யாழ்ப்பாணம் – ஊரெழு கிராமத்தில் கசிப்பு குகையொன்று இளைஞர்களால் இன்று சனிக்கிழமை (20) முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் தப்பிச் சென்ற நிலையில், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களும் ஒரு தொகுதி கசிப்பும் இளைஞர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :
ஊரெழு கிராமத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்பு குழுவொன்று கோப்பாய் பொலிஸாரின் ஒழுங்கமைப்பில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன் தலைவர் சின்னத்துரை முகுந்தன் தலைமையிலான குழுவினர், இன்று ஊரெழு கிராமத்தில் அதிரடியாக சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தேடுதலை மேற்கொண்டனர்.
இதன்போது கைவிடப்பட்ட தோட்டம் ஒன்றிலிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களும் தென்னை மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கசிப்பும் சிவில் பாதுகாப்பு குழுவால் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு கோப்பாய் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்திப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
மேலும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதி இளைஞர்களின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருவதுடன் ஊடகங்கள் பலவும் பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.