உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றத்திற்கான புதிய திருத்தச் சட்டமூலத்தில் 12.5% வெட்டுப்புள்ளி உள்ளடக்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் எதுவிதமான உண்மையும் கிடையாது என தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அதேநேரம், தற்போதைய 5% வெட்டுப்புள்ளியும் இல்லாமற் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் தொகையின் அடிப்படையில் தொகுதிக்குத் தொகுதி மாறுபாடடையும். வெட்டுப்புள்ளி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் குணவர்தன, இதனால் சிறுபான்மைக் கட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதெனவும் தெரிவித்தார்.
புதிய சட்ட திருத்தத்தின்படி, உள்ளூராட்சிமன்றங்கள் சில புதிதாக உருவாக்கப்படவுள்ளன. பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், புதிய முறையின்படி 70%, தொகுதி வாரியாகவும், 30% விகிதாசார முறைப்படியும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்தத் திருத்தச் சட்டமூலம், கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டு கொண்டு வரப்பட்டதொன்றாகும்.
இனி, இதனை மாகாண சபையில் நிறைவேற்ற வேண்டும். கட்சியின் சுயலாபத்தைப் பற்றிச் சிந்திக்காமல், நாட்டைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தொகுதிவாரி தேர்தல் முறைதான் நாட்டுக்கு நன்மை பயக்கும். தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் மூலம் அபிவிருத்தியைக் கிரமமாக முன்னெடுக்க முடியும். மோசடி மிகுந்த விகிதாசார தேர்தல் முறையை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள். எனவே, தொகுதிவாரி தேர்தல் முறையினை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், அதிலுள்ள நன்மை, தீமையைப் புரிந்துகொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.