பொறுப்பற்ற சாரதிகளும் விதிமுறைகளை பின்பற்ற தவறும் மக்களும் – வடக்கில் அதிகரிக்கும் வீதி விபத்து உயிரிழப்புகள் !

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன்  வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர் எனவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாதமையே இப் விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினம் அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்ததுடன், பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

குறித்த விபத்து நேற்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நாவற்குழியில் விபத்து இடம்பெற்ற குறித்த பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சமிக்கை விளக்கை ஒளிரவிட்டு திரும்புகையில், அதே திசையில் பயணித்த பேருந்து மோதியுள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறை பகுதியில் நெல் காயப்போட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவரும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வந்த வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தொடரும் பேருந்து மற்றும் வாகன விபத்துக்களில் மக்களின் அவதானமின்மையும் – சாரதிகளின் பொறுப்பற்ற தன்மையுமே காரணம் என பொலிஸார் தெரிவிப்பதுடன் யாழ்ப்பாணத்தில் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டதற்காக தினசரி நூறு தொடங்கி இருநூறு முறைப்பாடுகள் பதிவாவதாக கடந்த வருடம் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *