பலஸ்தீன மக்களுடான தமது ஆதரவை வெளிப்படுத்தியும், காஸாவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் நேற்றைய தினம் புதன்கிழமை (18) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டு தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
ஹமாஸ் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் – ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த சில தினங்களாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட பெருமளவானோர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்துவரும் நிலையில், அந்நாடுகளில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி அந்த அரசாங்கங்களுக்கு எதிராகவும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் பலஸ்தீன மக்கள் மீதான இலங்கையர்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கிலான ‘ஒருமைப்பாட்டு’ போராட்டமொன்று உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்பினால் நேற்று புதன்கிழமை பி.ப 3.00 மணிக்கு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கிய அமைதிப்பேரணியாகவே இப்போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் பலஸ்தீன மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தி போராட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கில் பி.ப 3.00 மணியளவில் பெருமளவானோர் விஜேராம மாவத்தையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தை வந்தடைந்த அதேவேளையில் அப்பகுதியில் பஸ் மற்றும் ஜீப் வண்டிகளில் பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் இன, மதபேதமின்றி அங்கு குழுமியிருந்த மக்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், ‘காஸாவில் துன்பப்படும் எமது மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தி இங்கு ஒன்றிணைந்திருக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் எனது மனமுவந்த நன்றியைக் கூறுகின்றேன். பலஸ்தீன மக்களுக்கான உங்களது ஆதரவுக்கு நன்றி. நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்’ என்று மிகவும் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து அடைமழைக்கு மத்தியில் பலஸ்தீன கொடிகளையும், ‘நாங்கள் பலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம்’, ‘நாங்கள் பலஸ்தீனத்துடன் இருக்கிறோம்’, ‘கொலைகளை நிறுத்துங்கள்’, ‘பலஸ்தீன கேள்விக்கான அடிப்படைக்குத் தீர்வை வழங்குங்கள்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு அங்கிருந்து அனைவரும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் அவர்களைத் தடுத்தனர். இவ்வாறு கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறும், பேரணியாகவும் செல்லமுடியாது என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தினர்.
அதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் தமது சொந்த வாகனங்களிலும், பேரணியாகவன்றி சில குழுக்களாகவும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை சென்றடைந்து, அங்கு கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது ‘பலஸ்தீனம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை உடன் நடைமுறைப்படுத்துங்கள். சுதந்திரமானதும், இறையாண்மை உடையதுமான பலஸ்தீனத்தை உருவாக்குங்கள்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதையை அவர்கள் ஏந்தியிருந்தனர். அதன் பின்னர் பலஸ்தீன மக்களுடனான தமது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும், காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் அலுவலகப் பிரதிநிதியிடம் மகஜரொன்றைக் கையளித்ததுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.