காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுவிட்டது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில்,
“தங்கள் நாட்டில் உள்ள எங்களின் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேற்றப்படாத அதிகாரிகளின் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் ஒருதலைபட்சமாக இந்தியா கூறியிருந்தது. இந்த முடிவு உரிய காரணம் இல்லாதது, முன்னெப்போதும் நிகழ்ந்திராதது, தூதரக அதிகார உறவுகள் குறித்த வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தூதரக அதிகார விவகாரங்களின் விதிகளை உடைக்க நாம் அனுமதித்தால், இந்த கிரகத்தில் எந்த ஓர் இடத்திலும் எந்த தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்த காரணத்துக்காக நாங்கள் இந்தியாவுக்கு எந்த பதிலடியும் கொடுக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடனாவின் 41 தூதரக அதிகாரிகளும், 42 உதவியாளர்களும் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் அனைவருமே திரும்ப பெறப்பட்டுள்ளனர்.