காஸாவில் நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேல் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதனையடுத்து, காஸா மீதான தாக்குதல்களை நான்கு நாட்களுக்கு இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு 10 பணயக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில், போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஹமாஸ் அமைப்பினர் விரைவில் பணயக்கைதிகளை விடுவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் படையினர் கடத்திச்சென்ற பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையை கத்தார் தலைமையில் இஸ்ரேல் மேற்கொண்டது.
ஒரு வார கால தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக கத்தாரின் வௌியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி (Majed al-Ansari) குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பும் ஒப்பந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதில் கத்தார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மஜீத் அல்-அன்சாரி கூறியுள்ளார்.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட கால போர் நிறுத்தத்திற்கான முதற்படி என குறிப்பிட்டுள்ள அவர், பல தசாப்தங்களாக நீடித்து வரும் மோதலை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான விரிவான அரசியல் செயன்முறையாக இது மாறும் எனவும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பணயக்கைதிகளை விடுவிக்க தற்காலிக போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் ஹமாஸூக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நாங்கள் போரில் இருக்கிறோம். எங்கள் எல்லா இலக்குகளையும் அடையும் வரை போரைத் தொடருவோம் என அவர் கூறியுள்ளார்.