“விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்.” – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கி வருகிறது. தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பாக, இந்த வழக்கில் 3 விதமான தீர்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தீர்ப்பை வாசித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே. சட்டப்பிரிவு 1 மற்றும் 370ன் படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சட்டப்பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது ஒரு இடைக்கால ஏற்பாடு. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு இந்திய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அது தனித்த இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை.

ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கவே சட்டப்பிரிவு 370 இருந்தது. இந்தியாவில் இருந்து அதனை பிரிப்பதற்காக அல்ல. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. இதற்காக அவர் சட்டப்பிரிவு 370(3)ஐ பயன்படுத்தியதில் தவறு இல்லை. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது செல்லுபடியாகும். சட்டப்பிரிவு 370(1)(d)-ன்படி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு காஷ்மீருக்குப் பயன்படுத்தலாம். ஜம்மு காஷ்மீர்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை.

ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. மாநிலம் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யக் கோர முடியாது. இதில் தலையிடுவது, குழப்பத்தையும் நிச்சயமற்ற நிலையையுமே ஏற்படுத்தும். மேலும், நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும். அந்த வகையில், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கையின்படி, விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்.

முன்னதாக தீர்ப்பு வெளியாவதை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் தாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் இதனை அரசுத் தரப்பு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *