அமெரிக்க – பிரித்தானியாவின் ஆதரவோடு இஸ்ரேலின் இனவெறித் தாக்குதல்: காஸா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி! அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடனான சந்திப்பை பாலஸ்தினிய விடுதலை அமைப்பின் தலைவர் அப்பாஸ் ரத்துசெய்துள்ளார்:

ஒக்ரோபர் 17 இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவைச் சந்திக்கவும் அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்டவும் புறப்பட்டுள்ள நிலையில் இச்சந்திப்பு ஒருதலைப் பட்சமாக பாலஸ்தின, ஜோர்டன், எகிப்திய தலைமைகளால் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கு நாடுகளும் வழங்கியுள்ள கேள்வியற்ற ஆதரவுடன் பாலஸ்தினிய அரபுக்களை முஸ்லீம்களை அழிக்கும் திட்டம் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே மத்திய கிழக்கு அரசுத் தலைமைகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மத்திய கிழக்கில் பாலஸ்தினியர்களுக்கான ஆதரவு எப்போதுமே இருந்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் அண்மைக் காலம்வரை மேற்கு நாடுகளுடனும் இஸ்ரேலுடன் மிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் ஓக்ரோபர் 7ம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகந்து நடத்திய தாக்குதலும் இஸ்ரேல் தொடுத்த இன அழிப்பு யுத்தமும் இந்த உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த இன அழிப்பு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்களாகியும் உத்தியோக பூர்வமான எந்தக் குரல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

நேற்று ஒக்ரோபர் 16 ஐநா வின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஸ்யா கொண்டுவந்த யுத்தநிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர்த்திருந்தது. அதனைத் தொடர்ந்து பிரேசில் கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்நாடுகள் வாக்களிக்கவில்லை. பாலஸ்தினத்தில் நடக்கும் இன அழிப்பை ஊக்கப்படுத்துவதுடன் அதற்கு எண்ணை ஊற்றும் வகையில் அமெரிக்கா தன்னுடைய தாக்குதல் கப்பலை இஸ்ரேல் நோக்கி நகர்த்தி உள்ளது.

இன்று சில மணிநேரங்களுக்கு முன் காஸாவில் உள்ள அல் அஹாலி பப்ரிஸ்ற் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய அடிப்படை மனித விழுமியங்களுக்கு மாறான தாக்குதல் உலக நாடுகளின் பார்வையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய இன அழிப்பு இராணுவம் ஈவிரக்கமற்ற முறையில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று பாரபட்சமில்லாத தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் காஸவில் வாழும் மக்குளுக்கான அடிப்படைத் தேவைகளான தண்ணீர், உணவு மற்றும் மருந்து விநியோகத்தையும் முற்றாக தடுத்து அவர்களை மரணத்தின் விழிம்புக்குள் தள்ளிக்கொண்டுள்ளது. பாலஸ்தினத்தில் கடந்த 12 நாட்களில் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள்.

நூறு தமிழரைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் இருப்பான் என்று இஸ்ரேலின் புலனாய்வுத்துறை அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனவுக்கு ஆலொசணை வழங்கியிருந்தது. அதே செயற்திட்டத்தையே இஸ்ரேல் பாலஸ்தினத்திலும் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அமெரிக்க – பிரித்தானிய மேற்கு நாட்டு தலைமைகள் தொடர்ச்சியாக ஆதரவளிக்கின்றனர்.

இந்த மேற்கு நாடுகள் உலகில் நடைபெறும் பெரும்பாலும் அனைத்து யுத்தங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதுடன் இந்த யுத்தங்களை ஆரம்பிப்பவர்களாகவும் அதனை எண்ணையூற்றி வளர்ப்பவர்களாகவும் உள்ளனர். அது மட்டுமல்லாமல் அப்கானிஸ்தானில் அல்கைடாவை அமெரிக்கா உருவாக்கியது. அன்றிருந்த ரஸ்ய சார்பான மொஜஹிதீன்களுக்கு எதிராக அமெரிக்கா ஒசாமா பின் லாடனை உருவாக்கியது. அமெரிக்கா கற்றுக்கொடுத்ததை அல்கைடா ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்திய போது அமெரிக்கா அல்கைடாவை அழிக்க முனைந்தது.

அதே போல் யஸீர் அரபாத்தின் தலைமையிலான பாலஸ்தின விடுதலை அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் எண்பதுக்களில் உதவி அமைப்பாக செயற்பட்ட அமைப்பை ஹமாஸாக உருவாக்கி கொம்பு சீவிவிட்டது. சிரியாவிலும் அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அடிப்படைவாதிகளுக்கு ஆயதங்களை விநியோகித்தது. பெரும்பாலான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கி வளர்த்துவிட்டவர்கள் முஸ்லீம்கள் அல்ல. அமெரிகாவினதும் அதன் நேசநாடுகளினதும் புலனாய்வுப் பிரிவினரே. காலனித்துவகால பிரித்தாளும் தந்திரத்தின் தொடர்ச்சியே இது. நவகாலனித்துவம்.

மனித உரிமைகள் என்று முதலைக்கண்ணீர் விடும் அமெரிக்க – பிரித்தானிய நேசநாடுகள் மிகமோசமான மனித அவலங்களுக்கு பொறுப்புடையவர்கள். அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் தங்களுடைய சொந்த நலன்களுக்காக தலையீடு செய்து அங்கு மிகப்பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தினர். இந்நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகவும் நலன்களுக்காகவும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாட்டு மக்களின் பெயரில் வலிந்து தாக்குதல் நடத்தி உலக சமாதானத்தை சீர்குலைக்கின்றனர். தங்கள் நாடுகளில் தங்களுடைய இருப்புக்கு ஆபத்து வருகின்ற போது அவர்களுடைய வாக்கு வங்கி சரிகின்ற போது இவர்கள் உலகின் பதட்டமான பகுதியில் யுத்தத்தை ஆரம்பிப்பார்கள்.

பிரித்தானியாவின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரதமராக இருந்த போது தன்னுடைய பார்டிகேற்றை மறைக்க உக்ரைன் போருக்கு ஆயதங்களை வாரி வழங்கினார். உக்ரைனுக்கு ஆயதம் விற்று லாபமடைந்த ஜோ பைடன் குடும்பம் உக்ரைன் போரில் உரிந்துபோட்டு ஆடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இப்போது மோசடி, லஞ்சம், ஊழலுக்கு பெயர் போன இஸ்ரேலிய பிரதமருக்கு இஸ்ரேலிலேயே பல வழக்குகள் உள்ளது. இதில் இருந்து தப்பிக்கொள்ளவே அவர் ஹமாஸைச் சீண்டிவிட்டு இந்த யுத்தத்தில் ஆடாத ஆட்டம் ஆடுகின்றார்.

இதனாலேயே தற்போது உலகம் முழவதும் அமெரிக்கா – பிரித்தானிய நேச நாடுகளுக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்துள்ளது. உலகம் முழவதும் இந்நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கு முன் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், இவற்றுக்கான மூலகாரணமாக இஸ்ரேலிய ஒடுக்குமுறை பாலஸ்தினிய பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது நடைபெறாவிட்டால் ஹமாஸ் அழிக்கப்பட்டாலும் அதனிலும் மோசமான அமைப்பொன்று இன்னும் சில ஆண்டுகளில் உருவாகும். இஸ்ரேலின் அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புகளும் ஹமாஸிலும் பார்க்க பல மடங்கு தீவிரமான தீவிரவாதிகளை உருவாக்கும். உலக அமைதி கேள்விக்குறியாகவே இருக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *