தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறைக்கு இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் (20) தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி நாகப்பட்டினம் – இலங்கை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் இடை நிறுத்தப்படுவதுடன் மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவையின் தொடக்க நிகழ்வினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஊடாக ஆரம்பித்து வைத்தார்.
நாகை துறைமுகத்திலிருந்து 50 பயணிகளுடன் இலங்கை வந்தடைந்த பயணிகள் கப்பலின் பயண கட்டணம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து இந்திய ரூபாய் மதிப்பில் 7,670 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு ஒரு நாள் கட்டணமாக இலங்கை செல்லும் பயணிகளுக்கான பயண கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் 3,000 ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதியன்று நாகையிலிருந்து- காங்கேசன்துறைக்கு பயணிப்பதற்காக ஏழு பேர் மாத்திரமே முன்பதிவு செய்திருந்தனர். இதனையடுத்தே நாளை மறுதினம் (20) வெள்ளிக்கிழமை முதல் நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதாகவும் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழமைக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.