பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் தற்போது கைது செய்யப்படும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக முன்னிலையாவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வழக்குகளுக்கு முன்னிலையாவதன் மூலம் குறித்த சட்டத்தரணிகள் மில்லியன் கணக்கில் சம்பாதிப்பதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
காவல்துறையினரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 2 ஆயிரத்து 121 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டங்கள் காரணமாக போதைப்பொருள் தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்த முடியாதிருந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை, இலங்கையில் போதைப்பொருள் பாவனையை அதிகரித்ததுடன், விநியோகத்தையும் பாரியளவில் அதிகரித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைக்கு தற்போது பல சட்டத்தரணிகள் முன்னிலையாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை குறித்த தரப்பினர் எதிர்த்திருந்தாக டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் மக்களுக்காக குரல் கொடுப்பதாக தெரிவிக்கும் சட்டத்தரணிகளே, இவ்வாறாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.