முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் எனவும் அதன் கீழ் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நேற்று (06) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பில் இளைஞர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
சுகாதாரத்துறை, கல்வித்துறை சார்ந்த இளைஞர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 300 பேர் இதில் கலந்துகொண்டதுடன், அவர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில்களை வழங்கினார்.
மேலும், இதன்போது வட மாகாணத்தை தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரச அதிகாரிகள் மற்றும் இளைஞர்களும் தங்களின் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகள், பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவது தொடர்பிலான பரிந்துரையொன்றும் இதன்போது யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ். மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் உள்ளிட்டவர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா, முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் மற்றும் கல்விசார் ஊழியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் பின்னர், யாழ்ப்பாணம் ரியோ ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஐஸ்கிரீம் சுவைக்கவும் மறக்கவில்லை.
‘meet and greet’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம், திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் திறமை செலுத்தியோர் கலந்துகொண்டதோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.