“நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை ஐரோப்பாவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.” எனவும் “தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாது போன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும்.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல்.டி.டி.ஈ. அமைப்பை நாம் பெரும்பாலும் அழித்துள்ளோம். ஆனால், நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை உள்ளிட்ட ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ் பிரிவினைவாத புலம் பெயர் அமைப்புக்கள், தங்களின் கனவை இன்னமும் விடவில்லை. தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே இவர்களின் இலக்காகும்.
இதனால்தான், நாம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெனிவாவில் இவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அத்தோடு, வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த புராதன சின்னங்களை அழிக்கும் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
யுத்தத்திற்கு பின்னர் 12 ஆயிரத்து 422 புலி உறுப்பினர்களை நாம் புனர்வாழ்வளித்து, சமூக மயமாக்கியுள்ளோம். பயங்கரவாதத்தை நாம் கட்டமைப்பு ரீதியாக இல்லாதொழித்தாலும், அவர்களின் ஈழக் கனவு இன்னமும் இருப்பதனால், எமக்கு இன்னமும் அச்சுறுத்தலான சூழல் இன்னமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில்தான் மீண்டும், எல்.டி.டி.ஈ. அமைப்பு தலைத்தூக்கி வருவதாக இந்தியாவிலிருந்து எமக்கு புலனாய்வுத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுதொடர்பாக இராணுவப் புலனாய்வுத் துறையினர், ஆராய்ந்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.