தனக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக பதவி விலகுவதாக தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதில் ‘உயிரச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தான் பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகளுக்கு மனஅழுத்தம் இருப்பது வழமை ,மன அழுத்தத்தால் பதவி விலகுவதாக இருந்தால் இலங்கையிலுள்ள சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும்.
நீதிபதிகளுக்கு மாத்திரமல்ல சட்டத்தரணிகளுக்கும் மன அழுத்தம் உள்ளது.நாடாளுமன்றம் வரும் எமக்கும் மன அழுத்தம் உள்ளது.சபாபீடத்தில் அமர்ந்துள்ள சபாநாயகருக்கும் மன அழுத்தம் உள்ளது.அவ்வாறானால் அவரும் பதவி விலக நேரிடும். தனக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள போதும் அது எந்தவகையான, யாரால் விடுக்கப்பட்டது என்பது தொடர்பிலோ ,தனக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகையான மன அழுத்தம் என்பது தொடர்பிலோ எதுவுமே குறிப்பிடவில்லை.
தனக்கு உயிரச்சுறுத்தல் இருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.உயிரச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க முடியும். ,காவல்துறை மா அதிபருக்கு அறிவிக்க முடியும்..அந்த அதிகாரம் எமக்கு கூட இல்லை.ஆனால் அவர் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.