தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு 50 வருட குத்தகைக்கு வழங்கப்பட்ட யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகை !

தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது சுமார் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (16) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்கும் திட்டம்: கிளம்பியது எதிர்ப்பு - தமிழ்வின்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, தலைவர் இண்டி பத்மநாதன் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் எல். ரத்நாயக்க மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனேடிய முதலீட்டாளருடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இதனை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதன்படி இதன் முதலீட்டு மதிப்பு அண்ணளவாக 5,000 பில்லியன் ரூபாய்களாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதி ஆலோசகரான சாகல ரத்நாயக்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகையின் நிர்மாணப் பணிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,  இந்த ஜனாதிபதி மாளிகையினை நிர்மாணிக்கும் போது புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதன் கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இலங்கைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) இந்த ஜனாதிபதி மாளிகையின் மிகுதி கட்டட பணிகளை விரைவாக முடித்து முழு அளவிலான தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றும் என நம்பப்படுகிறது.

இந்த தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தினை நொதேர்ன் யுனி (Nothern Uni) பல்கலைக்கழகமாக உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 1500 மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகளை வழங்கக்கூடியவாறும், வடக்கில் உள்ள மாணவர்களுக்கு உயர் தரத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் SLIIT நிறுவனம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதன் நீண்ட கால இலக்காக இலங்கையை தாண்டி அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி கற்க வாய்ப்பளிக்கும் தளமாக இதனை மாற்ற விரும்புவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *