எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம், தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவை சேர்ந்த பீட்டர் இளஞ்செழியன் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தேசிய மாநாடு நடத்துவதாயின், 21 நாட்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம், எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாடு 21 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படாததால், குறித்த மாநாட்டுக்கு தடை கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு மீதான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
இதேவேளை, திருகோணமலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.
05 பேர் கொண்ட நிர்வாக சபையின் தெரிவுகள், யாப்பின் படி இடம்பெறவில்லை என்பதால், மாநாட்டை நடத்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரால் கோரப்பட்டிருந்தது.