“2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்நேற்று(16) நடைபெற்ற, டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபகரும் தலைசிறந்த கல்வியலாளருமான மறைந்த ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இதன்போது ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு “மாகே மங்பெத” என்ற சுயசரிதை நூலும் வெளியிடப்பட்டது.

 

இந்நாட்டின் கல்வித் திட்டத்தை மறுசீரமைப்புக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, “அனைவருக்கும் கல்வி” என்பதே ஆர்.ஐ.டி அலஸின் நோக்கமாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

 

பணம் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு பிள்ளைக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்நாட்டு பிள்ளைகளின் உயர் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய பல்கலைக்கழங்களை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதற்கு பங்களிப்பு வழங்கும் தனியார் துறையினருக்கு குறைவின்றி ஆதரவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் உறுதியளித்தார்.

 

நாட்டின் மீது அக்கறை இருக்குமாயின் இந்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்காக புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழ், சிங்கள இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

 

பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதே அனைத்து பெற்றோரின் எதிர்பார்ப்பாகும். கல்வியை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் ஜப்பான், சீனா, அரபு, கொரிய மொழிகளையும் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.

 

2030 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டமும் தயாரிக்கப்படும்.

 

இந்நாட்டின் உயர்கல்வி தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இந்நாட்டின் இலவசக் கல்வி இருப்பதாக கூறினாலும் பெருமளவானோர் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் இந்நாட்டு பிள்ளைகள் உயர்கல்வி பயில்கிறார்கள். அந்த நாடுகளில் காணப்படும் கல்வி முறைமைகளை நமது நாட்டிலும் செயற்படுத்துவோம்.

பல்கலைக்கழங்களுக்கு செலுத்த அவசியமான பணத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்குவதே இலவச உயர்கல்வியாகும் என பலரும் கூறுகிறார்கள். இருப்பினும் மற்றைய நாடுகளில் அந்த முறையில் உயர்கல்வி வழங்கப்படுவதில்லை.

 

கல்விச் செயற்பாடுகளை தொடர மாணவர்களுக்கு சலுகை கடன் வழங்கப்படுகிறது. அதனால் விரும்பிய பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மாணவருக்கு கிடைக்கிறது. எமது நாட்டில் அந்தத் தெரிவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே செய்கிறது. அதனால் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதேபோல் பணம் இல்லாதன் காரணத்தால் எந்தவொரு மாணவருக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடாது.

 

இந்நாட்டில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தற்போதுள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு அவசியமான வசதிகளை வழங்கி அதன் பலன்களை 05 வருடங்களில் அடைய வேண்டும். அதன் போது மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும். அதேபோல் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு இணையான 03 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கிறோம்.

 

அதேபோல் அரச சார்பற்ற நிறுவனங்களை ஆரம்பிக்கவும் நாம் அனுமதி வழங்குவோம். தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில மாணவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படும். எனவே காணிகளை விற்பனை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நாட்டின் பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் வெளிநாட்டு மாணவர்களின் வருகையும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *