2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆபிரிக்காவில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. மே 24 ந்தேதி வரை 37 நாட்கள் நடக்கிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
18 ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 22 ந்தேதி முதல் அரை இறுதியும், 23 ந்தேதி 2 வது அரை இறுதியும், இறுதிப்போட்டி மே 24 ந்தேதியும் நடைபெறும்.
கேப்டவுடன், போர்ட் எலிசபெத், டர்பன், பிரிடோரியா, சிம்பொலி, ஜோகன்ஸ்பர்க், செஞ்சூரியன், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும். கடந்த ஆண்டு வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பையை வென்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வது இடத்தை பிடித்தது. ஷேவாக்கின் டெல்லிடேர் டெவிலஸ் அணியும், யுவராஜ் சிங்கின் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் அரை இறுதியில் தோற்றன.
கடந்த முறை ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தேர்தலையொட்டி பாதுகாப்பு கொடுக்க இயலாததால் இந்தப் போட்டி தென்ஆபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் ஐ.பி.எல். போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற வாய்ப்பு இருக்கிறது. சோனி செட்மேக்ஸ் டெலிவிஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய நேரடிப்படி மாலை 4 மணிக்கும், இரவு 8 மணிக்கும் ஆட்டங்கள் தொடங்குகிறது.