“ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுவது போன்று அத்தியாவசி யப் பொருட்களின் விலைகள் மும்மடங்காக அதிகரிக்குமானால் நான் எனது அமைச்சுப் பதவியைத் துறக்கவும் தயார் என வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மும்மடங்காக அதிகரிக்கும் என ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மும்மடங்கு அல்ல இரண்டு மடங்காக அதிகரிக்கவும் விடமாட்டேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்; கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின் அத்தியா வசியப் பொருட்களின் விலைகள் இம்முறையே 5.3 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:
குறைந்த விலையில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட் களை வழங்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 1,000 ‘கோப் சிட்டி’களை திறப்பதற்குத் தீர்மானிகப்பட்டுள்ளது. இதற்கென மூவாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட ‘கோப் சிற்றிகள்’ தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் துறைக்கு வற்வரி, வருமான வரி, வங்கிக் கடன் சலுகை வரி என பல வரி விலக்குகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.