற்றுறை நீதவான் ஆர். வசந்தசேனன் நேற்று (July 20 2010) உத்தரவிட்டுள்ளார். தர்சிகாவின் தாயார் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதவான் தர்சிகாவின் சடலத்தை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் தோண்டியெடுத்து கொழும்பிற்கு அனுப்பி சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு நேற்று முன்தினம் (July 19 2010) நடைபெற்ற போது தர்சிகாவின் தாயார் தனது மகள் தற்கொலை செய்யவில்லை அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என நீதவானிடம் மனுவொன்றை கைளித்திருந்தார். அதனைப் பரிசீலித்த நீதவான் சடலத்தை பொலிசார் முன்னிலையில் தோண்டியெடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரண மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளது.

800ஐ எட்டுவாரா முரளி?

murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை சாதனையை எட்டுவார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தற்போது நடைபெறும் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் இன்று வரை 6 விக்கெட்களை வீழ்த்தி மொத்தம் 798 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.

murali.jpg

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

Prof_Hoole‘சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல ஒரு பெரிய பள்ளிக் கூடமே!’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான ஒரு நீண்ட விவாதம் தேசம்நெற்றில் தொடர்கிறது. இவ்விவாதம் இதுவரை பேசப்படாத பல விடயங்களை மக்கள் தளத்திற்குக் கொண்டுவந்துள்ளது. மேலும் தமிழ் அறிவியல் சமூகம் – அதன் ஸ்தாபனமான விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றியுமான ஒரு மீள் மதிப்பீட்டின் அவசியத்தை இந்த விவாதம் வலியுறுத்தி இருந்தது. இலக்குகள் மீள்வரைபுக்கு உட்பட்டு தன் சுயாதீனத்தையும் சுய அடையாளத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னை மீள் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் தற்போது ஏற்பட்டு உள்ளது. (முன்னைய விவாதத்தைப் பார்வையிட: சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன் )

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டு அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் சூழலில் நாட்டைவிட்டே வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களுடனான இந்த நேர்காணல் இந்த விவாதத்தை மற்றுமொரு தளத்திற்கு நகர்த்தும் என நினைக்கின்றேன்.

Prof_Hooleஇலங்கையின் சிறந்த நேர்மையான கல்வியியலாளராக மதிக்கப்படுகின்ற பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களுடனான இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகவே அமைந்தது. அவருடைய பதில்கள் அவர் கைப்பட தமிழில் எழுதி மின் அஞ்சலூடாகவே அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றது. அவருடைய தமிழ் மொழிப் பாவனை அறுபதுகளின் இறுதிப் பகுதியுடனேயே மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் அப்போதைய மொழிநடையிலேயே தனது பதில்களை அவர் பதிவு செய்துள்ளார். இனி நேர்காணலுக்குள் நுழைவோம்…..

._._._._._.

தேசம்நெற்: உங்களைப் பற்றிய ஒரு ஆழமான சுருக்கமான அறிமுகம்…..

பேராசிரியர் ஃகூல்: ஃகூல் குடும்பத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீநிவாசன் ஆவார். அவர் பருத்தித்துறையில் ஒரு சைவக் கோவில்மனியக்காரன். ஆனால் 15 ஏப்ரல் 1845 அன்று கனம் பீட்டர் பேசிவல் ஊழியத்தால் ஞானஸ்ஞானம் பெற்று பின்பு பேசிவலோடு மெதடீஸ் திருச்சபையிலிருந்து ஆங்கிலிக்கன் திருச்சபைக்கு 1850 மட்டில் மாறினார். இதிலிருந்து நாம் நல்லூர், சுண்டிக்குழி ஆகிய ஆங்கிலிக்கன் ஸ்தாபனங்களைக் கொண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறேம். ஊர் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் சிக்கலானது.

எனது அம்மாவின் தகப்பனார் சாமுவேல் சங்கரப்பிள்ளை சோமசுந்தரம். மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் கொடிமர சங்கரர் என்ற பட்டத்தை உடையவர். மாவிட்டபுரம், கொல்லன்கலட்டி, கருகம்பானை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர். மாவிட்டபுரம் கோவிலின் மூலஸ்தானத்திலுள்ள மூன்று விக்கிரகங்களில் இடதுபக்கமாகவுள்ளது சோமசுந்தரத்தின் தமயன் முதலியார் பிள்ளையால் திருவிழாவில் கொடியேற்றும் உரிமையைத் தொடர வாரிசு வேண்டி நேத்திக் கடனாகக் கட்டியது.

சோமசுந்தரம் கிறிஸ்தவனாகி பரியோவான் கல்லூரியில் டீன் ஆகவும், சுண்டிக்குழி சோமசுந்தரம் வீதியில் வீடு கட்டி பின் நல்லூரில் 32 வருஷம் குருவாகவும் இயங்கினார். என் அய்யபாவின் தாய் பக்கம் ஏழாலையைச் சேர்ந்தவர்கள்.

Prof_Hoole_and_his_Familyஎன் மனைவி துஷியந்தி ஆசீர்வாதம். ஐந்து பிள்ளைகள். இப்போ நான்கு.

அரசியல் பின்னணி என்றால் தமிழரசுக் கட்சி. செல்வநாயகம், திருச்செல்வம் (தகப்பன் – மகன், -நீலன் திருச்செல்வம்), நாகநாதன், கதிரவேற்பிள்ளை, வன்னியசிங்கம், தர்மலிங்கம் யாவரும் ஏதோ ஒரு விதத்தில் எனக்குச் சொந்தமானவர்கள். அப்பா ஃகூல் போதகர் அவர்கள் TULF மேடைகளில் பேசாமல் உட்கார்ந்து இருப்பார்.

படித்தது நல்லூர் சாதனா பாடசாலை, பரி யோவான் கல்லூரி, பட்டங்கள் D.Sc (Eng) London, Ph.D. Carnegie Mellon, MSc (Distinction) London, BSc (Ceylon / Katubedde), IEEE Fellow, C.Eng.

தேசம்நெற்: உங்கள் இளமைக்காலம் தமிழ்த்தேசிய எழுச்சியுடன் பிண்ணிப் பிணைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். அதனை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: குறிப்பாகப் பெரிதாய் ஒன்றும் இல்லை. அம்மா நல்லூர் பரி யாக்கோபூ ஆலயப் பெண்களுடன் சத்தியாக்கிரகம் இருக்கப் போனபோது நான் துணையாகப் போவேன். சொந்தக்காரர் தமிழரசுக்கட்சி வேட்பாளரான போது நானும் சிறு பெடியனாக அவர்களுடன் ஒரு வால்போல் போனேன். 1970ல் மாணவர் பேரவை ஊர்வலங்களில் ஈடுபட்டிருந்தேன். 1986 வரை இயக்கங்களுக்கு ஆதரவு என் மனதில் இருந்தது. என் அண்ணன் ஒருவர் சத்தியசீலன், தோமஸ் அரியரத்தினம் ஆகியோருடன் சுப்பிரமணியம் பூங்காவில் வகுப்புகளுக்குப் போனவர்.

நியூயோர்க் இலங்கைத் தமிழ் சங்கத்தின் பத்திரிகை ஆசிரியனாகவும் 1983/4 செயல்பட்டு Tamil News என்ற வெளியீட்டை வைத்தியர் நாகேந்திராவின் கீழ் செய்தேன். ஆனால் நாமே எம்மைக் கொல்லத் தொடங்கி, எங்கள் நிறுவனங்கள் யாவும் அக்கொலைகளை ஆதரித்ததுடன் நான் தனியாய் இயங்கி எங்கு மனித உரிமைகளைப் பேண முடியுமோ அங்கு செய்யக் கூடியதைச் செய்து வருகிரேன். மனித உரிமைகள் தமிழரின் மட்டுமல்ல. பெண்கள், பிள்ளைகள், சாதி பெயரில் தாழ்த்தப்படுவோர் போலப் பலரை அடக்கும்.

மேலும் என் பாட்டனுக்கும் அப்பாவுக்கும் குரு உடைகள் (cassock) தைத்தவர் ஒரு இஸ்லாமிய தையலாளர். அவர் மகன்மார் ரஃபிக், ஸசீற் ஆகியோர் பரியோவான் கல்லூரியில் படித்து, என்னையும் என் சகோதரரையும் brother என்று அழைத்து, பிரதான வீதியில் கடை வைத்து, எமது உடுப்புகளைத் தைத்தனர். அவர்களை துரோகிகள் என்று குடியெழுப்ப எல்லாமே எனக்குப் புளித்துவிட்டது. அதை ஆதரித்த என்னுடன் தமிழ் அரசியலில் இயங்கிய அமெரிக்க தமிழ் நண்பர்களை சகிக்க முடியாத நிலையேற்பட்டது.

தேசம்நெற்: மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். நீங்கள் சமூகம் பற்றிய ஆழமான அக்கறையுடைய ஒரு மனிதர். அந்த வகையில் சமூக மாற்றம் பற்றிய உங்கள் இளமைக்கால கனவுகள் எதிர்பார்ப்புகளுக்கு உங்கள் கல்வியியல் சாதனைகள் துணைபுரிந்துள்ளனவா?

பேராசிரியர் ஃகூல்: நான் கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். குடும்பமாக திருவிவில்லியத்தை வாசித்து வந்தோம். என் கனவுகள் எல்லாம் அந்த அடிப்படையில் அமைந்துள்ளன. கடவுள் கெட்டவர் உட்பட யாவரையும் நேசிக்கிறார். இந்த அடிப்படைக் கூற்றிற்கு அமைய விதவைகளையும் அனாதைகளையும் பேணல், ஊர் பெயரும் தற்காலிக வாசகரை பராமரித்தல், மறியலில் உள்ளோரைப் பார்த்தல், அறுவடை நேரம் ஒரு பங்கை அறுக்காமல் ஏழைகளுக்கு விடல் போன்ற பல கட்டளைகள் வேதவசனத்தில் உள்ளன. இவை யாவும் எம்மத்தியில் சமத்துவத்தை பேணுகின்றன. ஆகவே உங்கள் கேள்விக்குப் பதிலாக என் சமயக் கல்வியே என் கனவுகளை உருவாக்கியுள்ளது. சமயசார்பற்ற கல்வியில் சமத்துவத்திற்கோ மனித உரிமைகளுக்கோ அடிப்படை காண்பது கஷ்டம்.

தேசம்நெற்: சமூக மாற்றத்திற்கு அல்லது சமூகப் பொறியியலுக்கும் அறிவியல் சமூகத்திற்கும் உள்ள உறவுபற்றி குறிப்பிட முடியுமா? பல்கலைக்கழக சமூகத்தை அறிவியல் சமூகமாக வரையறுக்க முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: மேற்கூறியவாறு சமூகக் கல்வியில் எது சரி, எது பிழை என்பதற்கு அடிப்படையில்லை. நான் Ethics for Engineers என்ற ஒரு பாடம் கற்பிக்கிறேன். பல்கலைக்கழகத்தில் நாம் சமயம் சாராமல் படிப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் புஸ்தகங்களில் இன்னும் ஒரு திருப்தியான அடிப்படையில் சரி – பிழைக்கு வரைவிலக்கணம் இல்லை. ஆகவே சுயநலத்தையே அடிப்படையாக வைத்து பலர் கற்பிக்கிறோம். உதாரணமாக மனித உரிமைக்கு அடிப்படை ‘‘அதிகாரம் வல்லமை உள்ள நாம் இன்று மற்றோரை நசுக்கலாம். ஆனால் நாளை இந்த அதிகாரம் வல்லமை மறுபக்கம் மாறினால் அவர்கள் அதே துன்புறுத்தலை எமக்குச் செய்யலாம். ஆகவே இருவரும் சேர்ந்து உரிமைகளைப் பேணும் ஒரு நிற்பந்தத்திற்கு வருவதே இருவருக்கும் நல்லது.’’ இதில் பல்கலைக்கழகத்திற்கு பெரிய பொறுப்புண்டு. யானைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் என்பதெல்லாம் சரித்திரத்தில் உண்டென்று காட்டினால் யானை பூனையைப் பராமரிக்கும்.

தேசம்நெற்: இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டும் அப்பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் கடமையாற்றி உள்ளீர்கள். அவற்றின் ஒப்பு நோக்கில் கடந்த ஆறு சகாப்த சுதந்திர இலங்கையில் பல்கலைக்கழகங்கள் நாட்டின் அரசியல் பொருளாதார சமூக கலாச்சார அம்சங்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

பேராசிரியர் ஃகூல்: சிங்களவரும் தான் தமிழரும் தான் மார்க்க ஏகாதிபத்திய சரித்திரம் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்கள். மெய்யென்றாலும் பரவாய் இல்லை. ஆனால் பல படுபொய்கள். சரித்திரம் என்று பாடப் புஸ்தகங்களில் எப்படி சிறுபான்மையினரைத் தாக்குகிறது என்று யோசியாமல் எழுதுகிறார்கள். எழுதி இலங்கையை நொருக்கிவிட்டார்கள். இலங்கையிலோ மேல்நாட்டிலோ பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சியே முதற்கடமை – முதல் பட்ட (BA, BSc) படிப்பு அல்ல. இந்த அடிப்படையில் தான் விரிவுரைகள் ஒரு வருடத்திற்கு 9 மாதங்களுக்கும் அதுவும் கிழமைக்கு 4 – 5 மணித்தியாலங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. இதை எல்லோரும் சரியாயச் செய்தால் எல்லாம் சீராக இருக்கும். அதனால் வரும் கூற்றுகளுக்கு இடையிலான போட்டியும் விவாதமும் இந்த மார்க்க ஏகாதிபத்தியத்தை முறித்திருக்கும். சிலர் சொல்வார்கள் இலங்கையில் வசதிகள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முடியாதென்று. அப்படியென்றால் எப்படி ஒவ்வொரு வருஷமும் சுமார் 150 இலங்கையர் ஜனாதிபதியின் பரிசை தமது ஆராய்ச்சிக்கு வெல்லுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் மீண்டும் அடிப்படை ஆராய்ச்சி செய்ய பல வாய்ப்புகள் தலைப்புகள் எல்லாத்துறைகளிலும் உள்ளன.

தேசம்நெற்: 19ம் நூற்றாண்டில் இருந்த பல்கலைக்கழகம் பற்றிய கருத்தியலுக்கும் பல்கலைக்கழகம் பற்றிய தற்போதுள்ள கருத்தியலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கருத்தியல் என்னவாக உள்ளது.

பேராசிரியர் ஃகூல்: காலப்போக்கில் பல்கலைக்கழகங்கள் மாறி வருகின்றன. பழைய காலத்தில் ஒரு ஆராய்ச்சியாளர் மாணவரை வைத்து தன் ஆராய்ச்சியை நடத்தினால் பல வருஷங்களுக்குப் பின் ஆசிரியருக்கு கலாநிதிப் பட்டம் (DSc., D.Litt.) வழங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சியின் நிமித்தம் கூடக் கூட பட்டதாரிகள் தேவைப்பட கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்டது. இதனுடன் வந்த ஆசிரிய தேவையை பல்கலைக்கழகங்களில் பூர்த்தி செய்ய கலாநிதிப் படிப்பு தனிமையாக பல வருடங்களில் முடிக்கும் நிலையிலிருந்து 2 – 5 வருஷங்களில் ஒரு ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் செய்யும் பாடமாக மாற்றப்பட்டது. இதன் தாக்கவிளைவையே இன்று காண்கிறோம். உலகெங்கும் அரசாங்கங்களும் முதல்ஈடு செய்கின்றன. ஆராய்ச்சிக்கு ஆராய்ச்சியாளரே நிதி திரட்டுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக விளைவு தரும் ஆராய்ச்சி மட்டுமே இப்படி மேலோங்குவது துக்கத்திற்குரியது. ஆராய்ச்சிக் கலாசாரம் வேரூண்டாத இலங்கையில் இது ஒரு பேரழிவு. குறிப்பாக எமக்கு வேண்டிய சமூக சரித்திர வட்டாரங்களில் கேடு தரும்.

தேசம்நெற்: இலங்கையில் இனப்பிரச்சினை உக்கிரமாக இருந்த காலகட்டங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தில் நீங்கள் பேராசிரியராக இருந்துள்ளீர்கள். தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர், தமிழர் என்ற வகையில் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: பல பிரச்சினைகள். பொலிஸ் மாணவரைப் பிடித்தல், புலிகள் சாராத மாணவர் வாயை மூடவேண்டிய நிலை, ஆங்கில பாடக்கோப்பில் விரிவுரையாளர் சிங்களத்தில் படிப்பித்தல், தொழில் பயிற்சிக்கு, தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி CEB, SLT போன்ற புகழ்வாய்ந்த நிறுவனங்களில் தமிழருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமை. ஆனையிறவு வீழ்ச்சியைத் தொடர்ந்து சில தமிழ் மாணவர் பட்டாசு கொழுத்த அதைத் தொடர்ந்து சிங்கள மாணவர்கள் தமிழரிடம் இருந்து இறந்த இராணுவத்தினருக்கு நிதி சேர்க்க, ஒரு பதட்டமான நிலையேற்பட்டமை, வன்னி மாணவர் அனுமதிக் கடிதம் பிந்திக் கிடைத்ததால் பிந்தி பீடத்திற்கு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டமை. இதில் ஆசிரியராகிய நாம் தலையிடுவது கஷ்டம்.

திறந்த பல்கலைக்கழகத்தில் (Open University, Colombo) சைவ மாணவர்கள் தைப்பொங்கலைக் கொண்டாட முயன்ற போது அரிசி மூட்டைகளை வாசலில் இறக்கி சோதித்த பின் தூக்கி ஒரு கட்டை தூரம் நடக்க வேண்டும் என்றார்கள். மாணவர்கள் சொல்ல என் மனைவி அப்போதைய தமிழ் துணை வேந்தரிடம் இதைப் பற்றிக் கூறிய போது அவர் அன்பாகச் சொன்னது, ’’பிள்ளை, நாங்கள் இங்கு இருப்பதே கஷ்டம். இவற்றை எழுப்பினால் இருக்கவே முடியாமல் போய்விடும்.’’ இதுவே நிலை. 
 
தேசம்நெற்: தமிழ் பேராசிரியர் என்ற வகையில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன? கல்வியியலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன?

பேராசிரியர் ஃகூல்: பேராதனையில் நான் மாணவர் சார்பாக காவலகம் சென்ற போது பொலிஸார் பேராதனைப் பேராசிரியர் என பெயருக்கு மரியாதை கொடுத்து 24 மணிகளுக்குள் மாணவரை விடுவித்தார்கள். ஆனால் பல்கலைக்கழகத்தினுள்ளே நான் மேற்கூறிய பிரச்சினைகளை எழுப்பிய போது என்னை சிங்களவருக்கு எதிரானவர் என்று கருதி 3 வேறு வேறு விசாரணைகளுக்கு உள்ளாக்கினர்.

இப்பொய் குற்றச்சாட்டுக்கள்
1) பீடத்தில் புள்ளிவிபரப் புஸ்தகத்தை மோசடியாக மாற்றினேன் .
2) பாடத்திற்கு வெளியான கேள்விகளை பரீட்சையில் கேட்டு பீடத்தின் தரத்தை குறைத்தேன்.
3) துறைத் தலைவருடன் ஒத்துழைக்க மறுத்தேன் என்றும் இதன் விளைவால் என் கேள்வித்தாளில் பிழைகள் இருந்தன என்றும். மேலும் நான் விசாரணையின் கீழ் இருந்தேன் என்றும் சொல்லி என்னை உத்தியோகத்தில் நிரந்தரமாக்கவும் சிரேஷ்ட பேராசிரியராக்கவும் மறுத்து என் மனைவியையும் வேலை நீக்கினார்கள். எல்லாம் தாங்க முடிந்தது. ஆனால் முதலாம் குற்றச்சாட்டு நான் ஒரு தமிழ் மாணவனை 2ம் வகுப்பு மேற்பிரிவிலிருந்து முதலாம் வகுப்பு பட்டதாரியாக மாற்றச்செய்ததென்பது என் சிங்கள நண்பர்களையும் என்மேல் சந்தேகம் கொள்ள வைத்தது.

ஒருநாள் விரிவுரை முடித்து வந்த போது ஒரு CID தலைவர் என் வருகைக்கு காத்திருந்து தான் சிகல உருமயவைத் தொடரும் குழுவைச் சேர்ந்தவரென்றும் என் பெயர் பல கூட்டங்களில் கோபமாய் பேசப்பட்டதென்றும் சொல்லி, எச்சரிக்கையாயிருக்க வேண்டி கொழும்பு கண்டி தொலைபேசி இலக்கங்களை அவசரமேற்படின் அழைக்கத் தந்தார். ஒரு தஞ்சத்திற்கு, என்னை வேலை நீக்க முயலும் துணைவேந்தரிடம் ஓட முடியவில்லை. அதிலிருந்து குடும்பத்தை கொழும்புக்கு மாற்றி பகலில் மட்டும் பேராதனைக்கு வந்து சென்றேன்.

மூன்று வருடங்களின் பின் விசாரணைகள் நான் குற்றமற்றவன் என்ற முடிவுக்கு வந்தன. மேலும் நீதிமன்றம் என்னை நிரந்தர பணியாளாக்கி சிரேஷ்ட்ட பேராசிரியராக 3 வருடம் பின் செயலாகச் செய்யும்படி கட்டளையிட்டது. இதைச் செயற்படுத்தவும் நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தின் எனக்குச் சார்பான முடிவுக்கு பல்கலைக்கழகம் மரியாதையீனமாய் நடந்தது. (Contempt of Court) என்ற மனுவை பதிந்துதான், நீதிமன்றக் கட்டளைகள் அமுல்படுத்தப்பட்டன. இதேபோல் மனித உரிமை ஆணைக்குழு என் மனைவியின் வேலை நீக்கத்தை பிழையானது என்று தீர்த்தது.

மார்ச் 2008ல் யாழ் பல்கலைக்கழகத்திற்கு பேராதனை என்னை 3 வருடத்திற்குக் துணை வேந்தனாக இயங்கக் கொடுத்தது. நான் இந்த 3 வருடம் முடியும் காரணத்தால் டிசம்பர் 19 2008 இலங்கை வந்து என் 7ம் வருட விடுமுறையை எடுப்பேன் என்று எழுதி அங்கு சென்றேன். அதேநாள் துறைத் தலைவருக்கு துணை வேந்தரிடம் இருந்து நான் வேலை நீக்கப்பட்டுள்ளேன் என்ற கடிதம் வந்தது. எனக்கு இன்னும் அந்த கடிதத்தின் பிரதி வரவில்லை.

தமிழராகிய எமக்கு இது சிங்கள வியாதி என்று இப்படிப்பட்ட நடத்தையை தட்டிவிடுவது சுலபம். ஆனால் சிங்களவர், தமிழர் நாம் யாவரும் இப்படியே. எமக்கு எதிராக இயங்கிய தமிழர் ஒருவர் தேவையான ஆராய்ச்சிக் கட்டுரைகள் இல்லாமல் இப்போ பேராசிரியர் ஆக்கப்பட்டுள்ளார். இன்னுமொருவர் தேவையான பேராசிரியர் அனுபவம் அற்று இளைப்பாறச் சற்று முன்பு சிரேஷ்ட பேராசிரியராக்கப்பட்டார். சேர் தொமஸ் மோ சொன்னது போல, ஒரு பட்டத்திற்காக தங்கள் ஆத்மாவைக் கூலியாக வித்துள்ளனர். இதேபோல் நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கணணிப் பேராசிரியராக விண்ணப்பித்தேன். என் வயதைச் சேர்ந்தோர் படித்த காலத்தில் கணணியியல் ஒரு துறையாக இருக்கவில்லை. ஆகவே உலகெங்கும் துறையை உருவாக்கியவர்கள் ஒன்றில் என்னைப் போல் மின்-கணணிப் பொறியியலாளர் அல்லது கணிதத்துறை சார்ந்தோர்.

மேலும் என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பெரும்பாலானவை கணணியலை சேர்ந்தவை மட்டும் அல்லாமல், பேராதனை கணணித்துறையை பொறியியல் பீடத்தின் கீழ் ஸ்தாபித்து திறந்த பல்கலைக்கழகத்தில் IT பேராசிரியராகவும் 2 வருஷகாலம் வேலை செய்துள்ளேன். அப்படி இருந்தும் என் விண்ணப்பம் தெரிவுக்குழுவுக்குப் போடப்படவில்லை. நான் வழக்கு வைத்தபோது வேறு விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் என்னை நியமிக்குமாறு தீர்ப்பு தரப்பட்டது. பல கடிதங்கள் எழுதியும் அமுல்படுத்தப்படவில்லை. மறுமொழியும் தரப்படவில்லை. இந்தத் தமிழ் நிர்வாகம் சிங்கள நிர்வாகம் போன்றதோ அல்லது எமக்கு நியாயத்தோடும் நீதியோடும் நிர்வகிக்க முடியுமா என்பதே தமிழராகிய நம்மை எதிர்நோக்கும் சவால்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட காலங்களுக்கு ஒருமுறை பின்நோக்கிப் பயணிப்போம். அப்போதைய உங்கள் மனப்பதிவுகளை எமது வாசகர்களுக்கு வெளிக்கொண்டுவர முடியுமா?

பேராசிரியர் ஃகூல்: இது தரப்படுத்தலின் உச்சத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீமா என்றாலே மாணவர் மத்தியில் வயிற்றெரிச்சல். பரமேஸ்வரா, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளை அரசாங்கம் எடுத்து ஒரு சதம் செலவழியாமல் எமக்குப் பல்கலைக்கழகம் தருவதாக செய்ததை ஒரு நாடகமாய் கருதி மாணவர் பேரவையும் தமிழரசுக்கட்சியும் திறப்பு விழாவை பகிஷ்கரித்தோம். ஆனால் 1979 மட்டிலான கண்ணோட்டத்தில் அது ஒரு பெரிய காரியமாகும். 1974ல் நாம் மாட்டுக்கொட்டிலாகக் கருதியது 1979ல் நாட்டின் ஒரு பிரதான பல்கலைக்கழகமானது. இது எடுத்துக்காட்டுவது என்னவென்றால். சின்னக் காரியங்களிலும் சுயநிர்ணய உரிமையை எடுத்தால் அதைக் கட்டி எழுப்பலாம் என்பதே. 1987ல் 2000ம் ஆண்டும் பின் 2004இலும் கிடைத்த தருணங்களை ‘‘எல்லாம் அல்லது பூச்சியம்’’ என்ற கொள்கையின் கீழ் கைவிட்டது எனக்கு பெரிய கவலை. 

தேசம்நெற்: 2006ல் நீங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக நியமிக்கப்பட்ட போது உங்கள் உணர்வு எப்படி இருந்து? நீங்கள் அப்பதவியைத் தொடர்ந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் உயிராபத்து விளையும் என்ற நிலையேற்பட்ட போது உங்கள் மனநிலை என்ன?

Prof_Hoole_with_his_Wifeபேராசிரியர் ஃகூல்: என்னத்தைச் சொல்வது. மனம் மிகத் தளர்ந்திருந்தேன். அமெரிக்காவில் இருந்து கூட்டி வந்த பிள்ளைகள் ‘‘அப்பா, இதுவா உங்கள் யாழ்ப்பாணம்?’’ என்று கேட்டனர். ஒரு சில தமிழரை வைத்து எல்லாத் தமிழரையும் மறியலில் அடைக்கக் கூடாதென்று வாதாடும் நாம், அதேபோல் ஒரு சில தமிழரின் கோழைத்தனத்தை வைத்து முழு சமுதாயத்தையும் குறைத்துப் பேசக்கூடாது.

துரோகி என்றும் சைவக் கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எப்படி என்னை நடமாடவிட முடியும் என்றும் வேறும் கிறிஸ்தவரை தாழ்த்தி ஒரு பேப்பர் என்ற பத்திரிகையில் சிலர் ஆசிரியர் கட்டுரை எழுதினார்கள். இதற்கும் நான் என் பிள்ளைகளுக்கு நினைவூட்டுவது 25 பேர் கொண்ட பேரவையில் 15 பேர் எனக்கு வாக்களித்தார்கள். மீதிப் பத்துப் பேரில் பலர் மதம் சாரா காரணங்களுக்காக தம் வாக்கை அளியாமல்விட்டிருப்பர். ஆகவே மதவெறி கொண்டவர்களை ஒரு மிகச் சிறுபான்மையானவரென்றே நாம் கருத வேண்டும் என்பதே.

என்னை அந்த நேரம் பேணிய மாணவர், MP மார், குருமார் பொது மக்களை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.

மேலும் நான் தமிழருக்கு குறிப்பாக வடமாகாணத்தாருக்கு செய்த காரியங்களில் சிலவற்றை (என் செயல்களை நானே எடுத்துச் சொல்வது அழகற்றதாக இருந்தாலும்) இந்தக் கேள்வியின் பட்சத்தில் கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
1) 1977 – 1980 காலத்தில் சுமார் 600 உபாத்தியாளர் நியமனக் கடிதங்களை நைஜீரியாவில் இலவசமாக தமிழருக்கு எடுத்துக் கொடுத்தேன். இவற்றில் பல யாழ் பல்கலைக்கழகத்தின் புதுப் பட்டதாரிகளுக்கு.
2) இலங்கையில் கஷ்டத்துக்குள்ளாகியோர் பலரை என் பட்டதாரி மாணவராய் அமெரிக்காவுக்கு எடுத்து இன்று பெரிய உத்தியோகங்களில் வாழ வைத்துள்ளேன். சிலரை நான் என் பரிட்சைக் கூடத்திலேயே பட்டப்படிப்பு முடித்தும் உத்தியோகஸ்தராக்கி Green Card எடுத்துக் கொடுத்துள்ளேன். மேலும் என் எழுத்துக்கள் காரணத்தால் அமெரிக்க மத்திய அரசின் உள்குடியேற்ற நீதிமன்றம் என்னை இலங்கையைப் பற்றிய வல்லுனர் என்று ஏற்றதன் நிமித்தம் பலர் சார்பில் இலவசமாகச் சாட்சியமளித்து தஞ்சம் எடுக்க உதவியுள்ளேன்.
3) மானியங்கள் ஆணைக்குழுவில் சேர்ந்த சமயம் யாழ்பாணத்தில் ஒரு வருஷத்தில் ஒரு மாணவனிற்கு 44 000 ரூபாயும் ஏனைய பல்கலைக்கழகங்களில் சுமார் 80 000 ரூபாயும் (2004ம் ஆண்டுக் கணக்கு) ஒதுக்கி வந்தது. நான் இது பெரும் பிழை என்று சுட்டிக்காட்டியதும், 2005ம் ஆண்டு யாழ் மாணவனுக்கு ஒதுக்கப்பட்டது  ரூபாய் 90 000. நான் எழுதிய முன்மொழிவின்படி  வவுனியா வளாகத்திற்கு 200 மில்லியன் கட்டிட நிதி ஒதுக்கப்பட்டு கணணித் தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் கணணித்துறை பெருப்பிக்கப்பட்டது.

திருகோணமலை வளாகத்தை கந்தளாயிற்கு மாற்றும் திட்டம் நான் எதிர்த்ததும் கைவிடப்பட்டது.

இப்படியே நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் நான் சொல்ல வருவது என்ன? ஏன் இதைச் செய்கிறேன்? சைவ மக்கள் மேல் பகையென்றால் ஏன் இவற்றை செய்வேன். நான் சைவ மக்களின் பகைவன் என்பவர்கள் சைவ மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்?

தேசம்நெற்: உங்கள் பதவியை ஏற்கவிடாமல் நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளனர். மிக அவலமாகவும் கோரமாகவும் முடிவுக்கு வந்த வன்னி யுத்தம் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

பேராசிரியர் ஃகூல்: நீங்கள் சொல்வது போல ஒரு நாளும் ஒரு இயக்கத்தை முற்றாக அழிக்க முடியாது. அவ்வியக்கத்தை எழுப்பிய காரணங்கள் நீங்கினால் மட்டுமே அவ்வியக்கம் அழியும். புலிகளின் ஆதரவாளர் பலர் மிஞ்சவில்லை என்பது முட்டாள்தனம். மேலும் புலிகளினால் அழிக்கப்பட்டவர்களின் சொந்தக்காரர் அப்படிக் கொன்று தமிழர் மத்தியில் புலிகள் ஏற்படுத்திய பகை என்பவையே பல தமிழரை இராணுவத்துடன் இயங்க வைத்தது புலிகளின் அழிவுக்கான காரணங்களில் ஒன்றானது. இன்று இராணுவத்தின் கையில் இறந்தவர்களின் சொந்தங்கள் அதேபோல் சந்தர்ப்பம் கிடைத்தால் இராணுவத்திற்கெதிராக இயக்குவார்கள் என்பது எதிர்பார்க்க வேண்டியது.

என்னைப் பொறுத்தவரை இந்தக் கொலை – மீள்கொலை வட்டம் நிறுத்தப்பட வேண்டும். அதைச் செய்வதற்கான ஞானம் அரசாங்கத்திற்கு வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

யாருடைய மரணத்தையும் வைத்து நாம் மகிழ முடியாது. குறிப்பாக வன்முறையினால் கட்டாயப்படத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய பிள்ளைகளை நாம் தீவிரவாதிகளென்று சொல்வது பெரிய தவறு. அரசாங்கம் இப்பிள்ளைகளைச் சமூகச் சீர்திருத்தும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும்.

தேசம்நெற்: இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கோரமான அவலத்திற்கு நாங்கள் சாட்சியாக இருந்திருக்கின்றோம். தமிழ் அரசியல் தலைமைகள் அல்லது தமிழ் அறிவியல் சமூகம் இந்த அவலமான அல்லது கோரமான முடிவை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததா?

பேராசிரியர் ஃகூல்: மேல் கூறியவாறு ‘‘எல்லாம் அல்லது பூச்சியம்’’ என்ற கொள்கை எம்மை கை விட்டுள்ளது. 1987, 2000, 2002 – 4 ஆகிய ஆண்டுகளில் வந்த எல்லா வாய்ப்புகளையும் இழந்துவிட்டோம். எமது தலைமைகள் மந்திரி பதவியை எடுத்தாலே மக்களுக்கு உதவுவதற்கு பல வாய்ப்புகள் வரும். அதிகாரம் அரசாங்கக் கையில் உள்ள போது தூர விலத்தி ‘‘நீங்கள் எங்கள் நன்மையை கருதுகிறீர்கள் என்று நிரூபியுங்கள்’’ என்று சொல்வது 1965ல் பலிக்கவில்லை. இன்றும் பலிக்காது. தமிழ் மந்திரிமாருக்கே தமிழரின் தேவைகள் சரியாய் தெரியும். தமிழராகிய நாம் இப்படி என்றாலும் எடுக்கக் கூடிய அதிகாரத்தை எடுக்க வேண்டும். கூட்டுறவே ஒரே வழியாகியுள்ளது.

தேசம்நெற்: கடந்த மூன்று தசாப்தகால தமிழீழ விடுதலைப் போராட்டம் அல்லது தமிழ் இளைஞர்களின் ஆயுத வன்முறை மிகவும் அவலமான முடிவுக்கு வந்துள்ளது. இதிலிருந்து தமிழ் சமூகம் குறிப்பாக தமிழ் அறிவியல் சமூகம் எதனைக் கற்றுகொள்ளலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.

பேராசிரியர் ஃகூல்: ஞானம், அனுபவம் என்பன முதிந்தோர் மத்தியிலேயே கூட உள்ளன. ஆனால் எமது முதிர்ந்தோர் வழிகாட்டாமல் வாலிபருக்கு வால் பிடித்து அவர்களை ஏமாற்றி தத்தம் காரியங்களைப் பார்த்தார்கள்.

உதாரணமாக மேடையேறி போர் உற்சாகத்தை ஊட்டி, அதேவேளையில் தம் பிள்ளைகளுக்கு வெளியேற அனுமதி பெற்றார்கள். எனக்குத் தெரிந்த வெள்ளாளப் பூசாரி ஒருவர் கலிபோனியாவிலிருந்து பகவத்கீதையின்படி இலங்கையிலுள்ள வாலிபர்களின் தர்மம் போர் புரிவதும், தனது தர்மம் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் என்று எனக்குப் புழுகினார்.

அறிவியல் சமூகத்தினர் பலர் நிலமை எல்லாம் விளங்கியும் தம் மௌனத்தை கைவிடவில்லை. அம்மௌனமே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்களும் நீண்ட காலம் வீரத்தோடு தம் தனித்துவத்தைப் பேணியும், கடைசியில் தலைகுனிந்த நிர்ப்பந்தம் இனி ஒருபோதும் ஏற்படக் கூடாது.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆண்டுகால வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்துடனும் பிண்ணிப் பிணைந்ததாகவே உள்ளது. நடந்து முடிந்தள்ள மூன்று தசாப்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது?

பேராசிரியர் ஃகூல்: ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம். இதுவே பிளேற்றோ கூறியபடி பல்கலைக்கழகங்கள் – நாட்டு ஆளுமைக்கு ஆதாரம் என்ற நோக்குடன் கல்வியில் ஈடுபட வேண்டும். – அரசியலுக்கோ எம் மார்க்கத்திற்கோ காரணம் வைத்து எம் ஆராய்ச்சிப் பணியைச் செய்ய முடியாது. இந்த உண்மையை மறந்ததால் தான் யாழ் பல்கலைக்கழகத்திற்கு இந்த கடைசி 30 வருஷங்களாகக் கவலைக்கிடமான பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

சிங்களவரும் அப்படிச் செய்கின்றனர், ஏன் நாமும் அப்படிச் செய்யக் கூடாது என்று கேக்கிறவர்கள் சிலர். அதற்கு என் பதில் அவர்களுடைய மாதிரிப் பல்கலைக்கழகமா எங்களுக்கு வேண்டும்.

அல்லது உதாரணமாக புதிய பொறியியல் பீடத்தை அரசியல் காரணங்களுக்கு கிளிநொச்சியில் போட வேண்டும் என்கிறார்கள் பலர். அப்படி நடப்பின் ரஜரட்டை பல்கலைக்கழகம் போல், இளம் பிள்ளைகள் உடைய விரிவுரையாளர் (அதாவது அநேகர்) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து திங்கள் பின்நேரம் அல்லது செவ்வாய் வேலைக்கு வந்து வியாளன் அல்லது வெள்ளி காலை யாழ்ப்பாணம் செல்வார்கள். செனட் பேரவை கூடும் நாட்களில் ஒரு அதிகாரியும் வளாகத்தில் இருக்க மாட்டார். இது எமது சமூகத்தின் போலித்தனத்தை மீண்டும் காட்டுகிறது. யாழ்ப்பாணத்தில் வசதியாய் வாழும் நாம், எம் வாலிப விரிவுரையாளர்கள் தமிழ் சமூகத்திற்காக தங்கள் குடும்பங்களுடன் கிளிநொச்சியில் வாழ வேண்டும் என்கிறோம். ஆனால் சரித்திரத்தில் அப்படி நடப்பதில்லை. ஒருவர் தன் குடும்பத்திற்கு முதலிடம் கொடுப்பதே இயற்கை, வழக்கம்.

அறிவைப் பேணி அரசியல் நோக்கங்களுக்கு பல்கலைக்கழகத்தை அடியாக்க முன்வரும் சக்திகளை எதிர்க்கும் பலம் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு வேண்டும். இப்பலம் இல்லாமல் இருந்ததே கடைசி 30 வருடங்களின் குறை.  

தேசம்நெற்: யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக உங்களை நியமிக்க பல்வேறு தரப்பினராலும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருவதை தேசம்நெற் அறிகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் தற்போது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் உள்ள பதவிகளைத் துறந்து யாழ் செல்வீர்களா? அதற்கான தயாரிப்பில் நீங்கள் உள்ளீர்களா?

பேராசிரியர் ஃகூல்: அந்த அழுத்தங்கள் ஜனநாயகமுறையில் வந்தால் அவற்றை நாம் வரவேற்க வேண்டும். நான் செல்வேனா என்பது இப்போது ஒரு கேள்வியாக அமையாது. ஏனெனில் நான் அமெரிக்காவில் என் பதவியை ஏற்கனவே ராஜினாமாச் செய்து ஓகஸ்டில் நாடு திரும்புகிறேன்.

பேராசிரியர் துரைராஜா 1989ல் என்னை மின்பொறியியல் துறைக்குத் தலைவராக வரவேண்டும்  என்று கேட்டபோது என் மனைவியின் Ph.D. பட்டப்படிப்பு முடிந்ததும் என் 7ம் வருஷ விடுமுறையை எடுத்துக்கொண்டு 1993ல் வருவேன் என்று வாக்களித்திருந்தேன். யுத்த காரணத்தால் அவர் பொறியியல் பீடத் திட்டங்கள் பலிக்கவில்லை. 1995ல் என் நீண்ட காலத் திட்டங்களுக்கமைய ஊர் சென்றேன். ஆனால் யாழ்ப்பாணத்தில் உஸ்தியோகம் கிடைக்கவில்லை. நான் பொறியியல் பீடத்தை அமைக்க உதவுவேன் என்று சொல்லியும் சிவில் பொறியியல் பதவியையே விளம்பரப்படுத்தினர். தகுந்த விண்ணப்பதாரி இல்லையென்று தெரிந்தும் மீண்டும் சிவிலையே விளம்பரப்படுத்தினர். மின்துறையைச் சேர்ந்த நான் விண்ணப்பிக்க முடியவில்லை.

Prof_Hoole_with_his_Wifeசரி கணணித்துறைக்குச் செல்வோம் என்று வெளிக்கிட்டதும் நடந்தது தெரிந்ததே. சரி மனைவி பிள்ளைகளை ஆகிலும் அனுப்புவோமென்று அவர்கள் இரசாயணப் பதவியை விளம்பரப்படுத்திய போது என் மனைவி விண்ணப்பம் அனுப்பினார். பல மாதங்கள் பின் அதையே நாம் மறந்த கட்டத்தில் அடுத்தநாள் நேர்முகப்பரீட்சைக்கு யாழ்ப்பாணம் வருமாறு கொழும்பில் இருந்த அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் உடனடியாகத் தொலைபேசியில் தனக்கு விரும்பினாலும் வரமுடியாதென்று முறைப்பட்ட போது, ‘‘பரவாயில்லை அடுத்தமுறை விளம்பரம் வரும் போது விண்ணப்பியுங்கள்’’ என்றார்கள். மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பட்ட போது, அவர் விண்ணப்பதாரிகள் இல்லாதபட்சத்தில் மீண்டும் தெரிவுக்குழுவைக் கூட கட்டளையிட்டனர். அதற்கிணங்க தெரிவுக்குழு கூடி, ”வெற்றிடம் இல்லை’’ என்று முடிவெடுத்தது! உடனடியாக வழக்கு வைத்தோம். ஆனால் நாட்டைவிட்டு வெளியேறியதால் வழக்கைத் தொடர முடியவில்லை.

நான் 1993இல் இருந்து யாழ் வளாகத்துட் செல்லத் திட்டமிட்டும் ஓரிருவரால் தடுக்கப்பட்டுள்ளேன். எம் கடிதங்களுக்கு பதிலே வருவதில்லை. வழக்கு தொடர்ந்தால் ஒரு வருடமென்றாலும் எடுக்கும். இங்கே (அமெரிக்காவில்) இருந்தால் அங்கு போவது ஒருபோதும் நடவாதென்ற முடிவில்தான் என் பதவியை ராஜினாமாச் செய்தேன். கிடைத்தால் உபவேந்தர் பதவியை ஏற்பேன்.

தேசம்நெற்: பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களின் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக அமைந்துவிடுவது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தை மட்டுப்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டு பலவலாக உள்ளது. இக்குற்றச்சாட்டுப் பற்றியும் உபவேந்தர்களின் நியமனம் பற்றியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை பற்றியும் சற்று கூறமுடியுமா?

பேராசிரியர் ஃகூல்: இந்தக் குற்றச்சாட்டு தவறானது. பல்கலைக்கழகங்கள் யாவும் பல்கலைக்கழக 1987 சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தச் சட்டம் மிகக் கவனமாக எழுதப்பட்டது. ஆளும் பேரவையில் துணைவேந்தர், பீடத் தலைவர் போன்ற பலர் தம் உத்தியோகஸ்தின் நிமித்தம் அங்கத்தவர்கள். இவர்களை மட்டுமே தீர்மானங்கள் எடுக்கவிடுவது நல்லதல்ல என்ற காரணத்தால் கூடவே சுற்றிய சமூகத்தில் இருந்து உள் அங்கத்தவர் எண்ணிக்கை சக ஒரு வெளிப் பெரியோர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவர். இதற்கமைய யாழ் பேரவையில் 12 உள்ளங்கத்தாரும் 13 வெளியங்கத்தாரும் 2006ல் இருந்தனர். இவர்கள் அதிபர்மார், கணக்காளர், GAமார், குருமார், இளைப்பாறிய பேராசிரியர்மார் போன்ற சமூகப் பெரியோர்களும் உள்ளனர். இப்படியிருந்தும் உள் அங்கத்தவரே அதிகாரம் கூடியவர்கள். ஏனெனில் வெளி அங்கத்தவர் வழமையில் ஒரு பெரிய தப்பைக் கண்டாலே ஒழிய தலையிடுவதில்லை. இந்தப் பேரவை மாதாந்தம் கூடுவதாலும் அடிக்கடி தெரிவுக்குழு, நாணயக்குழு போன்றவற்றில் சந்திப்பதாலும் அவர்களுக்குள் நட்புகள் ஏற்பட்டு பீடத் தலைவர் அல்லது தொடர விரும்பும் துணைவேந்தர் பேரவையின் வாக்கை துணைவேந்தர் பதவித் தேர்தலில் கேட்கும் போது ஒரு வெளியாள் வருவது மிகவும் கஷ்டம்.

சட்டத்தை எழுதியவர்கள் இப்படி ஒரு நெருங்கிய பேரவையில் திறமை நட்புக்கு இலக்காகும் என்பதையும் மனதில் கொண்டு பேரவையின் பொறுப்பு 3 பேரைத் தேர்ந்து ஜனாதிபதியிடம் அனுப்புவது மட்டும் என்றும், இறுதித் தெரிவு மானியக் குழுவின் ஆலோசனையோடு ஜனாதிபதியுடையதென்றும் அமைந்தது. எனக்குத் தெரிந்த அளவு நானும் துரைராஜாவும் மட்டுமே வெளியாட்களாகப் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளோம்.

இந்த அமைப்பில் பிழை காணலாம். ஆனால் இது பொதுவாக வேலை செய்கிறது. பேரவையில் பெரும்பான்மை வெளி அங்கத்தவர்களிடம் இருந்தாலும், நட்புகள், இளைப்பாறிய பேராசிரியர்மாரால் உள்அங்கத்தவரிடமே அதிகாரம் உள்ளது. அவர்கள் தெரிவு செய்யாத ஒருவரை ஜனாதிபதி நியமிக்க முடியாது. தாம் ஏற்கத்தக்க 3 பேரை ஜனாதிபதியிடம் அனுப்புவது பேரவையின் கடமை. அனுப்பிய பின் தாம் விரும்பாதவர் நியமிக்கப்பட்டார் என்பது பொறுப்பற்ற நடத்தையே.

தேசம்நெற்: யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க கருத்தியலின் ஆதிக்கத்திலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ந்தும் உள்ளது. இதுவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்களாக இருந்தவர்கள் இந்தக் கருத்தியலுடன் உடன்படாவிட்டாலும் சைவ-வேளாள சமூகப் பின்னணியில் இருந்தே வந்துள்ளனர். யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க கருத்தியலை எதிர்த்து நிற்கவில்லை. அதனுடன் சமரசம் செய்துகொண்டனர். ஆனால் நீங்கள் கத்தோலிக்க மதத்தை இறுக்கமாகப் பின்பற்றுபவர். சைவ-வேளாள கருத்தியலை தீவிரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பவர். 2006ல் உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களில் நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர் (கத்தோலிக்கர்) என்றும் பிரச்சாரப்படுத்தப்பட்டது. இந்த முரண்நிலையை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

பேராசிரியர் ஃகூல்: நான் கத்தோலிக்கன் தான், ஆனால் ஆங்லோ கத்தோலிக்கன். உரோமன் கத்தோலிக்கன் அல்ல, ஆனால் பாப்பரசரை அத்தியட்சர் மாரில் (அதாவது Bishop மாரில்) முதல்வர் எனக் கருதுபவர்.

நான் சைவ சமயத்தவன் அல்ல. ஆனால் சைவ சமயத்தவருக்கு எதிரானவன் அல்ல. இதை என்னுடன் பழகிய மாணவர். நைஜீரியாவில் வேலை வாய்ப்பு எடுத்துக் கொடுத்த 600 வாத்தியார்மார் சொல்ல வேண்டும், நான் இல்லை. எனது எழுத்துகளின் போது என் அறிவியல் கடமையையே செய்கிறேன்.

மேற்கூறியவாறு பற்பல கட்டுக்கதைகள், பொய்ப் பிரச்சாரங்கள் பாடப் புஸ்தகங்களில் வெள்ளாளரால் எழுதப்பட்டு வருகின்றன. உதரணமாக ‘குலத்தாலவே ஆகுமாம் குணம்’ அல்லது ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ ஏன் இவற்றைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை? கேட்கக் கூடாதா? கேட்பது வெள்ளாளரைப் பகைப்பதா? இக்கட்டுக்கதைகளை எம்மை வரைவிலக்கணம் கூறும் கதைகள் என்பர். இவற்றை தாக்கும் போது அவர்களில் சிலருக்கு அது ஏதோ கத்தியைப் போட்டு திருப்புவது போல் இருக்கிறது. ஆகவே என் கேள்வியை வேறு விதத்தில் கேட்கிறேன்:

இலங்கை அரசின் பாடப் புஸ்தகங்கள் கற்பிக்கின்றன சிங்களவர் குடியமர்ந்து இலங்கையைக் கட்டியெழுப்பவும், தமிழர் ஆக்கிரமிப்புக்காரராயும் வந்தார்களென்று. இதை வினவுவது சிங்களவரைப் பகைப்பதா? இதுக்கு விடையைக் கூறிய பின்,

தாமோதரம் பிள்ளையின் சரித்திரத்தை எடுப்போம். என் மூதாதையரான சி வை தாமோதரம் பிள்ளையின் திருச்சபைப் பதிவுகளின் படி அவர் பிறந்த ஒரு சில நாட்களில் சிறுபிள்ளை ஞர்னஸ்ஞானம் பெற்றார். தகப்பன் வைரவி தாய் பெரியாய். இவர்கள் ஏற்கனவே ஞானஸ்ஞானம் பெற்று அந்நேரத்தில் சைரஸ் கிங்ஸ்பெரி, மேரி கிங்ஸ்பெரி என்ற பெயர்களில் இயங்கினர். ஆனால் ஆறாம் வகுப்புத் தமிழ் பாடப் புஸ்தகமோ அவர் பெற்றார் வைரவநாதர், பெரும்தேவி என்ற (இன்றைய வெள்ளாளப்) பெயர் உடையவர் என்றும் சலுகைகளுக்காக கிறிஸ்தவனாய் தாமோதரம் பிள்ளை நடித்தார் என்றும் கற்பிக்கின்றது. என் மதத்தாரைப் பற்றிய பிழையான கற்பிப்பைப் பற்றி கேள்வி எழுப்புவது சைவ மக்களுக்கு எதிரியாய் இருப்பதா? இல்லை! ஆனால் நான் இப்படிப் பொய் கதைகளை உருவாக்கி நஞ்சை பிள்ளைகளுக்கு ஊட்டபவர்களை எப்போதும் எதிர்ப்பேன். இதில் சிந்திக்கும் வைச மக்கள் என்னுடன் தோளோடு தோள் நின்று ஐக்கியநாட்டு பிள்ளைகள் உரிமைக் கோட்பாட்டைப் பேணுவர். அக்கோட்பாட்டுக்கு விரோதமாய் சிறுபிள்ளைகளுக்கு சாதி சமய நச்சூட்டுவதை எதிர்ப்பார்கள் என்று உறுதியாய் நம்புகிறேன்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிர்வாக ஒழுங்கீனம் முதல் அறிவியல் தகமை வரை பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டதாக உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் தனித்துவம் அடையாளம் அனைத்துமே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் நீங்கள் இதனை குறுகிய உங்கள் பதவிக்காலத்தில் சீர்செய்ய முடியும் என நினைக்கின்றீர்களா? எவ்வாறு இந்த சீராக்கத்தை செய்ய உள்ளீர்கள்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: ஏற்கனவே இதை தொட்டுள்ளேன். இவற்றைச் செய்ய ஓரேயொரு வழி மட்டுமே. குட்டப்பட்டும் குனிந்து நிற்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்து தலைநிமிரப் பண்ணுவதே. ஒரு சின்ன உதாரணம் – என் மனைவியை யாழ் கழகம் அடுத்தமுறை விண்ணப்பியுங்கள் என்றது. மனிதரை மனிதராக பாவிக்க மறுப்பதற்கு அது ஒரு உதாரணம். அவர் முறைப்பட்டது குட்டக் குட்டக் குனிய மறுப்பதற்கு உதாரணம். 3 வருடத்தில் சீர் திருத்தம் செய்ய முடியாது. ஆனால் மனிதரை மரியாதையுடன் பாவிக்கத் தொடங்கினால் அந்தச் சீர்திருத்தம் தொடரும்.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதத்தில் அந்த இறுக்கமாக மூடப்பட்ட அறிவியல் சமூகத்தில் நடைபெறுகின்ற பாலியல் துஸ்பிரயோகம் மிக முக்கியமான விவாதப் பொருளாகவும் அமைகின்றது. பல்கலைக்கழக சமூகத்திற்கு இந்தப் பாலியல் துஸ்பிரயோகம் (அதிகாரப் படிநிலையில் மேலுள்ளவர்கள் தமக்குக் கீழுள்ளவர்களை தமது பாலியல் விருப்புக்கு பயன்படுத்துவது. கீழுள்ளவர் அதற்கு சம்மதித்தாலுமே அது துஸ்பிரயோகம்.) பொதுவான விடயமா? அல்லது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டுமே எதிர்நோக்குகின்ற ஒரு பிரச்சினையா? இதனை எவ்வாறு கையாள முடியும்?

Prof_Hooleபேராசிரியர் ஃகூல்: நான் பாலியல் துஸ்பிரயோகம் யாழ் பல்கலைக்கழகத்தில் உண்டென்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் எனக்கு நேரடியாகத் தெரியாது. ஆனால் என் மனைவி திறந்த பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவரின் பாலியல் இம்சைக்கு (sexual harassment) இலக்கான போது அவர் முறையிட்டு, அவ்வாறு சம்பவம் நடக்கும் போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஒரு கொள்கைப் பத்திரம் இருக்க வேண்டுமென்று கேட்ட போது ஏற்பட்ட எதிர்ச்சி பெண்களின் தாழ்ந்த நிலையைக் காட்டுகின்றது.

‘‘பொய் சொல்லாதே’’ என்று திட்டினார் பீடத்தலைவர். ‘‘இது அமெரிக்காவில்லை’’ என்றார் ஒரு பேராசிரியர். ‘‘அவர் மார்பைப் பிடிக்காவிட்டால் அது பாலியல் துஸ்பிரயோகம் இல்லை’’ என்றார் இன்னுமொரு பேராசிரியர். ‘‘அது சீலை உடுக்காமல் சட்டை போடுவதால் தான்’’ என்று இன்னுமொருவர். ‘‘அது தனக்கு ஏன் நடப்பதில்லை’’ என்றும் கேட்டார் அவவிலும் ஒரு 28 வயது கூடிய ஒரு பெண் பேராசிரியர்.

நான் உப வேந்தராய் நியமிக்கப்பட்டு ஏதாவது காண நேரிட்டால் என்னைப் பொறுத்தவரை நான் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். என் மனைவி இதை ஜனாதிபதியிடம் எழுப்பியதை தொடர்ந்து ஜனாதிபதி உயர்கல்விக் காரியதரிசிக்கு எழுதி, புதிய மாணவர் இம்சை தடைச்சட்டத்தின் கீழ் பாலியல் துஸ்பிரயோகமும் தடைப்பட்டு உள்ளது.

தேசம்நெற்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதில் முன்னின்ற பேராசிரியர் கெ கைலாசபதி அதனை ஆசியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக்க கனவுகண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நீங்கள் உபவேந்தராக 2006ல் நியமிக்கப்பட்ட பின் பல்கலைக்கழக அபிவிருத்தி தொடர்பாக உங்கள் வேலைத்திட்டங்களை வெளியிட்டு இருந்தீர்கள். தற்போது மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவி உங்களை நெருங்கி வந்துகொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய உங்களுடைய தொலைநோக்குப் பார்வை இலக்கு என்ன?

பேராசிரியர் ஃகூல்: இலக்குகள் பிரதானமாக 3.
1) பொறியியல் பீடத்தை அமைப்பது.
2) வவுனிய வளாகத்தை பல்கலைக்கழகமாக்குவது. (ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு சுதந்திரப் பல்கலைக்கழகமாக்கும் பொறுப்புடன் ஒரு வளாகம் கொடுக்கப்பட்டது. இரு தமிழ் பிரதேச வளாகங்கள் மட்டுமே இன்னும் வளாகங்களாக உள்ளன. ஏனைய வளாகங்கள் பல்கலைக்கழகங்களாகி இப்போ பல வருஷங்கள்.)
3) யாழ் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நியாய, நீதியான, நிர்வாக வழிகாட்டியாக அமைப்பது.

(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் அவர்களின் இலக்குகளை அடையும் தன் சுயாதீனத்தையும் சுய அடையாளத்தையும் மீளுறுதி செய்துகொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இந்நேர்காணலை முடிவுக்கு கொண்டு வருகின்றேன்.)

ஓய்வூதிய சட்டங்களில் திருத்தம்

parliament.gifஅரசாங்க ஊழியர்கள் இறக்கும் பட்சத்தில் அவரில் தங்கி இருந்த மனைவி, பிள்ளைகள் தற்போது அனுபவிக்கும் சலுகைகளை விடவும் கூடுதலான சலுகைகளை அனுபவிக்கக் கூடிய வகையில் நடைமுறையிலுள்ள ஓய்வூதியச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இச்சட்டங்களின் திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நேற்று பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தன.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டப்ளியு. ஜோன் செனவிரட்ன, விதவைகள், அநாதைகள் ஓய்வூதிய நிதியாக (திருத்தம்) சட்ட மூலம் விதுரர்கள், அநாதைகள் ஓய்வூதிய திருத்தம் சட்டமூலம் என்பவற்றை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அமைச்சர் தனதுரையில், அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் இறந்தால் அவரது கணவர் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகள் தற்போது அனுபவிக்கும் சலுகைகளை விடவும் கூடுதல் சலுகைகளை அனுபவிக்கக் கூடியவகையில் விதவைகள், அநாதைகள் ஓய்வூதியச் சட்டம், விதுரர்கள், அநாதைகள் ஓய்வூதியச் சட்டம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம் பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் என்பவற்றினால் உயிரிழந்த அரசாங்க ஊழியர்கள், படை வீரர்கள் ஆகியோரின் குடும்பத்தவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவும் அதிகரிக்கப்படும்.

தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் படி உயிரிழந்த அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 21 வயது வரையே ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. புதிய திருத்தத்தின் கீழ் இவ்வயதெல்லை 26 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலிருக்கும் ஏற்பாடுகளின் கீழ் தற்காலிக மற்றும் சமயா சமய அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. புதிய திருத்தத்தின் கீழ் குறித்த அரசாங்க ஊழியர் பத்து வருடங்கள் சேவையாற்றி மரணித்திருந்தால் அவரது கணவருக்கோ அல்லது மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ ஓய்வூதியம் வழங்கப்படும்.

தற்போதைய ஏற்பாடுகளின் கீழ் அரசாங்க நிறுவனங்கள் மூடப்படுவதன் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ அரச ஊழியர் ஒருவர் தொழிலை இழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. புதிய ஏற்பாட்டின் கீழ் 55 வயது நிறைவடைந்ததும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.

அரசாங்க ஊழியரொருவர் செய்த குற்றத்திற்காக வேலை நீக்கம் செய்யப்படுவாராயின் அவரது குடும்பத்திற்கு தற்போது ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. ஆனால் புதிய திருத்தத்தின் கீழ் அரச ஊழியர் செய்த தவறின் பலாபலன்களை அவரது மனைவியோ, குடும்பத்தினரோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காக குறித்த அரச ஊழியர் பத்துவருடம் சேவையாற்றி இருந்தால் அவரது குடும்பத்திற்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேலும் யுத்தம் காரணமாக உயிரிழந்த படைவீரரின் இளம் வயது மனைவிக்கு தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

அவர் மறு மணம் புரிந்தால் அந்த ஓய்வூதியம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிடு கின்றது. ஆனால் புதிய ஏற்பாட்டின் கீழ் உயிரிழந்த படை வீரரின் மனைவி மறுமணம் செய்தால் ஓய்வூதியத்தில் அரைவாசித் தொகை கிடைக்கப்பெறும். பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் காரணமாக அரச ஊழியர் ஒருவர் இறந்தால் 55 வயது வரை அவரின் மனைவிக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

55 வயதின் பின்னர் சம்பளம் நிறுத்தப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனால் அந்தக் குடும்பம் பாதிக்கப்படுகிறது. எனவே அவரின் குடும்பத்துக்கு வழங்கும் ஓய்வூதியத்தை அதிகரிக்க உள்ளோம்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதி அமைச்சர்கள் ஆகியோரின் அந்தரங்க செயலாளர்கள், இணைப்புச் செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோருக்கு 5 வருடங்களின் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஆனால் அவர்களின் மறைவின் பின் அவர்களது குடும்பத்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இந்தக் குறையை தீர்க்கும் வகையிலும் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. ஓய்வூதிய சட்டத்தில் காணப்படும் சகல நிர்வாக சிக்கல்களும் தீர்க்க இதனூடாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.