போதைப்பொருள் சுற்றி வளைப்பில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் கைது செய்யப்படவில்லை – வேடிக்கையாகவுள்ளது என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் !

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் போதைப்பொருள் இடைத்தரகர்களையும் இலக்கு வைத்து பொலிஸார் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

 

தற்போது முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மீதான போர், வேடிக்கையான விடயமாக தோற்றமளிப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

கடந்த 5 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 10,000-இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் 7.7 கிலோகிராம் ஹெரோயின், 3.8 கிலோகிராம் ஐஸ், 225.7 கிலோகிராம் மற்றும் 44,267 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டதாகவும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

சமூகத்தில் புழக்கத்தில் காணப்படும் போதைப்பொருட்களின் அளவு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கைகளின் அடிப்படையில் செலவழித்த நேரம் மற்றும் பயன்படுத்திய வளங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் அளவு மிகக் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனூடாக பொலிஸார் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் போதைப்பொருள் இடைத்தரகர்களையும் இலக்கு வைத்தே சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதைக் காட்டுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

இவர்கள் நடுத்தர மற்றும் உயர் மட்டத்தில் உள்ளவர்களை இலக்கு வைத்து சோதனை நடவடிக்கைளை முன்னெடுப்பார்களாயின் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கும் என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

முக்கிய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை திரட்ட கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் பொலிஸாரால் கூற முடியாது எனவும் இந்த தொடர்பிலான போர் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்ததிலிருந்து இவர்களிடம் தகவல் இருந்திருக்க வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *