11

11

தாயக மக்களின் அபிவிருத்திக்கு உதவ முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் கிழக்கு லண்டனில் ஒன்றுகூடினர்! : ரி சோதிலிங்கம்

நேற்று 10/ 10/2010 லண்டன் லேயிட்டனில் ரெலோவின் பல முன்னாள் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நடைபெற்றது. முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா மற்றும் ரெலோவின் அப்போதைய படைத்துறைத் தளபதி இளங்கோ ஆகியோர் அண்மையில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று பல முன்னாள் ரெலோ உறுப்பினர்களையும், இன்றைய ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறீரெலோ உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றோர்களை சந்தித்து உரையாடி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து லண்டன், லேய்டனில் ரெலொ சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள், புலிகளுடனான சகோதரப் படுகொலைகளில் பாதிப்புற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பல முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் அமைப்பு ரீதியாக இயங்காமலும், நாட்டில் உள்ள ரெலோ அமைப்புடன் இணைந்து வேலை செய்யாமலும் வாழ்கின்றார்கள். இவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் தமது மக்களுக்கான பணிகள், மக்களுக்கு சிரமதான உதவிகள், மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவிகள் புரிய வேண்டும் என வலியுறுத்தியும், தாம் மக்களின் அபிவிருத்தி நலனில் அக்கறையுடன் செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதரவினையும், உதவிகளையும் புலம்பெயர் நாட்டிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர்களிடம் கேட்டுள்ளனர்.

இந்த கோரிக்கைகள் புலம்பெயர் நாட்டிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினரிடையே ஒரு ஒன்று கூடலை வற்புறுத்தியும் உள்ளது.

மேலும் புலம்பெயர்நாட்டில் உள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் பலர் தாம் தனிப்படவும், பல்வேறுபட்ட பொது அமைப்புகள் ஊடாகவும் தமிழ் மக்களுக்கான உதவிகள் மேற்கொள்வதையும், இந்த உதவிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு, ரெலோ உறுப்பினர்கள் ஸ்தாபன மயப்படுத்தப்பட்டு உதவிகள் புரிய விரும்புவதாகவும் தெரிவித்தமையையும் தொடர்ந்து இந்த ஆரம்பக் கூட்டம் கூட்டப்பட்டது.

இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எந்த வழிகளிலும் உதவி செய்தலையே அடிப்டையாக கொண்டு இயங்குவது என்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ரெலோ உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தமது முன்னாள் உறுப்பினரிடையே நிநி சேகரிப்புக்களை நடாத்தி, வடகிழக்கில் கஸ்ட நிலையில் உள்ள மக்களுக்கு சிறுகைத்தொழில் மற்றும் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் மேற்கொள்வது என்றும் இது பற்றிய மேலதிக முடிவுகளை பரந்த ரெலோ உறுப்பினர்களின் ஒன்றுகூடலில் முடிவு செய்வது என்றும் முடிவானது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஒன்றுகூடலை நவம்பரில் ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இன்று நாட்டில் இருக்கும் ரெலோவினரிடையே ஒரு ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ் மக்களின் அரசியலையும் வலுப்படுத்த வேண்டும் என்று ஒருசாரர் கருத்து வெளியிட்டனர். நாட்டிலுள்ள ரெலோவின் அரசியலில் புலம்பெயர் ரெலொ உறுப்பினர்கள் நேரடியாகத் தலையீடக்கூடாது என மறுசாரர் கருத்து வெளியிட்டனர். லண்டனில் ரெலோவிற்கு  உத்தியோகபூர்வ அலுவலகத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என முன்னையோரும், ரெலோ அலுவலகம் அல்ல தாயக மக்களின் உதவித் திட்டங்களை இணைப்பதற்கான அலுவலகம் ஒன்று அவசியம் என மறுசாராரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். உதவித் திட்டங்களை இணைப்பதற்கான அலுவலகம் வேண்டும் என்பவர்கள் ஒரு உதவி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த மாறுப்பட்ட கருத்துக்களில் எதை ஏற்றுக் கொள்வது என்பது விரைவில் கூட்டப்படவுள்ள ரெலோ உறுப்பினர்களின் பரந்த கூட்டத்திலேயே முடிவு செய்யப்படவுள்ளது.

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் முஸ்லிம்கள் சாட்சியம்.

கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என முஸ்லிம்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நேற்று மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வின் போது சாட்சியமளிக்க முன்வந்த முஸ்லிம்கள் தமிழ், முஸ்லிம் மக்களிடையே கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் குறித்தே அதிகம் சாட்சியமளித்தனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் கணிசமான முஸ்லிம்கள் சாட்சிமளித்தனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர் ஆனால், அவர்கள் 22சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள்தான் முடங்கிக் கிடக்கின்றனர் எனவும், இம்மாவட்டத்தில் காணிப் பிரச்சினைகள் குறித்து விரைவாக தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பாரிய இன வன்முறைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் ஓட்டமாவடி ரகுமத் பள்ளிவாசல் நிர்வாகசபை செயலாளர் ஐ.எல்.டி.சாகிபு சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

 வாகரைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் 1985, 1990 ஆண்டுக் காலப்பகுதியில் ஏற்பட்ட இன வன்முறைகளின் போது வெளியேறியதையடுத்து அவர்களுக்கு சொந்தமான காணிகளில் தமிழர்கள் குடியிருப்புக்களை அமைத்து வசித்து வருகின்றனர் எனவும், தமிழர்கள் அக்காணிகளை அபகரித்துள்ளனர் எனவும், இப்பகுதி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மிக அவசியமானது என்றும் விவசாயியான எம்.பி. முஸ்தபா என்பவர் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த அமர்வில் சாட்சியமளித்த தமிழர்கள் பலர் காணாமல் போன தமது உறவினர்கள் குறித்தே சாட்சியமளித்தனர். மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள். சிரேஸ்ட புலி உறுப்பினர்களின் மனைவிமார் உட்பட பலர் சாட்சியமளித்தனர்.

காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழர்கள் எவரும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இதே வேளை, காணாமல் போனவர்கள் தொடர்பாக நான்கு பேர் இரகசிய சாட்சியங்களை ஆணைக்குழுவின் முன் அளித்தனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கட்சி மாறிய MP பியசேன மீது நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மக்கள் கோரியுள்ளதாக TNA தெரிவிப்பு.

jj.jpgதமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து அரசதரப்பிற்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட  மக்கள் தங்களிடம் கோரியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ( நயவஞ்சக அரசியலின் நாயகர்கள்! : யூட் ரட்ணசிங்கம். )

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், பா.அரியநேத்திரன், எஸ்.சிறீதரன், பொன். செல்வராசா ஆகியோர் கல்முனை பிரதேச மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போது அவர்கள் இவ்வாறு தங்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான பியசேன தனது சுயநலத்திற்காக அரசுடன் இணைந்து கொண்டமைக்கு எதிராக கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அம்மக்கள் தங்களிடம் தெரிவித்தாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் 11 ஆயிரத்து 788 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை! 1900 ஏக்கரில் இம்முறை காலபோக நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை.

Paddy_Fields_Jaffnaயாழ். குடாநாட்டில் வெடிபொருட்கள் அகற்றப்படாத மற்றும், படையினரிடமிருந்து விடுவிக்கப்படாத சுமார் 1900 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை காலபோக நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சிக் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையிலும் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 700 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலப்பரப்பு விடுவிக்கப்படாமலுள்ளது. நாகர்கோவில் தெற்கில் 150 ஏக்கரும், நித்தியவெட்டையில் 150 ஏக்கரும், போக்கருப்பு பகுதியில் 400 ஏக்கருமாக இந்நிலப்பரப்பு அடங்குகின்றது.

இதே வேளை, தென்மராட்சியில் தனங்கிளப்பு பகுதியில் 800 ஏக்கர் நிலப்பரப்பும், எழுதமட்டுவாழ் தெற்கில் 400 ஏக்கர் நிலப்பரப்பும் படையிரால் விடுவிக்கப்பட்டுள்ள போதும், இந்நிலப்பரப்பில் இன்னமும் மிதிவெடிகள் அகற்றப்படவில்லை. இதனால் அங்கும் விவசாயிகள் இம்முறை கால போக நெற்செய்கையை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் இம்முறை யாழ்.மாவட்டத்தில் 11 ஆயிரத்து 788 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டானில் பொதுமக்களின் வீடுகளில் இன்னமும் இராணுவம் உள்ளதால் சிலரின் மீள்குடியேற்றம் தாமதம்.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதும் சிலரின் காணிகளில் படையினர் இருப்பதால் அவர்கள் தங்களின் சொந்தக் காணிகளுக்குள் செல்ல முடியாத நிலையிலுள்ளனர்.

 ஒட்டுசுட்டான் பகுதிகளில் அரசசார்பற்ற நிறுவனங்களால் தற்காலிக வீடுகள், கழிப்பறைகள் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வுதவிகளைப் பெறமுடியாத நிலை மீள்குடியேற முடியாத மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தங்களின் நிலங்களில் பயிர்செய்கைகளை மேற்கொள்ள முடியாமலுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓட்டுசுட்டான் பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையிலுள்ள மக்கள் தற்போது வவுனியாவிலும், வேறு இடங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடுவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க தீர்மானம்.

Iranaimadu_LTTE_Runwayகிளிநொச்சி இரணைமடுவில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான ஓடுதளம் அமைந்துள்ள பகுதியில் 70 மில்லியன் ரூபா செலவில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Iranaimadu_LTTE_Runwayகுறித்த பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பத்தாயிரம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரணைமடுப் பகுதியில் தற்போதுள்ள விமான ஓடுபாதை 1.6 கிலோ மிற்றர் நீளமுடையது எனவும், இதனை 3கிலோ மீற்றராக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்படவுள்ள இப்புதிய விமான நிலையத்திற்கு அருகில் சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகளும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலையக தமிழ் சிறுமிகள் அதிகளவு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகின்றதாக தகவல்.

இலங்கையின் மலையகத் தோட்டப் பகுதிகளிலுள்ள அதிகளவு சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் தோட்டப்புற மக்களின் பிள்ளைகளே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நாளாந்தம் மூன்று சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் யூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 480 சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  கடந்த வருடம் 925 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.