வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஒப்பந்தமான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (21) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசியல் தீர்வற்ற வெறும் நல்லிணக்கக் கொடியைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர்கள் எனவும், நாம் தொடர்ந்தும் ஏமாறத் தயாரில்லை என்றும் இரா.சம்பந்தன், ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கடும் தொனியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்காவிடின் இந்த நாட்டுக்கு எதிராகச் சர்வதேச சமூகத்தை நாங்கள் நாடுவோம். எனவே, அந்த நிலைமைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத் தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.