லண்டனில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் ஈழப் போராட்டமும் – கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும்!

நாளை டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் எனும் தலைப்பிலான கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் தேசம் ஊடகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஐநா செயலாளார் நாயகம் அன்ரனியோ பூட்ரஸ் அவர்களின் ‘யுத்த நிறுத்தம்’ வேண்டும் என்ற அவசர தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது. பிரித்தானியா வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தது. அமெரிக்கா பிரித்தானியா மற்றும் அவற்றின் நேசநாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு முழுமையான ஆதரவை மீண்டும் வழங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் தன்னை ‘Genocide Joe’ என்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சர்வதேசப் பின்னணியிலேயே இக்கருத்துப் பகிர்வு நடைபெறுகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 தொடக்கம் இரவு 7மணி வரை 10th village way, Rayners Lane, Pinner இல் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், முரண்பட்ட அரசியல் பின்புலத்திலிருந்து தங்கள் அனுபவங்களை வளவாளர்கள் பகிரவுள்ளனர்.

நிகழ்வுக்கு தேசம் எழுத்தாளர் த. ஜெயபாலன் தலைமைதாங்கவுள்ளார். ஒடுக்குமுறைகளும் மக்கள் எழுச்சிகளும் எனும் தலைப்பில் எழுத்தாளரும் Committee for Workers International கட்சியின் International Secretariat ட்டருமான சேனன் உரை நிகழ்த்தவுள்ளார்.

யூடாயிசம் – சியோனிசம் – சர்வதேசம் எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் சட்ட வல்லுனருமான சையத் பஷீர் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஹொலக்கோஸ்ட் முதல் காசா வரை : ஜேர்மனியின் அரசியல் போக்கு எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் கங்கா ஜெயபாலன் உரை நிகழ்த்தவுள்ளார்.

பாலஸ்தீன – ஈழ மக்களின் எதிர்காலமும் சர்வதேசத்தின் அணுகுமுறைகளும் எனும் தலைப்பில் Asatic.org இன் Academic Secretriatரும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினருமான ரவி சுந்தரலிங்கம் உரை நிகழ்த்தவுள்ளார்.

வளவாளர்களின் உரைகளைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் இடம்பெறும். தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கும் நெருக்கமான உறவுகள் காணப்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சிகளை அழித்தது. அவ்வாறு பயிற்சி பெற்ற பலர் இன்னமும் எம்மத்தியில் வாழ்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெறுவது இதுவே முதற்தடவை. அந்த வகையில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கெடுத்து ஆக்கபூர்வமாக கருத்துப் பகிர்வில் ஈடுபடுமாறு ஆர்வலர்கள் அனைவருக்கும் தேசம் அழைப்புவிடுத்துள்ளது.

தமிழ் மக்களும் ஒரு நீண்ட போராட்டத்துக்கூடாக வாழ்ந்துவரும் ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் மேற்குநாடுகள் அனைத்தும் இஸ்ரேல் உடன் ஒன்றிணைந்து பாலத்தீனமக்களை கொண்றொழிக்கும் இந்த இனப்படுகொலையைக் கண்டிப்பது ஒவ்வொரு மனிதாபிமான மிக்க மனிதனதும் கடமையும் பொறுப்பும். இவ்வாறான இனப்படுகொலைகளை கண்டிக்கத் தவறுவது இவ்வாறான படுகொலைகள் தொடருவதற்கும் மோசமடைவதற்கும் வழிவகுக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *