சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட இரண்டாம் தவணை கடன்தொகையை இலங்கைக்கு வழங்க நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது எனவும், வங்குரோத்து நிலை என்பதில் இருந்து நீங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் தற்போது வீரவசனம் பேசுபவர்கள் எவரும் கடந்த ஆண்டு நாட்டை பொறுப்பேற்கவில்லை.
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். உண்மையை மக்கள் அறிவார்கள். தாய் நாட்டை பாதுகாத்துள்ளேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
பொருளாதார மீட்சிக்காக தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மறுசீரமைத்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் எவரும் ஒத்துழைப்பு வழங்க முன் வரமாட்டார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
20,000 ரூபா சம்பளம் கோரி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். இது கவலைக்குரியது.நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு தரப்பினருக்கு சம்பளத்தை அதிகரித்தால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.