தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு ஜப்பசி மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்றது. இந்த மகாநாட்டில் சுவிஸ், ஜேர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ்,நோர்வே, கனடா நாடுகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த தலைவர் சித்தார்த்தன் அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில், நீண்டகால இனப்பிரச்சினைக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தின் முழு அதிகாரத்தையும் அமுல்படுத்துவதன் மூலம் ஒர் ஆரம்ப நடவடிக்கையாக கொள்வதுடன், இலங்கை தீவில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் இலங்கை தமிழ் பேசும் மக்கள் தாமும் அனுபவிக்கின்றோம் என்று திருப்திபடும் வகையில் முழுமையான அரசியல் தீர்வை இலங்கை அரசு முன் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
இந்த இனப்பிரச்சினை தீர்வில் (இலங்கை – இந்தியா ஒப்பந்தம்) 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த கால இந்த ஆயதபோராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர்களில் நாமும் ஒருவர் என்ற ரீதியில் ஏற்பட்ட மக்கள் அழிவுகளுக்கு நாம் மிகுந்த வேதனைப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களிற்கு எம்மால் ஆன உதவிகளை செய்யவதற்குரிய வேலை திட்டங்களை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இன்நிலையில் பலவீனமாகவுள்ள தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து ஒரு தீர்க்கமான அரசியல் தீர்வுக்கு அரசு முன்வரவேண்டும் என்பதில் பாரியளவு பங்களிப்பை புலம்பெயர் தமிழ் சமூகம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகின்றோம்.
சர்வதேச செயற்பாட்டு குழு சார்பில்
செ.ஜெகநாதன்
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்
ஜப்பசி 31 2010