கொலன்னாவையில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற ரயில் வண்டியொன்று தம்புத்தேகம பகுதியில் நேற்று (12) அதிகாலை தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. இந்த ரயிலில் 32,800 லீட்டர் எரிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதோடு 5 பெட்டிகள் தடம்புரண்டதால் பெருமளவு எரிபொருள் கசிந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.
தடம்புரண்ட பெட்டிகளுள் சுமார் 11,400 லீட்டர் எரிபொருள் இருந்ததாகவும் அவர் கூறினார். மேற்படி ரயில் இரவு 10 மணிக்கு கொலன்னாவயில் இருந்து பயணமானதோடு அதிகாலை 5.50 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயிலில் இருந்து கசியும் எரிபொருட்களை அருகில் உள்ள கிராம மக்கள் நேற்றுக்காலை (12) முதல் எடுத்துச் செல்வதாகவும் அறிவிக்கப்படுகிறது. தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றவும் ரயில் பாதையை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் தடம்புரண்டதையடுத்து யாழ். தேவி ரயில் சேவை கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.