பல கோடி கடன் பெற்றவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுகிறது – சஜித் பிரேமதாச விசனம் !

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்று , கடனை செலுத்தாத 150 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுதல் எந்தளவுக்கு நியாயமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் உள்ள  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை தோற்கடித்துள்ளோம். வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை  சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.

வற் வரி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அதிக அக்கறை கொண்ட அரசாங்கம்  வரி தொடர்பான தகவல்களை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை. 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலையும் சமர்ப்பிக்கவில்லை.

வற் வரி அதிகரிப்பதை காட்டிலும் அதனை செயற்படுத்துவதற்கு ஏதுவாக அமைய காரணிகள் தொடர்பில் ஆராய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் குறுகிய காலத்துக்குள் 600 பில்லியன் ரூபா முதல் 700 பில்லியன் ரூபா வரையிலான வரி வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது.

வரி வருமானம் இழப்பை தொடர்ந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு நாளாந்தம் வெளியேறுகிறார்கள். பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டு மக்கள் மீது சுமையையும் அரசாங்கம் திணித்துள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, பொருளாதார படுகொலையாளிகள் என்று  உயர்நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால்,டப்ள்யூ.டி லக்ஷமன்.எஸ்.ஆர்.ஆட்டிகல,பி.பி.ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களின் குடியுரிமையை பறித்து,அவர்கள் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்ற 150 பேரின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு  நிதியமைச்சரிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதுவரை அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களை அடக்கம் செய்வதற்கும் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *