இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தெரிவில் குளறுபடி- ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் மாநாடு !

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் பெரும்பான்மையான பொதுச்சபை உறுப்பினர்கள் அப்பதவிக்கு மீள் தெரிவைச் செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், மற்றும் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபை கூட்டத்தின் முதலாம் நாள் அமர்வு ஆகியன சனிக்கிழமை (27) திருகோணமலை உப்புவெளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது முதலில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவு நடைபெற்றது. அச்சயமத்தில் அரியநேத்திரன், ஸ்ரீநேசனை முன்மொழிந்தார். அதனையடுத்து குலநாயகம் தனக்கு அப்பதவியை வழங்குமாறு கோரினார். பின்னர் சுமந்திரன் தனக்கு சிரேஷ்ட துணைத்தலைவர் பதவியை வழங்குவதாக புதிய தலைவர் சிறீதரன் தெரிவித்துள்ளபோதும் தான் பொதுச்செயலாளர் பதவியையே விரும்புவதாக தெரிவித்தார்.

அதனையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக அப்பதவியை ஸ்ரீநேசனுக்கே வழங்க வேண்டும் என்று அரியநேத்திரன் மற்றும் யேகேஸ்வரன் வலியுறுத்தினார்கள். அச்சமயத்தின் கொழும்புக்கிளையின் உறுப்பினர் ஒருவர் மட்டக்களப்புக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், அதனை சாணக்கியனுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதன்பின்னர் சுமந்திரன்;, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் தலைவர்களாக உள்ள சாணக்கியன், கலையரசன், குகதாசன் ஆகிய ஒருவருக்கு அப்பதவி வழங்குவது பொருத்தமானது என்றுரைத்தார்.

இதற்கிடையில் சிறீதரன் ஸ்ரீநேசனுடன் உரையாடி, ஒருவருடத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டவாறாக அப்பதவியை குகதாசனுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாட்டை எட்டினார்.

அதனடிப்படையில் பதவிநிலைகள் தெரிவு செய்யப்பட்டன. அதனடிப்படையில், பொதுச் செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதோடு, சிரேஷ்ட உபதலைவராக சி.வி.கே.சிவஞானமும் இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரும், துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், பாக்கியசெல்வம் அரியநேந்திரன், வைத்தியர் சத்தியலிங்கம், ஆகியோரும் இணை செயலாளர்களாக திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் சுமந்திரன் உட்பட 13உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பொதுச்சபைக் கூட்டத்தின் முதன் நாள் அமர்வு நடைபெற்றது.  இதன்போது, குகதாசனின் நியமனத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான பொதுச்சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, அரியநேத்திரன், கோடிஸ்வரன், யோகேஸ்வரன் போன்றவர்கள் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு அமைவாக ஸ்ரீநேசனுக்கே அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தொடர்ந்து ஸ்ரீநேசன், தான் பதவிக்காக போட்டியிட வேண்டும் என்ற மனநிலையில் இல்லாது விட்டாலும் தனது ஆதரவாளர்களும், பொதுச்சபை உறுப்பினர்களும் அப்பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால் அதல் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து பொதுச்செயலாளர் தெரிவுக்காக வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அதில் ஸ்ரீநேசன் மற்றும் குகதாசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும் முடிவானது. தேர்தலை நடத்துமாறு மாவை.சோ.சேனாதிராஜா, சுமந்திரனை நியமித்தார்.

அச்சமயத்தில், சுமந்திரன், மத்திய குழு ஏற்கனவே நிருவாகம் ஒன்றை தெரிவு செய்துள்ளதால் தனியாக பொதுச்செயலாளரை தெரிவு செய்வதற்காக மட்டும் வாக்கெடுப்பை நடத்தமுடியாது. ஓட்டுமொத்தமாக மத்திய குழு அனுமதித்த நிருவாகத்தை அங்கீகரிப்பதா இல்லையா என்பதற்காகவே பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்த முடியும். அதில் மத்திய குழு உறுப்பினர்கள் பங்கேற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதற்கு அமைவாக நிருவாகத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் புதிய தலைவர் சிறீதரனால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு பீற்றர் இளைஞ்செழியன் வழிமொழிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 112வாக்குகளும், எதிராக 104வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளின் அடிப்படையில் புதிய நிருவாகத்திற்கு பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக சுமந்திரன் அறிவித்ததோடு கூட்டம் நிறைவடைவதாகவும் அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பொதுச்சபை உறுப்பினர்கள் மிகக் கடுமையாக புதிய தலைவருடன் தர்க்கம் செய்தனர். புதிய பொதுச்செயலாளரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டனர். அதுமட்டுமன்றி, தமக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஸ்ரீநேசனையே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலைமைகளை சுமூகமாக்குவதற்கு புதிய தலைவர் சிறீதரனும், சேனாதிராஜாவும் முயன்ற போதும் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில், தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை புதிய தலைமையின் மீது ஏமாற்றத்தை அளிப்பதாக அவர்கள் நேரடியாகவே தெரிவித்தனர். இதனையடுத்து சேனாதிராஜா மாநாட்டை ஒத்திவைத்தார்.

அதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள, பொதுச்சபை உறுப்பினர்கள், பொதுச்செயலாளர் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது பொதுச்சபைக்கு வருகை தந்திருந்த 115 உறுப்பினர்கள் அரங்கிலிருந்து வெளியேறியிருந்தார்கள். அத்துடன் அரங்கிற்கு வருகை தந்திருந்த பொதுச்சபை உறுப்பினர்களின் ஆதரவாளர்களில் சிலரும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், பொதுச்செயலாளர் தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துமாறே கோரியபோதும் அது திசைதிருப்பப்பட்டு நிருவாகத்திற்கன அங்கீகரம் தொடர்பான வாக்கெடுப்பாக மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே இந்த முடிவினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய தலைவர் ஸ்ரீநேசனை பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் பொதுச்செயலாளர் பதவிக்காக மீண்டும் பொதுச்சபையில் வாக்கெடுப்பு உரிய முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்தச் செயற்பாடுகள் நடைபெறாது, தற்போது மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அந்த தெரிவுகளுடன் மாநாடு நடைபெற்றால் அதில் பங்கேற்கப்போவதுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வின்போது பதவிநிலைத் தெரிவுகள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பில் முடிந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொதுச்சபை உறுப்பினர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *