காணாமல் போனார் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து விசாரணைகளும் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும்.” – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ 

காணாமல் போனார் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 4795 முறைப்பாடுகள் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முறைப்பாடுகள் தொடர்பான சகல விசாரணைகளையும் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்து உறுதியான தீர்மானத்தை எடுத்த எதிர்பார்த்துள்ளோம் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் நீதிக் கட்டமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒருசில விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் முதற்கட்ட நிதி கிடைக்கப்பெற்றது. ஜி.எஸ்.பி. வரிச்சலுகையினை பெற்றுக்கொள்வதற்கும் கடந்த காலங்களில் நீதிக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நீதியமைச்சின் கீழ் 21 நிறுவனங்கள் உள்ளன. நீதிமன்ற கட்டமைப்பில் உயர் நீதிமன்றம் முதல் தொழில் நீதிமன்றம் வரையிலான நீதிமன்ற நடவடிக்கைகளில் 11,4458 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றத்தில் 17 நீதியரசர்கள் உள்ளார்கள். ஒரு நீதியரசருக்கு 334 வழக்குகள் என்ற அடிப்படையில் வழக்கு விசாரணைகள் வழங்கப்படுகின்றன. அதே போல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 20 நீதியரசர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவருக்கு 202 என்ற வழக்குகள் என்ற அடிப்படையில் வழக்குகள் வழங்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் பெருமளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்கு மத்தியில் தான்  நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமை கவலைக்குரியது. இந்த வழக்குகளில் 1167 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருசில பொலிஸாரின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பொலிஸ் சேவை மீதும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் 10491 போதைப்பொருள் மாதிரிகள் நீதிமன்றங்களின் அனுமதியுடன் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளில் 1471 மாதிரிகள் போதைப்பொருள் அல்ல என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை முற்றிலும் பாரதூரமானது.

வெல்லம்பிட்டி, கடுவலை, மருதானை, பேலியகொட, முகத்துவாரம் ஆகிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக  சமர்ப்பிக்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் மாதிரிகள் போதைப்பொருட்கள் அல்ல என்று பகுப்பாய்வின் போது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே போதைப்பொருள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். 07 வெளிநாட்டு பிரஜைகள் மரண தண்டனை கைதிகளாக உள்ளனர்.

சிறைச்சாலைகளில் 346 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். அத்துடன் சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10784 கைதிகளில் 61.3 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள்.

புனர்வாழ்பளித்தல் தொடர்பான சட்டம் அண்மையில் இயற்றப்பட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 520 பேரும், சேனபுர மத்திய நிலையத்தில் 471 பேரும், வவுனியா மத்திய நிலையத்தில் 93 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தற்போது வினைத்திறனாக்கப்பட்டுள்ளன. அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 62 முறைப்பாடுகள் தொடர்பில் மாத்திரமே கடந்த காலங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் புதிய நிர்வாக கட்டமைப்புடன் 4795 முறைப்பாடுகள் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து ஒரு தீர்மானத்தை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *