அரச வங்கியில் பெற்ற 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தாத வர்த்தகர்கள் !

இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தத் தவறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

அரசியல் பாதுகாப்பு பெறும் அந்த பத்து வாடிக்கையாளர்களை நாட்டிற்கு வெளிப்படுத்த பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் நேற்று (02) நடைபெற்ற மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்,

“இந்த வங்கிகள் நாட்டின் மறுமுனையில் உள்ள விவசாயிகள் முதல் கொழும்பில் உள்ள பெரிய வியாபாரிகள் வரை கடன் கொடுத்துள்ளன. கடனை செலுத்துவது கடன் வாங்கியவரின் பொறுப்பு.

ஆனால் சிறப்பாக வர்த்தகம் செய்து அரசியல் பாதுகாப்பு பெற்று 10 பேர் தாம் ஈட்டிய பணத்தை வெளிநாடுகளில் வைப்பு செய்து இந்த இரண்டு வங்கிகளையும் புறக்கணித்து வருகின்றனர். இந்த வங்கிகளில் இலங்கை வங்கிக்கு மட்டும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை 50 பில்லியன் என்பதோடு, மக்கள் வங்கிக்கு 30 பில்லியன் கடன் செலுத்த வேண்டும்.  வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை கொண்டு வரும் பெருமக்களே இந்த  பணத்தை வசூலியுங்கள். இது மக்களின் பணம். முடிந்தால் அந்த 10 பேரின் பெயர்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துங்கள். இல்லையென்றால் இந்த நாட்டின், பொது நலனுக்காக நாம் அதனை வெளிப்படுத்துவோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்”என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *