பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் -மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

 

அத்துடன், குறித்த சட்டத்தை நீக்கும் வரையில், அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்தமைக்காக 9 தமிழர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்டகாலமாக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளது.

 

எனினும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் இது ஓரங்கட்டுவதாக அமைந்துள்ளதென என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘நல்லிணக்கம்’ பற்றி கருத்துரைக்கின்ற போதிலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *