மனிதனுடைய செயற்பாடுகள் என்றும் குறிக்கோள் கொண்டதாகவும், பலாபலன்களை நோக்கியதாகவும், எதிர்வினை அறிந்ததாகவும் இருத்தல் அவசியமானது. ஒரு செயற்திட்டத்தைத் திட்டமிடும்போது மைல்கற்கள் திட்டமிடப்பட்டு அதுவரை கிடைத்த பலன்கள் மீளாய்வு செய்யப்படவேண்டும். ஒரினத்தின் போராட்டமும் இதுபோன்றதே. நடந்து முடிந்த ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டமானது தூரநோக்கு, மனிதவிரோதம், ஆத்மீகபலம், புவியியல்சார் ஆழ்ந்த அறிவு, மக்களின் விழிப்புணர்வு, எழுச்சி, போராட்ட குணம், எதிரியின் பலம், பலவீனம், பொருளாதாரபலம், பலவீனம், உலகப்பொருளாதாரம், உலகமயமாதல், இன்னும் எத்தனையோ அடிப்படைக் காரணிகளை அறியாமலேயே ஒரு குருட்டுத்தனமான போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடி முடிந்தது. நாடும், மக்களும் நாசமாய் போனது. போராட்டப்பாதையில் மைல்கற்களான மக்களின் சுயாதீனமான கருத்துக்கள் கணக்கெடுக்கப்படாது போனதே தோல்வியின் முதற்படி. தமிழனின் தலையில் இடி.
கற்பனையில் எழுதப்பட்ட சினிமாப்படங்களைப் பார்த்து, அம்புலிமாமா, கதைப்புத்தகங்கள் வாசித்து போராடப்புறப்பட்டதே காரணமா? பிரபாகரனின் பேட்டியில் ஒருதடவை சொல்லியிருந்தார். சுபாஸ் சந்திரபோஸ்சைப் பார்த்து வீரம் வந்தது என்று. அப்படியென்றால் சுபாஸ்க்கு என்ன நடந்தது என்பதையும் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா?
புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது நோர்வேயிய அன்றைய சமாதானத்தூதரும், இன்றைய அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சூல்கைம் உடன் தனிமையாக உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. எரிக் தனது நோக்கிலும், கடமையிலும் சரியாகவே இருந்தார். அதை அவர் மிகத்தெளிவாக விளங்கப்படுத்தினார். நாம் எந்தமுடிவுகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தமாட்டோம். எமது கடமை இருபகுதியினரையும் ஒருமேசைக்குக் கொண்டுவந்து பேச்சுவாத்தைகளினூடாக இருசாராரும் புரிந்துணர்வுடன் ஒரு சமரசமுடிவை எட்டுவதே இதன் நோக்கம். சுருங்கக் கூறின் நாம் வெறும் தரகர் அல்லது புரோகர்கள் மட்டுமே. இருசாராரும் சண்டைதான் பிடிக்கப்போகிறார்கள் என்றால் கவலையுடன் விட்டுவிடுவோம். இருசாராரும் போருக்குப் பணம் சேர்ப்பதும் தெரியும் என்றார். இந்த சிறியவிடயத்தைத் துல்லியமாக விளங்கிக் கொள்ளமுடியாத புலிகள் நோர்வேயிடம் சென்று அரசு அதைச் செய்கிறது இதைச் செய்கிறது என்று குழந்தைப்பிள்ளைகள் அப்பா அவர் அடிக்கிறார், இவர் இடிக்கிறார் என்பது போல குற்றச்சாட்டுக்களை நோர்வேயிடம் கூறி ஒப்பாரி வைத்தது மிக வேடிக்கைக்குரியதே. இதில் முக்கியமான ஒன்று ஏ9பாதையைத் திறக்கவில்லை என்பது புலிகளின் குற்றச்சாட்டு ஆகும். இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கை ஏற்ற ஒரு வெள்ளைப் பெண்மணி என்னிடம் கேட்டார் ஏ9 பாதையைத் திறப்பதற்குத் தானா இத்தனை வருடங்களாக உயிர்பலி கொடுத்தீர்கள், இதுதான் உங்களின் போராட்டத்தின் நோக்கமா என்றார். வெக்கித் தலைகுனிய வேண்டியிருந்தது. புரிகிறதா புலிகளின் போராட்டத்தின் நோக்கமும் குறிக்கோளும். இனியாவது குறிக்கோளுள்ள வெல்லக்கூடிய போராட்டங்களில் ஈடுபடுங்கள்.
புலிகளின் போராட்டம் உலகமயமாக்கப்பட்டது என்று இன்றும் பலர் பறையடிக்கிறார்கள். சரியான நோக்கும் தீர்க்கதரினமும் சமயோசிதபுத்தியும் இல்லாமல் புலிகளால் ஒரு இனமே ஏறக்குறைய அழிக்கப்பட்டது என்பதும் உலகமயமாக்கப்பட்ட உண்மை என்றறிக. அரசுடன் சமபலத்தில் இருக்கிறோம் என்று சோ காட்டி மாயை காட்டி இல்லாத பலத்தை இருப்பதாகக் காட்டியே இன்று தமிழர்களுக்கு இந்த நிலை. இரண்டு நாள் வெளிநாடுகளில் தெருவில் இறங்கிப்போராடியபோதே ஏற்பட்ட மறுதாக்கத்தை அல்லது எதிர்விளைவுகளை, பலாபலன்களை மக்கள் புரிந்து போராட்ட வடிவத்தை மாற்றியிருக்கவேண்டும். செய்தார்களா?
மாவிலாற்று அடியிலேயே விளங்கியிருக்க வேண்டும் தொடர்ந்து புலிகள் நிற்பதா இல்லையா என்பதை. முழுமையாக புலிகளினதும், புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடியது தான் மிச்சம். பங்கர்களுக்குள் பதுங்கி வாழ்ந்த நிலத்துப் புலிகளுக்குத்தான் உலகநிலவரம் தெரியாது என்றால் புலத்துப் புலிகளுக்குமா உலகறிவு அற்றுப்போனது? அமெரிக்கா ஒன்றுமில்லாத ஒருபிச்சைக்காரனுடன் சமபந்திப்போசனம் வைப்பதற்கு என்ன அண்ணன் தம்பியா? எதாவது கொடுக்கல் வாங்கல்கள் உண்டா? எந்தவெளிநாட்டு அரசும் இலங்கையரசுடனேயே நட்புறவை வைத்திருக்கவிரும்பும். காரணம் பொருளாதார, அதிகாரபரவலாக்கம். என்றும் பொருளாதாரமே வெளிநாடுகளின் ஆர்வத்துக்குரியதாக இருந்து வந்திருக்கிறது. பணமுள்ள இடத்தில்தானே நட்பும் உறவும். சொந்த இடத்தையே பாதுகாக்க முடியாத புலிகள் அமெரிக்காவுடன் பேரம் பேச என்ன வைத்திருந்தார்கள். கனவுகாண்பது என்றாலும் அதற்கு ஒரு தகுதி வேண்டாமா? இது என்ன எம்.ஜி.ஆர் படமா கூரையைப்பிரித்து இறங்கு புலிகளை மீட்டெடுப்பதற்கு.
பலர் புலிகளின் தோல்விக்கு இந்தியாவை குறை கூறுகிறார்கள். வரலாற்று ரீதியாக சிறீமா சாத்திரி ஒப்பந்தத்தில் இருந்து ஜே.ஆர், இராஜீவ் ஒப்பந்தத்தினூடாக மகிந்தாவரை அனைத்தும் தமிழர்களுக்கு பாதகமாகவே இருந்தது. இனியும் பாதகமாகத்தான் இருக்கும். இந்தியாவுக்கு இதைத்தவிர வேறுவழியும் கிடையாது. புலிகளுக்கு உதவி செய்து நேபாளம்வரை வந்துவிட்ட சீனாவை முழுமையாக அழைத்து இலங்கையில் இருத்த இந்தியா விரும்பாது. தமிழகமாநில அரசோ மத்திய அரசில் பல்லுப்பிடுங்கிய பாம்புதான். புரியவில்லையா குறிப்புக்காட்டக் கருணாநிதி கருணையற்றுக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பது. இப்படியான குழந்தைப்பிள்ளைக்கு விளங்கும் விடயங்களைக் கூடப்புரிந்து கொள்ள வலுவற்ற புலிகளால் எப்படி ஒருபோராட்டத்தை அன்றும் இன்றும் இனி என்றும் வென்றெடுக்க முடியும்?
புலிகளின் நன்மைக்காகவும், எம்மக்களின் நலனுக்காகவும் பிழைகளை எடுத்துரைத்தவர்கள் அனைவரையும் துரோகி துரோகி என்றார்கள், சுட்டும் தள்ளினார்கள். ஈற்றில் பக்கத்தில் இருந்த துரோகிகளாலேயே புலிகள் தொலைந்தனர். துரோகிகள் என்றும் பக்கத்தில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எளிய கருத்தைக் கூட உணரமுடியாத புலிகளால் எப்படி ஒரு போராட்டத்தை வென்றெடுக்க முடியும்? எதிரி என்றும் எதிரில் இருப்பதால் நாம் அவனை அவதானிக்கலாம் துரோகி பக்கத்தில்தான் இருப்பான்.
ஈழத்தமிழர்களின் போராட்டம் என்பதை விட புலிகளின் போராட்டம் என்பதே சரியானது. இந்தப்போராட்டம் என்றும் மக்கள்மயமாகவும் இல்லை, உலகமயமாகவும் இல்லை, வெளிநாடுகளின் உயர்மட்ட அரசியலில் நுழையவுமில்லை, ஏன் பேரம் பேசப்படவும் இல்லை. இப்படிக் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய புலிகளால் எப்படி எம்மக்களின் போராட்டத்தை வென்றெடுக்க முடியும்? வாசகர்கள் விரும்பினால் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய விடயங்களை விலாவாரியாக எழுதலாம். இப்படியான வழித்தோன்றல்களின் புதிய குதிரையோட்டமே சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம்.
இந்த நடைப்பயணத்தை எடுத்துக்கொண்டால் சிவந்தன் என்பவர் ஏன் ஐ.நா நோக்கி நடக்கிறார் என்பது பலதமிழர்களுக்கே தெரியாத ஒன்றாக உள்ளது. அவரே முன்னுக்குப்பின் முரணாகப் பேட்டி கொடுக்கிறார். இது சரியான முறையில் திட்டமிடப்படவில்லை. மக்கள் தொலைக்காட்சி என்று இலவசமாக தொலைத்துத் தொலைத்துக்காட்டும் மக்கள் தொலைகாட்சி எனும் ஜிரிவிக்கே இந்த நடைப்பயணி எங்கு எந்தவழியால் போகிறார் என்பது நேற்றுவரை 29.07.2010 தெரியாது இருந்தது. தொலைபேசி நேயர்கள் சொன்னார்கள் சிவந்தன் பலவிடங்களில் தனியாகவே நடந்து போகிறார். அவருக்கு மக்கள் வந்து ஆதரவு கொடுங்கள் என்று. அதையடுத்து சரியாக 15நிமிடத்தில் சிவந்தனுடன் தொடர்பு கொண்டபோது அவர் சொல்கிறார். மக்கள் ஆதரவு இருக்கிறது என்று. இது மீண்டும் புலி, அரசுப்பாணியையே நினைவு படுத்துகிறது.
இலண்டனில் இருந்து ஐ.நா நோக்கி நடக்கும் போராட்டம் ஒரு வலுவான அகிம்சைப் போராட்டம்தான். ஆனால் அது திட்டமிடப்பட்ட விதம், பயணம் செய்யும் முறை, சிவந்தனுக்கு பேச்சில் தெரியும் அவரது போராட்டம் பற்றிய அறிவு, தெளிவு என்பனவும், என்மக்கள், வெளிநாட்டவர், அரசியல், இராஜதந்திரிகள் மட்டங்களில் இப்பயணம் பற்றிய நோக்கம் என்பன கேலிக்கூத்தாகவே இருக்கிறது. இலங்கையில் உலகசாதனை புரிய தெருத்தெருவாய் நடனமாடிய மடையர்கள் போலவே தெரிகிறது.
அகிம்சை முறைப்படி பயணப்போராட்டம் செய்பவர் அகிம்சையுடன், சாந்தமாக, அமைதியாக நடப்பது முக்கியம். சிவந்தன் நடப்பதைப்பார்த்தால் போருக்குப் போகிறவர் போல் போகிறார். அகிம்சை ஐயோ என்று அலறிக்கொண்டு ஓடிவிட்டது. சரி நடந்து போகும் போது பிரித்தானியக் கொடியுடன் போகும் இவர் தான் பிரித்தானியன் என்று உலகத்தவர்களுக்குக் கூறுவதுதானா இப்பயணத்தின் நோக்கம்? மொழியறிவற்றவர்கள் கூட குறிப்பறிய ஏன், எதற்கு நடக்கிறார் என்ற குறிப்பு எதுவுமே கிடையாது. குறைந்தபட்சம் முதுகில் கூட ஒரு குறிப்பெழுதிப்போட முடியாமல் போனதா? மனமில்லாமல் போனதா? ஆங்கிலத்தின் கொடியைக் காவிச்செல்லும் இவர்களுக்கு ஆங்கிலத்தில் நாலெழுத்துத் தெரியாமல் போனது ஏன்? யாருக்குக் காட்ட இந்தப்பயணம். இதைக்காட்டி புலத்துப் புண்ணாக்குகளிடம் மீண்டும் பணம் பறிக்கவா? ருசிகண்ட பூனைகள் சும்மாவா இருக்கும்?
ஐ.நாவை நோக்கி நடக்கும் இவரை எதிர்பார்த்து ஐ.நாவின் பொதுச்செயலாளர் பாங்கி மூன் நிற்கிறார்போலும். சிறையில் வாடுபவர்களை விடுவிக்க வேண்டும், போர்குற்றங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறுமிவர் எந்த நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்? பரமேஸ்வரன் மைக்டொனால்ஸ் வழக்குபோல் சாட்சியில்லாத வெற்றிகள் கிட்டலாமல்லவா? ஒருநாட்டில் உயர்நீதி மன்றத்தால் தனக்குச் சரியான தீர்ப்பு கிடைக்காத தனிமனிதர்கள் வழக்குகளை மனித உரிமைகள் நீதிமன்றுக்குக் கொண்டு போகலாம் என்பதை அறியவில்லையா? இதைச் செய்தார்களா? பிரபாகரன் பிணத்தை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரவலுவற்ற உறவுகளும், நட்புகளும், புலிவீரர்களும், புலம்பெயர்புலிகளும் இருக்கும் போது குண்டிச்சட்டிக் குதிரையோடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்.
ஏதாவது தாக்கங்களை உலக அரசியல் மட்டங்களில் ஏற்படுத்துமாறு புதிய முறைகளைக் கையாளுங்கள். கொலஸ்ரோல் உடலில் கூடிவிட்டது என்பதற்காக தமிழரைச் சாட்டி போராடவேண்டாம். இதுவும் ஒரு புலிப்பாணிதான். போராட்டம் தமிழ்மக்களுக்கு என்று கூறி புலிகள் மாபியாவாக வளர்ந்து விழுந்தது தான் மிச்சம். மக்களுக்காகப் போராடியவர்கள் தம்மக்களையே பயணக்கைதிகளாய் வைத்திருந்த நாசகார, நயவஞ்சகச் செயல் புலிகளைத் தவிர உலகில் யாரும் செய்யவில்லை. இப்படியான விவஸ்தை கெட்ட செயல்களை விமர்சித்தால் இன்று ஒரு புதுப்பட்டம் கொடுக்கிறார்கள் அரசாங்கத்தின் ஆள் என்று. புலிகளும், புலிப்பினாமிகளுமே இன்று அரசின் கையாளாக உள்ளனர். எப்போ மாடுசாகும் உண்ணிகளரும் என்று இருந்திருக்கிறார்கள் போலும்.
சிவந்தனிடம் கால்கடுக்கவில்லையா? களைக்கவில்லையா? என்ற கேள்விகளைக் கேட்டபோது அவரின் பதில் குழந்தைப்பிள்ளைக் கூட குலுங்கிச் சிரிக்கவைக்கும். களையைப்பார்த்தால் விடுதலை கிடைக்காதாம். இது விடுதலைப்பயணமா? நீதிகேட்டு பயணமா? ஒன்றுமாய் விளங்கவில்லை யாராவது விளங்கினால் சொல்லுங்கள். இப்படித்தான் எங்களுக்கு ஒன்றும் விளங்காமலே எங்கள் இனத்தையும் நிலத்தையும் அழித்தது போதும். இனியாவது திட்டமிட்டு மக்கள் மயப்பட்ட, இராஜதந்திரரீதியாக, அறிவுரீதியான போராட்டங்களில் ஈடுபடுங்கள். சிலவேளைகளில் விட்டுக் கொடுப்பது கூட இராஜதந்திரம்தான்.
இன்று போரில் விழுந்த இலங்கையையும், சிங்களப்பேரினவாத அரசையும் முண்டு கொடுத்து நிமிர்த்துவது புலிகள் தான். ஈழம் கேட்டுப்போராடியவர்கள் கொழும்பில் வீடுகள் வாங்கினார்கள். எல்லைகள் பறிபோக தமிழர்களின் உறுதிகளைப்பிடுங்கினார்கள். இன்றும் இலங்கைப் பேரினவாத அரசுக்கும் இராஜபக்ச கொம்பனிக்கும் தாராளமாக அள்ளிவழங்குவது புலிகளே. தமிழீழத்தின் தேசியச்சின்னங்கள், சூரியதேவன் பிரபாகரன் வளர்த்த வாரிசுகள் 2009 மே 18 மண்வேண்டி, மண்ணாய், மண்ணில் தலைவன் விழுந்த இரத்தம் காயமுன் விமானரிக்கட்டுகளைப் பதிவுசெய்தார்கள். தலைவன் விழுந்த மண்ணையோ, தண்டிக்கப்பட்ட அப்பாவி மக்களையோ பார்ப்பதற்கல்ல. வியாபாரத்துக்கும் சுற்றுலாவுக்குமாக விமான இருக்கைகள் நிரம்பி விட்டன. இலங்கைத் தயாரிப்புக்களை பகிஸ்கரியுங்கள் என்று வானுயரக்கத்திய புலிகளும் பினாமிகளுமே எயர்லங்காவில் விமான இருக்கைகளைப் பதிவு செய்துள்ளார்கள் என்பதையும் அறிக. தமிழுணர்வும், தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம் என விடுதலைவேட்கை பொங்கி வழிகிறது. வாருங்கள் நாங்களும் போய் அள்ளுவோம். ஜிரிவியில் ஒரு விளம்பரம்:- “வாணி சீ பூஃட்சே இனி எம்தேசிய உணவு”. கடலுணவு என்று தமிழில் விளம்பரப்படுத்த முடியாத, அன்றித் தெரியாத தமிழர்களுக்கு வாணி சீ பூஃட் தேசிய உணவாம். சுயமிழந்த தேசியம் தேவடியாளாகி தெருத்தெருவாய் கிடக்கிறது. விலைகூறி மலிவுவிலையில் தேசியம் விற்கப்படுகிறது. முடிந்தால் நீங்களும் வாங்குங்கள்.
இன்று இலங்கைப் பேரினவாத அரசுக்கு தேசியம் பேசிய புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் கொடுத்த பணம் ரிஆர்ஓ வினூடாகவம் கே.பி யினூடாகவும் போய்விட்டது. மீதியை புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் விமானம் எடுத்துப் போகிறார்கள் அன்னியச் செலவாணியை அள்ளி இறைப்பதற்கு. நான் பிறந்த சமூகமே ஏறிமிதிப்பற்குக் கூட இலாயக்கற்றுப்போனாயே போ. முட்டாள் சிங்களவன் என்று குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டி கொட்டமடித்த சமூகமே சிங்களவன் எட்டிக்குட்டிவிட்டு கிட்டநின்று சிரிக்கிறான் உன் செய்கைகளைப் பார்த்து. உன்னைவைத்தே உன்னையழிக்கும் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது கொட்டிக் கொடுங்கள். வாழ்க தேசியம், சுயாட்சி, சுயநிர்ணயம்.
கூனிக்குறியபடி குலன்.
30.07.2010