சித்திரைப் புத்தாண்டையொட்டி அரசாங்கம் அறிவித்த தாக்குதல் நிறுத்த அறிவிப்பையடுத்து, களமுனைகளில் பெரிய அளவில் தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. ஆயினும் பாதுகாப்பு வலயத்தினுள்ளே இருந்து விடுதலைப்புலிகள் இன்று காலை 9 மணியளவில் நடத்திய ஸ்னைப்பர் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நடத்திய எறிகணை தாக்குதலில் மற்றுமொரு இராணுவச்சிப்பாய் காயமடைந்ததாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயத்தினுள்ளே சிக்கியுள்ள பொதுமக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்குள் வருவதற்கு வசதியாக சித்திரைப் புத்தாண்டு பண்டிகை தினங்களாகிய இன்றும் நாளையும் (13, 14 ஆம் திகதிகள்) விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்திருந்தமை தெரிந்ததே.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த தாக்குதல் நிறுத்தத்தை ஐநா சபை அதிகாரிகள் முன்னோடியான நடவடிக்கை என குறிப்பிட்டு வரவேற்றுள்ளார்கள். இந்தப் போர்நிறுத்தத்தின் மூலம் மோதல்கள் நடைபெறுகின்ற பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் சென்றடையக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். எனினும் அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் குறித்து விடுதுலைப்புலிகள் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.
தமிழ் சிங்கள புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் தாங்கள் தடுத்து வைத்துள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறவிட வேண்டும் என கேட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தப் புத்தாண்டுப் பண்டிகை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் தமது வன்முறைகளைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே வைத்து படையினரிடம் சரணடைய வேண்டும் என்றும் பண்டிகைக்கால செய்தியில் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.