ஜப்பானில் கட்டுமானத்துறையில் இலங்கையருக்கு புதிதாக கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் !

ஜப்பானில் கட்டுமானத்துறையில், இலங்கையருக்கு புதிதாக கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இதற்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்ச்சித் திறன் தேர்வு (01) ஆரம்பமாகவுள்ளது.

M4 பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்துகொள்ள முடியும் . இந்த தேர்வு நான்கு மத்திய நிலையங்களில் இடம்பெறுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இதற்கமைவாக , கடந்த வருடம் முதல் நடைமுறையில் உள்ள பராமரிப்பு சேவை தொழில், உணவு பதப்படுத்துதல் . விவசாயம் ஆகிய நான்கு துறைகளுக்கான தேர்ச்சித் திறன் தேர்வு தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் பணியாற்றவிருக்கும் தொழிலாளர்களுக்கான குறிப்பிட்ட தேர்ச்சித் திறன் பரீட்சையை இன்று முதல் அறிமுகப்படுத்துவது தொடர்பாக தெளிவுபடுத்தும்,  ஊடகவியலாளர் மகாநாடு (01) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவர் (H. E. Mr. MIZUKOSHI Hideaki), JICA ஒத்துழைப்பு அமைப்பின் இலங்கைக்கான பிரிதி நிதி Mr. YAMADA Tetsuya, (Chief Representative of JICA Sri Lanka Office) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் திரு.ஏ.ஏ.ஹில்மி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்

கட்டுமானத்துறைக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக இன்று ஆரம்பமாகும் நேர்முகத்தேர்வுக்கு தகுதியானவர்கள் தோற்ற முடியும். தெரிவுசெய்யப்படுவோர் விசேட ஊழியர்களாக SSW பிரிவின் கீழ் ஜப்பானுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

ஜப்பானில் கட்டுமானத்துறையில் தற்போது பணிபுரிவோரில் பெரும்பாலானவர்கள்  இன்னும் பத்துவருடங்களில் ஓய்வுபெறவுள்ளனர். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு. அந்த நாட்டின் பல துறை தொழில்வாய்ப்புகளை இலக்காக்கொண்டு தற்போது பாடசாலை கல்வியில் ஜப்பான் மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இதன் அடிப்படையில் மாணவர்களை பயிற்றுவிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக JICA அமைப்பின் உதவியுடன் ஆசிரியர்களுக்கான ஜப்பான் மொழித் தேர்வுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜப்பானில் தற்போதுள்ள தொழில் வாய்ப்புக்களை கவனத்தில் கொள்ளும்போது,  ஜப்பான் நமக்கு இதில் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், அதிக சம்பளம் பெறும் திறன் கொண்ட SSW பிரிவின் கீழ் பராமரிப்பு சேவை , விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகளுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் இதுவரை எமக்கு இருந்தன. இதன் காரணமாக, அந்த துறைகளுக்கு மேலதிகமாக , கட்டுமானம், சுத்தம் செய்தல் மற்றும் ஆட்டோமொபைல் Automobile துறைகளிலும் எமக்கு புதிதாக தொழில் வாய்ப்புக்களை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவெனில் , பயிற்சியாளர்களைக்கொண்ட குழுவை நாம் அனுப்புகின்றோம். இதன் மூலம் அங்கு SSW பிரிவின் கீழ் அவர்கள் பணிபுரியும் துறையில் ஜப்பானிய தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் பெறும் வாய்ப்பு உண்டு.

இதேவேளை , ஜப்பானிய மொழி பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவது போன்று, வெளி நிறுவனத்தில் இருந்து ஜப்பானிய மொழியைக் கற்று வெளிநாடுகளுக்குச் செல்லும் பட்சத்தில் பணத்தை திருப்பிச் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஜப்பானிய மொழி கற்றலை மேலும் வலுப்படுத்த முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்குகிறது.

வரலாற்றில் இருந்தே இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் நெருக்கமான நல்லுறவு நிலவிவருவதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஜப்பான் எமக்கு பக்கபலமாக இருந்துவருவதாக குறிப்பிட்ட அமைச்சர், நமது நாடு வங்குரோத்து நிலைக்கு உள்ளான போது ஜப்பான் முன்வந்து உதவியது. பல துறைகளில் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பில் உதவுவதற்கு முன்வந்துள்ள ஜப்பான் சர்வதேச நாணயத்தின் நாட்டுக்கான கடன் உதவிக்கும் ஒத்துழைப்பை வழங்கிவருகிறது. இதற்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

“SSW திட்டத்தின் கீழ் ஜப்பானில் ஒழுக்கமான வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான பணிச் சூழல்” தொடர்பாக JICA ஒத்துழைப்பு அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி (YAMADA Tetsuya, Chief Representative of JICA Sri Lanka Office) இதன்போது விளக்கமளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *