மாணவர்கள் குப்பிவிளக்கில் கல்விகற்க பழகவேண்டும் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள் அவசியம் ஏற்பட்டால் குப்பிவிளக்கில் கல்விபயில முயலவேண்டும் இந்த விடயத்தில் முன்னோர்களை அவர்கள் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் மின்கட்டணங்கள் குறித்த கரிசனைகள் குறித்து; கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மின்கட்டணங்களை செலுத்தாததால் மின்துண்டிக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள மின்சாரசபையின் பேச்சாளர் இலவச மின்சாரம் என்ற கலாச்சாரத்திலிருந்து நுகர்வோர்கள் மாறுவதால் இந்த நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தை மின்கட்டண அதிகரிப்பு ஒருதசாப்தகாலத்திற்கு பின்னரே மேற்கொள்ளப்பட்டதாகதெரிவித்துள்ள மின்சாரசபையின் பேச்சாளர்
இலங்கை மின்சார சபை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிகள் குறித்தும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்திற்கு பெரும்தொகையை செலுத்தவேண்டிய நிலையில் மின்சார சபை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்சாரசபை பேச்சாளரின் கருத்தினை சவாலுக்கு உட்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நவீன தொழில்நுட்பம் இலத்திரனியல் சாதனங்கள் காரணமாக தற்போதைய சிறுவர்களை முன்னைய தலைமுறையிடன் ஒப்பிடமுடியாது என தெரிவித்தார்.
இதேவேளை மின்கட்டண அதிகரிப்பை நியாயப்படுத்தியமின்சாரசபை பேச்சாளர் கல்விகற்பதற்கு ஏன் மின்சாரம் அவசியம் என கேள்வி எழுப்பியதுடன் குப்பிவிளக்குகள் போன்ற பாரம்பரிய முறைகள் போதுமானவை என தெரிவித்துள்ளார்.
நான் குப்பிவிளக்கிலேயே படித்தேன் என தெரிவித்த அவர் தொழில்நுட்ப வசதிகளை நம்பியிருப்பதற்கு பதில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிற்கு அவசியமான தேவைகளை மாத்திரம் வழங்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மேற்குறித்த கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார்
அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதனை உறுதி செய்துள்ளார்.
இலங்கை மின்சாரசபையின் பேச்சாளரின் கருத்துக்களில் தொழில்சார் தன்மையோ அல்லது இரக்கமோ கருணையோ இல்லாததை அமைச்சர் தொண்டமான் உட்பட பலர் சுட்டிக்காட்டியுள்ளனர் அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மின்சாரசபை பேச்சாளரின் கருத்துக்கள் இலங்கை மின்சாரசபையினதோ அல்லது அரசாங்கத்தினதோ நிலைப்பாடுகளை பிரதிபலிக்கவில்லை அவரின் கருத்துக்காக நான் அமைச்சு மற்றும் மின்சாரசபையின் சார்பில் மன்னிப்கோருகின்றேன் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் தனது கருத்துக்களிற்காக பொதுமன்னிப்பு கோரியுள்ளார் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.