இரா ணுவம் தொடர்ந்து முன்னேறுவதை தடுத்து நிறுத்துங்கள் என என்னால் விடப்பட்ட கோரிக்கைகளுக்கு நீங்கள் செவிசாய்க்காமை எனக்கு மிகுந்த மனவருத்தமளிக்கிறது. யுத்தம் கடைசிக் கட்டத்தை அடைந்துள்ள இவ்வேளை விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பாவிப்பதற்காக சூனியப் பிரதேசத்துக்குள் மக்களுடன் கலந்திருப்பதாலும் பாதிப்புக்குள்ளான அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சூனியப் பிரதேசமாகிய புதுமாத்தளன் பகுதியில் வாழும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிர் ஊசலாடுகிறது. யுத்த விதிகளுக்கமைய புலிகள் நடப்பார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அரச படைகளால் அது முடியும்.
தமது பல தோழர்களை பலிகொடுத்து மிகச் சிரமப்பட்டு மிகக் குறைந்த மக்களின் பாதிப்போடு நற்பெயரை சம்பாதித்ததோடு இந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் சொற்ப நாட்களில் அந்த நற்பெயரை இழக்கக்கூடிய சுழ்நிலை காணப்படுகிறது. மிகமிக இக்கட்டான நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டு போகிற இவ் வேளையில் தங்களின் தாமதமற்ற தலையீடு அவசியமாகிறது. ஒரு நாள் இன்று நடப்பனவற்றை உலகம் அறியும்வேளை முழு உலகும் அரசையும் மக்களையும் குற்றம் சுமத்தும்; இவ் ஆலோசனைகளை நான் தனிப்பட்ட இலாபம் கருதி கூறவில்லை என்பதை நம்புங்கள். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கடிதம் இங்கு முழுமையாகத் தரப்படுகிறது.
பல நம்பிக்கையான வட்டாரங்கள் மூலம் கிடைத்த செய்திகளின் படி ஏப்ரல் மாதம் 8ம் திகதி மட்டும் 296 பேர் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 47 பேர் குழந்தைகள் உட்பட இறந்துள்ளனர். இந்த யுத்தத்தில் ஒரேநாளில் இறந்தோரின் மிகக் கூடிய தொகை இதுவாகும். மறுநாள் காயமுற்றோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது இறந்தவர்கள் 30 இற்கு மேற்பட்டவர்கள். ஆனால் அன்று போயா தினமாகும். வைத்தியசாலைக்கு வராமலேயே பலர் வெளியில் இறந்துள்ளதாக அறியப்படுகிறது. அவற்றிற்கு எதுவித ஆவணங்களும் கிடையாது. இந்த மக்கள் யாருடைய தாக்குதலுக்கு இலக்காகி பலியானார்கள் என சர்வதேச சமூகம் கேட்காது. ஆனால் அரசையே குற்றவாளியாக்கும் சர்வதேச சமூக அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தாம் விரும்புவது போல் கண்டிப்பது எதிர்பார்த்ததற்கு மாறான பலனையே தரும் மனிதாபிமான அடிப்படையிலும் நாட்டின் நற்பெயரையும் காப்பாற்ற வேண்டுமானால் நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை பின்வருவனவாகும் என நான் கருதுகிறேன்.
1. உடனடியாக ஷெல் தாக்குதலை அரச படைகள் நிறுத்த வேண்டும்.
2.விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அல்லாது அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒரு இடத்தை யுத்தத்திற்குள் அடங்காத பகுதியாக பிரகடனப்படுத்தி மக்களை அங்கே வர வைக்க வேண்டும்.
3.ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்தினதே. ஆகவே நான் உங்களை வேண்டுவது ஐக்கிய நாடுகள் சபையில் உதவிகளை பெற்றோ அல்லது நட்பு நாட்டின் அல்லது நாடுகளின் உதவியை நாடலாம். அமெரிக்காவும், இந்தியாவும் அத்தகைய உதவியளிக்க முன் வந்ததாக அறிகிறோம். அது உண்மையாயின் அவர்களின் உதவியினூடாக மக்களை மீட்டெடுக்கலாம். ஒரு தனி உயிரை காப்பாற்ற பல நாடுகள் பெரும் தொகை பணத்தை செலவழித்துள்ளன.
4. அங்கே மக்கள் பட்டினி சாவை எதிர் நோக்குகின்றனர் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அம் மக்களுக்கு போதிய உணவை அனுப்பி வையுங்கள. தாய்மார் பிள்ளைகளுக்கு பாலூட்ட சக்தியற்றவர்களாக தேநீர் பருக கொடுக்கின்றனர். பிள்ளைகளுக்கு வேண்டிய பால்மா ஆகாயமார்க்கமாக அனுப்பி வைக்கவும்
5. உடனடியாக ஐக்கிய நாடுகள் குழு ஒன்றை அனுப்பி அங்குள்ள மக்களின் எண்ணிக்கை தேவைகளை கண்டறிய வையுங்கள்.