நாட்டில் கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல் உள்ளடங்கலாக சிறுவர்களுக்கெதிராக 5000 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4000க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் பாலியல் துன்புறுத்தல்களுடன் தொடர்புடையவையாகும் என பொலிஸ் தலைமையகத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுதந்தர தெரிவித்தார்.
இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்களில் 167 சிறுமிகள் கர்பந்தரித்துள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுதந்தர சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2023ஆம் ஆண்டில் சிறுவர்களை கொலை செய்தல், கொலை முயற்சி, காயப்படுத்தல், பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல் உள்ளிட்ட 3074 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. இவை தவிர பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 1463 சிறு குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறு பாலியல் துன்புறுத்தல் உள்ளடங்கலாக கடந்த ஆண்டு சுமார் 5000 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.
ஏனைய குற்றச் செயல்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பாரியளவில் அதிகரிக்காத போதிலும், பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்த போக்கினையே காணபிக்கின்றன.
அதற்கமைய 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கெதிரான 1502 பாலியல் துஷ்பிரயோகங்களும், சிறுவர்களுக்கெதிரான 584 பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்களும், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பில் 70 குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளன.
இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்களின் போது 167 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர். இவர்களில் 127 பேர் தமது காதலர்களால் இந்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலைக்கு உள்ளாகும் பெரும்பாலான சிறுமிகளின் குடும்ப பின்னணி இதில் பாரியளவில் தாக்கம் செலுத்துகின்றது.
சில சந்தர்ப்பங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதல் உறவைப் பேணுவதற்கு அவர்களது பெற்றோரால் எவ்வித எதிர்ப்புக்களும் வெளியிடப்படாமையும் இனங்காணப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கிடையிலான பிளவுகளும் சிறுவர்கள் இவ்வாறு தவறான வழிகளில் செல்வதில் தாக்கம் செலுத்துகின்றது. தற்போது பொலிஸ் திணைக்களத்தின் கீழுள்ள 607 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் 605 பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு காணப்படுகிறது. இவை தவிர தேசிய மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினால் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய அப்பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து சிறுவர்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் தொடர்பான தகவல்களை வழங்க முடியும். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களின் இரகசியத்தன்மை நிச்சயம் பேணப்படும்.
அதே போன்று தகவல் வழங்குபவர்களின் தனித்துவத்தன்மையும் பாதுகாக்கப்படும். எனவே தமது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் கூற முடியாத, பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடளிக்க முடியாத சிறுவர்கள் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தமது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என்றார்.