October

October

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் முஸ்லிம்கள் சாட்சியம்.

கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என முஸ்லிம்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நேற்று மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வின் போது சாட்சியமளிக்க முன்வந்த முஸ்லிம்கள் தமிழ், முஸ்லிம் மக்களிடையே கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் குறித்தே அதிகம் சாட்சியமளித்தனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் கணிசமான முஸ்லிம்கள் சாட்சிமளித்தனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர் ஆனால், அவர்கள் 22சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள்தான் முடங்கிக் கிடக்கின்றனர் எனவும், இம்மாவட்டத்தில் காணிப் பிரச்சினைகள் குறித்து விரைவாக தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பாரிய இன வன்முறைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் ஓட்டமாவடி ரகுமத் பள்ளிவாசல் நிர்வாகசபை செயலாளர் ஐ.எல்.டி.சாகிபு சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

 வாகரைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் 1985, 1990 ஆண்டுக் காலப்பகுதியில் ஏற்பட்ட இன வன்முறைகளின் போது வெளியேறியதையடுத்து அவர்களுக்கு சொந்தமான காணிகளில் தமிழர்கள் குடியிருப்புக்களை அமைத்து வசித்து வருகின்றனர் எனவும், தமிழர்கள் அக்காணிகளை அபகரித்துள்ளனர் எனவும், இப்பகுதி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மிக அவசியமானது என்றும் விவசாயியான எம்.பி. முஸ்தபா என்பவர் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த அமர்வில் சாட்சியமளித்த தமிழர்கள் பலர் காணாமல் போன தமது உறவினர்கள் குறித்தே சாட்சியமளித்தனர். மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள். சிரேஸ்ட புலி உறுப்பினர்களின் மனைவிமார் உட்பட பலர் சாட்சியமளித்தனர்.

காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழர்கள் எவரும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இதே வேளை, காணாமல் போனவர்கள் தொடர்பாக நான்கு பேர் இரகசிய சாட்சியங்களை ஆணைக்குழுவின் முன் அளித்தனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கட்சி மாறிய MP பியசேன மீது நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மக்கள் கோரியுள்ளதாக TNA தெரிவிப்பு.

jj.jpgதமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து அரசதரப்பிற்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட  மக்கள் தங்களிடம் கோரியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ( நயவஞ்சக அரசியலின் நாயகர்கள்! : யூட் ரட்ணசிங்கம். )

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், பா.அரியநேத்திரன், எஸ்.சிறீதரன், பொன். செல்வராசா ஆகியோர் கல்முனை பிரதேச மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போது அவர்கள் இவ்வாறு தங்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான பியசேன தனது சுயநலத்திற்காக அரசுடன் இணைந்து கொண்டமைக்கு எதிராக கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அம்மக்கள் தங்களிடம் தெரிவித்தாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் 11 ஆயிரத்து 788 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை! 1900 ஏக்கரில் இம்முறை காலபோக நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை.

Paddy_Fields_Jaffnaயாழ். குடாநாட்டில் வெடிபொருட்கள் அகற்றப்படாத மற்றும், படையினரிடமிருந்து விடுவிக்கப்படாத சுமார் 1900 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை காலபோக நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சிக் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையிலும் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 700 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலப்பரப்பு விடுவிக்கப்படாமலுள்ளது. நாகர்கோவில் தெற்கில் 150 ஏக்கரும், நித்தியவெட்டையில் 150 ஏக்கரும், போக்கருப்பு பகுதியில் 400 ஏக்கருமாக இந்நிலப்பரப்பு அடங்குகின்றது.

இதே வேளை, தென்மராட்சியில் தனங்கிளப்பு பகுதியில் 800 ஏக்கர் நிலப்பரப்பும், எழுதமட்டுவாழ் தெற்கில் 400 ஏக்கர் நிலப்பரப்பும் படையிரால் விடுவிக்கப்பட்டுள்ள போதும், இந்நிலப்பரப்பில் இன்னமும் மிதிவெடிகள் அகற்றப்படவில்லை. இதனால் அங்கும் விவசாயிகள் இம்முறை கால போக நெற்செய்கையை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் இம்முறை யாழ்.மாவட்டத்தில் 11 ஆயிரத்து 788 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டானில் பொதுமக்களின் வீடுகளில் இன்னமும் இராணுவம் உள்ளதால் சிலரின் மீள்குடியேற்றம் தாமதம்.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதும் சிலரின் காணிகளில் படையினர் இருப்பதால் அவர்கள் தங்களின் சொந்தக் காணிகளுக்குள் செல்ல முடியாத நிலையிலுள்ளனர்.

 ஒட்டுசுட்டான் பகுதிகளில் அரசசார்பற்ற நிறுவனங்களால் தற்காலிக வீடுகள், கழிப்பறைகள் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வுதவிகளைப் பெறமுடியாத நிலை மீள்குடியேற முடியாத மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தங்களின் நிலங்களில் பயிர்செய்கைகளை மேற்கொள்ள முடியாமலுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓட்டுசுட்டான் பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையிலுள்ள மக்கள் தற்போது வவுனியாவிலும், வேறு இடங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடுவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க தீர்மானம்.

Iranaimadu_LTTE_Runwayகிளிநொச்சி இரணைமடுவில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான ஓடுதளம் அமைந்துள்ள பகுதியில் 70 மில்லியன் ரூபா செலவில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Iranaimadu_LTTE_Runwayகுறித்த பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பத்தாயிரம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரணைமடுப் பகுதியில் தற்போதுள்ள விமான ஓடுபாதை 1.6 கிலோ மிற்றர் நீளமுடையது எனவும், இதனை 3கிலோ மீற்றராக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்படவுள்ள இப்புதிய விமான நிலையத்திற்கு அருகில் சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகளும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலையக தமிழ் சிறுமிகள் அதிகளவு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகின்றதாக தகவல்.

இலங்கையின் மலையகத் தோட்டப் பகுதிகளிலுள்ள அதிகளவு சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் தோட்டப்புற மக்களின் பிள்ளைகளே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நாளாந்தம் மூன்று சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் யூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 480 சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  கடந்த வருடம் 925 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மீது தொடரும் நெருக்கடி

Jeyaranjan_T_Cllrபிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகத்தின் (BTSL) போட்டிகளில் அம்பெயராக பணியாற்றிய சொக்கன் என்பவர் அம்பெயர் கட்டணம் 300 பவுண்ட் தொலைபேசிக்கு செலவாகியது 50 பவுண் மொத்தம் 350 பவுண்களைத் தரவேண்டுமெனக் கோரியுள்ளார். கை பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான இவர் வேறு தொழில் புரிவதற்கு இயலாதவர். அம்பயர் கட்டணம் அவருக்குரிய முக்கிய வருவாய். அது நீண்டகாலமாகக் கொடுக்கப்படாமல் உள்ளது.

ரெட்பிரிச் கவுன்சிலர் ஜெயரஞ்சனும் (படம்) தங்கள் RLSSC கழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை BTSL உடனடியாகத் தரவேண்டும் எனக் கோரி காராசாரமான மின் அஞ்சலை அனுப்பி வைத்திருந்தார். BTSL வழங்கிய காரணங்களை தாங்கள் ஏற்கத் தயாரில்லை எனவும் கவுன்சிலர் ஜெயரஞ்சன் தனது மின் அஞ்சலில் தெரிவித்துள்ளார்.

லண்டன் கிரிக்கட் கழகங்களிடையே கழகம் கட்டும் போட்டி

BTSL_Logoலண்டன் கிரிக்கட் கழகங்களிடையே கழகம் கட்டும் போட்டி ஆரம்பமாகி உள்ளது. வசந்தன் கிருஸ்ணன் தலைமையிலான பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தினுள் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் முரண்பாடுகளும் கடந்த லண்டன் குரல் இதழில் வெளியானது. ”எமது கழகத்தில் நிதிநெருக்கடி உள்ளது. ஆனால் எமது முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் இதனைப் பெரிது படுத்துகின்றனர்!!!” வசந்தன் கிருஸ்ணன் (பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம்)

ஒக்ரோபர் 03ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஆனால் வசந்தன் கிருஸ்ணன் தலைமையை ஏற்காத ஒரு பிரிவனர் ஹரோ ஐயப்பன் ஆலயத்தில் கூடி ‘வேணி’ என்பவர் தலைமையில் புதிய கழகம் ஒன்றைக் கட்ட முற்பட்டு உள்ளனர்.

அதே சமயம் லண்டனில் 15 ஆண்டுகள் வரை கிரிக்கட் போட்டிகளை நடாத்தி வந்த ஸ்கந்தமூர்த்தி ஒக்ரோபர் 10ல் தங்கள் கழகத்தை மீளக்கட்டுவதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தள்ளார்.
அதேநாள் ஒக்ரோபர் 10ல் வசந்தன் கிருஸ்ணனும் தங்கள் கிரிக்கட் கழகங்களை சந்திப்பு ஒன்றிற்கு அழைத்துள்ளதாகத் தெரியவருகிறது. பெரும்பாலும் பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தில் உள்ள கிரிக்கட் கழகங்கள் மூன்றாகப் பிரிந்து செல்லலும் நிலை தோண்றியுள்ளது.
இதில் ஸ்கந்தமூர்தியின் கழகத்திற்கு கிரிக்கட் கழகங்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் ஏனைய இரு விளையாட்டுக் கழகங்களும் கவனமாக உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்களை தமிழ் தேசிய கிரிக்கட் அணிகள் என்கின்றனவாம்.

யுத்தத்தால் அவயவங்களை இழந்தோருக்கு செயற்கைக் கால்கள், சக்கரக் கதிரைகள் வழங்கப்பட்டன.

யுத்த அனர்த்தங்களால் அவயவங்களை இழந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சக்கர கதிரைகள், செயற்கைக் கால்கள் என்பன வழங்கப்பட்டன. நேற்று சனிக்கழமை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 148 பேருக்கு செயற்கைக் கால்களும், 60 பேருக்கு சக்கர கதிரைகளும் வழங்கப்பட்டன.

கண்டியிலுள்ள மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் அனுசரணையுடன் 51வது படையணி மற்றும், 511வது படைப்பிரிவு தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 511வது படைப்பிரிவின் பிரிகேடியர் கீர்த்தி கொஸ்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு யாழ்.மாட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

யாழ்.அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார். கண்டி மாற்று வுலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் சாமிலி பீரிஸ், 51வது படையணியின் பிரிகேடியர் ஜனக பல்கம உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கண்டி மாற்று வலுவுள்ளோர் சங்கம் யாழ் மாவட்டத்திலுள்ள வலுவிழந்த மக்களுக்கு வீட்டுத்திட்டமொன்றை அமைத்துக் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள். சிரேஸ்ட புலி உறுப்பினர்களின் மனைவிமார் உட்பட பலர் சாட்சியமளித்தனர்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் தற்போது மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றன. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது விடுதலைப்புலிகள் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களின் மனைவிமார் மற்றும், முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளின் உறவினர் என பலர் சாட்சியமளித்தனர். பலர் தங்கள் உறவினர்கள் எங்கிருக்கின்றார்கள் எனத்தெரியாத நிலையில் அவர்களை மீட்டுத்தருமாறு கோரினர். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.துரைரட்ணம், அமெரிக்கப் போதகரான எவ். மில்லர் உட்பட பல பொதுமக்களும் அங்கு சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனின் மனைவி வனிதா சிவரூபன் சாட்சியமளிக்கையில் தனது கணவனை மீட்டுத் தருமாறு கோரினார்.

தானும் கணவரும் பிள்ளைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, கையில் காயப்பட்ட நிலையிலிருந்த கணவருக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி படையினர் அவரை அழைத்துச் சென்றதாகவும், அவர் விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் என்பதால் அவருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என படையினர் அப்போது தம்மிடம் கூறியதாகவும், அவர் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியாமலுள்ளதாகவும், அவரை மீட்டுத்தருமாறும் வனிதா சிவரூபன் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தெரிவித்தார்.

முகாமில் வைத்து புலனாய்வுப்பிரிவினர் என தம்மை அறிமுகப்படுத்திய இருவர் தனது கணவர் வைத்தியசாலையில் இருப்பதாகவும், தன்னை அங்கு வருமாறும் அழைத்தனர் எனவும், அவர்களில் தமக்கு சந்தேகம் எற்பட்டதால் அவர்களுடன் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பலர் தங்களின் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி நல்லிணக்க ஆணைக்குழுவினரிடம் மனுக்களையும் கையளித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறுகின்றன.

வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்கள் மீது படையினர் தவறாக நடக்க முயற்சி.

யாழ்.வடமராட்சிப் பகுதியில் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்கள் மீது அங்கு நிலைகொண்டுள்ள படைச்சிப்பாய்கள் தவறாக நடந்து கொள்ள முயல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவமொன்றில் இவ்வாறு தவறாக நடக்க முற்பட்ட சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் பிடித்து விடியும் வரை கட்டி வைத்தனர்.

வடமராட்சிக்கிழக்கு ஆழியவளை கொடுக்கிளாய் என்னுமிடத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பப் பெண்ணொருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட படைச்சிப்பாயே இவ்வாறு பிடிபட்டார். இரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை. அவர் வீடொன்றிற்குள் நுழைய முற்பட்டுள்ளார். அவ்வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட்டபோது வெளியேறி இன்னொரு வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அவ்வீடாரும் கூச்சலிட்ட போது அங்கிருந்தும் ஓடியுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் சற்றுத் தொலைவிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனை சத்தமிடாமல் கடந்து, வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கியுள்ளார். அச்சமயம் விழித்துக் கொண்ட அப்பெண் கூச்சலிட்ட போது அயல் வீடுகளிலிருந்தவர்கள் கூடி தப்பியோட முற்பட்ட சிப்பாயை பிடித்து ஒரு கதிரையுடன் கட்டிப்போட்டுள்ளனர். விடிந்ததும் அப்பகுதி இராணுவ முகாம் பொறுப்பதிகாரியிடம் சம்பந்தப்பட்ட சிப்பாய் ஒப்படைக்கப்பட்டார்.

அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வடமராட்சிக்கிழக்குப் பகுதிகளில் எவ்வித மின்சார வசதிகளுமின்றி கூடாரங்கள், தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள மக்கள் இவ்வாறான சம்பவங்களால் இரவு வேளைகளில் அச்சத்துடன் பொழுதைக் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.