உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் !

காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  இடம்பெயரும் மிருகங்கள் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும்  100 கோடி  விலங்குகள் பாலைவனங்கள், சமவெளிகள் அல்லது பெருங்கடல்கள் வழியாக இனப்பெருக்கம் மற்றும்  உணவுகளை தேடி  இடம்பெயர்வை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், இடம்பெயரும் உயிரினங்களின் மீது திணிக்கப்படும் நீடிக்க முடியாத அழுத்தங்கள் அவற்றின் எண்ணிக்கையை குறைவடைய செய்வதோடு, உணவு விநியோகத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் ,

1979 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் விலங்குகளை பாதுகப்பதற்கான மாநாட்டில் 1,189 இனங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டது. அதில்  44 சதவீதம் குறைவடைந்துள்ளதோடு, 22  சதவீதம் முற்றிலும் அழிந்துவிடும்.

இந்த தரவினை  1970 முதல் 5,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையின் நிலையைக் குறிக்கும் லிவிங் பிளானட் இன்டெக்ஸ் (எல்பிஐ)  வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் பிற வகையான அதீத சுரண்டல் உள்ளிட்ட செயல்பாடுகளால், மனிதர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர், இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலில் உள்ள 70 சதவீதமான  உயிரினங்கள் பாதிப்படைகின்றன.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வறட்சி அல்லது காட்டுத் தீ போன்றவை வானிலையில் பாதிப்பை ஏற்படுத்திதுகிறது.இதன் காரணமாக  இடம்பெயர்வு காலத்தை சீர்குலைக்கிறது.

இதேவேளை , வாழ்விடங்கள் அழிந்து வருவதால் 75 சதவீதமான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு இடையே அதிக இணைப்பு தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அணைகள், குழாய்கள் அல்லது காற்றாலைகள் போன்ற உள்கட்டமைப்பை நிறுவும் போது வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளை சீர்குலைப்பதைத் தவிர்க்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய உலகளாவிய உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 சதவீதமான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை இயற்கைக்காக ஒதுக்கி வைப்பதற்கான 2022 ஆம் ஆண்டு உறுதிமொழியை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *