ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பணம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பணத்தை தங்கள் பாக்கெட்டுகளில் போடுவதற்காக வரி விலக்கு அளிக்கும் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரத்தினக்கல் தொழிற்துறையை பாரியளவில் முன்னேற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம்.
ஏனைய நாடுகளிடம் எப்போதும் உதவி கேட்க முடியாது. நமக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அதற்கு நாட்டின் பொருளாதாரம் தயார் படுத்தப்பட வேண்டும்.வாக்குறுதிகளை அளித்து இவற்றைச் செய்ய முடியாது.
அந்நியச் செலாவணியை ஈட்டும் புதிய பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அது ஏற்றுமதி பொருளாதாரமாக இருக்க வேண்டும். மேலும், சுற்றுலாத்துறை மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.
நாம் ஒரு நாடாக முன்னேறுவதாக இருந்தால், நமது முயற்சியின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும்.
யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும். ஆனால் பெறுபேறுகள் கிடைக்க வேண்டும்.
நாம் அனைவரும் நாட்டின் உண்மையான நிலைமையை புரிந்து கொண்டு முன்னேறினால் 02 வருடங்களின் பின்னர் இந்நிலையிலிருந்து விடுபட முடியும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.