வடக்கு கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்கள் மீதான விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பது மிக முக்கியமானது வடக்கு கிழக்கில் போதைக்கு அடிமையாதல் என்பது, மிகப் பெரும் பிரச்சனையாக உருவாகிவருகின்றது.
ஏனென்றால் – சிறிலங்கா அரசானது இன்னும் ஆயுதக் கிளர்ச்சியை தோற்கடிக்கும் மனோநிலையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் முப்படைகள் ஊடாகவே இந்த போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரது முழு ஒத்துழைப்புடனேயே இவை நடைபெறுகின்றன. இராணுவம் தான் நோரடியாகவே அந்த செயற்பாட்டை செய்துவருகின்றது. இப்படியான ஒரு சூழலில் வடக்கு கிழக்கில் மிகப்பெரும் அளவிலான இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாக்கப்பட்டு மோசமான நிலமைக்கு தள்ளப்படுகின்றார்கள்.
எனவே பாடசாலைகளில் உளவள செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும். பாதிக்கப்படுபவர்களை ஏதோ ஒரு வழியில் அதிலிருந்து மீட்க வேண்டுமாயின் இத்தகைய உளவள செயற்பாடுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்குரிய மனோநிலையை உருவாக்கி, அவர்களை நற்பிரஜைகளாக்குவதை விடுத்து, மாறாக அவர்களை குற்றவாளிகளாக்கி சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கும் நிலைமையையே உருவாக்கியிருக்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.